2022 Apr 29
இதுவரை வரலாறு காணாத அளவு பாரியளவிலான பொருளாதார நெறுக்கடிக்கும், உள்நாட்டு பூசல்களுக்கும் முகம் கொடுத்துக்கொண்டிருக்கிறது இன்று இலங்கை அரசு. பெரும்பாலும் இறக்குமதிகளை நம்பியே நகரும் தீவுநாடான இலங்கை, டொலரின் கையிருப்பின்றி அத்தியாவசிய பொருட்தேவைகளைக் கூட நிவர்த்தி செய்ய முடியாது நிரம்பலை விஞ்சிய கேள்விப் பொருளாதார சக்கரத்தோடு நகர்ந்துக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் மூழ்கும் கப்பலின் மேலதிக நீரை வெளியேற்றுவதற்கு பதில் மேழும் பல துவாரங்களை தோண்டுவதாகவே அமைந்திருந்தது அரசின் கடந்த கால காய் நகர்த்தல்கள். இச்சிக்கலை தீர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் நாட்டுத் தலைமையும் பொருளாதார நிபுனர்களும் தலைகளை பிய்த்துக்கொண்டிருக்க, நிவாரணங்களுக்காக நட்பு நாடுகளிடம் கரமெய்தியும், சர்வதேச நாணய நிதியத்திடம் பண உதவிகளையும் கோறி நாடியிருக்கிறது இலங்கை. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பதற்காக வங்கி வட்டி வீதத்தை அதிகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தற்போதயை பொருளாதார இறுக்கத்திற்கு அரசின் நெடுங்கால நடவடிக்கைகளே ஏதுவாக இருந்திருக்கிறது. குறிப்பாக முறையான வளப் பயன்பாடின்மை. எதிர்கால பயன்பாட்டிட்கான துள்ளியமான வியூகங்கள் இன்மை. கடந்தகால கடன் கொள்கைகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொரோனா தொற்றென்று தொடர்ந்து சறுக்கத்தொடங்கிய பொருளாதாரம் ரசிய யுக்ரைன் போரின் பின்பு கழுத்துமுறியும் நிலைக்கு தள்ளப் பட்டு மூச்சிலுத்து விடுவதற்கேனும் அவகாசம் இல்லாமல் தினறிக்கொன்டிறுக்கிறது இலங்கை.
பண்டைய இலங்கையை நோக்கி காலப்பயணமொன்றை மேற்கொள்ளமுடியுமேயானால் முற்றிலும் வேறுபட்ட தன்னிறைவான, தழும்பிய உற்பத்திப்பண்டங்களை ஏற்றுமதி செய்த தானியக் களஞ்சியமாய் அமைந்திருந்த விவசாய நாடொன்றை காணக்கூடியதாக இருக்கும். ஆனால் இன்று சிலரின் அரசியல் அபிலாஷைகளுக்காகவும், மறைமுகமான அந்நிய ஆதிக்கங்களினாகலும் வாழ்ந்துக் கெட்தென்ற கூற்றுக்கு பேருதாரணமாய் திகழ்கிறது பண்டைய பற்பம்.
இன்றும் இப்பொருளாதார பின்னடைவை தளர்த்து, இலங்கை பெருமூச்சுவிடத் துவங்கியப் பின் தேசத்தை மீழ் கட்டியெழுப்பவும் பெரும்பான்மையான துறைகளில் தன்னிறைவான நாடாகவும்; அந்நிய முதலீடுகளை ஏற்படுத்திக் கொள்ளவும்; ஆசியாவின் ஐஷ்வர்யமாக இலங்கையை நம்மால் உருவாக்க முடியுமென்பதில் இட்டுக்கட்டும் வார்த்தைகளுக்கு ஒருபோதும் இடம் இல்லை. அவ்வாறு மேம்படுத்தக்கூடிய கையிருப்பிலுள்ள சில துறைகளையும் அவற்றை மேம்படுத்த அரசினால் ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய வழிமுறைகள் சிலவற்றையும் நோக்கலாம்.
விவசாயத் துறை
தொழிநுட்ப வளர்ச்சியில் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கும் போதும் இலங்கை விவசாய நாடென்பதில் மாற்றுக்கருத்தில்லை. கடந்த காலங்களில் விவசாயம் மற்றும் விவசாயம் சார் துறைகள் சார்ந்து தவறான தீர்வுகளை எடுத்தமையும் இன்றைய பொருளாதார நெறுக்கடியில், நேராடியாகவும் மறைமுகமாகவும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
குறிப்பாக டொலரின் இருப்பை தக்கவைப்பதற்காக கரிம இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளப்போவதாய் அசேதன பசளைக் கொள்வனவை தடை செய்த அரசாங்கத்தின் திடீர் வர்த்தமானியால் விவசாயிகளும் விவசாயமும் பாரிய அளவில் பாதிக்கப்பட்டதிலிருந்தே பிள்ளையார் சுழியிட்டு வெடிக்கத்தொடங்கிற்று பொருளாதார நெறுக்கடி.
