2022 May 25
அறிவரசன் எழுதி-இசையமைத்து- பாடி- இயக்கி- அறிவினால் புதிதாக தொடங்கப்பட்ட‘ அம்பஸ்ஸ’ இசைக்குழுவின் இசையுடன் மே 18 அன்று வெளிவந்து சிறந்த வரவேற்பை பெற்றிருந்த பாடல் ‘ சிலோன்கார்’.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியையும் போராட்டங்களையும் மையப்படுத்தி, இலங்கைக்கு பிரத்தியேகமான பைலா இசைதொனியில் இப்பாடல் வெளிவந்திருந்தது.
சாதிய அடக்குமுறை, பெண்விடுதலை, அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலை போன்றவற்றை வலியுறுத்தி, பாடல்களை இயக்கிக் கொண்டிருக்கும் இசைப் புரட்சியாளர் அறிவு இப்பாடலிலும் இலங்கையின் நடந்துகொண்டிருக்கும் போராட்டத்தின் நிலை, போராட வேண்டியதன் அவசியம் போன்றவற்றுடன் தற்போதய அரசியலின் கறுப்புப் பக்கத்தையும் விமர்சித்து வரிகளை எழுதி இருந்தார்.
கிறிஸ் ஜேசன்,கெவின் ஜேசன், சத்தியன் மூவரும் கிட்டார் இசைக்க, சுகுமாரன் இசை ஒழுங்கமைப்பு செய்திருந்த சிலோன்கார் பாடல் காட்சியை கார்த்திக் ராஜா கருப்புசாமி ஒளித்தொகுப்பு செய்திருந்தார்.
பாடல் வரிகளூடாக பெரும்புரட்சி செய்யவேண்டும் என பணித்தால். ‘அவ்ளோ தானா’ என்று இருமாப்போடு எழுத்தில் அனல் கரக்கும் அறிவு, இந்தப்பாடலிலும் எழுத்தின் மூலம் அனல் தெறிக்க விட்டிருக்கிறார்.
தவிர, இசை வடிவமைப்பிற்காய் சுகுமாரனுக்கு ஒரு பெரிய கைதட்டல்.கூடவே ஒலித் தயாரிப்பாளர் ஹரியையும் பாராட்ட வேண்டியத் தேவை இருக்கின்றது.
அம்பஸ்ஸ இசைக்குழுவின் தொடர் வெளியீடுகளில் இன்னுமொரு புரட்சிப்பாடலாய் அமைந்திருக்கும் சிலோங்காருக்கு பைலா பாணி அவ்வளவாய் கைகொடுக்க வில்லையோ என்று தோன்றாமலில்லை. பாடலில் வரிகளின் சூட்டை இன்னும் ஒருப் படி இசை எடுத்து சென்றிருந்தால் மென்மேலும் அற்புதமான ஒரு பாடல் நமக்கு வாய்த்திருக்கும்.
ஹஜன் அன்புநாதன்