2022 Oct 20
பிரபல எழுத்தாளரும் ஊடகவியலாளருமான சதீஸ் செல்வராஜ் அவர்களின் பேனா மையிலிருந்து துளிர்விட்ட படைப்பான, “குளிரும் தேசத்து கம்பளிகள்” புத்தகமானது மலையகத்தின் மூத்த எழுத்தாளரான சாகித்தியரத்னா தெளிவத்தை ஜோசப் தலைமையில் 22ஆம் திகதி ஒக்டோபர் அன்று கொழும்பு தமிழ் சங்கத்தில், மாலை 4.30 மணிக்கு வெளியாகவுள்ளது. இப்புத்தகமானது 2022 தமிழ்நாடு புதுக்கோட்டை புத்தக விழாவில் சமூகம், வரலாறு, அரசியல், கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த கட்டுரை பிரிவில் விருது பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க ஓர் விடயமாகும். இந்த விழாவில் பிரதம அதிதி ஆக பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளருமான திரு.விஜித ஹேரத் வருகை தர உள்ளார். இவரே புத்தகத்தை வெளியிடவும் உள்ளார்.
இந்த புத்தக வெளியீட்டு விழாவானது மங்கள விளகேற்றலில் ஆரம்பமாகி தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்பு நடனத்தினை தொடர்ந்து பல்கலைக்கழக மாணவியான செல்வி.முபஸ்ஸிரா அஸ்வரின் வரப்பேற்புரை, சாகித்தியரத்னா தெளிவத்தை ஜோசப்பின் தலைமை உரை, புத்தக வெளியீடு மற்றும் இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் முதல் பிரதியை பெறல், திரு.விஜித ஹேரத் அவர்களின் பிரதம அதிதி உரை, எழுத்தாளரும் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான சட்டத்தரணி இரா.சடகோபன் அவர்களின் ஆய்வுரை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான மல்லியப்புச்சந்தி திலகரின் மதிப்புரை, மலையக மக்கள் முன்னணி சிரேஷ்ட உபதலைவரும் எழுத்தாளருமான முனைவர் சதீஸ் குமார் சிவலிங்கம், தினகரன் பத்திரிகையின் தலைமை ஆசிரியரான திரு.தே.செந்தில்வேலவர் மற்றும் வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியரான திரு.எஸ்.ஸ்ரீகஜன் ஆகியோரின் வாழ்த்துரை, அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவரான திரு.கி.செல்வராஜ், கெம்பெய்ன் ஃபோரம் பிரைவட் லிமிட்டட்டின் முகாமைத்துவ பணிப்பாளரான திரு.தினேஷ் குமார் கார்மேகம் மற்றும் மட்டக்களப்பு பெரியார் வாசகர் வட்டத்தின் திரு.க.திலிப் குமார் ஆகியோரின் கருத்துரை மற்றும் எழுத்தாளர் சதீஸ் செல்வராஜின் ஏற்புரை மற்றும் நன்றியுரையுடன் நிறைவடைகிறது. இந்த மொத்த விழாவினையும் கெப்பிடல் FM இனை சேர்ந்த உதவி நிகழ்ச்சி திட்ட முகாமையாளரான திருமதி.ஹம்சி மார்லன் அவர்கள் தொகுத்து வழங்க உள்ளார்.
நம் நாட்டின் அசாதாரண சூழலிலும் எழுத்துத்துறையில் விடா முயற்சியோடு உழைத்து வரும் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான சதீஸ் செல்வராஜ் அவர்களுக்கு நாடி குழுவினர் சார்பாக பாராட்டுகள்.
விரைவில் “குளிரும் தேசத்து கம்பளிகள்” புத்தகத்தின் விமர்சனங்களோடு சந்திக்கிறோம்.
–பவித்ரா ராஜ்