விவசாயத்தில் முன்னிலை வகிக்கும் மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூட கரிம விவசாயத்திற்கு முற்றாக மாறுவதற்கான சாத்தியப் பாடுகளுக்களைத் தேடிக்கொண்டிருக்கும் போது எந்தவித முன்னறிவிப்புகளும் இன்றி தேசத்தின் விவசாயத்தை முற்றிலும் இயற்கை விவசாயத்திற்கு மாற்றப்போவதாய் இரசாயன பசளை இறக்குமதிக்கு தடை விதிப்பதற்கு மேற்கொண்ட தீர்மானம் முற்றிலுமோர் பகிடியாய் அமைந்திருந்தது. நாட்டின் வளர்ச்சிக்கு பேரளவில் பங்கு வகிக்கும் விவசாயத்திற்கு அரசு தங்கள் கவனத்தை அவ்வளவாய் ஒதுக்காதது நாண வேண்டிய ஒரு விடயமாகத்தான் நான் கருதுகின்றேன்.
இலங்கையின் விவசாயத்தை பொறுத்த வரையில் பெரும்பாலும் நுகர்வு விவசாயமே மேற்கொள்ளப்படுகின்றது. அதாவது ஏற்றுமதி செய்வதற்கான வர்த்தக விவசாயமாய் அன்றி, நாட்டின் நுகர்வுத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான (நுகர்வு) விவசாயமாய் இருக்கின்றது. இருந்த போதிலும் நாட்டின் சுயதேவைகளுக்காக நம்மால் உற்பத்தி செய்யக்கூடிய சில அடிப்படை உணவு பதார்த்தங்களும் கூட வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும். குறிப்பாக சிறு அளவிலான அரிசி மற்றும் பேரளவிலான தானியங்கள் இறக்குமதியையே சார்ந்திருக்கின்றது. கடந்த வருடம் அரிசிக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காய் 6000 மெற்றிக் டொன் அளவிலான அரிசியை பகிஸ்தானிடம் இருந்து கொள்வனவு செய்திருந்து குறிப்பிடத்தக்கது.
நெற்பயிர்ச்செய்கையிலும் தானிய ஊற்பத்தியிலும் தன்னிறைவாயிருந்த பண்டய இலங்கையின் புராதன பயிர்செய்கை மேலைத்தேய வருகையின் பின்னர் வர்த்தக பயிர்ச்செய்கைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டமையால் விவசாய நடவடிக்கைகளில் புராதன பயிர்ச் செய்கை வீழ்ச்சியடைந்ததோடு பல்வேறு பிரச்சினைகளும் அதனூடாகத் தோற்றம் பெற்றன. சுதந்திரத்திற்கு பின்னர் அத்தகைய பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றை தீர்த்து வைப்பதற்காக அரசாங்கம் எடுத்த முடிவுகள் அனைத்தும் பாதகமாகவே அமைய விவசாயம் மேலும் வீழ்ச்சிக்காண தொடங்கியது.
கடந்த 10 அண்டுகளில் மாத்திரம் 55% வீத விவசாய நிலங்கள் கைவிடப்பட்டுள்ளதாக தரவுகள் எடுத்துக்காட்டுகின்றன. இந்நிலைக்கு விவசாயம் தள்ளப்பட்டிருப்பதற்கு எத்தனையோ காரணங்களை முன்வைக்க முடியும்.அதிலும் குறிப்பாக – விவசாயிகளுக்கான உரிய சமூக மதிப்பினை பெற்றுக்கொள்ள முடியாமை; விவசாய சலுகைகள் வழங்கப்படாமை; தரமான தாய்த் தாவரங்களையோ விதைகளையோ குறைந்த விலைக்கு பெற்றுக்கொள்ள முடியாதிருத்தல்; நோய் தாக்கங்கள்; முறையான நீர்ப்பாசன திட்டங்கள் இன்மை, விவசாயிகளை ஊக்கப்படுத்தவோ பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கவோ அரசு தரப்பிலான விஸ்தரிக்கபட்ட வழிகாட்டிகளின் பற்றாக்குறை; சந்தைப்படுத்தலில் ஏற்படும் சிரமம்; உரிய நிர்ணய விலையினை அறுவடைக்கு பெற்றுக்கொள்ள முடியாமை; உரம் பசளைகளை பெற்றுக்கொள்ள முடியாதிருத்தல்; விவசாய கடபன் வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாதிருத்தல் போன்ற காரணிகளை விவசய பின்னடைவுக்கான முக்கிய காரணிகளாக முன்வைக்கலாம்.
பாரியளவு விவசாயம் சில முன்னனி நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்ற போதும் உணவுத்தேவைக்கான கேள்விக்கான நிரம்பலில் பெரும்பங்காக இருப்பது சிறு அளவிலான விவசாயத்தை மேற்கொள்ளக் கூடிய கிராமத்து விவசாயிகளே. இவர்களின் வாழ்வாதாரம் இன்றுவரை ஒரு மேம்பட்ட நிலைநோக்கி நகராமையாலும் விவசாய உற்பத்திகளால் பெற்றுக்கொள்ளக் கூடிய லாபம் தங்கள் அன்றாட வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்ய போதாமையினாலும் விவசாயத்தை கைவிட வேண்டிய நிலைக்கு இவர்கள் தள்ளப்படுகின்றனர். குறிப்பாக இத்தகைய விவசாய கிராமங்களையொட்டி சுத்தமான குடிநீர் வசதிகள் கூட இன்றளவிலும் அமைத்துக் கொடுக்கப் படாமை பாரியபிரச்சனையாகும்.
