அனைத்தையும் நாடி  பாலியல் தொழிலாளர்களின் பரிதாப வாழ்க்கை

பாலியல் தொழிலாளர்களின் பரிதாப வாழ்க்கை

2022 Mar 2

எந்தக் குழந்தையும் மண்ணில் பிறக்கையில் நான் இப்படி ஆகவேண்டும் என்று கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. டாக்டர் ஆகணும் வக்கீல்   ஆகணும்னு கனவு கண்டவர்கள் கூட படிக்க பணம் இல்லாமல் இந்த தொழிலுக்குள் பலவந்தமாக வந்திருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. பணம் தான் வாழ்க்கை என்ற சமூக கட்டமைப்பு அதனை பல தீய வழிகளிலும் சம்பாதிக்க ஊக்குவிக்க ஆரம்பித்து விட்டது. தனது சுயநலத்திற்காக பெண்களின் பொருளாதாரத்தை காரணங்காட்டி இத்தொழிலில் தள்ளிவிட்ட அவர்களை பயன்படுத்திக் கொண்ட  ஆண் வர்க்கம் எல்லாருமே சமூகத்தில் நல்லதொரு பெயரோடு உலாவும் போது பாவம் இவர்கள் மாத்திரம் சமூகத்தில் தீண்டத்தகாதவர்களாக பல கெட்ட  பெயர்களோடு வாழ்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் பாலியல் தொழிலாளர்களும் ஓர் மனிதர்களே அவர்களுக்குள்ளும் ஓர் மனது இருக்கிறது.  அதற்குள் உடலின் காயத்தின் வலிகளும் உள்ளத்தின் சொல்லமுடியா வலிகளும் இருக்கும் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவர்களிடம் போய் வரும் ஆண்களை நாம் சமூகத்தில் ஒதுக்கி வைப்பதில்லை. இவர்களை மட்டுமே ஒதுக்கி வைத்து விடுகிறோம். தீண்டத்தகாதவர்கள் என நாம் ஒதுக்கி வைக்கும் பாலியல் தொழிலாளர்களின் பரிதாப நிலையை பற்றிதான் நாம் இந்த கட்டுரையில் பார்க்கவுள்ளோம்.

பாலியல் தொழிலாளர்களில் பலர் திருந்தி வாழ நினைத்தாலும் சமூகம் அவர்களை வாழவிடுவதில்லை. பாலியல் தொழிலாளர்கள் உருவாகுவதில்லை, உருவாக்கப்படுகிறார்கள். பாலியல் தொழிலாளிகள் ஒவ்வொருவருக்கும் ஓர் மோசமான பிண்னணி இருக்கும். ஓர் சில கதைகளை கள ஆய்வுக்காக சேகரித்திருந்தோம். அவற்றினை பார்வையிட்டு அவர்களது வாழ்க்கையை பாதுகாக்க சட்ட ரீதியான உதவியை நாடுவதற்கான செயற்பாடுகளை நாம் தெரிந்து கொண்டு அவர்களை பாதுகாக்க அவர்களுக்கு உதவி செய்ய முன்வரவேண்டும் என்பதே எனது வேண்டுகோள் !

கதை 1

கிட்டத்தட்ட இந்த சம்பவம் இடம்பெற்று 6 தொடக்கம் 7 வருடங்கள் இருக்கும். இந்த   கதையினை எம்மிடம் பகிர்ந்தவரின் நண்பர் ஒருவரே இந்த கதையினை எம்மோடுபகிர்ந்தவருக்கு சொல்லியிருந்தார்.

அந்த  ஒருவர் தனது நண்பர்களோடு கொழும்பிற்கு சுற்றுலாவிற்கு சென்றிருந்தார். அந்தநேரத்தில் அங்கே வந்திருந்தவர்களில் ஒருவன் மிகவும் அவலட்சணமாக காணப்பட்டான். பார்ப்பதற்கு மிகவும் அருவருக்கத்தக்க முகத்தினை கொண்டமையால் முப்பது வயது ஆகியும்  அவனை யாரும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை. யாரும் தன்னை விரும்பவில்லை என்றதால் அவனாகவே பெண்ணை விலை கொடுத்து வாங்கி தனது ஆசையை தீர்த்துக் கொள்ள முடிவெடுத்திருக்கிறான். அதனால் அன்று அனைவரும் குடிப்பதற்கு ஒன்று கூடும் முன்னரே தனக்கு இன்றிரவு ஒரு பெண் அதுவும் பதினாறு வயது பெண்ணாக தொழிலில் அனுபவம் இல்லாத புதிய பெண்ணாக  வேண்டும் என்ற விசித்திரமான கோரிக்கையை முன்வைத்தான். இதனால் நண்பர்களும் அவன் ஆசையினை நிவர்த்தி செய்ய வேண்டும் என நினைத்து அவன் கேட்டமாதிரி இத்தொழில் செய்ய விடுதி வைத்திருக்கும் ஒரு பெண்ணை தொடர்பு கொண்டு தங்களது தேவையை பற்றி சொல்லவும் அவளும் சரி கொண்டு வந்து விடுகிறேன் என ஓர் இரவுக்கான பணத்தொகையை பேசி முடித்தவுடன் ஒரு பதினாறு வயது மதிக்கத்தக்க ஓர் அழகான சிறுமியை கொண்டு வந்து நிறுத்துகிறாள்.

