Macro-கதைகள் இது ஒரு பேய் கதை அல்ல!

இது ஒரு பேய் கதை அல்ல!

2021 Nov 19

இன்று அந்த ஆவியை இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டான் சுராஜ்.

இரவில் அவன் நிம்மதியாக தூங்கி இரண்டு வாரத்திற்கு மேலாகிறது. அவன் வேலை முடித்துவிட்டு நள்ளிரவு தாண்டி வீட்டுக்கு வருவான். கலைப்பும் தூக்கமும் அவன் கண்களில் நர்த்தனம் ஆடும். கடைசி ரயிலை பிடித்து அவனது அப்பார்ட்மண்டுக்கு வந்து பதினெட்டாவது மாடியில் அமைந்திருக்கும் அவனது வீட்டை அடைந்து, குளித்து நிம்மதியாக படுக்கலாம் என நினைத்தால் இந்த பேய் செய்யும் அட்டகாசம் எல்லையற்றது.

கிச்சனில் மிக்சி ஓடும் சத்தம், ஹாலில் டீவி ஓடும் சத்தம், ப்ரிஜ்சை திறக்கும் சத்தம், தண்ணி ஓடும் சத்தம், குறுக்க மறுக்காக நடக்கும் சத்தம் என எல்லாவிதமான சத்தமும் அவன் காதில் கேட்கும்.

இந்த வீடு அவனது அலுவலகத்தால் அவனுக்கு கொடுப்பட்ட வீடு. அவனது சொந்த வீடு கொழும்பை தாண்டி அமைந்திருந்தது. அங்கிருந்து வேலைத்தளத்துக்கு வரவேண்டும் என்றால் தினமும் இரண்டு மணி நேரம் அவன் பயணம் செய்ய வேண்டி இருந்தது. கடந்த மாதம் அவனுக்கு பதவி உயர்வு கிடைத்ததோடு அலுவலகத்திற்கு மிக அருகில் சகல வசதிகளுடன் கூடிய இந்த சொகுசு வீடும் கொடுப்பட்டது.

அந்த வீட்டுக்கு வந்து சரியாக மூன்றாவது நாள் அவனுக்கு வீட்டுக்குள் அமானுஷ்யங்கள் இருப்பது தெரிய ஆரம்பித்தது. முதல் முறையாக நடு இரவில் யாரோ நடமாடும் சத்தம் கேட்டு எழும்புகையில் அவன் ஏதோ தனது சொந்த வீட்டில் இருப்பதாகவும் அம்மா தண்ணீர் குடிக்க வழக்கமாக இரவில் எழும்பி அலைவதையும் நினைத்துக் கொண்டான். ஆனால் அடுத்த கனமே இது அலுவலகத்தால் தனக்கு கிடைத்த வீடு என்பதை புரிந்து திடுக்கிட்டு எழும்பினான்.

ஹாலுக்கு வரும் வரை சத்தம் வழுவாக தான் இருந்தது. டீவியை அனைக்காமல் படுத்து விட்டோம் என நினைத்தான். அந்த அளவு சத்தம் துல்லியமாக இருந்தது. ஆனால் ஹாலுக்கு வந்து பார்த்த போது அங்கு எதுவும் இல்லை.

சுராஜிற்கு பயம் பிடித்தது. முதல் முறையாக இப்படியான ஒரு அனுபவம் அவனுக்கு ஏற்படுகிறது. முதல் நாள், இரண்டாவது நாள், மூன்றவது நாள் என கடந்த பத்து நாட்களாக இது தான் தொடர்ந்து நடந்துக்கொண்டு இருக்கிறது. சுராஜிற்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆகவே யாரோ ஒரு பூசாரியை அழைத்து வந்து அவனுக்கு பணம் செலவு செய்ய அவன் விரும்பவில்லை.