பயிர் செய்கைக்காக பயன்படுத்தப்படும் இரசாயன பசளைகளில் சில ( யூரியா ) நூற்றுக்கு சுமார் 62% விகிதமளவில் மண்ணினால் உறிஞ்ச முடியாது கரைந்து அருகிலிருக்கும் நீர்நிலை நிலைகளில் சேருகின்றன. இந்த பிரச்சினையை தீர்க்க பல்வேறு உத்திகள் பிற நாடுகளில் கையாளப்படுகின்ற போதிலும் இலங்கையில் இது குறித்து விவசாயிகளை விழிப்புணர்த்தவோ தீர்வுகளை மேற்கொள்ளவோ அரசாங்கம் இன்றளவிலும் எந்தவொறு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இதில் கசக்கும் உண்மை என்னவென்றால் அவ்வாறு வீணாவது தெரியாமல் மேலும் உரமிட்டும் விளைச்சல் கிடைக்காததை எண்ணி வானம் பார்ப்பதுண்டு பல விவசயிகள். மேலும் பயிருக்குறிய pH மட்டத்தை பற்றியோ அல்லது pH மட்டமென்றால் என்னெவென்பது பற்றியோக் கூட போதிய கல்வி இல்லாது மண்ணின் தன்மை அறியாமல் பயிர் செய்வதால் பேரளவிலான விளைச்சலை பெற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கவோ விவசாயக் கல்வியை வழங்கவோ அரச நிறுவனங்கள் அவ்வளவாய் பிரயத்தனங்களை மேற்கொள்வதில்லை.
சந்தைகளில் அரச அனுமதி பெற்றுள்ளதாய் சந்தைப்படுத்தப்படும் பல வகையான விதைகள் மற்றும் தாய் தாவர பாகங்கள் இருந்த போதிலும் அவற்றில் தரமான – முளைத்திறன் கொண்ட பீசங்களை பெற்றுக்கொள்வதில் விவசாயிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். அவ்வாறு தேர்ந்தெடுத்த பின்பும் அவற்றை கொள்வனவு செய்ய பாரிய அளவிலான பணத்தை செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு உற்படுத்த பட்டுள்ளனர். இத்தோடு நின்று விடுவதில்லை அவ்வாறு பெற்றுக்கொண்ட விதைகளில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளவாறு விளைச்சலை பெற்றுக்கொள்ள முடியாத பட்சத்தில், வியாபாரிகளை வினவும் போது ஹைபிரிட் விதை, இந்நிலத்திற்கிது பொருந்தாதென்று சாக்குகள் சொல்லி அலைக்களிக்கும் சம்பவங்களை நம்மால் காண முடிகின்றது. இதனால் இப்பிரதேசத்திற்கு இந்த வகை பொருந்துமென்று அரசு பரிசீலனைகளை மேற்கொண்டு தேர்ந்தெடுத்த வணிகர்களுக்கு அனுமதியளித்து விற்பனை செய்ய நடவடிக்கைகளை மேற்ற்கொள்ள வேண்டும். மேலும் சந்தையில் காணப்படுகின்ற விதைகளில் பெரும்பாலானவ வெளிநாட்டு இறக்குமதிகளாகவே உள்ளன. இதற்கு மாற்றாக அரச நிறுவனமொன்றினாலோ அரச அனுமதி பெற்ற தனியாரினாலோ குறித்த தரமான பீசங்கள் உற்பத்தி செய்யப்படும் போது உள்ளூர் விவசாயிகளினால் குறைந்த விலைக்கு அவற்றை பெற்றுக் கொள்ள முடிவதுடன் வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுக்க முடியும். மேலும் இறக்குமதிக்காக ஒதுக்கப்படும் பணத்தினை குறித்த தயாரிப்புக்கு பயன்படுத்த முடிவதுடன், மிகை உற்பத்திகளை ஏற்றுமதி செய்யவும் சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.
