அனைத்தையும் நாடி  தமிழ் சீரியல் மொக்கைகள்!

தமிழ் சீரியல் மொக்கைகள்!

2022 May 25

ஒரே கதையை பல கோணங்களில் வேறு வேறு பெயர்களில், எவ்வளவு நீளமாக கொண்டு செல்ல முடியுமோ அவ்வளவு நீளமாக கொண்டு செல்லும் பெருமை நம் தமிழ் டெலி ட்ராமாக்களையே சேரும். இதற்கெல்லாம் காரணம் யாரு? மொக்கையாக இருந்தாலும் வாயை பிளந்து கொண்டு டிவிக்குள் கண்களை வைத்து பார்க்கும் நம் வீட்டார் தான். சிலர் இந்த டெலி ட்ராமக்களை பார்ப்பதற்காகவே அலார்ம் வைப்பதும் உண்டு. நம் விவேக் சொல்வது போல் “இந்த மாதிரி தீவிர ரசிகர்கள் இருக்குர வரைக்கும் யாராலயும் நம் டெலி ட்ராமாக்களை அசைக்கவே முடியாது!”. சரி ட்ராமாவை இழுத்து இழுத்து எடுப்பதை கூட பல்லைக் கடித்து சகித்துக் கொள்ளலாம் ஆனால் அந்த கதையில் மன்னிக்கவும் தொடர் கதையில்… கலாசாரம் என்ற பெயரில் நம் டிரெக்டரும் ஸ்க்ரிப் ரைட்டரும் சேர்ந்து பண்ற அலப்பறைகள் இருக்கே… ஐயய்யயோ… தாங்க முடியலடா சாமி. “அப்டி என்ன தான் பண்ணி இருக்காங்கனு கொஞ்சம் அலசி பார்த்தால்… என்ன தான் பண்ணல?” என்றவாறு இருக்கிறது இவர்களது போலியான கலாசார அலப்பறைகள். அவ்வாறான சில டெலி ட்ராமாக்களும் அதன் அலப்பறைகளும்,

தென்றல் வந்து என்னை தொடும் 

பெண் விடுதலை, பெண் உரிமை என்றெல்லாம் எவன் குரல் கொடுத்தால் நமக்கு என்ன? நமக்கு கன்டன்ட் தான் முக்கியம் என சுற்றி திரியும் டிரெக்டர்களில் இவரும் ஒருவராக இருப்பார் போல. ஹீரோயின் அமெரிக்காக்கு சென்று படித்தவராம் ஆனால் கட்டாயத்தின் பெயரில் கட்டப்பட்ட தாலிக்காக அடாவடியான ரௌடியின் பின் சுற்றி சுற்றி வருவாராம். படித்த பெண்ணாக இருந்தால் அந்த கல்யாணத்திற்கு எதிராக கேஸ் போட்டிருக்க வேண்டும். அதை விடுத்து பாரம்பரியம் என்ற பெயரில் முட்டாள் தனமான செயல்களுக்கு ஜால்ரா போடுபவராக இருக்கிறார் நம் படித்த முட்டளான ஹீரோயின். ஹீரோயினை என்ன சொல்லி என்ன மாறப் போகிறது? எல்லாம் இந்த கதையை எழுதியவரை சொல்ல வேண்டும்.

பாக்கியலட்சுமி 

இந்த சீரியல் குடும்பத் தலைவிகளின் பெருமை சொல்லும் சீரியலாம். நான் சொல்லவில்லை இந்த கதையின் ப்ரோமோவில் சொன்னார்கள். எனக்கு என்னவோ ஏற்கனவே புருஷனுக்கு அடிமையாக வாழும் இல்லத்தரசிகளை மேலும் அடிமையாக்குவது போல்தான் தெரிகிறது.

