அனைத்தையும் நாடி  இலங்கையில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள்

இலங்கையில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள்

2022 May 5

அன்றாட நிகழ்வுகளையும் தகவல்களையும் திரட்டி, தொகுத்து நாளிதழ்கள், தொலைக்காட்சி, வானொலி போன்ற பல்வேறு ஊடகங்கள் வாயிலாக செய்தியின் தன்மையில் மாற்றுதல்களை ஏற்படுத்தாது வதந்திகளையும், பொய்களையும் தவிர்த்து உணமைத் தகவல்களை பொதுமக்களிடையே கொண்டுசேர்க்கும் முயற்சியினை ஊடகவியல் என்று சுருக்கமாக வரைவிலக்கணப் படுத்தலாம்.

இவ்வாறுத் தகவல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் ஊடகவியலாளர்களின் பங்கு அளப்பரியது. புதிய தகவல்களையும், உண்மைச் செய்திகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதுடன், மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களின் நேர்மையான தொண்டுகளையும், ஊழல்களையும் திரையிட்டுக் காட்ட வேண்டியது ஊடகவியலாளர்களின் கடமையாகும்.

பக்கச்சார்பற்று இவ்வாறு வெளிச்சத்துக்கு நடப்பினை கொண்டுவரும் பிரயத்தனத்தில் ஊடகவியலாளர்கள் சந்திக்க நேர்வது ஒன்றிரன்று அச்சுறுத்தல்கள் அல்ல. இதில் பல அச்சுறுத்தல்கள் அரசத் தரப்பிலிருந்து அரங்கேறுவதுதான் ஜனநாயகத்தின் அவல நிலையையும், சோசலிச நாட்டில் ஊடக சுதந்திரத்தின் நிதர்சனத்தையும் எடுத்துக் காட்டுகின்றது. அவ்வாறு சமூக சேவைக்காய் படுகொலைச் செய்யப்பட்டு உயிர்நீத்த இலங்கையின் முக்கிய தமிழ் ஊடகவியலாளர்களையும், சமூகவியளாலர்களகளையும் அவர்களுக்கு நேர்ந்த அநீதிகளையும் குறித்து நோக்கலாம்.

ஐயாதுரை நடேசன்

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவராக இருந்த இவர் சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக வீரகேசரி பத்திரிகையின் செய்தியாளராகவும், நெல்லை நடேசன் என்ற பெயரில் பத்தி எழுத்தாளராகவும், சக்தி தொலைக்காட்சியின் செய்தி நிருபராகவும் மற்றும் லண்டலின் இயங்கி வரும் ஐ.பி.சி நிறுவனத்தின் இலங்கை நிருபராகவும் பணியாற்றி வந்தார்.

ஐயாதுறை நடேசன் அவர்களுக்குச் சாகித்திய விருது, சிறந்த ஊடகவியலாளர் விருது போன்ற பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டமை அவரின் ஊடகவியல் ஆளுமையை எடுத்துக் காட்டுகின்றது.
நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் தன் ஐம்பதாவது வயதில் 2004.5.31 ஆம் தினத்தன்று, காலை வேலைக்குச் சென்றிருந்த போது மட்டக்களப்பில் சில ஆயுத தாரிகளால் சுட்டுக்கொள்ளப்பட்டார். இந்த படுகொலைக்குப் பொறுப்பான குற்றவாளிகள் இன்று வரையில் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.
கொல்லப்படுவதற்கு முன்னர் நடேசன் அவர்கள் அரசின் நடவடிக்கைகளையும், பாதுகாப்புப் படைகளையும் விமர்சித்திருந்தமையால் 17.06.2001 அன்று கைது செய்யப்பட்டு மிரட்டப் பட்டிருந்தார்.

பால நடராஜ ஐயர்

சின்ன பாலா என்று அழைக்கப்படும் கந்தசாமி பாலநடராஜ ஐயர் அவர்கள் இலங்கையின் மூத்த சமூகவியலாளரும், எழுத்தாளரும், கவிஞருமாவார். அவர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினராகவும் இருந்திருந்தார். பாலா அவர்கள் தினமுரசு என்ற வார இதழில் பணியாற்றி வந்ததுடன் தினகரன் வார இதழிலும் பணியாற்றினார்.

இவர் விடுதலைப் புலிகளின் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீள் விமர்சித்து விமர்சித்து வந்ததுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளடங்களாக தமிழ் அரசியல் குழுக்களுடன் இணைந்து பணியாற்றி வந்தார்.

47 வயதைத் தொட்டிருந்த ஐயர் அவர்கள் வீடு திரும்பும் வேளையில் 16.08.2004 அன்று கொழும்பு வெள்ளவத்தையில் தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் மோட்டர் சைக்கிளில் வந்த இரு நபர்களால் நெஞ்சிலும் முகத்திலும் சுடப்பட்டு படு கொலை செய்யப்பட்டார்.

