2022 May 17
சமீபத்தில் கொழும்பின் இரு இடங்களில், பெண்கள் தமக்குள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடனும் துணையாகவும் இருக்க வேண்டும் என்பதை பிரதிபலிக்கும் வகையிலான சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த சுவரோவியங்கள் உள்நாட்டு ஓவியர்களால் மட்டுமன்றி இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்த பெண் ஓவியர்களாலும் இணைந்து வரையப்பட்டுள்ளமை குறிப்பிடதக்க விடயமாகும். “we are from here” எனும் கருப்பொருளில் ஸ்லேவ் ஐலேண்டில் உள்ள ரியோ சினிமா கட்டிட சுவரிலும், “sisterhood initiative” எனும் கருப்பொருளில் கொழும்பு 02 இல் உள்ள இரட்சிப்பு இராணுவ அமைப்பின் கட்டிட சுவரிலும் வரையப்பட்டுள்ளன. இந்த இரு ஓவியங்களும் 5 நாட்களில் முழுமைபடுத்தப்பட்டமை அதன் மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.இந்த ஓவியங்களுக்கான அவசியம் என்ன? பல தரப்பட்ட கலாச்சாரங்களை தன்னகத்தே கொண்ட நம் சமுதாயத்தில் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை என்ற வகையில் அவர்களுக்கான உரிமைகள் பறிக்கப்படுதலோடு அவர்களுக்கான கனவுகள் தடை செய்யப்படுதலும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இதில் அதிகமாக பாதிக்கப்படுவதும் தனக்கான அநீதிகளுக்கு குரல் கொடுக்க முடியாமல் முடங்கி போவதும் பெண்கள் தான். பெண்களுக்கான இந்நிலை மாற வேண்டுமென்றால் அனைத்து விதமான பிரிவினைகளையும் தாண்டி, பெண்கள் தமக்குள் ஒருவருக்கொருவர் உறுதுணையாக நிற்க வேண்டும். இந்த கருப்பொருளினை பெண்கள் மனதில் ஆழப்பதிக்கும் விதமாகவே கொழும்பில் இரு சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன.
“sisterhood initiative” எனும் கருப்பொருளில் கொழும்பு 02 இல் உள்ள இரட்சிப்பு இராணுவ அமைப்பின் கட்டிட சுவரில் வரையப்பட்டுள்ள ஓவியமானது இலங்கையில் உள்ள முஸ்லிம் பெண்கள் தன்நம்பிக்கையையும் ஒற்றுமை மீதான நம்பிக்கையையும் விதைப்பதற்காக எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகின்றது. இந்த ஓவியத்தில் இரு பெண்கள் வெவ்வேறு திசையினை பார்த்தபடி தமது கைகளை இறுக்க பிடித்துக் கொண்டு நிற்கும் நிலையானது, எந்த சமூக வகைப்படுத்தலினாலும் கனவுகளினாலும் பெண்கள் வெவ்வேறாக பிரிக்கப்பட்டாலும் ஒருவருக்கொருவர் பக்கபலமாக நிற்க வேண்டும் என்பதை உறுதிபடுத்துகிறது. இந்த ஓவியத்தினை பார்க்கும் போது மனதில் எழுகின்ற உணர்ச்சியினை வகைப்படுத்தி கூறி விட முடியாதபடி உணர்வு பூர்வமாக வரையப்பட்டுள்ளது.
“we are from here” எனும் கருப்பொருளில் ஸ்லேவ் ஐலேண்டில் உள்ள ரியோ சினிமா கட்டிட சுவரில் வரையப்பட்டுள்ள ஓவியமானது பலதரப்பட்ட கலாச்சாரத்தினை உடைய பெண்களை ஒரே வட்டத்திற்குள் கொண்டு வந்து, அவர்கள் உரிமைகளுக்காக ஒன்றிணைந்து குரல் கொடுப்பதாக அமைந்துள்ளது. இந்த ஓவியம் தான் இவை இரண்டிலும் பெரிய ஓவியமாகும். இந்த ஓவியத்தினை பார்க்கும் போது மனதுள் நம்மை அறியாமலேயே புது தைரியத்தினை பிரசவிக்கும்.
இந்த சுவரோவியங்களில் பங்களிப்பதற்கான வாய்ப்பு உள்நாட்டு பெண்களுக்கும் கொடுக்கப்பட்டமை குறிப்பிடதக்க விடயமாகும். இந்த இரு ஓவியங்களையும் பார்க்கும் எந்த பெண்ணின் மனதிலும் தன்நம்பிக்கையும் தைரியமும் ஒற்றுமையும் வலுப்பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.