Macro-கதைகள் ஆகாயம் தேடும் நிலா! 

ஆகாயம் தேடும் நிலா! 

2022 May 26

அதிகாலை தொடங்கிய மழை, மாலை நான்கு மணியாகியும் ஓய்வற்றுப் பொழிந்துகொண்டிருக்கிறது.மனிதர்களைப் போலவே மரஞ்செடி கொடிகளும் குளிரில் விறைத்துச் சோர்ந்திருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தும்பிகள் பறந்துகொண்டிருந்தன. புல்வெளியில் மைனாக்கள் எதையோ தேடிக்கொண்டிருந்தன. பூக்களில் மழைத்துளிகள் பாக்கள் எழுதிக்கொண்டிருந்தன. மழையில் நனைந்தவாறு மின்சாரக் கம்பிகளில் காக்கைகள் அமர்ந்திருந்தன. சன நடமாட்டமற்று வீதிகள் வெறிதாயிருந்தன. ஆவேசமாய் சுழன்றடித்த காற்றால் மரக்கிளைகள் முறிந்தன. பழுத்திருந்த பழங்கள் மரத்தை விட்டு விழுந்தன. வீட்டுச் சாளரத்தின் அருகேயிருந்து சூடான தேநீரை அருந்தியவாறு மழையை இரசித்துக்கொண்டிருக்கிறாள் நிலாஜினி!
உறவுகள் புடைசூழ இருந்தாலும், அவள் ஏகாந்த வாசத்தை அதிகம் விரும்புபவள். காதல் அவளுக்கு அளித்த வரம் அது. தனிமையை விரும்பும் பொழுதெல்லாம் தன் அறைக்குள் அவள் தஞ்சமாகி விடுவாள். விசாலமான அவளது அறைக்குள் அதிகமாகக் காணப்படுபவை புத்தகங்கள்தான். அந்த அறையின் சாளரம் மேற்குத் திசையில் உள்ளது. அதனருகே கதிரை, நீளமான மேசை- மேசை முழுவதும் புத்தகங்கள். தனிமைக்குள் தனிமை விரும்பியான அவள், வேலை நேரங்கள் தவிர அந்தச் சாளர இருக்கையில் அமர்ந்து எதையாவது படித்துக்கொண்டிருப்பாள், எழுதிக்கொண்டிருப்பாள், தன்னை மறந்து இயற்கையை இரசித்துக்கொண்டிருப்பாள். இன்றும் அவ்வண்ணமே தோல்ஸ்தோயின் “அன்னா கரனினா” நாவலைப் படித்து முடித்து, இப்போது இயற்கையைப் படித்துக்கொண்டிருக்கிறாள்!
தேநீர்க் கிண்ணம் காலியானது. மீண்டும் கைபேசியிலிருந்து ஆகாஷுக்கு அழைப்பு எடுத்தாள். “நீங்கள் அழைத்த நபர், தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்” என்றது கைபேசி!
“சொல்லாமலே காதல் வந்தது” ஜோடியருள் ஆகாஷ்- நிலாஜினியும் அடங்குவர். ஆகாஷ் விடுதலைப் புலிவீரன்! தாயக விடுதலைக்காய் அதிக விலைகள் கொடுத்த தீரன்! ஒரே ஊரில் இருவரும் பிறந்திருந்தாலும், ஒருவரையொருவர் அறியாதிருந்தனர். காலப்பெருவெளி ஒருநாள் இருவரையும் ஒருங்கிணைத்தது. கண்கள் பார்த்த முதல் நொடியே காந்தமாய் ஒட்டிக்கொண்டனர் ஆகாஷும் நிலாஜினியும்!
அன்று முதல் நட்பாகப் பழகத் தொடங்கிய இவர்கள், நாளடைவில் காதலுள் கட்டுண்டனர். காதல், கடமை இரண்டையும் இரு கண்கள் போல் நேசித்தான் ஆகாஷ்!
இருவரும் பழகி மூன்று வருடங்கள் நிறைவுற்றன. கல்யாணப் பேச்சை ஆகாஷ்தான் முதலில் ஆரம்பித்தான். “நிலா! இப்படியே காலம் முழுக்கக் காதலித்துக்கொண்டா திரிவது? நமக்குக் குழந்தை குட்டிகள் வேண்டாமா? எப்போது நம் திருமணம்?” என்று கேட்டான் ஆகாஷ். “நீங்கள் இயக்கத்தை விட்டு விலகினால்தான் நான் கல்யாணம் செய்வேன்” என்று உறுதியாகக் கூறினாள் நிலாஜினி. “ஆகாஷ் இயக்கம். அவனைக் கல்யாணம் செய்திட்டு, இளம் வயதில் நீ விதவையாகப் போகிறாயா?” என்று அவளது உறவுகள் கேட்டு அவளை அச்சுறுத்தினர். இருவரின் காதலையும் அவளது உறவுகள் ஏற்கவில்லை. ஆகாஷோ இயக்கத்தை விட்டு விலகுவதாகவும் இல்லை. “நீ என்னைக் கல்யாணம் செய்தால், நீயும் இயக்கம்தான். உன்னைத் தனியாக விடமாட்டேன். எங்கள் மக்களின் நல்வாழ்வுக்காக நாம் எந்நேரமும் சாகத் தயாராக இருக்க வேண்டும். நாம் மட்டுமல்ல, நமக்குப் பிறக்கும் பிள்ளைகளும் மண் விடுதலைக்காகப் போராடத்தான் வேண்டும். வாழ்வுக்குள் சாகாமல் சாவுக்குள் வாழ்வோம் வா நிலா!” என்றான் ஆகாஷ்! “வாழ்வதற்குக் காதலித்தால், சாவதற்கும் தயாராய் இரு என்கிறானே இவன்” என மனதுக்குள் நினைத்தவள், கண்ணீரால் அவனுக்குப் பதிலுரைத்துப் பிரிந்தாள்!