தர்மரட்னம் சிவராம்

கொழும்பு பம்பலபிட்டி காவல் நிலையத்திற்கு முன்னர் அடையாளம் தெரியாத நான்கு நபர்களால் வெள்ளை வான் ஒன்றின் மூலம் கடத்தி செல்லப்பட்டு 25.04.2005 படுகொலை செய்யப்பட்டிருந்தார். மூத்த தமிழ் ஊடகவியலாளரான தர்மரட்னம் சிவராம் எனப்படும் தர்கி சிவராம் இவர் ஆவார்.

தர்மரட்னம் சிவராம் அவர்கள் `தமிழ் நெட்` பத்திரிகையின் முன்னனி அரசியல் விமர்சகராகவும், டைலி மிரர் ஆங்கில இதழின் எழுத்தாளராகவும், வீரகேசரி பத்திரிகையின் எழுத்தாளராகவும் பணியாற்றி வந்துள்ள இவர் முன்னால் போராளியுமாவார். `தெ ஐலண்ட்` பத்திரிகையில் தராகி என்ற புனைபெயரில் கட்டுரைகள் எழுதி வந்தமையும் குறிப்பிடத்தக்கது. பிற்காலத்தில் ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதுவதை நிறுத்திக் கொண்டார்.

அரசியல், பாதுகாப்பு போன்ற விடயங்களை வலியுறுத்தி வெளிவந்த இவரது கட்டுரைகள் உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் சிறந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. 24.04.2005 அன்று வீரகேசரி வார இதழில் ‘எரிக் சொல்ஹெய்மின் வருகைகளும் தமிழ்த் தேசியத்தின் நெருக்கடிகளும்” என்ற கட்டுரை சிவராம் அவர்களின் இறுதி கட்டுரை ஆகும். பம்பலப்பிட்டியில் கடத்திச் செல்லப்பட்டிருந்த சிவராம் அவர்களின் உடல் படுகொலை செய்யப்பட்டு பாராளுமன்ற கட்டத்தின் பின்பக்கத்தில் வீசப் பட்டிருந்ததாக தமிழ்நெட் தெரிவித்திருந்தது.

இசைவிழி செம்பியன்

வானொலி கலைஞரும், அறிவிப்பாளருமான இசைவிழி செம்பியன் அவர்கள் தமிழீழம் வானொலி மையமான புலிகளின் குரல் நிலையத்தின் மீதான இலங்கை வான் படையினரின் குண்டுத்தாக்குத்தலின் போது மரணமடைந்தார்.

மயில்வாகனம் நிமலராஜன்

1990களில் பி.பி.சியின் இலங்கை செய்தியாளராகவும், வீரகேசரி பத்திரிகையின் எழுத்தாளராகவும், மேலும் சில சிங்கள பத்திரிகைகளின் நிருபராகவும் செயற்பட்டார். யாழ் பிரதேசங்களில் நிகழ்ந்தேரிய சம்பவங்களை வெளியுலகிற்குக் காட்டிய மிக முக்கியமான ஊடகவியலாளராக நிர்மல ராஜ அவர்கள் திகழ்ந்தார்.

12.09.2000 அன்று இராணுவத்தின் அதி பாதுகாப்பு வளயத்தினுள் ஆயுத தாரிகளால் தன் வீட்டில் வைத்துக் கொல்ல பபட்டார். இவரது கொலைச் சம்பவமானது மிகவும் கொடூரமாய் அமைந்திருந்தது. இவரை கொலைசெய்ததன் பின்னர் வீட்டினுள் கை குண்டு வீசப்பட்டு நிர்மல ராஜானின் தந்தையைக் கத்தியால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். தாய் லில்லி மயில்வாகனமும் தன் அக்காவின் மகனும் தாக்குதலில் படு காயம் அடைந்திருந்தனர்.

பரணிரூபசிங்கம் தேவக்குமார்

யாழ்ப்பாணத்தில் சுயமாக இயங்கிவந்த அலைவரிசையொன்றின் நிருபராகவும், நியூஸ் பர்ஸ்ட் செய்தித் தொகுப்பாளராகவும் செயற்பட்டு வந்த தேவக்குமார் அவர்கள் 28.08.2008 இல் யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத சில நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவர் நண்பனான மகேந்திரன் வரதனும் தக்குதலில் கொல்லப்பட்டார்.

புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி

இலங்கையின் முக்கிய பதிப்பகங்களில் எழுத்தாளரும், குரல் அலைவரிசையின் நேரலை செய்தியாளராகவும் ஈழானந்தம் பத்திரிகையின் முக்கிய எழுத்தாளருமாகச் செயற்பட்ட புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்கள் இலங்கை பீரங்கி தடுப்பு பிரிவினரால் கொல்லப்பட்டார். இவர் மனம் பிட்டியில் பிறந்து வளர்ந்து பிற்காலங்களில் விடுதலைப் புலியினர் வசப்பட்ட இடங்களுக்குப் பயணம் செய்து செய்திகளைத் தொகுத்து வழங்கினார்.