ஆனால் நாளுக்கு நாள் இது அதிகரித்துக்கொண்டே செல்ல வேறு வழியில்லாமல் குறைந்த விலையில் ஒரு மாந்ரீகனை அழைத்து வந்து என்ன நடக்கிறது என்பதை கண்டறிய முயன்றான்.

இந்த வீடு ஆத்மாக்களின் நுழைவு பாதையில் அமைந்திருக்கிறது. இங்கிருக்கும் ஆத்மாவை எங்கும் விரட்ட முடியாது. அதனுடைய இடத்தில் தான் நீ வந்து தங்கி இருக்கிறாய். வேறு வீடு பார்த்து செல் என்று சொல்லிவிட்டு சென்றான் அந்த மாந்ரீகன். சுராஜிற்கு தலை சுத்தியது.

இதை பற்றி அவனது அமெரிக்க வேலைத்தளத்திற்கு அவன் எப்படி முறையிட முடியும், என்னவென்று குறிப்பிட்டு மெயில் அனுப்புவது. அது மிக சொகுசான ஆடம்பர வீடு, அலுவலகம் பதினைந்து நிமிட தொலைவில் தான் இருக்கிறது. புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் வேறு. இப்படி ஒரு வீடு அவனுக்கு கொடுக்கப்பட்டதை எண்ணி ஏற்கனமே அலுவலகத்தில் சில வயிறுகள் தீக்கிரையாகிவிட்டன. இந்த நிலையில் வீட்டை அவன் என்ன சொல்லி நிராகரிக்க முடியும்.

அது பேயோ, ஆவியோ, துஷ்ட சக்தியோ அல்லது அது போல ஏதோ ஒன்றோ. எதுவாக இருந்தாலும் அதை ஒரு கை பார்க்கவேண்டும் என்று முடிவெடுத்தான்.

அன்று வீட்டுக்கு வழக்கத்தை விட தாமதமாக வந்தான். பன்னிரெண்டு மணி நேரம் தாண்டிய பின்னர் தான் இந்த அமலி துமலிகள் நடக்கும் என்பதால் அதற்கு தயாராக வந்தான். இன்று பேயா நானா என்று பார்த்துவிட வேண்டும் என்று இருந்தான்.

வீட்டு வாசலில் நின்று பலமுறை நன்றாக அழைப்பு மணியை அடித்து அலற விட்டான். கதவை திறந்து உள்ளே வந்த உடனேயே “நான் வந்துட்டேன், நான் வந்துட்டேன்” என  கத்தினான். தான் வந்து விட்டதை பகிறங்கமாக தெரிவித்தான்

நடு ஹாலில் சோபாவில் அமர்ந்து கொண்டு வாங்கி வந்த பியரையும் கொத்து ரொட்டியையும் திறந்து வைத்தபடி உறக்க பேசினான்.

“இன்னைக்கு நான் விடிய விடிய தூங்க போறது இல்ல…இங்க யாரோ இருக்கிங்கனு தெரியுது..அது எதுவா இருந்தாலும் நீங்களே இன்னைக்கு தைரியமா என் முன்னாடி வந்து உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லி எடுத்துக்கோங்க..என்னால இந்த வீட்டை விட்டு எல்லாம் மாற முடியாது…என்னோட எட்டு வருஷ உழைப்புக்கு கெடச்ச வீடு இது. உனக்கு வேணும்னா நீ உழைச்சி வீடு வாங்கிகோ…இல்லைனா ரெண்டு வீடு தள்ளி ஒரு வீடு பூட்டி கெடக்கு அங்க போய் தங்கிகோ..இப்படி ஒன்னும் பண்ணாத என்ன கஷ்ட படுத்துறது ஞாயம் இல்ல…! என் முன்ன வந்து பேசு…உனக்கு என்ன வேணும் சொல்லு…!

சுராஜ் ஒரு பைத்தியகாரனை போல பேசினான். ஆனால் அவனிடம் ஒரு தெளிவும் தைரியமும் காணமுடிந்தது.

