அனைத்தையும் நாடி  எரிபொருள் பற்றாக்குறையும் பாடசாலை கல்வியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி நிலையும்

எரிபொருள் பற்றாக்குறையும் பாடசாலை கல்வியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி நிலையும்

2022 Jul 6

இலங்கையானது தற்போது மிகவும் நெருக்கடியான மற்றும் சவாலான ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது. முழு உலகையும் ஆக்கிரமித்த கொரோனா நோய் தொற்றின் காரணமாக இலங்கை நாட்டின் பொருளாதாரமானது பாரியதொரு வீழ்ச்சியை நோக்கி நகர்ந்து சென்றுள்ளது.

இக்காலகட்டத்தில் நோய் பரவலின் மூலம் ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாகவும், நோயினை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்ட ஊடரங்கு சட்டங்கள் காரணமாகவும் இலங்கையின் பிரதான வருமான மூலங்களான உள்நாட்டு உற்பத்திகள் பாதிப்படைந்து, சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரியளவில் வீழ்ச்சியடைந்தது. இதனைத் தொடர்ந்து நாட்டில் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவடைந்து பணவீக்க நிலையும் தோன்றியது.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியின் காரணமாக புதிய நாணயத்தாள்கள் அச்சடிக்கப்பட்ட நிலையில் பணவீக்கம் மேலும் அதிகரித்து இலங்கை பணவீக்கம் நிலவுகின்ற நாடுகளின் பட்டியலில் முன்னிலை வகிக்கும் நிலை தோன்றியுள்ளது. இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மோசடிகள் காரணமாக நாட்டின் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.

இதனை தொடர்ந்து இறக்குமதி பொருட்களான பால்மா, மருந்துப் பொருட்கள், சமையல் எரிவாயு, எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளதால், அப்பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறையானது பாரியதொரு சவாலாக மக்களை அச்சுறுத்தி வருகின்றது.

இதில் எரிபொருள் பற்றாக்குறையை பிரதான பிரச்சினையாக குறிப்பிட முடியும். ஏனேனில் போக்குவரத்து, விநியோக சேவைகள், மின்சார உற்பத்தி மற்றும் மண்ணெண்ணெய் உற்பத்தி போன்ற பல தேவைகளுக்கான பிரதான உள்ளீடாக எரிபொருள் காணப்படுகிறது.

மேலும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நாட்டின் அத்தியாவசிய சேவைகளான கல்வி, கல்வி போன்ற பல துறைகள் பல இன்னல்களை சந்தித்து வருவதுடன் தொடர்ச்சியான மின்வெட்டும் நிலவி வருகின்றது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்:

“கடந்த காலங்களில் ஒரு வாரத்திற்கான டீசல் தேவை 5500 மெட்ரிக் டன் ஆக இருந்தது, தற்போது இது 8000 மெட்ரிக் டன் ஆக அதிகரித்துள்ளது. பெற்றோலுக்கான தேவையும் 3000 மெட்ரிக் டன் இலிருந்து 4500 மெட்ரிக் டன் ஆக அதிகரித்துள்ளது. மேலும் எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு தேவையான டொலர் பற்றாக்குறை நிலவுவதால் பாரிய நெருக்கடியை சந்தித்து வருகிறோம் “ எனவே இலங்கை நாடானது எரிபொருள் பற்றாக்குறையினால் முடங்கிப் போயுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறையும் கல்வித் துறையும்

அந்த வகையில் கல்வித் துறையில் எரிபொருள் பற்றாக்குறையானது பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொரோனா நோய் தொற்றின் காரணமாக வீழ்ச்சியடைந்த கல்வி நடவடிக்கைகளை மீள கட்டியெழுப்புவதில் இந்நிலை எதிர்மறையான தாக்கங்களை செலுத்தி வருகின்றது. தினசரி பாடசாலைக்கு வரும் மாணவ – ஆசிரியர்களின் வரவில் வீழ்ச்சி நிலையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