” பாக்கியா பாக்கியா பாக்கியா

I don’t like it

I avoid

But

பாக்கியா Likes me

I can’t avoid” என்பது தான் பாக்கியத்தின் புருஷனின் முழுநேர மைன்ட் வாய்ஸாக இருக்கும். இதில் சிரிப்பு என்னவென்றால் இவருக்கு அவருடைய ex-lover மீது ஒரு கண்ணு வேறு. சரி பாக்கியத்தை தான் பிடிக்கவில்லையே விவாகரத்து வாங்கலாமே? அதுவும் இல்லை. எதுக்கு எடுத்தாலும் எடுத்து எரிந்து விழுவதும் முடக்குவதும்தான் புருஷனின் வேலை. இதில் வெட்கம் கெட்ட செய்தி என்னவென்றால் இளைய மகனுக்கு அப்பனின் ஆட்டம் தெரியும் ஆனாலும் பொய்க்கு மிரட்டி விட்டு இருப்பான். பாக்கியத்தின் மாமனாருக்கும் தெரிய வருகிறது ஆனால் சீரியல் இழுத்து ஓட்டனும் அல்லவா அதனால் அவறை தள்ளி விட்டு மயக்கமாகி விடுவார். அந்த கிழவன் அன்றைக்கே மகனையும் அவன் லவ்வரையும் சேர்த்து வைத்திருந்தால் இவ்வளவு பிரச்சனை இல்லை.

மௌனராகம் 

விஜய் டிவியில் ஒரு சீரியலை எடுத்து விட்டு அப்படியே விட்டு விட மாட்டார்கள். பார்ட் 1, பார்ட் 2 என எடுக்க தொடங்கி விடுவார்கள். இந்த மௌனராகமும் அப்படி தான். என்ன பார்ட் 1 இல் இருந்த ஹீரோயின் தந்தையை தேடுவார் பார்ட் 2 இல் வளர்ந்து தந்தையுடன் சேர்வாரா இல்லையா என இழுக்கிறார்கள்.  அடுத்து பார்ட் 3 என எடுத்து தாத்தாவை தேடும் பேத்திகளை களம் இறக்கினாலும் ஆச்சர்யம் இல்லை. இது என்ன வகை ராகம் என்றே புரியவில்லை. இப்படி இழுப்பட்டுக் கொண்டே போகிறது.

பாரதி கண்ணம்மா 

“அடஅடடா…” என ஆரம்பத்தில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த பாரதி கண்ணம்மா சீரியல் இப்போது “அடச்சே போங்கடா…” என சலிப்பினை ஏற்படுத்தியுள்ளது. முதலில் அழகை வைத்து மாமியாரும் மருமகளும் சேருவார்களா? கண்ணம்மாவின் மனது புரியுமா? என சீரியலை இழுக்க ஆரம்பித்தவர்களுக்கு “எவ்வளவு காலம் தான் இப்டியே இழுக்றது புருஷன் பொண்டாட்டியா பிரிச்சுட்டா?” என ஐடியா வந்திருக்கும் போல உடனே பிரித்து விட்டார்கள். பாரதி டாக்டராம் ஆனால் அவனுக்கு ஆண்மை தன்மை இருக்கிறதா இல்லையா என்பது அவனுக்கே தெரியாதாம். பொண்டாட்டி மீது சந்தேகம் வர வைத்து பிரித்து விட்டார்கள். அதன் பின் மாமியார் வீட்டை விட்டு பையோடு புறப்பட்ட கண்ணம்மா நடந்தார்… நடந்தார்… கால் வலித்தும் தரை தேய்ந்தும் நடந்தார்… கண்ணம்மாவை நடக்க வைத்தே பல நாட்கள் ஓட்டி விட்டார்கள். அதன் பின் கண்ணம்மாவிற்கு பாரதியே பிரசவம் பார்க்கிறான் ஆனால் இன்னொரு குழந்தை இருப்பது டாக்டருக்கே தெரியாதாம். ஒரு வேலை பாரதி பிட் அடிச்சு பாஸ் ஆன டாக்டரா இருப்பாரோ? அது சரி கண்ணம்மாவிற்கே இரண்டு பிள்ளைகளை பிரசவித்தது தெரியாதாமே..! என்னத்த சொல்ல!?

சரி குழந்தை பிறந்தவுடன் டி .என் .ஏ டெஸ்ட் எடுக்கலாமே. நம்ம டாக்டர் தான் பிட் அடிச்ச டாக்டராச்சே! அதால அவர் “நோ மீன்ஸ் நோ” என்று சுற்றிக் கொண்டிருப்பார். இத்தனைக்கும் காரணம் வில்லி. பாரதியின் பெஸ்ட்டு ப்ரெண்டாம். எல்லா வீட்டிலும் போல் பாரதியின் ப்ரெண்ட்டு என வீட்டாருக்கு தெரியும் ஆனால் பாரதிக்கு தெரியாது. அவளும் டாக்டர் ஆனால் பைத்தியமாக சுத்திக் கொண்டிருப்பாள். பாரதி மீது. “பைத்தியமா இவனுங்க!?” என தலையினை பிய்த்துக் கொள்ள தோன்றும். முதலில் மாமியாரும் மருமகளும் சேர்வார்களா? என தொடங்கி அதன் பின் பாரதியும் கண்ணம்மாவும் சேர்வார்களா? என நீண்டு இப்போது தந்தையும் பிள்ளையும் சேர்வார்களா என இழுபட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் யாரெல்லாம் சேர்க்கலாமா வேணாமா என்கிற திட்டத்துடன் டிரெக்டர் சுத்தி கொண்டிருக்கிறாரோ…!?

