Macro-கதைகள் சப்ரைஸ்

சப்ரைஸ்

2021 Oct 15

பீட்டரை தவிர வண்டியில் மற்ற எல்லோரும் தூங்கி வழிந்து கொண்டு இருந்தார்கள். வண்டியோட்டிக் கொண்டிருந்த நிமலின் கண்கள் கூட மூடியது. அதை கண்ட  பீட்டர் பீதியில் அவனிடம் எதையெதையோ போலியாக பேசிக்கொண்டு வந்தான். அவன் வீட்டில் வளராத பூனையை பற்றி கேட்டான், அவனது ஐ போன் டென் என்ன மாடல் என்று கேட்டான், அவன் எடை எந்த வயதில் நூறை தொட்டது என்று பேச்சு கொடுத்தான். பின்னால் ப்ரீத்தி, கவி, ஷைலா மூவரும் ஒருவர் மீது ஒருவர் புரண்டு தூங்கிக்கொண்டு இருந்தார்கள்.

வீவீல்ல்ல்ல்..!

ஓடிக்கொண்டு இருக்கும் வண்டிக்குள் இருந்து பிரேக் போட்டதை போன்ற சத்தம். நிஜமாகவே பிரேக்கை மிதித்து இருவரும் பின்னால் பார்த்தனர். ஷைலா காட்டுத்தனமாக கத்தினால், அவளது கண்கள் மேலே மேலே சென்றது, உடல் துடித்தது. அவள் அருகே இருந்த ப்ரீத்தியும், கவியும் திடுக்கிட்டு எழுந்தனர். ஷைலா எழுத்து காருக்கு பின்னால் ஓடினால். அவள் பின்னால் ப்ரீத்தியும் சொன்றாள். “வேக்..வேக்” என்று வாந்தி எடுக்கும் சத்தம் மட்டும் தான் கேட்டது பீட்டருக்கு.

ஒரு  மாரியாக அவளை காருக்கு அழைத்து வந்து உட்கார வைத்தனர்.  ப்ரீத்தியிடம் என்ன ஆனது என்று கேட்டான். தெரியவில்லை “புட் பாய்சனாக” இருக்கலாம், ஆனால் இதற்கு மேல்  அவளால் நகர முடியாது. இரவாகிக்கொண்டு இருக்கிறது. அருகில் எங்காவது விடுதி இருந்தால் இந்த இரவு மட்டும் தங்கி விட்டு போக முடியுமா என்று தயங்கியபடி கேட்டாள். பீட்டர் முழித்தான்.

ஆரம்பத்தில் இந்த பயணம் ஒரு இரவு தங்கிவிட்டு மறுநாள் திரும்பி வரும் பயணமாக தான் இருந்தது. அதற்கு காரணம் விடிந்தால் பீட்டரின் 22வது பிறந்த நாள். அவர்கள் ஐவருமே ஒரு அலுவலகத்தில் தான் வேலைப்பார்க்கிறார்கள்.  அந்த நண்பர் குழுவில் ஏதாவது ஒரு பிறந்த நாளை இப்படி வெளியில் நண்பர்களோடு கொண்டாட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அது பீட்டரின் பிறந்த நாள் அன்று கை கூடி வந்தது ஆனால் அவர்கள் சென்றிருந்த மாத்தர கடற்கரை ஓட்டலின் சுற்று வட்டாரத்தில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டதால் அவர்கள் திட்டத்தை மாற்றிக்கொண்டு மாலை நேரமாக கிளம்பிவிட்டார்கள். இப்போது மறுபடி இரவு தங்கியாகவேண்டிய சூழ்நிலை.

கவியும் பீட்டரும் மொபைலில் அருகில் ஏதும் அறை இருக்கிறதா என்று பார்க்க ஆரம்பித்தார்கள்.  நீண்ட நேரமாக தேடியும் எந்த  அறையும் கிடைக்கவில்லை. காருக்குள் முனங்கியபடி படுத்துக்கிடந்த ஷைலாவை பார்க்க பாவமாக இருந்தது.