கடந்த காலங்களில் சோளப்பயிர்களை தாக்கும் பீடைப்புழுவின் ஆதிக்கம் கட்டுப் பாட்டைக் கடந்து பெருமச்சுருத்தலாய் அமைதிருந்தை நாமனைவரும் அறிந்திருந்தோம். இவாறான நிலைமையில் குறித்த நோய்க்காரணியினை கண்டறியவும் நோய் நிவாரணங்களை கூடிய விரைவில் பெற்றுத்தருவதற்கும் ஆராய்ச்சி நிறுவனங்களை நேர்த்தியாகவும் வெகுவாக செயற்படுமளவிலும் நடாத்தி செல்ல வேண்டும். விவசாயிகளிடம் இவ்வாறான நிலைமைகளின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நோய் கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வை கருத்தரங்குகள் போன்றவற்றின் ஊடாக வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சீரான நீரோட்டங்களை கொண்ட நதிகளையும், பொய்க்காத பருவ மழையையும், சுமார் 12,000 வாவிகள் உள்ளடங்களாக சிறு மற்றும் நடுத்தர அளவிலான நீர்நிலைகளையும், 272 நீர்வீழ்சிகளை உள்ளடக்கிய 12 பிரதான நதிகளையும் கொண்டு பண்டைகாலந்தொட்டே நீர்பாசனத்தில் மேம்பட்டு விளங்கி உலகிற்று வாவிகள் சார் நீர் பாசன தொழிநுட்பங்களை அறிமுகப்படுத்திய பெருமைக்குரிய இலங்கையில் இன்று விவசாயத்திகோ குடிநீருக்கோ கைத்தொழில் செயற்பாடுகளுக்கோ போதியளவு நீர் இல்லாது அவஸ்தை படும் சந்தர்ப்பங்களை செய்திகளூடாகவும் தரவுகளினூடாகவும் படிக்க நேரிடும் போது வாய் பொத்தி நகைக்கத் தோன்றுவது இயல்பான நிலை தான். கிட்த்தட்ட 5,583 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் மொரகஹகந்த அணைக்கட்டு போன்ற பாரிய அளவு நீர் பாசன திட்டங்கள் செயட்படுத்த பட்டாலும், அவற்றின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட லாபமோ அனுகூலமோ கிடைக்க பெறூகின்றதா அல்லது கிடைக்கப் பெறுமா என வினவினால் இல்லை என்பது தான் பதில். இந்த மொரகஹகந்த திட்டத்தித்தின் ஊடாக லாபமோ வருமானமோ கிடைக்க வேண்டுமென்றால் குறித்த அணைகட்டு வருத்தில் 11 முறையாவது நிரம்பவேண்டும் ஆனால் மாறாக வருத்தில் இரண்டு முறைகள் மாத்திரமே அணைக்கட்டு நிரம்புவதாகவும், இதனை நிரப்புவதற்காக மேலும் நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு பிரயோசனமற்ற வகையில் நிதி ஒதுக்கிடுவதாகவும் மக்கள் விடுதலை முன்னனியின் தலைவர் அனுர குமார திஸானாயக்க அவர்கள் சுட்டிக்காட்டி இருந்தார். இவ்வாறாக செலவிடும் நிதியினை புராதன இலங்கையின் வாவிகளையும் காலவாய்களியும் புணரமைக்க ஒதுக்கும் பட்சத்தில் அவற்றின் மூலம் பாரிய அளவிலான நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
வருடத்தில் ஒரு குறித்த அறுவடைக்கு பெரிய லாபத்தை பெற்றுக்கொள்கின்ற விவசாயிகள் அதே ஆண்டில் அதே பயிர் மீதான இரண்டாம் அறுவடையில் அளப்பரிய நட்டத்தை ஈட்டுவது உலகில் வேறெங்கிலும் இல்லாத வண்ணம் இலங்கையில் காணப்படுகின்றது. இதை நிவர்த்தி செய்வதற்கான எந்த ஒரு நடவடிக்கைகளுக்கும் உற்பத்திகளுக்கான நிர்ணய விலைகளை பெற்றுத்தருவதற்கும் இன்று வரையில் அரசாங்கம் பெரிய அளவில் முன்வரவில்லை. உதாரணமாக இலங்கையில் வெங்காய பயிர்ச்செய்கையில் ஈடுபடும் பிரதான இடங்களாக யாழ் மற்றும் ஹம்பந்தொட்டை சார் பிரதேசங்களை குறிப்பிடலாம். இந்த பிரதேசங்களில் முறையான திட்டங்க்ளை உருவாக்கி முன்னறிவிப்புக்களோடு இந்த போகத்தில் இந்த பிரதேசத்தில் (யாழ்) மாத்திரம் வெங்காய உற்பத்தியை மேற்கொள்ளவும், மற்ற பிரதேசத்தில் (ஹம்பாந்தோட்டை) மாற்றுப் பயிரை பயிர்செய்கையை மேற்கொள்ளவும் , மற்ற போகத்தில் அதை சுழற்சி முறையின் மூலம் நடாத்தி செல்லவும் முடிகின்ற போது நிர்ணய விலையை குறித்த உற்பத்திக்கு பெற்றுக்கொடுக்க முடிவதோடு, அறுவடையை வீணாகாது தடுக்கவும் முடியும். அதாவது சில சந்தர்ப்பங்களில் மிகை உற்பத்திகளுக்கும் சில சந்தர்ப்பங்களில் குறை உற்பத்திகளுக்கும் முகம் கொடுக்க நேரிடுவதால் நிர்ணய விலையை பெற்றுக்கொள்வதில் சிரமங்களுக்கு உற்பட வேண்டியுள்ளது. மிகை உற்பத்தியின் போது தேவைக்கதிக உற்பத்திகள் களஞ்சிப்படுத்த முடியாமல் வீணாவதும், குறை உற்பத்தியின் போது நுகர்வுக்காக இறக்குமதி செய்யவும் நேரிடுகின்றது.