ரேலங்கி செல்வராஜா

20 வருடங்களுக்கு மேலாக ஊடக ஒலிபரப்பாளராகவும், திரைப்பட நடிகையாகவும் இருந்த ரேலங்கி செல்வராஜா அவர்கள் புலிகளை விமர்சித்து ஒலிபரப்புகளை மேற்கொண்டு நடாத்திச் சென்றார். இவர் இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்திலும் பணியாற்றி இருந்ததுடன் `இதய வீணை` எனும் நிகழ்ச்சியில் புலிகளை விமர்சித்தார்.

01.09.2005 அன்று செல்வராஜா அவர்களும் அவரது கணவரான சின்னதுரை அவர்களும் தலைநகர் கொழும்பில் வணிக நிலையமொன்றில் வைத்து சுட்டுக்கொள்ளப்பட்டனர். அவரது கணவர் முன்னால் போராளியும் தமிழர் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரும் ஆவார். அதே நாளில் மூத்த அரசியல் வாதி லக்ஷ்மன் கதிர்காம நாதரும் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த மூன்று தோடர் கொலை சம்பவங்களுக்கும் விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்ட போதும் அதை அவர்கள் மறுத்திருந்தனர்.

ஷோபா (இசைப்பிரியா)

இசைப்பிரியா என்று எல்லோராலும் அறியப்படுகின்ற ஷோபனா தமிழீல விடுதலைப் புலிகளின் ஊடகத் துறையில் பெரும்பங்காற்றிய ஊடகவியலாளர் ஆவார். ஒளிவீச்சு என்ற ஒளி சஞ்சிகையினை நடாத்தி சென்றதோடு , நிதர்சனம் என்ற நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், செய்தித் தொகுப்பாளராகவும் கடமையாற்றினார். கூடவே பல குறும்படங்களிலும் நடித்துள்ள இவர் இசைக்குயில் என்று புலிகளினால் அழைக்கப்பட்டார்.

தமிழீல படைத்தளபதி ஒருவரை மணந்த இவர் இலங்கை உள்நாட்டுப் போர் உச்சம் பெற்றிருந்த 2009 காலகட்டங்களில் தன் நோய்வாய்பட்ட மகள் அகல்யாவைச் சரியான மருத்துவ வசதிகளின்றி பறிகொடுத்திருந்தார்.

இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப்புலிகள் வசமிருந்த இடங்களை கைப்பற்றிய பின்னர் இசைப்பிரியா மற்றும் பல முன்னாள் போராளிகளை சுட்டுக்கொலை செய்தது. இசை பிரிய இராணுவத்தினரால் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. மனித நேயமற்ற முறையில் இசைப்பிரியாவை நிர்வாணப்படுத்திக் கொலை செய்த காட்சிகளை அம்பலப்படுத்தி மிகவும் மோசமாக நடந்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இவரின் வாழ்க்கை வரலாற்றையொட்டி திரைப்படமும் வெளிவந்திருந்து. இலங்கையின் போர்க்குற்றங்களில் இதுவும் அடங்குகின்றது

சுப்ரமணியம் சுகிர்தராஜன்

சுடரொளி பத்திரிகையின் முக்கிய எழுத்தாளரான சுப்ரமனியம் சுகிர்த ராஜன் திருகோணமலை துப்பாக்கி தாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இலங்கையில் நிலவிய போர்ச்சூழலில் பல்வேறு செய்தி நிறுவனங்களுக்குச் செய்திகளை வழங்கி வந்தார். இவர் வீரகேசரி பத்திரிகையில் அரசியல் கட்டுரைகளை எழுதிவந்தார். எஸ்.எஸ்.ஆர்.மனோ, ரஹ்மான், ஈழவன் என்ற புனைபெயர்களில் கட்டுரைகளை எழுதினார்.
24.01.2006 இல் திருகோணமலை ஆளுநர் செயலகத்திற்கு முன்னர் சுட்டுக்கொள்ளப்பட்டார். மாணவர்கள் சிலரின் கொலைவழக்கு தொடர்பாக நிழற்பட ஆதாரங்களை வெளியிட்டிருந்தார். இந்த கொலை தொடர்பில் எத்துவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படவில்லை.

இவர்கள் தவிர்த்து பரணிரூபசிங்கம் தேவகுமார், ரஷ்மி மொஹொமட், தர்மலிங்கம், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் சுரெஷ் லிபின்யோ போன்ற சிறுபான்மை ஊடகவியலாளர்களும் லசந்த விஜெதுங்க போன்ற சிங்களஊடகவியலாளர்களும் மர்மமான முறையிலும் மனித நேயமற்ற வகையிலும் கொல்லப்பட்டுள்ளார்கள். இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற போதிலும் இங்கே ஊடக சுதந்திரம் கூட கேள்விக்குறியாகவே உள்ளது. இலங்கையில் ஊடக சுதந்திரத்தை நிலை நட்ட ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வரா வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php