சங்ககாலக் காதலர் போல இங்கேயும் வீரத்திற்குப் பின்னே காதல் சென்றது. தனக்குப் பின்னே வா என்று அவளை அழைத்தான் ஆகாஷ். அவன் மனவுறுதியில் கற்பாறையை நிகர்த்தவன். ஆனால், காதல் அவனது இதயத்தை இளகச் செய்துவிட்டது. நிலாஜினியைப் பிரிந்த துயரம் தாங்காது கண்ணீரில் கருகினான்! அவளைத் தன்னிடம் தருமாறு அவளது பெற்றோரிடம் உருகினான்! அவன் போராளி என்பதைக் காரணம் காட்டிப் பெற்றோரும் உறவுகளும் அவளை அவனிடமிருந்து பிரித்தனர்.இருவரையும் கோர்த்து வைத்து அழகு பார்த்த விதி சிரித்தது! விதி வலிதென்பது இங்கும் பலித்தது!
2009 உடன் ஈழப்போர் மௌனித்தது.
தொடர்பறுந்து தொலைந்தவர்களை மீண்டும் விதி இணைத்தது. இலையுதிர் காலம் மறைந்து வசந்தகாலம் பிறந்தது போல் இருவர் காதலும் உயிர்த்தது.  இருவரும் இணைவது நிச்சயம் என்ற நம்பிக்கை அளித்தது. ஈழத்தில் இப்போது போரும் இல்லை, சமாதானமும் இல்லை. அதேபோல ஆகாஷ் போன்றவர்கள் இங்கு வாழ்வதற்கு உயிருக்கு உத்தரவாதமும் இல்லை. அதனால் அரசியல் தஞ்சம் கோரி அவன் புலம்பெயர் தேசமொன்றில் வாழ்கிறான். அங்கிருந்தவாறே மறுபடியும் நிலாஜினியுடன் தொடர்புகொண்டான். சந்திப்பும் பிரிவும் எனத் தொடரும் இந்த உறவுப்பயணத்துக்கு ஆண்டுகள் எட்டு! இன்னமும் தமக்குள்  இரு உயிர்களும் இசைத்துக்கொண்டு இருக்கின்றன காதல் மெட்டு!
இப்போது ஆகாஷ் ஒரு அநாதை. வாலிபங்கள் ஓடி மறைந்த மேதை. போருக்குப் பின்னர் அவன் தனியாகவே வாழ்கிறான். தனிமை அவனைத் தின்று தின்று ஏப்பம் விட்டுவிட்டது. கோபத்தை அவனுக்குப் பரிசளித்தது. ஏன், எதற்கு என்று தெரியாமலே அவன் இப்போதெல்லாம் கோபப்படுகிறான். உண்பதற்கு மட்டும் உழைப்பது, உறைகுளிர் காலத்தில் உறங்குவது என்று அவனது காலங்கள் கரைகின்றன. வலிகள் மட்டுமே வாழ்வின் வரங்களாய் அவனுக்கு அமைந்தன. அவன் சிறந்த கவிஞன், எழுத்தாளன். தற்போது தன் வாழ்வின் அனுபவங்களை எழுத்துக்களில் செதுக்கிக்கொண்டிருக்கிறான்.
நிலாஜினி மீது அவனுக்கு அதிக பிரியம். அப்படியே அவன் மீதும் அவளுக்கு அதிக பிரியம். அவளைத் திருமணம் செய்ய இப்போதும் அவன் விரும்புகிறான். அவளும் அவனை மணமுடித்து, இருவரின் ஆளுமையின் அடையாளமாக ஒரு மகவைப் பெற்றெடுக்க விரும்புகிறாள். அவன் அவளைத் தேடும் போது பாராதிருந்தவள், அவனை இப்போது அதிகமதிகமாய்த் தேடுகிறாள். ஆனால், கையில் சிக்காத காற்றைப் போல அவளது தேடலுக்குள் அவன் அகப்படவில்லை.
