அனைத்தையும் நாடி  ஆரிரோ ஆராரிரோ… இது தந்தையின் தாலாட்டு!

ஆரிரோ ஆராரிரோ… இது தந்தையின் தாலாட்டு!

2022 Jun 17


அம்மா உதிரத்தால் உயிர் கொடுத்தவர். அப்பா உயிரணுவால் உயிர் கொடுத்தவர். பிள்ளையை பத்து மாதங்கள் கருவறையில் சுமப்பவர் தாயென்றால் தாயையும் சேர்த்து தன் மார்பில் ஆயுள் வரை சுமப்பவர் தந்தையாகத்தான் இருக்கமுடியும். தாயின் அன்பு அரவணைப்பில் தெரியும். தந்தையின் அன்பு அதட்டும் போதில்தான் தெரியும். அப்பா என்ற உறவின் அருமை எப்போது புரியும் தெரியுமா? அவர் கைபிடித்து நாம் நடந்து நம் குழந்தைப்பருவமும் கடந்து அவர் தோள் பிடித்து நாம் நடந்து நம் இளமைப்பருவமும் கடந்து அவருக்கு முதுமைவரும்போது அவர் தோள்களை நாம் தாங்கிக்கொண்டு நடந்து போகையில் திடீரென்று நம்மை சுமந்த தந்தை நம்மை விட்டு போகும்போது ஒரு சுமை தோன்றுமல்லவா? அப்போது புரியும் அப்பா என்றால் யார் என்று.. உங்களுக்கு ஒரு குழந்தை பிறந்து அந்த குழந்தையை நீங்களும் வளர்க்கும்போது அவன் வளர்ந்து பெரியவனாகும் போது அப்போது புரியும் உங்களுக்கு அப்பா என்றால் யார் என்று.. அப்பாவை யாராலும் புரிந்துகொள்ளமுடியாது. ஆனால் அந்த சொல்லில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கின்றது என்பதையாவது புரிந்துகொள்ளுங்கள். அன்பு, அரவணைப்பு, அர்ப்பணிப்பு,  தியாகம், கண்டிப்பு, பாதுகாப்பு, கரிசணை, உழைப்பு இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். 


அப்பா என்றால் உண்மையிலேயே யார்? என்பதை ஒரு வீடியோ பதிவு எனக்கு உணர்த்தியது. அப்பாவை பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது என் நியாபகத்திற்கு வருகிறது, என் மனதையே உருக்கிய அந்த 2 நிமிட ஈரான் அனிமேஷன் குறும்படம் தான். அதை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.
‘In the Name of God’ என்று முழுமையடையாத வாக்கியத்தோடு ஆரம்பிக்கிறது அந்த கதை. வானத்தின் மேகமூட்டங்கள் கருமுகில்களால் சூழ்ந்துகிடக்க பலத்த காற்றோடு அடைமழை பெய்துகொண்டிருக்கிறது. ஒரு வயரில் உடையொன்று காயவிடப்பட்டுள்ளது. அந்த உடை ஒரு பெரிய நீள் சட்டைப்போலத் தெரிகிறது. அந்த சட்டை அந்த வயரில் இரு க்ளிப்களின் உதவியோடு தொங்கிக்கொண்டிருக்கிறது. இப்போது காற்று இன்னும் பலமாக வீச அந்த நீள் சட்டை கைகள் இரண்டையும் கட்டிக்கொண்டு வீசும் காற்றிலிருந்து பறக்காமல் இருக்க தன்னை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. அதேசமயம் அந்த காற்றில் பல ஆடைகள் பறந்துகொண்டிருக்கின்றன. காற்று இன்னும் சுழன்றுகொண்டு பலமாக வீசுகையில் அந்த நீள் சட்டையை தாங்கிக்கொண்டிருந்த க்ளிப்களில் ஒன்று கழன்று விழுந்துவிட்டது. இப்போது அந்த நீள் சட்டையின் ஒரு கை தட்டுத்தடுமாறி அந்த வயரை பிடித்துக்கொண்டிருக்கின்றது. வேறெங்கிருந்தோ பறந்து வரும் ஆடைகள் நீள்சட்டையை கடந்து போகின்றன. அப்படியே அந்த காட்சி முடிவடைய மழை ஓய்ந்து முகில்களுக்கிடையிலிருந்த சூரியன் வெளியேவர கொஞ்சம் கொஞ்சமாய் வெளிச்சமும் வர ஆரம்பித்தது. இரு பறவைகள் கீச்சிட்டுக்கொண்டிருக்க இப்போது அந்த நீள் சட்டையிலிருந்து ஒழுகும் தண்ணீர் துளிகளின் சத்தம் கேட்கிறது. கடும்புயலில் தாக்குப்பிடித்துக்கொண்டிருந்த அந்த நீள்சட்டை அடைமழையில் நனைந்து உறைந்துபோனதால் அச்சட்டையின் கை பக்கங்கள் நடுங்க ஆரம்பித்தன..


