2022 Mar 2
கிரிக்கெட் என்றவுடனே பேட்டையும் போலையும் சுமந்துகொண்டு மைதானத்திற்கு ஓடும் மாணவர்களின் ஓட்டத்திற்கு பின்னால் கிரிக்கெட் வீரராக வேண்டுமென்ற கனவும் ஓடிக்கொண்டிருக்கிறது. கிரிக்கெட் என்றாலே யாருக்குதான் பிடிக்காது?அதிலும் சில மாணவர்களுக்கு கற்பதைவிட கிரிக்கெட் விளையாடுவதில் தான் ஆர்வம் அதிகம். ஆகவே இந்த கட்டுரையில் பாடசாலை கிரிக்கெட் இன் முக்கியத்துவம்? ஏன் அது இலங்கை கிரிக்கெட் அணிக்கு அவசியம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம். அதற்கு முன் நீங்கள் வாசிக்கும் ஆர்வத்தை இன்னும் கொஞ்சம் தூண்டுவதற்கு கிரிக்கட்டை பற்றி சுவாரஸ்யமான அறிமுகத்தை தருகிறோம்.
கிரிக்கெட் விளையாட்டைக் குறித்து கிடைத்திருக்கும் மிகப் பழமையான குறிப்பு 1598ம் சேர்ந்தது என்பது பீட்டர் வின் தாமஸ் இன் கருத்தாகும். எனினும் பதினேழாம் நூற்றாண்டுகளிலேயே கிரிக்கெட் ஒரு விளையாட்டாக விளையாடப்பட்டிருக்க வேண்டும் என்பது பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல குறிப்புகளின் மூலம் தெரிய வருகிறது.எந்த நூற்றாண்டாக இருந்தாலும் மட்டையையும் பந்தையும் வைத்து 11 பேரை இணைத்துகொண்டு ஒரு விளையாட்டை உருவாக்கி அதற்கு கிரிக்கெட் எனும் பெயரை வைத்து கிரிக்கெட்டின் தாயகமாக விளங்குவது இங்கிலாந்து என்பது அனைவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். அந்த காலத்திலிருந்து தற்போது வரையில் உலகெங்கும் கோடிக்கணக்கான வருவாயை ஈட்டும் இந்த கிரிக்கெட் விளையாட்டிற்கு தெற்காசிய நாடுகளில் மதிப்பும் மரியாதையும் அதிகம்தான். அப்படிப்பட்ட நாடுகளில் நாமும் ஒருவர்.
இலங்கையிலும் கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கென்று ஒரு தனிமரியாதையே இருக்கின்றது. இதற்கொரு விடயத்தை எடுத்துக்காட்டலாம்.அதாவது காற்பந்து எவ்வளவு பெரிய சர்வதேச போட்டியென்று அனைவருக்கும் கூறத்தேவையில்லை. இலங்கையைப் பொருத்தவரையில் காற்பந்து தேசியமட்டத்திலேயே விளையாடப்படுகிறது. ஆனால் இலங்கை கிரிக்கெட் என்பது சர்வதேச அளவில் அறியப்பட்டதொன்றாகும். அது மட்டுமன்றி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணியும் ஒரு போட்டியாளராக தம்மை பதிவுபடுத்திக்கொண்டன. ஆகவே இலங்கையில் தவிர்க்கமுடியாத ஒரு விளையாட்டாக கிரிக்கெட் கருதப்படுகிறது.இலங்கையின் கிரிக்கெட் அணிக்கு ஒருவர் தயாராகும் போது அவர் ஆரம்பித்திலிருந்தே தம்மை தயார்படுத்திக்கொள்ளவேண்டும். அதற்கான சரியான அடித்தளம் தான் பாடசாலை கிரிக்கெட் பயிற்சி மற்றும் போட்டிகள்.
பாடசாலையில் கிரிக்கெட் தொடர்பான பயிற்சிகளோ அல்லது போட்டிகளோ மாணவர்களுக்கு கிரிக்கெட்டின் அடிப்படைகளை கற்றுக்கொடுக்கிறது.தேசிய அணிக்கு தகுதிபெறுவதற்கான அடிப்படை பயிற்சியே பாடசாலையில் தான் ஆரம்பிக்கின்றது. எந்த விளையாட்டை எடுத்துக்கொண்டாலும் ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியம். அது கிரிக்கெட்டோ அல்லது வேறு விளையாட்டாகவோ இருக்கலாம். ஒழுக்கத்தை மீறும் பட்சத்தில் அந்த விளையாட்டின் மேல் நாம்கொண்டிருக்கும் மரியாதை தழும்பலடையும். கிரிக்கெட் அணியில் எப்படிப்பட்ட வீரர்களென்றாலும் இருக்கலாம். ஆனால் இலங்கை கிரிக்கெட் அணியில் இருக்கும் வீரர்களுக்கென்று ஒரு மரியாதையும் ஒழுக்கமும் இருக்கவேண்டும். ஏனெனில் இவர்கள் தனிப்பட்ட பெயருக்காக விளையாடுவதில்லை. தன் தாய் நாட்டிற்காக விளையாடவேண்டியது. இலங்கை கிரிக்கெட் அணிக்கென்ற ஒரு ஒழுக்கமும் கிரிக்கெட் விளையாட்டிற்கென்ற ஒரு மரியாதையையும் முதலில் பாடசாலைகளே கற்றுக்கொடுக்கின்றன.