திடீர் என்று பீட்டருக்கு ஏதோ நினைவு வந்தது. அவனது பள்ளி நண்பன் திரு இந்த சுற்று வட்டாரத்தில் தான் வசிக்கிறான் அவனிடம் கேட்டால் உதவி கிடைக்கும் என்று மொபைலில் அவனை அழைத்தான். திருவிடம் நடந்ததை சொல்லி ஒரு இரவு மட்டும் தங்க இடம் வேண்டும் என்று உதவி கேட்டான். இருவரும் நீண்ட நேரம் உரையாடிக்கொண்டு இருந்ததை பார்க்க அறை கிடைத்துவிட்டதை போல தான் இருந்தது கவிக்கு.

பீட்டர் திரும்பி வந்தான். ஷைலாவின் நிலையை பார்த்தான். அவள் ப்ரீத்தி மடியில் படுத்து முனங்கியபடி இருந்தாள். கவியும் நிமலும் அவன்  என்ன சொல்ல போகிறான் என்பதை போல ஆர்வமாக இருந்தனர். பீட்டர் பயப்பட ஒன்றும் இல்லை அருகில் தான் நண்பனின் கெஸ்ட் அவுஸ் ஒன்று இருக்கிறது, இன்று இரவு மட்டும் அங்கு தங்கிவிட்டு காலையில் புறப்பட்டுவிடலாம் என்று கூறி, ப்ரீத்தியை மெல்ல தொட்டு, “கொஞ்சம் பொறுத்துக்கொள் போய் சேர்ந்துவிடலாம்” என்றான். ப்ரீத்தி வித்தியாசமான ஒலி எழுப்பினாள்.

திரு சென்ன முகவரியின் படி அந்த இடம் பக்கமாக தான் இருந்தது. சொல்லப்போனால் அவர்கள் சென்றிருந்த ஓட்டலைவிட இந்த இடம் ரம்மியமாக இருந்தது. நீண்ட முற்றம். நிறைந்த செடி கொடிகள், “வாலி பால்” விளையாட இடம். வீட்டுக்கு பின்னால் நீச்சல் தடாகம். இந்த அவசர நிலையில் இது மிகப்பெரிய உதவியாகவே பட்டது. அவர்கள் வீட்டை நெருங்கும் போது திரு அங்கே நின்றுக்கொண்டு இருந்தான்.  இவனுக்கு இப்படி ஒரு வீடா என்று தோன்றும் படியான உருவம். கேட்டை திறந்து உள்ளே சென்றனர். ஷைலா எழுந்து நடக்க மறுத்துவிட்ட படியால் நால்வருமாக சேர்ந்து அவளை தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் சென்று படுக்க வைத்தார்கள்.

திரு, பீட்டரை அழைத்து தனியாக ஏதோ பேசிக்கொண்டு இருந்தான். அவன் விடைப்பெற்று செல்லும் போது காலையில் தாமதித்துவிடாதே என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பினான்.

ஷைலாவை பார்த்துக்கொண்டு ப்ரீத்தி அவளுடன் அதே அறையில் இருந்தாள், பீட்டர், கவி, நிமல் மற்ற அறையை எடுத்துக் கொண்டனர். பீட்டர் நேரம் தாமதிக்காமல் எல்லோருக்கும் இரவு உணவு வாங்கி வந்து விட வேண்டும் என நிமலை அழைத்தான். நிமலுக்கு மட்டும் தான் வண்டி ஓட்ட தெரியும் என்பதால் அவன் நொந்துக்கொண்டே பீட்டரோடு புறப்பட்டான்.

வீடு அமைதியானது. அந்த இடம் ஒரு தனியார் இடம் என்பதால் கடும் நிசப்தமாக இருந்தது. மெல்ல ஷைலாவின் உருமல் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டு இருந்தது. கவி அவனது அறையில் இருந்து மெல்ல வெளியே வந்தான். பீட்டர் சென்றுவிட்டதை உறுதி படுத்திக்கொண்டான். அடுத்து அதே போல ப்ரீத்தி வெளியே வந்தாள். அதை தொடர்ந்து ஷைலாவும் வெளியே வந்தாள். ஷைலா நல்ல திடமாக இயல்பாக இருந்தாள். முகம் மலர்ச்சியாக, பிரகாசமாக இருந்தது. மூவரும் ஒருவர் ஒருவரை பார்த்து சிரித்துக்கொண்டார்கள்.