அறுவடையின் பின்னர் சந்தைப்படுத்தப்படும் உற்பத்திகளில் 35% விகிதமளவிலான உற்பத்திகள் இடைத்தரகர் ஊடாக விவசாயியினிடமிருந்து வியாபாரிக்கு செல்ல எடுக்கும் நேரத்திலும் அதற்கு பின்பான விநியோக நடவடிக்கையின் போதும் வீணாகுவதாய் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அந்த 35%> விகிதமளவிலான பண்டங்களை களஞ்சியப்படுத்தவோ, வீணாவதை தடுக்கவோ போதுமான நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.கூடவே இடைத்தரகர் முறையை ஒழிப்பதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக நன்மைகளை பெற்றுத்தரவும் முடியும். வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து பண்டங்களை பெற்றுக்கொள்லும் விலையை விட நுகர்வோருக்கு அவற்றை விநியோகிக்கும் போது மிகவும் அதிகமான விலைக்கு விற்கப்படுவதால் நுகர்வோருக்கும் விவசாயிகளுக்குமிடையிலான லாபத்தை விட வியாபாரிகளின் லாபம் அதிக அளவில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த கால அவசர தீர்மானங்கள் போலல்லாது விவசாயிகளுக்கு கிடைக்கப்பறும் உரங்களையும் அவ்ற்றிற்கான மானியங்களையும் சிறந்த முறையில் பெற்றுத்தருவதோடு, நாமனைவரும் சுகாதாரமான நச்சுத்தன்மையற்ற உணவினை நுகர வேண்டும் அதற்கு கரிம விவசாயம் உறுதுஇணையாய் அமையும். இருப்பினும் படிப்படியாக கரிம விவசாயத்திற்கு மாறுவதற்கான வழிமுறைகளை மேற்கொள்வதோடு இரசாயன பசளைகளுக்கு மாற்றாக சேதன பசளைகளை குறைந்த விலையில் பெற்றுத்தரவும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இலங்கையில், வங்கித்துறையானது விவசாயத்திற்காக 10 சதவீத கடன் ஒதுக்கீட்டை மேற்கொள்ள வேண்டும். மேலும் வங்கித்துறையும், இலங்கை மத்தியவங்கியும் பெருநகரப்பகுதிகளில் திறக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட வங்கிகளுக்குமான இரண்டு கிளைகளை விவசாயம் சார் கிராமப்பகுதிகளில் நடாத்தி செல்வதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது விவசாயிகளுக்கு அதனூடாக பெருமளவிலான அனுகூலங்களை பெற்றுக் கொள்ள முடியும்.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை
517,00 சதுர கிலோ மீட்டர் பிரத்தியேக பொருளாதார வலயத்தையும்; 21,500 ச.கி.மீ கடல் நீர் ஏரிகள்,கழிமுகங்கள் மற்றும் உள்ளூர் நீர் நிலைகளையும்; 5,200 ச.கி.மீ ஆளவிலான செயற்கை நீர் நிலைகளையும் கொண்டிருக்கிறது இலங்கையின் நீர் வளம். அண்மைய 75 ஆண்டுகளாய் பாரியளவு வளர்ச்சிக்கண்டு வரும் இலங்கையின் மீன்பிடியானது சுமார் 200 ஆண்டுப் பழமையான பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறது. கடற்கரையோர மீன்வளர்ப்பு 1980ஆம் ஆண்டு காலகட்டங்களில் இறால் வளர்ப்புடன் ஆரம்பமானதுடன், கடல் நீர் வளர்ப்பு 2010இன் பின்ன அண்மைக்கலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. துரித அபிவிருத்திக் கண்டுவரும் மீன்பிடித் துறையின் வளர்ச்சியானது மொத்த உள்ளாட்டு உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்காமலில்லை.
2020 ஆம் ஆண்டு 215மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதியினை ஈட்டித்தந்ததுடன் 2021ஆம் ஆண்டு 318 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வளர்ச்சிக்கண்டிருந்து. பண அறவீட்டின் மூலமல்லாது நோக்குமிட்ததில் 2020ஆம் ஆண்டு 56.176மெற்றிக் டொன்னாக இருந்த ஏற்றுமதி 2021ஆம் ஆண்டு சுமார் 44% விகித்தால் அதிகரித்து 85.809 மெற்றிக் டொன்களாக இருந்தது.
இருந்த போதிலும் உள்நாட்டு தேவைக்கான முக்கிய புரதமாய் அமைகின்ற மீன்களில் 35% விகிதமானவை வெளிநாட்டிலிருந்தே கொள்வனவு செய்யப்படுகின்றது. பொதி செய்ய்பட்ட றின் மீன்கள் ( canned fish ) முற்றிலுமாக வெளிநாடுகளிலிருந்தே கொள்வனவு செய்யப்படுகிறது.
நேராகவோ மறைமுகமாகவோ நாட்டின் வேலைவாய்ப்பில் 4% இற்கு மேலாக பங்காற்றும் இத்துறையோடிணைந்து நம்பி தங்கள் வாழ்வாதாரங்களை மேற்கொள்ளும் குடும்பங்கள் பலவற்றின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதுகொள்வதற்கான சாத்தியப்பாடுகாள் கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. அதிக லாபத்தை பெற்றுக்கொள்ள முடிகின்ற போதிலும். முதலாலிகளிம் வியாபாரிகளும் பெற்றுக்கொள்ளும் அளவிற்கு அடிமட்ட ஊழியர்களின் வருமானம் இருப்பதில்லை.