பலமான அணியென்பது அனுபவத்தையும், திறமையையும், ஆர்வத்தையும், விடாமுயற்சியையும் கொண்ட வீரர்களால் கட்டியெழுப்பப்படுவது. நம்மிடம் பலவீனமொன்று இருந்தர்லும் கூட அதை மறைத்து நம் பலத்தை மட்டுமே காட்டவேண்டும்.அப்போது தான் நேருக்கு நேர் மோதப்போகும் எதிரணிக்கு பயம் வரும். இது இலங்கை அணிக்கும் பொருந்தும். இந்த துணிவு சிறுவயதிலிருந்தே வீரர்களிடமிருந்தால் எதற்கும் அஞ்சத்தேவையில்லை. இந்த துணிவை ஏற்படுத்தும் வாய்ப்பை பாடசாலைகள் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டியது அவசியம். எதிரே வரும் பந்தை கண்டு துடுப்பாட்ட வீரர் அஞ்சக்கூடாது. பந்தை விளாச காத்திருக்கும் பேட்டை கண்டு பந்து வீச்சாளர் பயப்படக்கூடாது. இதுவே ஒரு கிரிக்கெட் வீரருக்கு அடிப்படையான தைரியத்திற்கு தேவையான ஒன்று. எதனையும் பயமின்றி எதிர்கொள்ளும் ஒரு தைரியம் சக வீரரிற்குள்ளும் வரவேண்டும். இந்த தைரியத்தை ஆரம்பத்திலேயே உருவாக்க வேண்டியது நிச்சயம் பாடசாலைகள் தான்.
எந்தவொரு துறையாக இருந்தாலும் ஆர்வமென்ற ஒன்று இல்லாதவிடத்து எதையும் செய்யமுடியாது அது விளையாட்டுத்துறையாகவும் இருக்கலாம். கிரிக்கெட்டும் அப்படித்தான். ஆர்வமுள்ளவர்கள் கிரிக்கெட்டில் முழுமையாக தம்மை ஈடுபடுத்திக்கொள்வார்கள். இப்படி ஆர்வமுள்ள திறமையான மாணவர்களுக்கு நிச்சயம் வாய்ப்பளிக்கவேண்டும். முதலில் பாடசாலைகளுக்குள் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் மாணவர்களின் திறமையை காட்ட வாய்ப்புகொடுக்கவேண்டும். அதில் நன்றாக விளையாடியவர்களை இணைத்து கொண்டு பாடசாலைக்கென்ற ஒரு பலமான கிரிக்கெட் அணியை உருவாக்கவேண்டும். இந்த அணியை கொண்டு மற்ற பாடசாலைகளுக்கிடையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் பங்கெடுக்கச்செய்யவேண்டும். இதில் நன்றாக விளையாடுபவர்களை இணைத்து குழுவொன்றாக்கி மாவட்ட ரீதியாகவும் பின் மாகாணரீதியாகவும் போட்டிகளை நடாத்தி அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரவேண்டும். இதன் மூலமாக இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப மன்றத்திற்கு இப்படி கிரிக்கெட்டில் திறமையான மாணவர்கள் இலங்கையில் இருக்கின்றனர் என்பதைக் காட்டவேண்டும்.
பாடசாலைப் பருவம் உற்சாகமானது. அந்த பருவத்தில் விளையாடுவது தான் பயிற்சியைப் பெற்றுத்தருகிறது. பயிற்சியே வெற்றிக்காக ஒரு மனிதனை தயார்ப்படுத்துகிறது. இடைவிடாத பயிற்சியையும் விடாமுயற்சியையும் பெற்றுத்தருவது பாடசாலை விளையாட்டுகாலம் தான். ஒரு விளையாட்டிற்கு வீரமும் அதேசமயம் விவேகமும் இருக்கவேண்டும்.பாடசாலை விளையாட்டு போட்டிகளின் ஆரம்பத்தில் இதை நாங்கள் கற்றுக்கொள்கின்றோம். ஆகவே பாடசாலை கிரிக்கெட் என்பது இலங்கை அணிக்கு ஏன் அவசியமென்பது இப்போது புரிந்திருக்கும்.