இவ்வளவு நேரமாக அரங்கேறியது எல்லாம் நாடகம் தான். பீட்டரின் இந்த பிறந்த நாளை அவன் மறக்க முடியாத ஒரு நாளாக, அவனை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதத்திலும் கொண்டாவது தான் அவர்களது திட்டம். பீட்டர் அவனது அலுவலகத்தில் வேலை செய்யும் ஜெனிபர்க்கு கடந்த வாரம் தனது காதலை தெரிவித்திருந்தான். ஆனால் ஜெனி அவளது பதிலை சொல்லாமல் பொறுமையாக இருந்தாள். அவனுடைய பிறந்த நாளில் தன்னுடைய சம்மதத்தை சொல்ல போவதாக அவள் ப்ரீத்திக்கும் ஷைலாக்கும் சொல்ல, இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி திட்டம் உருவானது.

மாத்தரையில் அவர்கள் இருந்த ஓட்டலில் அதற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளும் அவர்கள் செய்து தான் வைத்திருந்தார்கள். ஆனால் வெள்ள எச்சரிக்கையால் எல்லோரையும் வெளியேறும் படி சென்னதில் திட்டம் குளறுபடியானது.

இரவு பன்னிரெண்டு மணி நெருங்கும் போது அவர்கள் இருக்கும் இடத்துக்கு ஜெனி பிறந்த நாள் கேக்கோடு வருவதாக பேசி வைத்திருந்தார்கள். அந்த திட்டத்தை வெற்றிபெறச் செய்யவே எல்லோருமாக சேர்ந்து இந்த நாடகத்தை அரங்கேற்றினார்கள்.

ஜெனிக்கு கால் செய்து பேசினார்கள். இப்போது வந்திருக்கும் இந்த புது வீட்டின் முகவரியை ஜெனிக்கு அனுப்பினார்கள். எல்லாம் தயாராக இருந்தது. மூவருமாக திட்டத்தை மறுபடி சரி பார்த்தனர். இப்போது மணி இரவு எட்டு சரியாக பத்து மணி போல எல்லோரும் படுக்கைக்கு போய்விட வேண்டும்.  பதினொன்று முப்பது போல ஜெனி இந்த வீட்டுக்கு அருகில் அவளது நண்பனோடு வந்துவிடுவாள். சத்தம் எழுப்பாமல் எல்லோரும் வெளியே சென்று அவளை அழைத்துக்கொண்டு வந்து சரியாக பன்னிரெண்டு மணிக்கு பீட்டரை எழுப்பி அவன் முகத்தில் பேராச்சரியத்தை உண்டாக்க வேண்டும். எந்த பிரச்சனையும் இல்லாமல் திட்டம் சரியாக இருந்தது. ஆனால் ஷைலாவின் மிதமிஞ்சிய நடிப்பு தான், பீட்டர் கண்டு பிடித்துவிடுவானோ என்று என்னை  பயம் கொள்ள வைத்தது என்று கவி கூறினான். அதை ஏற்க மறுத்தாள் ஷைலா.

பீட்டரும் நிமலும் திரும்பி வந்த போது நேரம் இரவு ஒன்பதை தொட்டிருந்தது. கார் சத்தம் கேட்டதும் ஷைலா சென்று படுத்துக்கொண்டாள். பீட்டர் இரவு உணவை கொண்டு வந்து அவர்களுக்கு கொடுத்துவிட்டு ப்ரீத்தியிடம் இப்போது ஷைலாவிற்கு எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவள் கொஞ்சம் பரவாயில்லை. நன்றாக தூங்கிக்கொண்டு இருக்கிறாள் என்று சமாளித்தாள்.