அவளது முகத்தில் தெரிந்த அச்சமும் பதற்றமும் அவளாக இந்த தொழிலுக்கு வரவில்லை என்பதனை உணர்த்தியிருந்த வேளையில் அந்த கூட்டிக் கொண்டு வந்த அந்த நடுத்தர வயது பெண்மணி அவளை கொண்டு வந்து விடவும் தன்னோடு இன்று இரவு தங்க போறவன் யார் என பார்த்ததும் அவள் மறுத்து பின்வாங்குகின்றாள்.  அவன் அவலட்சண முகத்தினை பார்த்ததும் அவனோடு போக மறுக்கிறாள். அந்த பெண்மணி கட்டாயப்படுத்தவும் இதில் இருக்கும் யாருடனும் போகிறேன். ஆனால் அவனோடு போகமாட்டேன் என அழுகிறாள். அந்த நேரம் அந்த நடுத்தர வயது பெண் அவள் வேலைக்கு புதிது அதுதான் அழுகிறாள் அவளை சமாதானப்படுத்தி கூட்டி வருகிறேன் எனக் கூறி கூட்டிக் கொண்டு போனவள் சில மணிநேரத்தில் அவளோடு திரும்ப வந்து   அவளை அவனோடு விட்டு செல்லவும் மற்றவர்கள் அனைவருக்கும் குழப்பம் அழுது அடம்பிடித்தவள் எப்படி உடனே சம்மதித்தாள் என்பதே பிறகு அதை அறிந்து கொள்ள அடுத்த நாளும் அந்த ஒருவர் அவளை கூப்பிட்டு உண்மையை தெரிந்து கொள்ள விரும்புகிறார்.

மீண்டும் கூப்பிட்டு அவளிடம் விசாரிக்கும் போது அவள் ஆடைத்தொழிச்சாலையொன்றில் வேலை செய்ததாகவும் அங்கே ஏதோ ஒன்றினை உடைத்து விட்டதால் அங்கிருந்து வேலையை விட்டு நின்று வேலை தேடும் போது அந்த பெண்ணை கூட்டி வந்தவர் அவளுக்கு நிறைய சம்பளம் தருகிறேன் வா என ஆசை வார்த்தை காட்டி ஒரு நாள் ஒரு அறையில் ஒரு பையனோடு விட்டு அதனை வீடியோவில் பதிவு செய்து நீ இந்த வேலையை செய்தால் பணம் தருவோம் செய்யாவிட்டால் இதனை இணையத்தளத்தில் பதிவு செய்வோம். உன் குடும்பத்தின் நிலையை புரிந்து கொண்டு செயற்படு என மிரட்டவும் அவள் பயந்து போய் இத்தொழிலில் சேர்ந்து கொண்டாள். அவள் இத்தொழிலை செய்ய மறுக்கும் போது அந்த வீடியோவை காரணங்காட்டி மிரட்டி அவளை செய்ய வைப்பதாக கூறினாள். அன்று அவளுக்கான பணத்தினை கொடுத்து அனுப்பி விட்டார்கள். அவளை காப்பாற்ற முடியாமல் திரும்பி வந்து விட்டார்கள்.

கதை 2

அதிகமாக மொடலிங் துறைக்கு செல்லும் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் அதிகளவில் காணப்படுவதனால் அத்துறையில் ஈடுபடும் பெண்கள் அனைவரையும் சமூகம் வித்தியாசமாக நடத்த முற்படுகிறது. அவர்களுக்கு வாய்ப்பு தருகிறேன் என்ற பெயரில் அவர்கள் வாழ்க்கையை கெடுக்கும் வகையில் பலர் செயற்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் மொடலிங்  துறைக்கு சென்று பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பெண் ஒருவரின் கதை தான் இது அவர் ஆரம்பத்தில் இத்துறைக்கு வரும் போது அவருக்கு 3 பிள்ளைகள் இருந்தார்கள். கணவன் விட்டு சென்றதனால் அவர் பிள்ளைகளை வளர்க்க இத்துறைக்குள் சென்றார். அங்கே உள்ளவர்கள் அவரை பேரம் பேச ஆரம்பித்து விட்டார்களாம். அவர்களுக்கு இணங்கி போனால் தான் வாய்ப்புக்களும் கிடைக்கும் என்பதனால் பொருளாதாரப்பிரச்சினையை சரிப்படுத்த வேறு வழியில்லாமல் பாலியல் தொழிலையும் சேர்த்தே செய்ய ஆரம்பித்தார். அவரின் மனதில் குற்ற உணர்ச்சியே மேலோங்கி காணப்பட்டது. இந்த மொடலிங் துறைக்கு வாற பெண்களுக்கு பாதுகாப்பில்லை. அவர்கள் சுயத்தோடும் மற்றவர் போல சுயமரியாதையுடனும் வாழ்வது கடினம் என அவர் கூறியிருந்தார்.