சுமார் ஒரு மணி  நேரமாக வீட்டில் எந்த சத்தமும் இல்லை. சுராஜிற்கு நம்பிக்கை பிறந்தது. தன்னுடைய எதிர்ப்பை பார்த்து அது ஆடிப்போயிருக்க வேண்டும் என நினைத்தான் அவன். கடைசி சொட்டு பியரை அடித்து விட்டு கீழே வைக்கும் போது தான் மெலிதாக எதையோ உணர்ந்தான். அவனது மேனி ஜில்லிட்டது. திடீர் காலநிலை மாற்றம் ஏற்பட்டதை போல உணர்ந்தான். மெல்ல போதையில் எழுந்து சாப்பாடு தட்டை சமயலறையில் வைத்துவிட்டு மீண்டும் ஹாலிற்கு வந்தபோது தான் அவன் அதை பார்த்தான்.

பச்சையும் மஞ்சளும் கலந்து பிரகாசித்தபடி சில உருவங்கள் ஹாலின் மூலைகளில் அமர்ந்திருந்தது. அவை அமைதியாக  அவனது வரவுக்காக காத்திருப்பதை போல இருந்தது. சுராஜ் பயப்படவில்லை. ஒரு வழியாக கண்களுக்கு தெரிந்து விட்டன என  நிம்மதி தான் அவனுக்கு ஏற்பட்டது. கைகளை துடைத்துக்கொண்டு அவனது சோபாவில் வந்து அமர்ந்தான். அந்த உருவங்களை மெல்ல ஆராய்ந்தான். சுமார் ஏழு, எட்டு உருவங்கள் இருந்தன. அந்த உருவங்களில் இருந்து வந்த பிரகாசம் அவற்றை சரியாக பார்க்க விடாமல் தடுத்தது. அந்த உருவங்கள் எல்லா வயது தரத்திலும் இருந்தது. ஒரு கூட்டுக்குடும்பம் போல இருந்தது அவனுக்கு.

எதுவும் பேசாமல் அவனையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த அதனை அவனும் உன்னிப்பாக பார்த்தான். அந்த முகங்கள்  அவன் பேச வேண்டி காத்திருப்பதை போல இருந்தன. அவன் என்ன சொல்வான் என அந்த முகங்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்தன.

சுராஜ் அவற்றுக்கு என்ன வேண்டும் என கேட்டான். எந்த பதிலும் இல்லை. ஏன் இப்படி என்னை தொந்தரவு செய்கிறீர்கள் என கேட்டான். மீண்டும் அமைதி நிலவியது. சுராஜ் நான் கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன் என்னை விட்டு விடுங்கள் என்று அவற்றின் முன் மண்டியிட்டு கதரினான். அவற்றிடம் இருந்த எந்த பதிலும் இல்லை. கண்களை துடைத்துக்கொண்டு சுற்றி முற்றி பார்த்தான். எல்லாம் மறைந்து போயிருந்தது.  எந்த சலனமும் இல்லை.

சுராஜிற்கு கர்வமாக இருந்தது. தைரியமாக இவ்வளவு பெரிய காரியத்தை தனி மனிதனாக செய்திருப்பதை நினைத்து அவன் பெருமிதப்பட்டான். இன்னும் ஒரு பியர் வாங்கி வந்திருக்கலாம் என வருந்தினான். இந்த சாதனை எல்லாம் எங்கே சென்று சொல்ல முடியும் நமக்கு நாமே பாராட்டிக் கொள்ள வேண்டியது தான் என நினைத்துக் கொண்டு மெல்ல ஹாலில் இருந்து எழுந்து அவனது அறைக்கு சென்று ஏ/சி யை அதிகமாக வைத்துவிட்டு நன்றாக கை, காலை நீட்டு படுத்துக்கொண்டான். இன்று தான் அந்த வீட்டில் அவன் நிம்மதியாக தூங்க போகும் முதல் நாள்.