பீட்டர் அலுவலக லாப்டப்பை திறந்து வேலை பார்க்க ஆரம்பித்தான். கவியும் நிமலும் அங்கிருந்த ஒரு சொகுசு கட்டிலில் படுத்தபடி மொபைலை நோண்டிக்கொண்டு இருந்தனர். பீட்டர் எங்கு வந்தாலும் அலுவலக லாப்பை எடுத்துக்கொண்டு வந்து ஆபிஸ் வேலைகளை பார்ப்பது எப்போதும் எரிச்சலை உண்டுபண்ணுவதாக இருக்கும். நிமல் கடிந்துக்கொண்டான். அதை தூக்கி வைத்துவிட்டு காருக்குள் ஒரு சரக்கு பாட்டில் இருக்கிறது அதை கொண்டு வா திறக்கலாம் என்றான். இருவரும் அவனை ஒரு மாதிரியாக பார்த்தனர்.  காலை வரை இங்கே தானே இருக்க போகிறோம். கொண்டு வா என்றான். கவியும் பீட்டரும் இப்போது இந்த சரக்கு வேண்டாம் என்றே நினைத்தனர். நிமலுக்கு இருப்பு கொள்ளவில்லை. அவனே சென்று எடுத்து வந்தான். பீட்டரின் லாப்டாப்பை எடுத்துக்கொண்டு சென்று ப்ரீத்தியின் அறையில் கொடுத்து,0” அவன் கேட்டால் கொடுக்காதே” என்று செல்லிவிட்டு வந்தான். ப்ரீத்தி அவன் கையில் இருக்கும் பாட்டிலை பார்த்து திடுக்கிட்டாள்  “ஏய் இப்போ ஏன் இதெல்லாம்” என்று பாய்ந்தாள். அதெல்லாம் ஒன்றும் ஆகாது பிளான் சரியாக நடக்கும் என்று சாதாரணமாக சொல்லிவிட்டு சென்றான்.

நேரம் சென்றுக்கொண்டு இருந்தது. ப்ரீத்தி எல்லாம் சரியாக நடக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தாள். அடிக்கடி நேரத்தை பார்த்தாள். இரவு பதினொரு மணியை நெருங்கும் போது ஷைலாவும் ப்ரீத்தியும் இரவு பார்ட்டிக்கு தயாராகினர். சற்று தள்ளி பீட்டரின் அறையில் நிலமை கொஞ்சம் மோசமாக இருந்தது. எப்போது குடித்தாலும் அசராமல் இருக்கும் நிமல் மட்டையாகியிருந்தான். பீட்டர் கொஞ்சமாக குடித்துவிட்டு அமைதியாக பாடல் கேட்டபடி இருந்தான். நிமலின்  நிலை பற்றி ப்ரீத்திக்கு தெரியவந்தால் தன்னை என்ன செய்வாளோ என்ற என்னத்தோடு கவி மனதுக்குள் புலம்பிக்கொண்டு இருந்தான்.

“பீர்ர்ர்ர்ர்”

போதையில்  இருந்த  நிமல் நீர்யானையை போல  வாயை விரித்து பீட்டர் மீது வாந்தி எடுத்தான், சரிந்து நிலத்தில் விழுந்தான். இருவருமாக அவனை மிக சிரமப்பட்டு தூக்கி கட்டிலில் போட்டனர். அறையை உடனடியாக சுத்தம் செய்தனர். கவி நேரத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான். மணி பதினொன்று முப்பதை நெருங்கிக்கொண்டு இருந்தது. பீட்டர் அணிந்திருந்த ஆடையிலேயே நிலத்தை சுத்தம் செய்துவிட்டு அந்த துணியை எரிய வீட்டுக்கு வெளியே வர பீட்டர் அந்த அறைக்குள் இருந்த குளியலறைக்குள் நுழைந்தான். வெளியே வந்த கவி அங்கே நல்ல அலங்காரத்தோடு நின்றுக்கொண்டு இருந்த ப்ரீத்தியையும் ஷைலாவையும் பார்த்தான். அவர்கள் எவ்வளவு நேரம் உனக்காக காத்திருப்பது. ஜெனி வந்துவிட்டாள். வா அவளை அழைத்துக் கொண்டு வரலாம் என வீட்டின் முன்னால் சென்றனர். கவி நடத்ததை சொல்லாமல் சமாளித்துக்கொண்டு அவர்களோடு நடந்தான்.