ஈரமான ரோஜாவே 02

இந்த சீரியலில் கலாசாரம் என்ற பெயரில் எடுக்கப்பட்ட சீன்களை நினைத்து பார்த்தாலே சிரிப்பு தான் வரும். சீன் அறுந்த பழசு. மணமகள் காணவில்லை. அந்த பெண்ணை தேடுவோம் என்ற அறிவில்லை. உடனே மணமகளின் தங்கை (ஹீரோயின்) காலில் விழுந்து அவளை கட்டாய திருமணம் பண்ணி விட்டனர் கேட்டால் குடும்ப கௌரவமாம். “என்ன தான்டா பிரச்சன உங்களுக்கு? பூமர் பண்ணி கொண்டு இருக்கிங்க? பிடிக்காதவன் என்றாலும் முகூர்த்த நேரத்திற்குள்ள கல்யாணம் பண்ணி வைக்றது தான் குடும்ப கௌரவமா?” என முற்போக்கு சிந்தனை உடையவர்களை கடுப்பாக்குகின்ற வகையிலான வசனங்களை ஹீரோயின் தந்தை பேசுவார். சரியாக தாலி கட்டும் போது ஹீரோ காணமல் போன மணமகளுடன் வருவார். அப்போதாவது தாலியை கழற்றி மாற்றி திருமணம் செய்து வைத்திருக்கலாம் ஆனால் “நோ… நோ… வாய்ப்பில்ல ராஜா!” என்றவாறு ஹீரோயின் பூமர் பாட்டி வசனங்கள் டெலிவரி செய்வார். அது என்னவோ தாலி கட்டினால் அந்த பெண் அடிமை மாதிரியும் வேறு வழியே இல்லை என்ற மாதிரியும் பேசுவது. இந்த மாதிரியாக பிடிக்காதவர்கள் எனினும் தாலி கட்டினால் வாழதான் வேண்டும் எனவும் குடும்ப கௌரவம் எனவும் கட்டாயப்படுத்துவதால் தான் பாக்கியலட்சுமியின் புருஷன் போல் முன்னால் காதலர்களோடு சேர பல முயற்சிக்கிறார்கள்.

இது போதாதற்கு காணாமல் போன மணமகளுக்கும் ஹீரோக்கும் கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள். ஒரு தவறை சரி செய்ய இன்னொரு தவறு. இந்த மாதிரி சீரியல் எடுக்குற வரைக்கும் சமூகத்தை மாற்றவே முடியாது.

ராஜா ராணி 02

எல்லா சீரியலிலும் ப்ர்ஸ்ட் நைட் சீனுக்கான எல்லா அலங்காரமும் செய்து விடுவார்கள் ஆனால் ஹீரோவும் ஹீரோயினும் தனித் தனியே தூங்குவார்கள். “இதுக்கு பருத்தி மூட்டை பேசாம குடோன்லயே இருக்கலாமே!?” என உங்களுக்கு இருக்கும் அதே டவுட் தான் எனக்கும். இப்படி இவர்கள் தனித் தனியே தூங்க காரணம் என்னவென ஆராய்ந்து பார்த்தால், அவர்கள் லட்சியம் நிறைவேற வேண்டுமாம் அதனால் குழந்தை ஏதும் வந்து விட்டால் லட்சியம் தடை ஆகிவிடுமாம். என்ன ஒரு அழகான காரணம். குழந்தை வேண்டாம் என்றால் condom பயன்படுத்தலாமே! எதற்கு இப்படி சீன் க்ரியேட் பண்ண வேண்டும். அது சரி தமிழ் சீரியல் தானே. அப்படி எல்லாம் பேச மாட்டார்கள். அது தவறு. அதெல்லாம் பெட் ரூமோடு இருக்க வேண்டிய பேச்சு. அது தான் கலாசாரம். அவர்களும் அவர்களது போலியான சாயங்களும்.