இந்த கதையின் இறுதிகட்டத்தை நான் சொல்லப்போவதில்லை. நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். (https://youtu.be/fUR5ks-t9TI) இந்த குறும்படத்தின் கடைசி சில நிமிடங்கள் நிச்சயம் உங்களை உறையவைத்துவிடும்.
நான் கூறியதைப்போல இந்த கதை ஆரம்பிப்பதற்கு முன்னரே ‘ஐn வாந யேஅந ழுக புழன’ என்று ஆரம்பிக்கப்பட்டு இறுதியில் ‘குயவாநச’ என்று போடப்பட்டு அந்த கதை முழுமையடைகிறது. ஆம். அப்பா தான் நாம் கண்கூட பார்க்கும் கடவுள். வேண்டும் வரத்தை தருபவர் கடவுள் என்றால் நாம் வேண்டாமலே நமக்கு வேண்டியதை தருபவர் நம் அப்பா தானே? அப்படியென்றால் கேட்டும் கேட்காதவர் போல் அந்த கோயிலிலிருக்கும் இறைவனுக்கா அல்லது கேட்காமலேயே நமக்கு அனைத்தையும் பெற்றுத்தரும் வீட்டில் வசிக்கும் தெய்வத்திற்கா முதல் வணக்கம் என்று நீங்களே சிந்தியுங்கள். 


இதைத்தான் நா.முத்துக்குமார்; ‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே. தாலாட்டுப் பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே’ என்று தம் பாடல்வரிகளில் கூறுகிறார். ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் அப்பாக்கள் கடவுள் என்றால்,ஒவ்வொரு அப்பாக்களுக்கும் தம் மழலைகள் தான் பொக்கிஷங்கள். ஒரு அப்பா தம் மழலைகளை எப்படி காதலிப்பார் என்பதை கவிஞர் நா.முத்துக்குமாரின் ‘மகனுக்கு எழுதிய கடிதம்’ என்ற கடிதமானது வெளிப்படுத்துகிறது. இறப்பதற்கு முன் அவருடைய மகனுக்கு அவர் எழுதிய கடிதமானது அவர் இறந்த பின்பு தான் இன்னும் பிரபலமாகியது. நா.முத்துக்குமார் எழுதிய கடிதத்தில் அவருடைய தந்தையின் அருமையையும் தன்னுடைய மகனுக்கு தானொரு தந்தையாய் காட்டும் அன்பையும் ஒவ்வொரு தந்தையின் சார்பாகவும் எடுத்துகாட்டுகிறார். ஒரு தந்தை எப்படி தம் மக்களுக்கு அன்பு காட்டுவார்,அறிவுரை கூறுவார் என்பதை அழகாக வடித்துக்கொடுக்கிறார். அதில் சிலவற்றை இங்கே நான் பதிவிட விரும்புகிறேன்.