பீட்டர் ஒரேடியாக சின்ன குளியலை போட்டுவிட்டு வெளியே வந்தான் அவனது மொபைலை பார்த்த போது அதில் திருவிடம் இருந்து சுமார் இருபது மிஸ்ட் கால் இருந்தது. நேரமும் பன்னிரெண்டை தொட்டிருந்தது. திரு பிறந்த நாளுக்கு வாழ்த்த தான் எடுத்திருக்கிறான் என எண்ணி பீட்டர் அவனுக்கு கால் செய்தான். திரு போனை எடுத்ததுமே மூச்சு விடாமல் பேசினான். அவன் பேசி முடிய பீட்டர் ஓக்கே என்று  சொல்லிவிட்டு பேய் அரைந்தது போல நின்றான். அதற்குள் வெளியே ஹாலில் ஜெனியை அழைத்து கையில் கேக்கோடு ப்ரீத்தி மற்றும் ஷைலா நிற்க, கவி பீட்டரை அழைக்க உள்ளே வந்தான் .பீட்டர் ஜெனியை பார்க்கும் முன்னரே அதிர்ச்சியில் உரைந்து போய் இருப்பது அவனுக்கு விசித்திரமாக இருந்தது. கவி அவனிடம் வந்து ”வெளிய வந்து பாரு மச்சா உனக்கு ஒரு சப்ரைஸ் இருக்கு” என்று  கூறி அழைக்க பீட்டர் அதுவரை அவர்களிடம் மறைத்த ஒரு விடயத்தை சொன்னான்.

அந்த வீடு திருவின் வீடு கிடையாது. அவனது பராமரிப்பில் இருக்கும் ஒரு கெஸ்ட் அவுஸ். அதன் உரிமையாளர் பயங்கர கராரான பேர்வழி. முன்னால் மிலிட்டரி வீரர். அவர் எப்போதாவது தான் அந்த வீட்டுக்கு வருவார். அதுவும் சில நாட்களுக்கு முன்னாலே சொல்லிவிட்டு வருவார். அந்த தைரியத்தில் தான் திரு அவர்களுக்கு வீடு கொடுத்தான். ஆனால் இப்போது அந்த மனிதர் முன்னரிவிப்பு இன்றி  வீடு நோக்கி வந்துக்கொண்டு இருப்பதாகவும், உடனடியாக வீட்டை விட்டு வெளியேறிவிடும் படியும், இல்லை என்றால் என் உயிரை வாங்கிவிடுவான் என்று கதறினான்.

பீட்டர் சொன்னதை கேட்ட கவிக்கும் பேச்சில்லை. உடனடியாக வீட்டை விட்டு புறப்படுவது முடியாத காரியம். நிமலுக்கு மட்டும் தான் வண்டியோட்ட தெரியும் அவனும் இப்போது இல்லை. இத்தனை பெண்களோடு சில ஆண்களை அதுவும் குடிபோதையில் இருக்கும் ஆண்களை பார்த்தால் வீட்டு உரிமையாளன் என்ன செய்வான் என்று நினைத்து பேச்சற்று போயினர்.

பீட்டர் அறையை விட்டு வெளியே வர அங்கே ஜெனி கண்ணை பறிக்கும் அழகோடு கையில் கேக்கோடு நின்றுக்கொண்டு இருந்தாள். அவர்கள் பக்கத்தில் நடந்துக்கொண்டிருப்பது பற்றி ஒன்றும் தெரியாமல் ப்ரீத்தியும், ஷைலாவும்  வாய் நிறைந்த புன்னகையோடு நின்றுக்கொண்டு “சப்ரைஸ்” என்று கத்தினர். அதே நேரத்தில் வீட்டு முற்றத்தில் ஒரு ஜீப் வண்டி நுழையும் சத்தமும் அவர்களின் காதில் கேட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php