எந்த வித தொந்தரவும் இல்லாமல் இப்படி தூங்குவது சொர்க்கமாக தெரிந்தது அவனுக்கு.  மெல்ல தூக்கம் உச்சம் பிடித்த போது காதோரம் அதே சத்தம். எழுந்து அமர்ந்தான். ஹாலில் அதே பேச்சு சத்தம் முன்பை விட அதிகமாக இருந்தது. எதுவும் மாறவில்லை என்று தலையனையால் காதை அடைத்துக்கொண்டு தூங்கிப்போனான்.

நாட்கள் செல்ல செல்ல சுராஜிற்கு இந்த நிகழ்வு வாடிக்கையானது. இரவு வீட்டுக்கு வருவான், சத்தமாக பெல் அடிப்பான், கதவை திறந்து உள்ளே சென்று குளித்து முடித்துவிட்டு டீ வி பார்ப்பான், அப்படியே அறைக்கு சென்று படுப்பான். நள்ளிரவில் அதே சத்தம்.

மீண்டும் மீண்டும் அது நடக்க அவன் பழகிப்போனான். அவற்றோடு பேசினான். சில  சமயங்களில் அதுவும் அவனோடு பேசியது. ஏதோ சொந்தக்காரர்களின் வீட்டில் தங்கியிருப்பதை போல அவன் அந்த வீட்டில் வாழ ஆரம்பித்தான். இந்த ஆவிகள், ஆத்மாக்களை பற்றி நிறைய யோசித்தான் அவற்றின் நிலை கண்டு வருந்தினான். அவற்றால் அவனுக்கு எந்த பாதிப்புமில்லை என்ற போது அவனும் அவற்றை பாதிக்காது நடந்துக்கொண்டான். குறிப்பாக இது பற்றி அவன் எங்கும் பேசவில்லை.

சுராஜ் எல்லாவற்றையும் அதனோடு பேசினான். அவனது சிறுவயது முதல் இருந்த வீட்டு வறுமை, அப்பா இல்லாமல் அம்மா அவனையும் தங்கை இருவரையும் வளர்க்க பட்ட பாடு, பிறகு அவனுக்கு வயது வந்ததும் அவன் குடும்ப சுமையை முழுமையாக எடுத்துக்கொண்டு இரவு பகலாக உழைத்து சொந்த வீடு வாங்கி, தனது இரண்டு தங்கைக்கும் கல்யாணம் செய்துக்கொடுத்து என எல்லாம் சொன்னான். எல்லாவற்றையும் செய்து முடித்து திரும்பும் போது அவனதுக்கு நாற்பது வயதை எட்டி இருந்ததை வருத்ததோடு சொன்னான்.

நான் செய்ய வேண்டும் என நினைத்த எல்லாவற்றையும் செய்தேன் ஆனால் எனக்காக தான் ஒன்றும் செய்துக்கொள்ள முடியவில்லை. என்று அவன் சொன்னதை கேட்க எப்போதும் பேசிக்கொண்டு இருக்கும் அந்த ஆவிகள் அன்று மௌனமாக நின்றது.

எனக்கு கல்யாணம், மனைவி பிள்ளைகள் மீது மிகப்பெரிய ஆசை இருக்கிறது. ஆனால் இப்போது வரை தனிமை மட்டும்  தான் என் கூட இருக்கிறது. இந்த வயதில் அதுவும் பாதி நரைத்த மண்டையோடு இருக்கும் என்னை பார்த்து எந்த பெண் விருப்பம் கொள்ள போகிறாள் என்று கேட்டான். அதற்கு அவன் வயதை ஒத்த உருவம் ஒன்று அதையும் தாண்டி எதாவது உனக்கு காத்திருக்கலாம் அல்லவா என்றது. அந்த குரலை கேட்க சுராஜிற்கு  இறந்து போன அவனது கல்லூரி நண்பர் தினேஷின் குரலை போலவே இருந்தது.