அன்புள்ள மகனுக்கு, அப்பா எழுதுவது, இது நான் உனக்கு எழுதும் முதல் கடிதம். இதைப் படித்தப் புரிந்துக்கொள்ளும் வயதில் நீ இல்லை
உன் மெத்தென்ற பூம்பாதம் என் மார்பில் உதைக்க.., மருத்துவமனையில் நீ பிறந்ததும் உனை அள்ளி என் கையில் கொடுத்தார்கள், என் உதிரம் உருவமானதை, அந்த உருவம் என் உள்ளங்கையில் கிடப்பதை, குறுகுறு கை நீட்டி என் சட்டையைப் பிடித்து இழுப்பதை, கண்ணிர் மல்கப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.
நீ அழுதாய்; சிரித்தாய்; சிணுங்கினாய்; குப்புறக் கவிழ்ந்து, தலை நிமிர்ந்து, அந்தச் சாகசத்தைக் கொண்டாடினாய். தரை எல்லாம் உனதாக்கித் தவழ்ந்தாய். தகப்பன் விரல் பிடித்து எழுந்தாய். நீயாகவே விழுந்தாய். தத்தித் தத்தி நடந்தாய். தாழ்வாரம் எங்கும் ஓடினாய்.
என் செல்லமே இந்த உலகம் இப்படித்தான். அழ வேண்டும் , சிரிக்க வேண்டும். சிணுங்க வேண்டும். குப்புறக் கவிழ்ந்து, பின் தலை நிமிர்த்து, அந்தச் சாகசத்தைக் கொண்டாட வேண்டும். தரை எல்லாம் தனதாக்கித் தவழ வேண்டும். விழ வேண்டும். தத்தித் தத்தி நடக்க வேண்டம். வாழ்க்கை முழுக்க இந்த நாடகத்தைத்தான் நீ வெவ்வேறு வடிவங்களில் நடிக்க வேண்டும்.
என் சின்னஞ்சிறு தளிரே! கல்வியில் தேர்ச்சிகொள். அதே நேரம், அனுபவங்களிடம் இருந்து அதிகம் கற்றுக்கொள். தீயைப் படித்துத் தெரிந்து கொள்வதைவிட, தீண்டிக் காயம் பெறு. அந்த அனுபவம் எப்போதும் சுட்டுக்கொண்டே இருக்கும். இறக்கும்வரை இங்கு வாழ, சூத்திரம் இதுதான்.
என் முப்பாட்டன் காடு திருத்தினான். என் பாட்டன் கழனி அமைத்தான். என் தகப்பன் விதை விதைத்தான். உன் தகப்பன் நீர் ஊற்றினான். நீ அறுவடை செய்துகொண்டு இருக்கிறாய். என் தங்கமே! உன் பிள்ளைக்கான விதையையும் உன் உள்ளங்கையில் வைத்திரு. உழைக்கத் தயங்காதே. உழைக்கும் வரை உயர்ந்து கொண்டு இருப்பாய்.
கிராமத்தில் கூரை வீட்டிலும், பின்பு ஓட்டு வீட்டிலும் வளர்ந்தவன் நான். கோடைக் காலங்களில் வெப்பம் தாங்காமல் வீட்டுக் கூரையில் இருந்து கொடிய தேள்கள் கீழே விழுந்துகொண்டே இருக்கும். அதற்கு பயந்து என் தகப்பன் என் அருகே அமர்ந்து இரவு முழுவதும் பனை ஓலை விசிறியால் விசிறி கொண்டே இருப்பார். இன்று அந்த விசிறியும் இல்லை கைகளும் இல்லை. மாநகரத்தில் வாழும் நீ, வாழ்க்கை முழுக்கக் கோடைக்காலங்களையும் வெவ்வேறு வடிவங்களில் கொடிய தேள்களையும் சந்திக்க வேண்டி இருக்கும். எத்தனை காலம்தான் உன் தகப்பன் உன் அருகில் அமர்ந்து விசிறிக்கொண்டு இருப்பான்? உனக்கான காற்றை நீயே உருவாக்கப் பழகு.
கிடைத்த வேலையை விட, பிடித்த வேலையைச் செய். யாராவது கேட்டால், இல்லை எனினும் கடன் வாங்கியாவது உதவி செய். உறவுகளிடம் நெருங்கியும் இரு விலகியும் இரு. இந்த மண்ணில் எல்லா உறவுகளையும் விட மேன்மையானது நட்பு மட்டுமே. நல்ல நண்பர்கள் சேர்த்துக்கொள். உன் வாழ்க்கை நேராகும். இவை எல்லாம் என் தகப்பன் எனக்குச் சொல்லாமல் சொன்னவை. நான் உனக்குச் சொல்ல நினைத்துச் சொல்பவை.
என் சந்தோஷமே! நீ பிறந்த பிறகுதான் என் தகப்பனின் அன்பையும் அருமையையும் நான் அடிக்கடி உணர்கிறேன். நாளை உனக்கொரு மகன் பிறக்கையில், என் அன்பையும் அருமையையும் நீ உணர்வாய்.
நாளைக்கும் நாளை நீ உன் பேரன் பேத்திகளுடன் ஏதோ ஒரு ஊரில் கொஞ்சிப் பேசி விளையாடிக்கொண்டு இருக்கையில் என் ஞாபகம் வந்தால், இந்தக் கடிதத்தை மீண்டும் எடுத்துப் படித்துப்பார். உன் கண்களில் இருந்து உதிரும் கண்ணீர்த் துளியில் வாழ்ந்து கொண்டு இருப்பேன் நான்..!


