அனைத்தையும் நாடி  போராட்டங்களை முடக்கும் பொலிஸாரின் அராஜகம்!

போராட்டங்களை முடக்கும் பொலிஸாரின் அராஜகம்!

2022 Apr 25

இலங்கையில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு கோரியும் காலங்காலமாக நாட்டில் இடம்பெற்று வரும் ஊழலுக்கு எதிராக நீதி கோரியும் மக்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளார்கள். காலி முகத்திடலில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நாட்டின் எதிர்காலத்திற்காக இரவு பகல் பாராது போராடி வருகின்றார்கள்.

நாட்டு மக்களின் ஆர்ப்பாட்டம் காலி முகத்தில் மற்றும் கொழும்பு எல்லைக்குள் மாத்திரம் விரவியிருந்த நிலையில் புதிய மின் வலு மற்றும் சக்தி அமைச்சராக காஞ்சன ஜயசேகர நியமிக்கப்பட்டதன் பின்னர் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருட்களின் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த மக்கள் கடந்த செவ்வாய்க் கிழமை அன்று றம்புக்கண காலி திகன குருணாகல் மற்றும் மாவனெல்லை போன்ற பிரதேசங்களில் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டனர்.

றம்புக்கண பகுதியில் இருந்த ஆர்ப்பாட்டக் காரர்கள் புகையிரதப் பாதையினை சுமார் 15 மணித்தியாலங்களுக்கும் மேலாக மறித்து வைத்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதனிடையே குறித்த பிரதேசத்திலுள்ள மக்கள் அல்லாத வெளிப்பிரதேசங்களில் இருந்து வந்த மக்கள் வன்முறைகளில் ஈடுபட்டனர். பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் செய்துள்ளதுடன் துப்பாக்கிச் சூடும் மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சரவதேச அளவில் பெரும் கண்டணங்களுக்கு உள்ளாகியுள்ள இந்த விடயம் பொலிஸார் மீது அதிருப்தியை உருவாக்கியுள்ளது. மக்களின் அமைதிப்போராட்டத்தை சீர்குழைப்பதற்கு என காலி முகத்திடல் உட்பட பல்வேறு பிரதேசங்களில் அரசாங்கத்திற்கு ஆதரவான குழுக்கள் செயற்படுவதாகவும் இராணுவத்திலிருந்து ஒரு குழு இதற்காக செயற்படுவதாகவும் சமூக ஊடகங்களில் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். என்றபோதிலும் இராணுவ ஊடகப் பிரிவு இதனை மறுத்துள்ளது. மேலும் றம்புக்கண விவகாரம் குறித்து உரிய முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பலப்பிரயோகம் மூலம் ஆர்ப்பாட்டக்காரர்களை நாங்கள் அடக்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தெரிவித்துள்ளார்கள்.

இலங்கையில் பொலிஸார் இவ்வாறு அசமந்தப் போக்குடன் பொறுப்பில்லாமல் மக்களின் உயிருடன் விளையாடுவது இது முதல் தடவை கிடையாது. போராடும் மக்கள் பொலிஸாருக்கு மறியாதையினையே செய்கிறார்கள். உணவு பாணங்களை கொடுக்கிறார்கள் ரோஜாப் பூக்களை பரிசாக கொடுக்கிறார்கள். ஆனால் பொலிஸார் தமது துப்பாக்கியிலிருந்த தோட்டாக்களைதான் போராடும் மக்களுக்கு கொடுத்துள்ளார்கள்.

றம்புக்கணயில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பொலிஸார் குறைந்தபட்ச பலத்தை பிரயோகித்ததாகவே பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) தெரிவித்துள்ளார். 30,000 லீற்றர் எரிபொருளைக் கொண்ட பௌசருக்கு ஒரு குழுவினர் தீ வைப்பதைத் தடுப்பதற்காக பொலிஸார் குறைந்தபட்ச பலத்தை கையாண்டதாக பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்படக்கூடிய பாரிய சேதங்களை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

றம்புக்கணயில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் போது பொலிசார் அதிக பலத்தை பயன்படுத்தினார்களா என்பதை அறிய பொலிஸ் தலைமையக மட்ட விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தமை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவித்துள்ளது.

‘வெளிப்படைத்தன்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் மற்றும் போராட்டக்காரர்களினை கருத்தில் கொண்டு பொலிஸ் துறையும் ஆயுதப்படைகளும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயற்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்’ என்று சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ‘ஜனவரி 2022 வரை எங்களால் செய்யப்பட்ட முந்தைய எச்சரிக்கைகள் அதிகாரிகளால் கவனிக்கப்படாமல் போனது எங்களுக்கு வருத்தமளிக்கிறது. இந்நாட்டு மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க எமது உறுப்பினர்கள் தொடர்ந்தும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்வார்கள்’ என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை கூறுகின்றது. சம்பவம் இடம்பெற்ற அடுத்த நாள் கேகாலை நீதிமன்றத்தில் நாடெங்கிலுமுள்ள பெருமளவான சட்டத்தரணிகள் நீதி கோரி ஒன்றுகூடியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொலிஸாரின் அராஜகத்தை எதிர்த்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு றம்புக்கணயில் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பில் விசாரணை நடத்த மூவர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளது. அத்துடன் சர்வதேச தலைவர்கள் பொலிஸாரின் பொறுப்பற்ற செயலுக்கு கண்டனங்களை வெளியிட்டுள்ளார்கள்.