பதிலுக்கு அவையும் அவற்றின் கதையை சொன்னது எழுபது வயது தாத்தா, ஐம்பது வயது குடும்ப தலைவன், அவன் வயதை ஒத்த ஒரு ஆடவன், இருபது வயதில் ஒரு பெண், பதின்ம வயதில் இரண்டு பெண்கள் இரண்டு ஆண்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை. ஒவ்வொரு விதமான மரணம் நிகழ்ந்திருந்தது. அவை எல்லாமே அகால மரணம் என்பதால் அவை இப்படி சுத்திக்கொண்டு இருப்பதாக கூறியது.

இரவு உணவை அலுவலக உணவகத்தில் எடுப்பதை குறைத்துக்கொண்டான். எவ்வளவு நேரமானாலும் வீட்டுக்கே வந்து சமைத்து உண்ண ஆரம்பித்தான். அதற்கும் உணவு வைத்தான். அந்த உருவங்கள் ஆட்டுக்கால் பாயா கேட்டது, பருப்பு பாயாசம் கேட்டது எல்லாம் செய்துக்கொடுத்தான். விசேட காலங்களில் நாம் கடவுள் படத்துக்கு முன்னால் வைக்கும் பலகாரம் போல தான் அவன் அவற்றுக்கு வைக்கும் உணவுகளும், அவை சாப்பிட்டதை போல பாசாங்கு செய்தாலும் எல்லாம் முழுதாக கிடக்கும் இரவு எல்லாம் குப்பைத்தொட்டி தின்றுவிடும்.

அன்று சுராஜ் ஒரு படி மேலே சென்றான். வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது புதிதாக தலையனைகளும், போர்வைகளும் வாங்கி வந்தான். அந்த ஆவிகளை தன்னுடனேயே படுத்துக்கொள்ளுமாரு சொன்னான். அன்று விடுடியும் வரை அந்த ஆவிகள் ஒரு குழந்தையின் குரலில் அழுதுக்கொண்டே இருந்தது. தன்னை யாரும் இப்படி மதித்து அருகில் படுத்துக்கொள்ளும் படி அழைத்ததில்லை என்று ஓவ்வொன்றும் அழுது அரட்டியது.

காலங்கள் ஓடின அந்த பகுதிலேயே ஒரு பெரிய வீட்டை கட்டி அங்கு அம்மாவுடன் குடி பெயர ஆயத்தமானான் சுராஜ். அதோடு ஒரு நல்ல கல்யாண வரனும் அவனை தேடி வந்தது. ஆனால் அவன் கண்களுக்கு மட்டுமே தெரியும் அவர்களை விட்டு பிரிவது அவனுக்கு மிகப்பெரிய துக்கமாக இருந்தது. அவன் கட்டிய புது வீட்டுக்கு எவ்வளவே அழைத்து பார்த்தான் அவர்கள் வர மறுத்துவிட்டார்கள்.

கண்ணீருடன் அந்த கடைசி இரவை அவர்களுடன் கழித்தான் சுராஜ். மறுநாள் காலை வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் புதிய வீட்டிற்கு மாற்றி சாவியை புதிதாக வீடு வாங்கி இருக்கும் அவனை போன்ற ஒரு பேச்சுலரின் கைக்கு கொடுத்தான்.

ராசியான வீடு கண்டிப்பா உங்களுக்கு நிறைய நல்லது நடக்கும் என்று அவன் கூறிய போது அந்த இளைஞன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான்.

அப்படியே போகும் முன் “இரவுகளில் கேட்கும் குரலை கேட்டு பயப்படாதீர்கள். அவர்கள் மிகவும் நல்லவர்கள்” என்று சுராஜ் சொல்லிவிட்டு விடைப்பெற்ற போது அந்த இளைஞன்  சற்றே ஆடிப்போனான்.

 

-மஹின் சுப்ரமணியம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php