இவ்வாறு ஒரு தந்தையின் பெருமையையும் அருமையையும் எடுத்துக்காட்டுகிறார் அந்தவொரு கடிதத்தில். அப்பாக்கள் என்றாலே எந்தவொரு எதிர்ப்பார்ப்புமின்றி அன்பு காட்டுபவர்கள். தந்தையின் வருமானத்தில் செலவு செய்யும் பிள்ளைகளுக்கு இருக்கும் சுதந்திரமானது தம் பிள்ளைகளுடைய வருமானத்தில் செலவு செய்ய எந்த தந்தைக்கும் இருக்காது. அவர் எதிர்பார்த்து எதுவும் செய்வதில்லை. தனது பிள்ளைகளையும், மனைவியையும் காப்பது தன்னுடைய கடமை என்று வாழ்ந்துக்கொண்டிருப்பவர்.

நாம் பிறந்ததிலிருந்து நாம் வளரும் வரை வேர்வை சிந்தி உழைக்கின்றார் அப்பா. நாம் வளர்ந்ததும் அவரிடம் ‘நீங்கள் என்ன செய்தீர்கள் எனக்கு?’ என்று அவர் மனம் நோக கேட்கிறோம். நமக்கு நடக்க கற்றுக்கொடுத்து நம் வாழ்வின் வழிகாட்டியாய் இவ்வளவு தூரம் நம்மோடு பயணித்து நம்மை கரை சேர்த்த தந்தைக்கு இறுதியில் கிடைப்பது அவமானமும்,ஏமாற்றமும்,பிரிவும் என்றால் பாடுபட்டு தம் மக்களை பெற்றெடுத்து ஆளாக்கியதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடுகிறது. தாயின் தாலாட்டின் அருமை அவள் மடியில் தலைசாய்ந்து உறங்கையில் விளங்கும். தந்தையின் தாலாட்டின் அருமை அவர் மார்பில் சாய்ந்து உறங்கையில் விளங்கும். தாயைப் போலவே உங்கள் தந்தையையும் நேசியுங்கள்.

அருகிலிருக்கும் போது அரவணைக்காத தந்தையை அருகிலில்லையென்று பிறகு எண்ணி கவலைக்கொள்வதில் அர்த்தமில்லை. அரவணைக்க பிள்ளைகள் இருந்தும் அனாதையாய் பெற்றெடுத்தவர்களை இல்லங்களில் சேர்க்க எப்படி மனம் வருகிறது. ஒவ்வொருவருமே பெற்றோர் கிடைக்க கொடுத்து வைத்திருக்கவேண்டும். அம்மா, அப்பா இல்லாதவர்களுக்கு தான் அந்த வலியும் வேதனையும் தெரியும். ஒவ்வொருவரும் தம் தாய், தந்தையரை நேசித்தால் இங்கு முதியோர் இல்லங்களே இருக்காது. முதியோர் இல்லங்களில் வசிக்கும் ஒவ்வொரு தாய், தந்தையரும் நினைப்பது என்ன தெரியுமா? கடவுளே! என் மகனுக்கு மட்டும் இந்த நிலைமை வரக்கூடாது என்பது தான்.


ஆகவே அம்மா,அப்பாவிடம் அன்பு காட்டுங்கள். அவர்களை வெறுத்து ஒதுக்காதீர்கள். அவர்களுடைய இடத்திற்கு ஒரு நாள் நீங்கள் வரும்போது தான் அவர்களுடைய உன்னதமான நிலையை புரிந்துகொள்வீர்கள். எத்தனை பேர் நான் இருக்கிறேன் என்று கூறினாலும் கூட அப்பாவைப் போல யாருமே இருக்கமுடியாது.
தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை.. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை..
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here