இது தொடர்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் கவலை தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் ஆர்வலர்களான ஜுலி சங் மற்றும் டேவிட் கின்னன் ஆகியோரும் றம்புக்கண சம்பவத்திற்கு கண்டனங்களை வெளியிட்டுள்ளார்கள்.

‘பட்டினியுடனும் விரக்தியுடனும் வந்த ஒரு மனிதர் இறந்து விட்டார். ஏனென்றால் அந்த மனிதரை பாதுகாக்க எங்களிடம் மனிதநேயம் இல்லை. கோடாபய ராஜபக்ஷ அவர்களே இந்த நாட்டின் கண்ணீருக்கு அப்பால் உங்களையும் உலகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றது’ என றம்புக்கண சம்பவம் குறித்து எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தன டுவிடர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

முன்னாள் கிரிகெட் வீரர் மஹல ஜயவர்தன கருத்து தெரிவிக்கையில் ‘மக்கள் பொதுச் சொத்துக்களை சேதம் செய்தாலோ வன்முறைகளில் ஈடுபட்டாலே அவர்களை கைது செய்யலாமே தவிர துப்பாக்கியால் சுட முடியாது. இதுதான் ஜனநாயகமா? இதுதான் சட்டத்தின் பூமியா?’ என்று இலங்கை பொலிஸாரிடம் வினவியிருந்தார்.

இந்நிலையில் றம்புக்கண பிரதேசத்தில் அண்மையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு தொடர்பில் கேகாலை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ‘பி’ அறிக்கையை மாற்றியமைத்ததாக றம்புக்கண பொலிஸார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

றம்புக்கண பொலிஸார் சம்பவம் தொடர்பான உண்மைகளை ‘ஏ.ஆர்’ அறிக்கை மூலம் சமர்ப்பித்திருந்த போதிலும், நீதவான் ‘பி’ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

‘பி’ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, டிபெக்ஸைப் பயன்படுத்தி அறிக்கையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருந்ததை நீதவான் அவதானித்தார்.

போராட்டக்காரர்கள் சார்பில் ஆஜரான பல சட்டத்தரணிகளும் ‘பி’ அறிக்கையின் மாற்றங்களை குறிப்பிட்டு நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர். அறிக்கையை மாற்றியமைத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் நீதிமன்றத்தை நாடியிருந்தனர். இதையடுத்து, இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டார். இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றதன் பின்னர், இந்த விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்குமாறும் கேகாலை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை செவ்வாய்க்கிழமை றம்புக்கணயில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சாட்சியங்களின் வாக்குமூலங்கள் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. றம்புக்கணயில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு மற்றும் ஏனைய சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நீதவான் விசாரணையின் போதே இந்த வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

போராட்டத்தின் போது தீ வைத்து எரிக்கப்பட்ட முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவத்திற்கு சாட்சியாக முன்னோக்கிச் சென்றுள்ளதாக மௌபிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று வாகனத்திற்கு தீ வைப்பதை நேரில் பார்த்ததாக சாரதி தெரிவித்துள்ளார். நீதவான் முன்னிலையில் சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் அதிகாரிகளை அடையாளம் காண முன்வந்த மற்றொரு சாட்சி சாட்சியமளிக்க மறுத்துவிட்டார். போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் அதிகாரிகளை தன்னால் அடையாளம் காண முடியும் என்று அந்த நபர் முன்பு கூறியிருந்தார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் றம்புக்கண பொலிஸில் இணைக்கப்படாத அதிகாரிகளும் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இருப்பினும், வாக்குமூலத்தைத் தொடர்ந்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் அவர் சாட்சியமளிக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் றம்புக்கண சம்பவத்தின் போது எரிபொருள் பௌசருக்கு தீ வைக்க முயற்சித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 27 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளியன்று இரவு பின்னவலயில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவுசெய்வதற்காக பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார். விசாரணையின் போது, போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த பொலிஸ் துறைக்கு அறிவுறுத்தவில்லை என்று ஐஜிபி ஆணையத்தில் தெரிவித்தார்.

றம்புக்கண துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ் குழு இன்று கேகாலை நீதவான் நீதிமன்றில் அறிக்கையை கையளித்துள்ளது. நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, சம்பவத்தின் போது நான்கு ரி-56 துப்பாக்கிகள் மற்றும் 35 தோட்டாக்கள் பொலிஸாரால் பயன்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

றம்புக்கணயில் நிலைமையைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்துமாறு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சி.டபிள்யூ.சி.தர்மரத்ன மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன ஆகியோர் பணிப்புரை விடுத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை, பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட போராட்டக்காரர் சமிந்த லக்ஷனின் வீட்டுக்கு அருகாமையில் போராட்டம் ஒன்றும் இடம்பெற்று வருகின்றது. அவரது இறுதிக் கிரியைகள் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

அஹ்ஸன் அப்தர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php