மேலும் இவ்வாறான அடிமட்ட ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளையும், வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதன் மூலம் இன்னும் அதிக உழைப்பினையும் பெறுபேருகாளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் மேம்பட்ட தொழிநுட்பங்கள் இலங்கையை பொறுத்த வறையில் அரிதாவே காணப்படுகின்றது. இவ்வாறான தொழிநுட்பம் சார் உபகரணங்களையும் கருவிகளையும் இறாக்குமதி செய்து மீனவர்களுக்கு பெற்றுத்தரும் போது அதிகளவிலான அறுவடைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
மீன் பிடித்தற்கு பின்னான தர இழைப்பை குறைக்கவும் அதிகாரித்த பெறுமானத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பனிக்கட்டி தொழிற்சாலைகளையும். களஞ்சிய சாலைகளையும் நிறுவுவதாலும் தனியார் நிறுவனங்களை ஊக்குவிப்பதன் மூலம் கழிவுகளை குறைத்துக் கொள்ளவும் தரமான பாண்டங்களை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கவும் முடிவதோடு தொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும். களஞ்சியசாலைகள் விஸ்தரிக்கப்படும் பட்சத்தில் போமலின் போன்ற தீமை விளைவிக்கும் பதார்த்தங்களிலிருந்தும் விடுபட முடியும்.
நன்னீர் மீன்வளர்ப்பு மற்றும் அழங்கார மீன் வளர்ப்பும் தற்காலத்தில் வெகு வளர்ச்சி கண்டு வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அழங்கார மீன்வளர்ப்பு மற்றும் அது சார் துறைகளில் ( aquascaping) இலங்கை இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதனால் அது தொடர்பன விடயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளையும் கற்கை நெறிகளையும் கொண்டுவர முடியும்.
சட்டவிரோத மீன்பிடிப்பினால் எதிர்கால மீன் வளம் அருகி வருவதாலும், பவளப்பாறைகள் மற்றும் அருகி வரும் மீனினங்களுக்கு அச்சுறுத்தலாக அமைவதாலும் அது தொடர்பாக கடுமையான சட்டங்களை அமுல் படுத்தவும் செயற்படுத்தவும் முன்வறுவதோடு இந்திய தமிழகத்திலெல்லம் அதிக லாபமீட்டற் பொறுட்டு வளர்ண்து வரும் கடல் நீர் மீன் வளர்ப்புகளை ஊக்கப்படுத்துவதால் அதிக பொருளாதார நன்மைகளை ஈட்ட முடியும்.
சுற்றுலாத்துறை
பூகோல ரீதியில் தனித்துvaமான அமைப்போடு வெளிநாட்டவரின் கவனத்தை ஈர்க்கும் இலங்கை 2019 இற்கு முன்னர் 2மில்லியனுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையை பதிவு செய்திருந்ததோடு 6 மில்லியனுக்கும் அதிகமான உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் கவனத்தையும் பெற்றிருந்தது.
மொத்த உள்பநாட்டு உற்பத்தியில் (GDP) 12% சதவீத பங்கை சுற்றுலாத்துறை மற்றும் அது சார்ந்தவைகள் பூர்த்தி செய்கின்றன. அதாவது கிட்த்தட்ட 11 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிளான நிதியினை சுற்றுலாத்துறை பெற்றுத்தருகின்றது. நாட்டின் மொத்த வேலைவாய்ப்பில் 5.9% இனை சுற்றுலாத்துறை பெற்றுக்கொடுத்திருக்கின்றது.
நாட்டின் வாளர்ச்சிக்கு இவ்வாறு பாரிய பங்காற்றும் சுற்றுலாத்துறை 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு சரிவடைய தொடங்கியதுடன் தொடர்ந்து வந்த கொவிட் தொற்றின் பின்னர் அதிகளவில் வீழ்ச்சிக்காணத் தொடங்கியது. கூடவே ரசிய-யுக்ரைன் யுத்தமும் வீழ்ச்சிக்கு மறைமுகமாக பங்கு வகிக்கின்றது. இவ்வாறு அபிவிருத்தியின் முதுகென்பாகவும், அந்நிய செலவானிகளையும் டொலரினையும் பெருமளவில் நாட்டினுல் கொண்டு சேர்க்கும் சுற்றுலாத்துறையின் வீழ்ச்சியோடு கூடவே சுற்றுலாத்துறை சார்ந்த அந்நிய முதலீடுகளும் பின்வாங்க, அடிவாங்கத்தொடங்கிற்று இலங்கை பொருளாதாரம்.
மீண்டும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின் சுற்றுலாத்துறையின் அபிவிருத்தியின் மீது ஆளமாய்ச் சென்று அவதானம் செலுத்த வேண்டும்.
தொடர் அனர்த்தங்களினாலும் போராட்டங்கள் நிலவுவதாலும் பொருளாதர நெறுக்கடியினாலும் இலங்கை மீதான நம்பகத்தன்மை மற்றும் எண்ணப்பாடுகள் சர்வதேச அரங்கில் எதிர்மறையாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. முதலில் நாட்டின் சமாதானத்தை நிலை நிறுத்தி கரைந்துக் கொண்டிருக்கும் நம்பகத்தன்மையிலும் சமாதனத்தினதும் இஸ்தீர தன்மையினை நிலைநாட்ட வேண்டிய தேவை அல்லது பொறுப்பு அத்தனை இலங்கையர் கையிலும் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.