மேலும் ஒரு முக்கிய விடயம் ஒன்றை இந்த சமூகமும் அரசாங்கமும் புரிந்துகொள்ளவேண்டும். வாய்ப்போ, தெரிவோ அனைவருக்கும் வழங்கப்படவேண்டிய சமமானதொன்று. விளையாட்டு என்பது தகுதிக்கோ தன்மானத்திற்கு வழங்கப்படுவதில்லை. திறமை என்பது நிறம்,மதம்,மொழி பார்த்து வருவதில்லை என்ற ஆழமான நியாயத்தை முதலில் அனைவரும் தெரிந்துகொள்வேண்டும். இலங்கையில் மலையகம் மற்றும் வேறு மாகணங்களை உள்ளடக்கிய வெளிப்பிரதேசங்களில் எத்தனையோ திறமையான மாணவர்கள் ஏதோ ஒரு மூலையில் கனவுகளை புதைந்து ஒளிந்துகிடக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் முதலில் மாவட்ட மட்டம் பின் மாகாண மட்டம் அதற்குபின் தேசிய மட்டத்தில் விளையாடும் ஒரு வாய்ப்பை ஏன் தரக்கூடாது? ஆளுமையும் அதிகாரத்தையும் ஆட்டிப்படைத்து ஆடும் ஆட்டம் என்பது உண்மையில் விளையாட்டேயல்ல. இங்கு திறமைக்கே முதலிடம் தரப்படவேண்டும்.
1996,மார்ச்,17 ஆம் திகதியை இலங்கை கிரிக்கெட் அணி மறக்காது. காரணம் அந்த நாளே இலங்கை அணி உலகக்கோப்பையை வென்றது. சுமார் 25 ஆண்டுகளைக் கடந்தும் இந்த உலகக்கோப்பையை பற்றி பேசிக்கொண்டிருக்கிற சமூகம் இன்னொரு உலகக்கோப்பையை சொந்தமாக்க என்ன செய்யவேண்டும் என்பதை மறந்துவிடுகிறது. அப்போது விளையாடிய இலங்கை அணி வீரர்களின் தனித்திறமை, ஈடுபாடு, பற்று, விடாமுயற்சியே வெற்றிக்கு வித்திட்டது. ஆனால் தற்போது இவையெல்லாம் சற்று குறைந்துவிட்டது என்பதே பலரின் கண்ணோட்டம்.இந்த கண்ணோட்டத்தை மாற்றுவதற்காகவாவது வீரர்கள் ஆரம்ப நிலையிலிருந்தே தயாராகவேண்டும்.அந்த ஆரம்பநிலை பாடசாலையிலிருந்தே உருவாகவேண்டுமென்பதே முக்கியம்.
ஆகவே பாடசாலைக் கல்வியில் கிரிக்கெட்டைப் போலவே ஏனைய விளையாட்டுகளுக்கும் மேற்கூறிய எல்லாமே தேவைப்படுகிறது. இதை தவிர பாடசாலையில் விளையாட்டு என்பது ஏன் அவசியம் என்பதற்கு பொதுவான காரணங்களும் உள்ளன. அதாவது விளையாட்டு கல்வியையும்,அறிவையும் போலவே வலிமையானதொன்று. பலமிழந்தவர்களை கூட விளையாட்டுக்கள் பலமாக்குகின்றது. நம் உடலை சீராக வைத்திருப்பதில் பெரும் பங்கு விளையாட்டிற்கு உண்டு. விளையாட்டு என்பது குழுஒற்றுமை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, வெற்றி, தோல்வியை ஏற்றுக் கொள்ளும் சகிப்புத்தன்மை, நட்புணர்வு, உற்சாகம் போன்ற மனபலத்தை தருகிறது. அதுமட்டுமன்றி நாம் விளையாடும் போது உடலில் உள்ள கழிவுகள் மற்றும் உப்புகள் வியர்வையாக வெளியேறுகின்றன. அதிக வியர்வை நீராவியாகும் போது நம் உடல் குளிர்ந்து உடல் வெப்பம் சீராகின்றது. நம் உடல் பருமனைக் குறைக்க உதவும் ‘டாப்மைன்’ என்ற சுரக்கும் பொருள் மூளையில் சுரக்கின்றது.ஆகவே விளையாட்டு என்பது உடல் பலத்தையும் தருமொன்றாக கருதப்படுகிறது. இது எந்த விளையாட்டாகவும் இருக்கலாம். இதனால் கற்றலைப்போலவே விளையாட்டிற்கும் பாடசாலைகள் முக்கியத்துவம் தரவேண்டும்.
தேசத்தின் பலமான அணிக்கான அடித்தளமே பாடசாலைகள் தான்.!