2021 Nov 17
இளைஞர்கள் நாளைய தலைவர்கள். எதிர்காலத்தை கட்டியெழுப்பும் போராளிகள். இளைஞர்கள் ஒரு நாட்டின் அசைக்கமுடியாத சக்தியென்றால் அதற்கு மிகையாகாது. நாட்டை முன்னேற்றி செல்லும் முக்கிய கடமை இளைஞர்களினதே. நாட்டை வல்லரசாக்கும் திறமையும் இளைஞர்களுக்கே உள்ளது. ஒரு நாட்டின் கல்வியிலோ, கலாசாரத்திலோ, பொருளாதாரத்திலோ எந்த பிரிவை எடுத்துக்கொண்டாலும் அதில் பெரும் பங்கு இளைஞர்களுக்குதான். நாட்டை கட்டியெழும்பும் திறமைகொண்ட நம் நாட்டு இளைஞர்களின் தற்போதைய நிலையென்ன? ‘தப்பினேன் பிழைத்தேன்’ என்று அவர்கள் ஓட்டமெடுக்கின்றனர். கடல் கடந்து கல்வியைத் தொடர்ந்து அன்னை நாட்டை விட்டு அந்நிய நாட்டின் குடிமகனாகின்றனர். நம் நாட்டின் சாதிக்கவேண்டிய துறைகளும் அதற்கான பெரும் வாய்ப்பும் இருந்தும் கூட நாட்டு நிலவரத்தைக் கண்டு அச்சம் கொண்டு நாடு விட்டு நாடு சென்று குடிபெயர்கின்றனர். ‘வேலை வேண்டும், வேலை வேண்டும்.. நீதி வேண்டும், நீதி வேண்டும்’ என்று பெயர்ப்பலகை ஏந்தி வீதியோரம் புரட்சிசெய்த இளைஞர்கள் இன்று கடவுப்புத்தகத்தை கையிலேந்தி கடல் கடந்து செல்கின்றனர். நாடு போகும் நிலையில் இதுதான் ஒரே வழி என்பதால் தான் இம்முடிவை எடுத்திருக்கின்றனர் போலும். பட்டப்படிப்புகளை படித்து வெளிநாடுகளுக்குச் செல்லும் குழு ஒரு பக்கம். உறவினர்களோடு குடிபெயர்ந்து வாழப்போகும் இன்னுமொரு குழு ஒரு பக்கம். பிழைப்புத் தேடி குடிபெயரும் குழு ஒரு பக்கம். இப்படி போட்டிபோட்டு குடிவரவு குடியகழ்வு திணைக்கள காரியாலயங்களில் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் கூட்டத்தில் பெரும்பான்மையானர் இளைஞர் யுவதிகள் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
இன்றைய நாட்டு நிலவரமும்,அரசியலின் ஆளுமையும் நாட்டின் இளைஞர்களை பெருமளவில் பாதித்துள்ளது. இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கையின்மையால் தான் இளைஞர், யுவதிகள் வெளிநாடு செல்ல கடவுச்சீட்டு பெற்றுக்கொள்கின்றார்கள் என்பது பலரின் கருத்தாக அமைகிறது. தற்போது இலங்கை ரூபாய் அதிகளவில் அச்சிடுவதனால் அமெரிக்க டொலரின் பெறுமதி இன்னும் பலமடங்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதனால் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து பணவீக்கம் ஏற்படும். மக்கள் எவ்வளவு தொகை ரூபாய்களில் உழைத்தாலும் பொருட்களை கொள்வனவு செய்யும் போது சிரமங்கள் ஏற்படும். உழைக்கும் பணமெல்லாம் அன்றாட அத்தியாவசியச் செலவுகளுக்கே சரியாகிவிடுமென்றுதான் அதிகம் சம்பாதிக்க இளைஞர்கள் வெளிநாடு செல்கின்றனர். இங்கே படித்தோ அல்லது பட்டதாரியாகியோ ஒன்றும் கிடைக்கப்போவதில்லையென்று பல்வேறு தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பிற்கு பதிவு செய்கின்றனர். பாதி படிப்பை இலங்கையிலும் மீதி படிப்பை வெளிநாட்டிலும் பூர்த்தி செய்து அங்கேயே பட்டதாரியாகி வேலைவாய்ப்பையும் பெற்று பணம் உழைக்கின்றனர்.
இங்கேயிருந்தால் நல்ல கல்வி கிடைக்கும். நல்ல உத்தியோகம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இளைஞர் மனதில் வரவேண்டும். இதற்கு அனைவரும் பொறுப்பு. ஏனைய நாடுகளைப்போன்றே இலங்கையும்; அபிவிருத்தியடைந்து இளைஞர்களுக்கு எல்லாவிதத்தில் உந்துசக்தியாக அமையவேண்டும். அவர்களின் வேலைவாய்ப்பு, கல்வித்தேவை அனைத்தையும் நம் நாட்டில் பூர்த்திசெய்யும் தீர்வு ஏற்படவேண்டும். இளைஞர்களுக்காகவே சட்டங்கள் பிறப்பிக்கபட வேண்டும். அவர்களின் திறமைகளையும். தனித்துவத்தையும், ஆளுமையையும் எடுத்துக்காட்ட அவர்களுக்கு சரியான வாய்ப்புகளை அமைத்துக் கொடுக்கவேண்டும். படித்த பட்டதாரிகளும், திறமையான இளைஞர்களும் நம் நாட்டை விட்டு வெளியேறினால் நம் நாட்டில் எதிர்காலமென்று ஒன்று இருக்குமா? அவர்களின் மூலம் கிடைக்கும் பலன் நம் நாட்டுக்கல்ல. அந்நியநாட்டுக்கென்பதை புரிந்துகொள்ளவேண்டும். எத்தனை துறைகள் , எத்தனை உத்தியோகங்கள் இருந்தும் பயனில்லை ஒரு இளைஞன் இல்லாவிட்டால். ஒருநாட்டின் நிர்ணய சக்திகளான இளைஞர்களை நெறிப்படுத்தி அவர்களை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வளமான எதிர்காலமொன்றுக்கு வழிகாட்டுவது தான் நாட்டினுடைய முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும். இளைஞரை மிஞ்சியதொரு சக்தி இல்லை. நமது இளைஞர்களுக்கு பெற்றோர் மற்றும் அரசு உந்து சக்தியாக இருந்தால் லட்சியமிக்க எதிர்காலத்தை எளிதில் அவர்கள் அடைவார்கள் என்பதில் கலக்கமில்லை.
இளைஞர் மனதில் வாழ அச்சுறுத்தும் எண்ணத்தை விதைத்தது அவர்கள் நாட்டை வெறுத்து வெளிநாடுகளில் குடிபெயர காரணம் அவர்களின் பெற்றோரா? இல்லை வாழும் இந்த சமூகமா? அல்லது இந்த புதிய அரசாங்கமா? உங்கள் கருத்துக்கள்.. எங்கள் முடிவு