தமிழும் சரஸ்வதியும் 

இதில் ஹீரோயின் எட்டு வருடமாக +2 எழுதுவார். அப்போது அவளுடைய தந்தை எவ்வளவு செலவு செய்திருப்பார். எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்திருப்பார். இத்தனைக்கும் அவளுடைய அப்பா ஒரு ஆசிரியர். வருடம் வருடம் ரிசல்ட்ஸ் சொல்லியே அவருக்கு வெறுத்துப் போயிருக்கும் ஆனால் அப்போது எல்லாம் பாஸ் ஆகாத ஹீரோயின் ஒன்பதாவது அடெம்பில் பாஸ் ஆகுகிறார். அதற்கு காரணம் புருஷனுக்கு அவமானமாம். அதனால் தானாம். அப்படியென்றால் எட்டு வருடமாக ஹீரோயினின் அப்பா எதிர்கொண்டது…!? சரி அப்படியாவது புருஷனுக்காக பாஸ் ஆகினார் என்று பெருமை கொள்ளலாம்.

இதே சீரியலில் வில்லிக்கும் ஹீரோயினுக்கும் இன்னொரு சபதம் வருகிறது. அதை கேட்டாலே சிரிப்பு தான் வரும். ஹீரோயின் கிட்சனுக்குள் போவாரா இல்லையா என்பதுதான் அந்த சபதம். அவரவர் பெண்களை அடுப்பங்கறையிலிருந்து வெளிக் கொண்டரவும் கரண்டி பிடிக்கும் கையில் பேனையினை கொடுக்கவும் படாத பாடுபட்டால், இவர்கள் சீரியல் என்ற பெயரில் கிட்சனுக்குள் போவதே பெருமை என சீன் வைத்து விடுகிறார்கள்.

எதிர் நீச்சல்

கல்யாணம் என்றாலே பெரும் கொண்டாட்டம் தான். அதற்காக மணபெண் ஆடுவதும் அவளுடைய தோழிகள் சேர்ந்து ஆடுவதும் வழக்கம். அவ்வாறாக ஆடிக் கொண்டு வருபவர்களை பார்த்து நம்முடைய பூமருக்கெல்லாம் பூமராக விளங்கும் அன்கிள் கலாசாரம் என்ற பெயரில் ஒரு லெக்சர் எடுப்பார். அத்தோடு நிறுத்த மாட்டார். போட்டோ சூட் செய்பவர்களையும் திட்டி தீர்ப்பார். நம் முற்போக்கு சிந்தனையுடைய இளைஞர்களை கொந்தளிக்க வைப்பதாக அவருடைய பேச்சு இருக்கும்.

அவரை பொறுத்தவரை கல்யாணம் என்றால் இலவு வீடு போல் அமைதியாக வந்து அமைதியாக தாலி கட்டி… அட இதை மறந்து விட்டேன். அந்த தாலி கட்டும் போது வீடியோ பண்ணுவதை கூட கலாசார சீர்கேடு என சொல்வார் பாருங்கள். எங்க போயிட்டு இதெல்லாம் சொல்ல?  அந்த அன்கிள் அவ்வளவு பேசும் போது எல்லாரையும் அமைதியாக வைத்திருப்பது போன்ற டிரெக்டரின் ஸ்க்ரிப்ட், ஏதோ அவர் சொல்வதெல்லாம் சரி என திணிப்பது போல் அமைந்துள்ளது. உண்மையில் இந்த மாதிரியான பூமர் கரெக்டர்கள் நடுவில் ஹீரோயின் எப்படி வாழப் போகிறார் என்பது எதிர் நீச்சல் போடுவதற்கு சமம் தான்.

ரோஜா

நவீன பிளாஸ்திக் சர்ஜரி எல்லாம் தோற்று போகும் அளவிற்கு இந்த சீரியலில் ஒரு சீன் இருக்கும். அதாவது ரோஜா போன்றே இன்னொரு விபத்துக்குள்ளான பெண்ணை மாற்றுவது. அதற்காக ஒரு மாஸ்க், அதை மாஸ்க் என்றும் சொல்ல முடியாது. ஏதோ சிலை போன்று அசைக்க முடியாத மூலப்பொருளால் ஆன முகம் ஒன்றை பொருத்துவது போல காண்பித்து அதை ரோஜா போன்றே காட்டுவார்கள் பாருங்கள்… “ஏன்டா உங்களுக்கு மனசாட்சியே இல்லையாடா!?” என பொங்கி எழ வைக்கும்.

