2021 Nov 18
கருணையின் வெளிப்பாட்டினால் நம் உடலில் ஒக்ஸிட்டோஸின் அதிகரித்து இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது என்கிறது அறிவியல். கருணையின் வெளிப்பாடு கடவுளை உணரும் வழி என்கிறது அறநெறி. அறிவியலோ அறநெறியோ கூறுவது ஒன்றே. கருணை காட்டுங்கள் என்றே. உலக கருணை தினம் 1988 ஆம் ஆண்டு முதன் முதலில் ஜப்பானின் டோக்கியோ நகரிலேயே கொண்டாடப்பட்டது.
அதற்கடுத்து ஒவ்வொரு வருடமும் நவம்பர் 13 ஆம் திகதி உலக கருணை தினமாக நினைவுகூரப்பட்டு வருகிறது. இப்போது 25 இற்கும் மேற்பட்ட உலக நாடுகள் இத் தினத்தை கொண்டாடுகின்றன. உலகத்திலேயே கருணைமிகுந்த நாடு போர்த்துகல் என்று சர்வதேச ஆய்வு தகவல் வெளியிட்டுள்ளது. போர்த்துக்கல் போன்று இன்னும் எத்தனையோ நாடுகள் கருணைக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றது.
‘இனமில்லை, மதமில்லை, மொழியில்லை எனக்கு.நான் மனிதன். நாம் அனைவரும் ஓர் இனம். மனித இனம்’ என்ற உயர்ந்த கூற்றை உணர்த்தும் நாள்தான் இந்த கருணை நாள்.
நம்மை யாரேனும் சந்தோஷப்படுத்தினாலோ அல்லது நம்மை யாராவது சந்தோஷப்படுத்தினாலோ அந்த முழு நாளும் நாம் மற்றவர்களிடம் கருணையாக நடந்துகொள்வோம் என்பது ஆய்வாளர்கள் கருத்து. இதை எத்தனை பேர் ஒப்புக்கொள்கிறீர்கள்? என்றாவது இதை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள். நம்மை யார் எப்படி நடத்தினாலும் அவர்களிடம் நாம் அன்பை மட்டுமே பகிரவேண்டும். நம்மை வெறுத்தாலும் அல்லது நாம் வெறுக்கும்படியாக அவர்கள் இருந்தாலும் அதனை தவிர்த்து அன்பை மட்டும் பகிரவேண்டும். இன்றைய தினத்தில் அனைவரோடும் அன்பை மட்டும் பகிர்ந்து அவர்களுக்கும் அதை கற்றுக்கொடுங்கள்.
கருணை என்றவுடன் நினைவுக்கு வருபவர் அன்னை தெரேசா தான். அன்பு என்பது சொற்களில் வாழ்வதில்லை. செயல்களில் வாழ்வது. பிறர் சொல்ல வருவதில்லை. பிறர் நிலையறிந்து தானாய் தோன்றுவது. அப்படிப்பட்ட அன்பின் அடையாளமாக, கருணைக்கே எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் தான் அன்னை தெரேச.தொழுநோயாளர்கள் என்று கூட எண்ணாது அரவணைப்பவர். அநாதையற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர். பிறருக்கு அன்பு காட்டுவதிலேயே தம் வாழ்வை அர்ப்பணித்தவர். இன்றைய கருணை தினத்தில் அவரைப் போற்றுவதை நாம் தவறக்கூடாது.
ஆபத்தில் உதவுவதும் கருணை. அருகிலில்லையென்றாலும் காட்டுவது கருணை. இல்லையென்று தேடிவருவோருக்கு தேவைiயானதை கொடுப்பது கருணை. இருப்பதை கொடுத்து பிறர் இன்பம் காண்பதை நினைத்து களிப்படைவதும் கருணை. வீட்டிலும் கருணை நம் நாட்டிலும் கருணை. அனைத்தையும் மாற்றும் கருணை வலிகளையும் ஆற்றும் கருணை. கருணை செய்யுங்கள்!
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள்..!
-அன்னை தெரேசா-