பல சந்தர்பங்களில் சுகாதாரமன உணவுகளை பெற்றுக்கொள்ள முடியாதிருத்தல், வெளிநாட்டு பார்வையாளர்கலுக்கான அனுமதி கட்டணங்கள் அதிகமாக அறவிடப்படுகின்றமை, சீரமைக்கப்படாத பாதைகள், சுற்றுலாத்துறை சார் மோசடிகள், வழிகாட்டிகளுக்கான பற்றாக்குறை போன்றவற்றில் பல இடையூறுகள் காணப்படுகின்றன.
நெடுநீளப்பயணங்களை பயணிகள் மேற்கொள்ளும் போது சிற்றுண்டி அல்லது பிரதான உணவுத்தேவையானது அத்தியாவசஇயமான ஒன்றாகும். தங்கள் தேவைகளை பூர்த்திசெய்துக்கொள்ள ஊடகங்களைத்தேடும் போது ஒரு தரமான உணவகத்தை தேடி அடைவதில் பல்வேறு சிரமங்கள் காணப்படுகின்றது. அவ்வாறு பாதையோரங்களில் அரிதான சில உணவகங்கங்களை நாடும் போதும் அவற்றில் பெருமபாலானவை லாபங்களை நோக்காக கொண்டு சுகாதார நெறிமுறைகளை பின்பற்றுவது கிடையாது. இவ்வறான நிலைகளில் அரச சுகாதார உத்தியோகஸ்தர்களின் துணையோடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கூடவே புகையிரதங்களில் சிற்றுண்டி சாலைகள் முறையாக பேணப்படாததை கண்ணுற்றிருக்கிறேன். பேருந்து பயணங்களின் போது தேனீர் இடைவேளைக்காக சாரதிகளினதும் நடத்துநர்களினதும் தனிப்பட்ட தேவைப்பூர்த்திக்காக அடிப்படை உணவு பாதுகாப்புகாளைக் கூட பேணாத உணவகங்களில் பேருந்துகள் தரிக்கப்படுவதுண்டு.
பெரும்பாலான சுற்றுலாத்தலங்களில் பார்வையாளருக்கான பற்றுச்சீட்டோ, கட்டணங்களோ அறவிடப்படுகின்றது. இவ்வாறு அறவிடும் போது பொதுவாக சுயதேசிகளுக்கு குறைவாகவும் வெளிநாட்டவர்க்கு அதிகமாகவும் அறவிடப்படுவதுண்டு. இருந்த போதிலும் சில சந்தர்ப்பங்களில் சில இடங்களில் வெளிநாட்டவர்க்கென அறவிடப்படும் கட்டணத்தொகைகாள் மிக அதிகமாக காணப்படுகின்றது. இதனால் அதிகளவிலான பணத்தினை செலவளிக்க வேண்டியிருக்கின்றது.
பல இடங்களில் சுற்றுலா தலங்களுக்கு பிரயாங்களை மேற்கொள்ளும் போது சீரற்ற பாதைகளில் பயணிக்க நேரிடுவதால் குறித்தப் பயணம் கடுமையாக அமைந்து விடுகின்றது. குறிப்பாக மலைநாட்டு பிரதேசங்களின் இயற்கை அழகின் பால் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் ஈர்க்கப்படுகின்ற போதும் குறிப்பிட்ட இடத்தினை அடைவதற்கான சீரான பாதைகள் இல்லாததால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. இவ்வாறான பாதைகளை சீரமைத்துக்கொடுப்பதன் மூலம் அதிகலவிலான பிரயாணிகளை தக்க வைத்துக் கொள்ள முடிவதோடு அப்பிரதேச மக்களுக்கும் அனுகூலங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
ஒழுங்கமைக்கப்பட்ட கழிவகற்றல் முறைகளோ உரிய இடங்களில் குப்பைத்தொட்டிகளையோ காட்சிப்படுத்தாத போது சூழல் மாசடைவை தடுக்கமுடியாமல் போகின்றது. இதனால் அவ்விடத்தின் பிரத்தியேக எழில் கெடுவதுடன் துர்நாற்றம் மற்றும் சுகாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது. ஆகவே சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இத்தகைய இடங்களை சுத்தமாக பேணுதல் அபிவிருத்திக்கு வழிவகுக்கும்.
சுற்றலா வழிகாட்டிகளுக்கான கற்கை நெறிகளை ஏற்படுத்திக்கொடுத்து வேலைவாய்ப்புகளை விஸ்தரிக்கலாம். இதனூடாக வழிகாட்டிகளுக்கென அதிக பணம் ஒதுக்கவேண்டிய தேவையிலிருந்து சுற்றுலா பிரயாணிகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.
மேலும் வெளிநாட்டவர்களிடம் பொய்யான வகையில் பண்ட விலையை அதிகரித்து முதல் பறித்தல், முச்சக்கர வாகனங்கள்,டக்சிகளுக்கு அதிகளவான கட்டணங்களை அறவிடுதல், பாலியல் தொள்ளைகளுக்கு உற்படுத்துதல், கொள்ளைகள் போன்ற குற்ற செயல்களை முற்றிலும் ஒழிக்க முற்பட வேண்டும்.
