2022 May 19
சமீபத்தில் YouTube தளத்தில் வெளியான பாடல் தான் “நாம வாழணுமா சாகணுமா சொல்லுங்க!” என்ற பாடலாகும். இது வெறும் பாடலின் தலைப்பல்ல. நம் நாட்டு மக்களின் தற்போதைய கேள்வி. அனைவர் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கும் பெரும் கேள்வி.
சாதனை தமிழா தயாரிப்பில் வெளியான இந்த பாடலிற்கான வரிகளை இலங்கை நாட்டை சேர்ந்த கவிஞரான Ashmin எழுதியுள்ளார். நம் நாட்டினை சேர்ந்த ஒருவரே எழுதியமையாலோ என்னவோ பாடலின் வரிகள் கண்களில் நீர்துளிகளை வர வைக்கும் அளவிற்கு ஆழமாக உள்ளன. இந்த பாடலானது Shameel.J இனால் இசையமைக்கப்பட்டு TR இனால் பாடப்பட்டு TR NEW TV எனும் YouTube தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்பு S.Sakthivel இனாலும் இதற்கான எடிட்டிங் BIJU.V.Don Bosco இனாலும் செய்யப்பட்டுள்ளது. இந்த பாடலின் இறுதியில் ரம்புக்கன சாலை மறியல் போராட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளாகி உயிரிழந்த சமிந்த லக்ஷான் அவர்களுக்கு இப்பாடலை சமர்ப்பிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பாடலில் அவர்களால் முடிந்தவரை நம் நாட்டின் அவல நிலையினை உள்ளடக்கியுள்ளனர். பாடலின் ஆரம்பத்தில் “நாம வாழணுமா சாகணுமா சொல்லுங்க கவர்ன்மன்ட் சொல்லுங்க!” என்ற வரிகள் தான் ஹைலைட். இப்பாடலினை எழுதியவர் நாட்டில் ஒரு புறம் வீழ்ச்சி அடைந்து கொண்டே செல்லும் பொருளாதாரம், இன்னொரு புறம் எழுச்சி அடைந்து கொண்டே செல்லும் போராட்டம், இடைக்கிடையில் நாட்டில் நிலவும் பற்றாக்குறை பொருட்களின் பட்டியல். யாராவது உதவ மாட்டார்களா என ஏங்கி தவிக்கும் அழுகுரல், எதிர்காலமே இல்லை என்ற நிலையில் நிற்கும் இளைஞர்களின் நிலையோடு மக்கள் போராட்டத்தின் போது முன் வைக்கும் கோரிக்கைள் பற்றியும் குறிப்பிட மறக்கவில்லை.
இலங்கையின் நிலை பற்றி அறியாதவர்கள் நான்கு நிமிடத்தில் தெரிந்துக் கொள்ள விரும்பினால், இந்த ஒரு பாடல் போதுமானது. இப்பாடலில் இடம் பெற்றுள்ள,
“நாடு சோமலியா ஆகும் முன்ன
முறிக்க வாடா முள்ள”
“தறுதல போகலனா
நாலு சாத்து சாத்துங்க” என்ற வரிகள் தற்போதைய அரசாங்கத்திடம் உரிமை கோரி போராடி நிற்கும் மக்கள் மனதில் வன்முறையை விதைப்பதாக எனக்கு தோன்றுகிறது. அந்த வரிகளுக்கு பதிலாக மக்கள் மனதில் அமைதியாக போராடுவதற்கான மனவலிமையை விதைக்க கூடிய வரிகளை சேர்த்து இருக்கலாம் என்பது என் கருத்து.
பாடலின் வரிகளும் பாடலின் இசையும் ஒன்றோடு ஒன்று நன்றாக பொருந்தியுள்ளது. பாடலை பாடிய TR மற்றும் மற்றைய பாடகர்கள் அனைவருமே சிறப்பாகவே பாடியிருந்தனர். பாடலுக்கான படபிடிப்பு சிம்பிள்ளாக இருந்தது. அதற்கான எடிட்டிங் அவ்வளவு திருப்தி அளிப்பதாக இருக்கவில்லை. நாம் நமது நண்பர்களுடைய பிறந்த நாளைக்கு புகைபடங்களும் வீடியோக்களும் வைத்து எடிட் செய்து ப்ல்டர் போடுவது போல் இருந்தது. சில சில குறைகள் இருந்தாலும் அந்த குறைகள் பெரிதாக தெரியாதளவிற்கு பாடலின் நிறைகள் அமைந்துள்ளன. நீங்களும் பாடலை கேட்டு விட்டு உங்களது கருத்தினை எங்களுடன் கமன்ட் பொக்ஸில் பகிர்ந்து கொள்ளுங்கள்.