அந்த காட்சி மட்டுமல்ல ரோஜா நாடகத்தின் முழு ஸ்க்ரிப்ட்டுமே க்ரின்ச் தான். “அர்ஜூன் சார்! அர்ஜூன் சார்!” என ரோஜா கூப்பிடுவதை கேட்டு கேட்டு காதில் இருந்து இரத்தமே வந்து விட்டது. அக்ரிமன்ட் கல்யாணமாம் ஆனால் அது லவ்வாக மாறுதாம். பேசாம நம்ம 90’s கிட்சும் இப்டி ஏதும் ட்ரை பண்ணுங்கப்பா! ரோஜாவை விட இதில் வந்த வில்லி அதை விட கிரின்ச். பாவம் எப்ப எங்க தலையில் அடி பட்டதோ, தனியாகவே டயலோக் டெலிவரி பண்ணி கொண்டு சுற்றினாள்.

இவர்கள் இருவரை விட கிரின்சுக்கெல்லாம் கிரின்ச் அந்த கடவுள்தான். ஆமாம்! ஒரு முறை வில்லியின் சதியால் பாழாக்கப்பட்ட பலகாரங்களுக்கு பதிலாக புதிய பலகாரங்களை சுடும் போது கடவுளும் வந்து உதவுவது போல் காட்சி இருக்கும். கஷ்டபட்டு அடுப்பில் வேகுவதை விட சுடக்கு போட்டு பலகாரத்தை வர வைத்திருக்கலாமே! பாவம் ஐடியா இல்லாத கடவுள்.

செம்பருத்தி

விஜய் டிவிக்கு சின்னய்யா என்றால் Zee தமிழுக்கு ஒரு பெரியய்யா. அட எல்லாம் ஒரே ஸ்க்ரிப்ட்தான் ஆங்காங்க சின்ன சின்ன கரெக்ஷன் பண்ணிட்டு டைட்டில் மாற்றிக் கொள்ள வேண்டியது. விஜய் டிவியின் ஸ்க்ரிப்ட்டில் பார்ட் 1 பார்ட் 2 என ஹிந்தி நாடகங்களை கொபி அடித்தாவது ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணி விடுவார்கள். ஆனால் Zee தமிழ் அப்படி கிடையாது. கதாபாத்திரங்களை நாம் சாகும் வரை எங்களோடு ட்ராவல் பண்ண வைக்கும் லட்சியவாதிகள். அதற்கு சான்று இந்த செம்பருத்தி. இதையும் பார்த்து விட்டு உணர்ச்சி பூர்வமாக பொங்கி எழுபவர்களும் உண்டு. அவர்களை பார்த்தால் தான் பரிதாபமாக இருக்கிறது.

யாரடி நீ மோகினி

எப்போதும் ஒரு ஆணிற்காக இரு பெண்கள் முட்டி மோதி கொள்வதை ஸ்க்ரிப்ட்டாக செய்வது ஒரு வழக்கம். இத்தனைக்கு ஹீரோ செம்மையா இருப்பாரானு கேட்டால், அவ்வளவு எல்லாம் சொல்றதுக்கு இல்லை. நல்லவரானு கேட்டால், ஆமா நல்லவர் தான். சிங்கிளானு கேட்டால், சிங்கிள் தான் ஆனால் ஒரு குழந்தைக்கு அப்பா! அவருக்காக இரண்டு பெண்கள் தன்னை தானே அழித்துக் கொள்ளும் அளவிற்கு அடித்துக் கொள்வார்கள். எனக்கு புரியல! ஏன் இதுவே கல்யாணம் ஆகி ஒரு பிள்ளையோடு விதவை ஆன பெண்ணிற்காக இரண்டு ஆண்கள் அடித்துக் கொள்வது போல் ஸ்க்ரிப்ட் எழுதலாமே! அது எப்டி? அப்டி எழுதினால் நம்முடைய பூமர்கள் பார்க்காது என்ற பயம். இதில் வரும் பேய் கூட தன் கணவனுக்கு மாமா வேலை பார்க்கும் கண்கொள்ளா காட்சி இருக்கே! அட அட என்ன ஒரு கேவலம்!