முன்பெல்லாம் அவளுடன் பேசுவதை மட்டுமே விரும்பிய அவன், இப்போது நிறையவே மாறிவிட்டான். காலமும் சூழலும் அவனை மாற்றிவிட்டன. உறைபனிக் குளிரிலும் உறங்காது பேசியவன், இப்போது அவ்வாறில்லை. தன்னை மறந்து மணிக்கணக்கில் பேசியவன், இப்போது அவ்வாறில்லை. உறக்கம் ஒன்றையே அவன் அதிகம் விரும்புகிறான். அதனால் கைபேசியைக் கூட உறக்கநிலையில் வைக்கிறான்.
காலையில் குளிர் சூரியனாய் சிரித்து அன்பைப் பொழிபவன், மாலையில் சுடும் சூரியனாய் கோபக் கனலைக் கக்குகிறான். திடீர் திடீரெனத் தீயாகிறான், பின் தீயணைக்கும் நீராகிறான். அவளைக் கொஞ்சும் தாயாகிறான், அவள் கொஞ்சிட சேயாகிறான். அவனது உணர்வுக் கலவையை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை!
இன்று கார்த்திகை- 27. மண் மீட்கும் போரில் ஆகுதியான மறவர்கள் நினைவாகத் தான் மரக்கன்று நாட்டியபோது எடுத்த புகைப்படம் அவளுக்கு அனுப்பியிருந்தான். ஒரு நிமிடம் அவளுடன் பேசியிருந்தான். பின் அவனது கைபேசி உறக்கநிலையில்!
“மாவீரர் நினைவு தினம் தானே? ஆகாஷ் பிசி போல” என்று தனக்குத் தானே சமாதானம் சொன்னவள், வீட்டுக்கு அண்மையிலுள்ள கோவிலில் மரக்கன்றுகள் நாட்டுவதற்குச் செல்ல ஆயத்தமானாள். மழை ஓய்ந்தபாடில்லை. குடையைப் பிடித்தவாறு நடந்து சென்றாள். குடை மீது காற்றுக்குக் காதல் போலும். அதனைப் புரட்டிப் புரட்டித் தன்பக்கம் இழுத்த வண்ணம் இருந்தது. நிலாஜினி தெப்பமாக நனைந்துவிட்டாள். கொட்டும் மழையிலும் மண்ணில் விதையானோர் நினைவாக மரக்கன்றுகள் நாட்டியவள், குளிரில் நடுங்கியவாறு வீட்டுக்கு வந்து நீராடினாள். மாலை 6.05 மணியளவில் தன் வீட்டுச் சுவாமி அறையில் மறவர்களுக்குச் சுடரேற்றி அகவணக்கம் செலுத்தினாள். ஒன்றாகப் படித்து விதையான அவளது தோழர்கள் கண்களில் நிழலாடினர். அவளது மனது அதிகமாகவே கனத்தது. இரவு உணவை உட்கொள்ள மனமற்று, தன் அறைக்குள் சென்று சிந்தனையில் ஆழ்ந்தாள்.
இலங்கைச் சனத்தொகையில் மிகக் குறைந்தளவு எண்ணிக்கையில் தமிழர்கள் வாழ்ந்தாலும், போராட்டத்திற்குச் செலுத்திய விலைகளும் போர் அளித்த வலிகளும் அதிகம். இன விடுதலைக்கான போரில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களை ஆகுதியாக்கியுள்ளது தமிழினம். இது அதிக விலை! தெற்காசியாவில் விடுதலைப் புலிகள் செய்தது அதியுச்ச சாதனை! முப்படை வளர்த்து, எப்படை வந்தாலும் விரட்டியடித்த புலிகளைப் பன்னாட்டுப் படை தோற்கடித்தது. தனக்கொரு தேசமில்லாத் தமிழினம், இன்று கால் பதிக்காத தேசமில்லை. தமிழின விடுதலைக்காய் உழைத்த போராளிகளில், தன் காதலனும் ஒருவன் என்று அவள் பெருமைப்பட்டாள். அவனுடன் பேச ஆவலுற்று, மீண்டும் அவனுக்குக் கைபேசியில் அழைப்பெடுத்தாள். அவளது அழைப்புக்கு இப்போது அவன் பதிலளித்தான். ஆனால், அவளிடம் தீயாகித் தகித்தான். அரைமணி நேர உரையாடல் அபத்தமாய் முடிந்தது. மறுபடியும் அவன் கைபேசியை உறக்கநிலையில் வைத்தான்.
நொடியில் நிறம் மாறும் அவன், கவலையில்லாத மனிதனாய் உறங்கிக்கொண்டிருப்பான். உறக்கம் அவனது பெருவிருப்பம். அவனோ நிலாஜினி வாழ்வில் பெருந்திருப்பம். அவன் ஏன்தான் இப்படி இருக்கிறான் என்று விடை தெரியாமல், அவனது கைபேசி எண்ணைப் பார்த்தவாறு நிலாஜினி கட்டிலில் சரிந்தாள். வெளியே மழை சோவெனப் பொழிந்துகொண்டிருக்கிறது. இப்போது, விண் மழையுடன் அவளது கண் மழை போட்டி போட்டுக்கொண்டிருக்கிறது!
மல்லிகா செல்வரத்தினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php