2022 Apr 21
இலங்கையின் தற்போதைய சூழல் பற்றியும் அன்றாடம் வாழ்வில் அடிக்கடி நிகழ்கின்ற அநீதியான செயல்களை பற்றியும் விளக்கும் பாடலாக வெளியாகியுள்ள பாடல் தான் Vidushan இன் ‘போராளி’ என்ற பாடல். இந்த பாடலினை Vidushan எழுதி அவரே பாடியுள்ளார். இந்த பாடலுக்கான முயற்சிக்காக அவரை பாராட்டியே ஆக வேண்டும்.
இந்த பாடலை பற்றி விமர்சிப்பதற்கான லின்க் எனக்கு நேற்று அனுப்பபட்டது ஆனாலும் இன்று காலை தான் அந்த லின்க்கினை திறந்து பார்த்தேன். எல்லா ரெப்பர்களும் போலவே அவருக்கான அறிமுகம் கொடுக்கப்பட்டு அதன் பின் பாடல்,
“சுமைகளும் இன்னும் தீரவில்லை…” என ஆரம்பமாகிறது. இதை கேட்கும் போது அவ்வளவு திருப்தி இருக்கவில்லை ஆனாலும் அடுத்து தொடர்ந்து வந்த,
“நான் எழுதும் வரிகள் எல்லாம் வாழ்க்கையோட பாடம்…” என்ற வரிகள் மற்றும் இசை பாடலை கேட்க ஆர்வத்தினை தூண்டியது. அதே ஆர்வத்தோடு பாடலை கேட்டுக் கொண்டிருக்கையில் இடைக்கிடையில் “சுமைகளும் இன்னும் தீரவில்லை…” என்ற வரிகள் தோன்றி அதன் இசையானது சிறிது அதிருப்தியை தந்தாலும் மற்றைய வரிகளும் இசையும் அந்த அதிருப்தியை ஈடு செய்து விட்டன.
இந்த பாடலுக்கான காணொளியில் Vidushan ஐ சுற்றியே கேமரா வைக்கப்பட்டிருந்தது. ஒரு வேளை பாடல் வரிகளுக்கு ஏற்றவாறு நிகழ்வுகளை காணொளியாக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என்னுடைய கருத்து. நீங்கள் இப்போது “அதுக்கு காசு நீயா தருவ?” என கேட்கலாம். நியாயமான கேள்வி தான் அவ்வாறு பட்ஜெட் இல்லையென்றால் எளிமையான அனிமேஷன் ஏதேனும் முயற்சி செய்திருக்கலாம். அதற்கும் பட்ஜெட் இல்லையென்றால் பாடலின் வரிகளை லிரிக்காக செய்து காணொளியோடு இணைத்திருக்கலாம் ஏனெனில் பாடலின் வரிகளை சட்டென கண்டுபிடிக்க முடியாதபடி சற்று சிக்கலாக இருந்தது. காட்சிகள் அல்லது லிரிக் இணைத்திருந்தால் பார்ப்பவர்களிடையே பாடல் ஆழமாக பதியும் என்பது என்னுடைய கருத்து.
இந்த பாடலில் இறுதியாக இடம் பெற்ற,
“வலைகள் அறுந்தும் சிலந்தி தற்கொலை செய்யாது.” என்ற வரி எனக்கு மிக பிடித்த வரியாக மாறிவிட்டது. இந்த வரியினை டைப் செய்யும் போது மூன்று தடவைகள் அந்த இடத்தினை ரிவைன் பண்ணி கேட்டு விட்டு தான் டைப் செய்கிறேன். இப்போது என் காதில் கோளாறு என்று கூட சொல்வார்கள். பரவாயில்லை! அப்படியே இருக்கட்டும். என்னைப் போல் காதில் கோளாறு உள்ளவர்கள் விளங்கி கொள்வதற்காக சரி அடுத்த பாடலின் காணொளியில் லிரிக்கை இணையுங்கள். எனக்கு இந்த பாடலின் இசையினை கேட்கும் போது ஹிப் ஹொப் தமிழா ஆதியின் “இறைவா எனக்கொரு எனக்கொரு வரம் தா” பாடல் புத்திக்குள் எட்டிப் பார்த்து விட்டு செல்கிறது. எனக்கு மட்டும் தான் அவ்வாறு தோன்றுகிறதா இல்லை உங்களுக்கும் அவ்வாறு தோன்றுகிறதா என கமன்ட் பொக்ஸில் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
Link: https://bit.ly/3JnOhVw