இதில் உள்ள வில்லி திட்டமிட்டு தானே செத்துப் போய் மண்ணுக்குள் புதைத்த பிறகும் உயிரோடு தீரும்பி வருவது போன்ற காட்சி எல்லாம் கூட இருக்கும். அதிலும் முத்து மாமா முத்து மாமா என்று பின்னாலேயே பின்னாலேயே சுற்றும் ஹீரோயின் அவளுக்கு போட்டியாக முத்து மாமா என்று அழையும் வில்லி என்று ஒரே ஜாலிதான். முத்து மாமாவை இமோஷனல் பிளக்மெயில் செய்யும் வில்லி அதுக்கு உண்மையாக பயப்படும் ஹீரோ இந்த சீரியல் முழுக்க க்ரின்ச்சுதான்.

இது போதாதென்று சாமி ஆடுதல், சாமிக்கு நேத்தி கடன் செய்தல், சாமி சாமி சாமியோ சாமி! அதற்கு உசுப்பேற்றும் விதமாக பில்லி, சூனியம், செய்வினை மற்றும் கட்டுக்கள் வேறு! ஆயிரம் பகுத்தறிவாளர்கள் வந்தாலும் உங்களை எல்லாம் திருத்தவே முடியாதுடா யப்பா!

சுந்தரி

விஜய் டிவிக்கு ஒரு கண்ணம்மா என்றால் நம்ம சன் டிவிக்கு ஒரு சுந்தரி. கறுப்பு என்ற நிறத்தை சமூகத்திற்கு கீழ் தரப்பட்ட நிறமாக காட்டக் கூடாது என்ற லட்சியத்தோடு தான் சீரியல் எடுக்க வந்திருப்பார்கள் ஆனால் அதன் பின் மற்றைய சீரியல் ரைட்டர்களின் காற்று பட்டு விடும் போலிருக்கிறது. ஏனெனில் போக போக ஸ்க்ரிப்ட்டில் பல பூமர்களும் க்ரின்ச்சுகளும் வந்து சேர்ந்து விடும்.

தனது கணவனுக்கு இரண்டாவது திருமணமானது தெரிந்தவுடன் சுந்தரி விவாகரத்து செய்திருக்க வேண்டும். அல்லது ஊரை கூட்டி முகத்திரையை கிழிக்க வேண்டும். இரண்டுமே இல்லாமல் டயலோக் டெலிவரி பண்ணி கொண்டிருப்பாள். தனக்கு சுந்தரியை பிடிக்கவில்லை என்றால் ஆரம்பத்திலேயே சொல்லியிருக்க வேண்டும். அதை ஹீரோ செய்ய மாட்டார். இதில் என்ன பெரிய ட்விஸ்ட் என்றால் சுந்தரிக்கும் கார்த்திக்கும் கல்யாணமான விடயம் அனுவிற்கு தெரியாதாம். ஏன்டா! எந்த காலத்துல இருக்கிங்க? இந்த சீரியலில் பொருத்தமாக இருப்பது ஹீரோவின் பெயர் மட்டும்தான். டிக் டாக்கின் திவ்யா கார்த்திக்கின் பின் இந்த பெயர் சரியாக பொருந்துவது சுந்தரியின் கார்த்திக்கு தான்!

முதலில் இந்த தமிழ் சீரியல் டிரெக்டர்களையும் ஸ்க்ரிப்ட் ரைட்டர்களையும் கூப்பிட்டு ஒரு கவுன்ஸ்லிங் கொடுக்க வேண்டும். பெண் உரிமை பற்றியும் கலாசாரம் பற்றியும் சமூகத்திற்கு தேவையான விடயங்கள் பற்றியும் சமூகத்திற்கு தேவையற்றவை பற்றியும் அறிவு புகட்ட வேண்டும். சீரியல் எடுக்க வேண்டும் என்பதற்காக சென்டிமென்ட் என்ற பெயரில் பழைய முட்டாள் தனமான வழக்கங்களையும் நம்பிக்கையையும் சமூகத்தில் திணித்து சீர்குலைக்காமல், முற்போக்கான சீரியல்களை எடுக்க வேண்டியதன் அவசியம் பற்றி அறிவுறுத்த வேண்டும். எந்த படைப்பும் நல்ல மாற்றத்தையும் புதிய சிந்தனையையும் உருவாக்க வேண்டுமே தவிர மூடதனங்களை வளர வைப்பதாகவும் ஊக்குவிப்பதாகவும் இருக்க கூடாது. நீங்கள் பார்த்த சீரியலின் மொக்க சீன்களை எங்களுடன் கமன்ட் பொக்ஸில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

மனிதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php