பாலியல் தொழிலானது சட்டபூர்வமாக தொழிலாக்கப்படவில்லை என்றாலும் இலங்கையில் மொடலிங் துறைகள் மசாஷ் சென்ரர்கள் போன்றவற்றில் அதுவும் ஒரு பக்கம் நடாத்துவதற்கு எம் பெண்கள் தூண்டப்படுகிறார்கள். கொரோனா காலத்தில் எல்லோருக்கும் நிவாரணம் கொடுத்தும் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தினை கொண்டு நடாத்த போராடினார்கள்.  அந்த வேளையில் பாலியல் தொழிலாளர்கள் தமது தொழிலை இழந்து உணவுக்காக கஷ்டப்பட்டார்கள். சமூகத்தில் இவர்களும் மனிதர்கள் தான் என உணர்ந்து யாரும் அவர்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.

பணத்திற்காக உடலை விற்பது என்பது அத்தனை கொடிய ரணமான ஒன்று ஏதோ ஓர் காரணத்திற்காக இந்த தொழிலில் தள்ளப்பட்டவர்களுக்காக அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காமல் இருப்பது வேதனைக்குரியதே வேலை செய்யும் இடங்களிலும் கல்வி கற்கும் இடங்களிலும் கூட அநேகமாக இந்த பாலியல் சுரண்டல்கள் நடைபெற்று வருகிறது. நல்லதொரு தொழிலில் இருந்தும் அதனை தக்க வைக்க பாலியல் இலஞ்சம் பெறும் முதலாளிவர்க்கத்தினர்களுக்கு எதிராக பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயல்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் அவர்களுக்கான பாதுகாப்பினை பெற்றுக் கொடுக்க அரசாங்கத்தால் முடியும்.

அதுமாத்திரமன்றி சட்டப்படி சித்திரவதையில் இருந்து விடுதலை பெற அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் பாலியல் தொழிலாளர்களால் தமக்கு இழைக்கப்படும் கொடுமைகளில் இருந்து இலகுவில் வெளிவரவோ சட்டத்தின் பாதுகாப்பினை பெறவோ முடிவதில்லை ஏனென்றால் பாலியல் தொழில் சட்டபூர்வமாக்கப்படவில்லை என்பதனால் அவர்களால் தங்களுக்கு இளைக்கப்படும் கொடுமைகளை வெளியில் சொல்லவோ தமக்கான பாதுகாப்பினை பெற்றுக் கொள்ளவோ முடிவதில்லை.அதுவே அவர்களை வைத்து தொழில் செய்யும் புரோக்கர்மார்களுக்கு வாய்ப்பாக மாறிவிடுகிறது.

இவ்வாறு தினம் தினம் அவர்களுக்கு ஓர் சோகக்கதை இருக்கும் என பாலியல் தொழிலாளி ஒருவர் கூறியுள்ளார். மேலும் அவர்கள் கூறிய துன்பியல் அனுபவங்களாக  அங்கே வருபவர்கள் மனிதர்களாகவே இருக்க மாட்டார்கள் பலர் குடித்துவிட்டு போதையில் வருவார்கள். போதையில் மிருகத்தினை போல நடந்து கொள்வார்கள். இரவுகளில் தூக்கமே இருக்காது. கொடுத்த காசுக்கு விடிய விடிய அவர்களால் கொடுமைகளை சகிச்சுக்க நேரிடும். எங்களுக்கு குடும்பமோ நல்ல நண்பர்களோ யாரும் கூட இருக்க மாட்டார்கள். அனைவரும் எங்களை ஒதுக்கி வைத்தபின்னர் அன்பென்பது என்னவென்றே அவர்களுக்கு அறிய வாய்ப்பிருக்காது.  அவர்களோடு பேசுபவர்கள்  அவர்களோடு வேலை செய்பவர்களாகவும் வாடிக்கையாளர்களாகவும் தான் இருப்பார்கள். அதை தவிர அவர்கள் கஷ்டங்களைபகிர்ந்து கொள்ள யாருமே கூட இருக்கமாட்டார்கள். மிக அவலங்கள் நிறைந்தது நான் அவர்களது வாழ்க்கை அவர்களுக்கான அடிமை வாழ்வியலில் எத்தனையோ கஷ்டங்களை அனுபவிக்க நேர்கிறது.  பெண்கள், சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் சுரண்டல் மிரட்டல்கள், பொருளாதார பிண்ணனி போன்ற பல காரணங்கள் அவர்களை இந்த தொழிலுக்குள் தள்ளிவிடுகின்றன. எனவே அவற்றினை தடுப்பதற்காக நாம் சமூகத்தில் அவர்களுக்கு ஆரம்பத்தில் பிரச்சினை வரும்போதே அவர்களை காப்பாற்றி நல்ல பாதையினை காட்டி உதவி செய்ய வேண்டும்.

பிரியா நடேசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php