போக்குவரத்து மற்றும் பாதை அபிவிருத்தி
எந்தவொரு துறையை மேம்படுத்தவும் அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்லவும் பாதைகளும் போக்குவரத்தும் பொருளாதார சக்கரத்தின் அச்சாணிகளாய் அமைகின்றன. எந்தவொரு மூலப்பொருளை கொண்டு செல்வதற்கும் முடிவு பொருட்காளை விநியோகிப்பதற்கும் போக்குவரத்து முக்கிய பங்காற்றுகின்றது.
இலங்கையை பொருத்த மட்டில் தரை, வான், நீர் மூலமான மார்கங்களின் ஊடாக போக்குவரத்து நடைபெறுகின்ற போதிலும் தரைவழி போக்குவரத்தானது அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. 12,537.247கி.மீ அளவிலான A,B,C பெருந்தெருக்களை கொண்டுள்ளதோடு 312.586கி.மீ நீளமான அதிவேக பாதையை RDA பொறுப்பேற்று நடாத்தி பராமரித்து செல்கிறது. கூடவே பொது வாகன பயன்பாட்டில் புகையிரத போக்குவரத்தும் பிரதானமாக தொழிற்படுவதுடன் புகையிரத திணைக்கலத்தின் கீழ் இது இயங்குகின்றது.
பாரிய அளவிலான பாதை அபிவிருத்திகளை முன்னெடுத்து செல்கின்ற போதிலும் பல கிராமங்களில் குன்றும் குழியுமாக இருக்கும் பாதைகளையும் நம்மால் காணமுடிகின்றது.
போக்குவரத்துத் துறையில் கட்டியெழுப்ப வேண்டிய விடயங்களை பற்றிப் பேசும் போது, பொது வாகன போக்குவரத்தை இன்னும் முடியுமான அளவு மேம்படுத்தல் வேண்டும். குறிப்பாக சிறந்த தரத்திலான, நம்பகத்தன்மையுடன், சௌகரியமாய் பயணங்களை மேற்கொள்ளக் கூடிய வகையில் பொது போக்குவரத்தை உருவாக்கிக் கொள்வதன் மூலம் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும். கூடவே இன்றய பூதமாய் உருமாறி நிற்கும் எரிபொருள் பிரச்சனைக்கு கனிசமான அளவு தீர்வு கிடைக்கும். இதன் போது எரிபொருள் கொள்வனவிற்கான பணத்தை சேமிக்க முடிவதுடன் சூழலையும் பாதுகாக்க முடியும்.
முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு குறைந்த வட்டிக் கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து நாங்கு சக்கர வாகனங்களுக்கு மாற்றிக்கொள்ள உற்சாகம் அளிப்பதன் மூலம். அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தி வீதி விபத்துக்களையும் குறைத்துக் கொள்ள முடியும்.
பெருந்தோட்டபயிர் செய்கை மற்றும் கைத்தொழில்
மேலைத்தேயர்களின் வருகையின் பின்னர் அறிமுப்படுத்தப்பட்டு வெகுவாக வளர்ச்சிக்காண தொடங்கியதே பெருந்தோட்ட பயிர்செய்கையும் அது சார் உற்பத்திகளும். வர்த்தக ரீதியில் அதிக லாபம் ஈட்டித்தரும் துறைகளில் பெருந்தோட்டப்பயிர்ச்கெய்கையின் பங்கு முக்கியமானது.
பிரதானமாக தேயிலை, ரப்பர், தென்னை, கரும்பு போன்ற பயிர்களை உற்பத்தி செய்வதுடன் இவை பெரும்பாலும் வர்த்தக பயிர்களாகவே இருக்கின்றன. சர்வதேச ரீதியில் தனக்கென தனி அடையாளத்தோடு தேயிலை ஏற்றுமதியில் இலங்கை 3ஆம் இடத்தை வகிப்பது குறிப்பிடதக்கது.
ஆகவே பொருந்தோட்ட துறை சார் மக்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதன் மூலமும் முடிபு பொறுட்களின் தரத்தை அதிகரிக்கலாம். குறிப்பாக அத்தியாவசிய தேவைகளை கூட நிரைவேற்றிக் கொள்வதில் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்கும் மலையக தேயிலை தோட்ட தொழிளலர்களின் நிலை வறுத்தமளிக்கின்றது.
வேலை வாய்ப்புகளின்றி இருக்கும் எத்தனையோ இளைஞயர்களுக்கும், நாட்டின் பிற பிரஜைகளுக்கும் சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக முறையான கற்கைநெறிகளையும் கல்வியையும் வழங்குவதன் மூலம் கைத்தொழில் சார் வேலைவாய்ப்புகளையும் உற்பத்திகளையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
ஆகவே இத்தகைய செயற்பாடுகளை கட்டமைத்து செய்ற்படுத்துவதன் மூலமாக தன்னிறைவான சுபீட்சமான நாளைய இலங்கையை நம்மால் கட்டியெழுப்ப முடியும். எனினும் அரசு தரப்பில் மாத்திரமல்லாது பொதுமக்களின் இணக்கப்பாடும் நாட்டை கட்டியெழுப்புவதில் உறுதுணையாக அமையும்.
ஹஜன் அன்புநாதன்