வரவின்மைக்கான காரணங்கள் மற்றும் கல்வி நடவடிக்கைகளில் எதிர்கொள்ளும் சவால்கள்

1) பெற்றோர்

பெரும்பாலான பெற்றோர்கள் வாகனங்களிலேயே தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து செல்கின்றனர். அந்த வகையில் தினசரி எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியாத காரணத்தால் தொடர்ச்சியாக தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளதாக பெற்றோர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த தந்தையொருவர் “நான் ஒரு முச்சக்கர வண்டி சாரதியாக பணிபுரிந்து வருகிறேன். பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக நான் எனது வாழ்வாதாரத்தை இழந்து, உணவுத் தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் எனது இரு பிள்ளைகளையும் நான் எவ்வாறு பாடசாலைக்கு அழைத்துச் செல்வேன், இவ்விடயத்தில் நான் மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறேன்”* என்றவாறு தன் நிலையை விவரிக்கிறார்.

எனவே ஒரு வேளை உணவைக் கூட தன் பிள்ளைகளுக்கு வழங்க முடியாத நிலையில் பெற்றோர்களுக்கான தீர்வு என்ன???

2) மாணவர்கள்

மாணவர்கள் பெற்றொருடன், பாடசாலை போக்குவரத்து சேவைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து சேவைகள் மூலம் பாடசாலைக்கு வருகை தருகின்றனர். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தொடர்ச்சியாக பாடசாலைக்கு சமூகமளிப்பதில் பல சிக்கலகளை எதிர்நோக்கி வருகின்றனர். இருப்பினும் பாடசாலைக்கு நடந்து வரக் கூடிய பல மாணவர்களை காணக் கூடியதாக இருந்தது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மாணவர்கள்:

மாணவர் 1

“கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இவ்வருடம் ஆரம்பிக்கப்பட்டு ஓரிரு வாரங்களில் இப்பிரச்சினை தோன்றியுள்ளது. தொடர்ந்து பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையில் மாணவர்களாகிய எம் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது”

மாணவர் 2

“நான் பாடசாலைக்கு பல கிலோமீட்டர்கள் நண்பர்களுடன் நடந்து செல்ல வேண்டியுள்ளது. பாடசாலையை சென்றடைந்ததும் சோர்வாக உணர்கிறேன், கல்வி நடவடிக்கைகளில் சிறந்த முறையில் ஈடுபட முடியாமல் உள்ளது” இவ்வாறான சந்தர்ப்பங்களில் மாணவர்கள் முறையான கல்வியை பெற்றுக் கொள்வது கேள்விக் குறியாகியுள்ளது.

3) ஆசிரியர்கள்

கல்விச் சேவையின் பிரதான தூண்களே ஆசிரியர்கள். அந்த வகையில் நிலையான மற்றும் பயனுறுதிமிக்க கல்வியை தொடர்ச்சியாக வழங்குவது ஆசிரியர்களின் கடமையாகும்.

இவ்விடயத்தில் கருத்து தெரிவித்த ஆசிரியர்கள்:

1) ஆசிரியர், யாழ்ப்பாண மாவட்டம்

“கல்வியை தடையின்றி தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வது ஒவ்வொரு மாணவரினதும் உரிமையாகும். இதற்காகவே இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போதைய நிலையில் என்னால் தொடர்ந்து பாடசாலைக்கு வர முடிவதில்லை. எரிபொருள் வரிசையில் நிற்பதா? பாடசாலை செல்வதா? அப்படி செல்வதாயின் எவ்வாறு செல்வது? என பல கேள்விகள் எமக்கு இருக்கின்றன. முறையான தீர்வொன்றை விரைவாக வழங்க வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பாகும்”

2) ஆசிரியர், கிளிநொச்சி மாவட்டம்

“நான் பாடசாலையில் லீவு பெற்றுக் கொண்டு பெற்றோல் வரிசையில் நிற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. எனது பிள்ளைகளையும் பாடசாலைக்கு அனுப்ப வழியில்லை. மாணவர்களின் நிலை மிகவும் கவலைக்குரியது, கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். எரிபொருள் பற்றாக்குறையால் பெற்றோர் தொழிலுக்கு செல்லாத காரணத்தால் உணவுத் தேவையை பூர்த்தியை செய்ய முடியாத மாணவர்களும் இருக்கின்றனர். எரிபொருள் தேவையை முறையாக பூர்த்தி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்”

ஏற்கனவே பாடசாலை நாட்கள் குறைவாக காணப்படும் காலகட்டத்தில் விரைவாக தீர்வு காணப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

3) உள்ளகப் பயிற்சி ஆசிரியர்கள்

கல்வியியற் கல்லூரிகளில் கல்வியை பூர்த்தி செய்து உள்ளகப் பயிற்சியை மேற்கொள்ளும் ஆசிரியர்களும் எரிபொருள் பற்றாக்குறையால் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எரிபொருள் பற்றாக்குறையுடன் அதிகரித்த வாழ்க்கை செலவுகள், போக்குவரத்து செலவுகள் இவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த உள்ளகப் பயிற்சி ஆசிரியர்கள்:

உள்ளகப் பயிற்சி ஆசிரியர், யாழ் மாவட்டம்

“எமக்கு அரசாங்கத்தினால் மாதாந்த கொடுப்பனவாக ரூ.4950 மாத்திரமே வழங்கப்படுகிறது. இவ்வாறான காலகட்டத்தில் எரிபொருள் விலையேற்றம், பற்றாக்குறை காரணமாக அதிகரித்த வாழ்க்கை செலவுகள் மற்றும் பாடசாலையை சென்றடைவதில் ஏற்படும் சிரமங்கள் என்னை மிகவும் பாதித்துள்ளது”

உள்ளகப் பயிற்சி ஆசிரியர், வவுனியா மாவட்டம்

“நான் யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் பணி புரிகின்றேன். எமது அதிபர் நாட்டு நிலைமையை கருத்தில் கொள்ளாமல் எம்மை கட்டாயப்படுத்தி பாடசாலைக்கு வரச் சொல்கின்றனர். கல்வியியற் கல்லூரி நிர்வாகம் இது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசாங்கமோ, அதிகாரிகளோ இது பற்றி பேசவில்லை. எனது பெற்றோரால் செலவுகளை ஈடு செய்ய முடியவில்லை. நான் பலமுறை தற்கொலை முயற்சி செய்து தோற்றுப் போனேன்”

மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மன உளைச்சலுடன் பணி புரியும் இவ் ஆசிரியர்களுக்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பாகும்.

மேலும் இவ்விடயத்தில் கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கம்:
“எரிபொருளானது அனைத்து தேவைகளுக்கும் பிரதானமாக வழிவகுக்கின்றது. அதிகரித்த போக்குவரத்து கட்டணங்களை எவராலும் ஈடு செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளது. வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்கள் எவ்வாறு கல்வியை பெற்றுக் கொள்வது????”

இவ்வாறாக ஒவ்வொரு தனிமனிதனும் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளான். இப்பிரச்சினை தீர்க்கப்படும் பட்சத்தில் பலர் நன்மை அடைவார்கள்.

தீர்வு என்ன?

அரசாங்கம் விரைவாக செயற்பட்டு இந்நிலையை சீராக்க வேண்டும். மாணவர்கள் முறையான கல்வியை பெற்றுக் கொள்ளக் கூடிய சூழலையும், ஆசிரியர்கள் சங்கடங்களை தவிர்த்து சிறப்பாக பணிபுரியக் கூடிய சூழலையும் விரைவில் உருவாக்க வேண்டும்.

இதற்காக பின்வரும் கோரிக்கைகளை இலங்கை ஆசிரியர் சங்கம் முன்வைக்கின்றது,
• நாட்டு நிலைமை சீராகும் வரை பொதுப் போக்குவரத்து சேவைகள் ஆசிரியர்கள் – மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
• அருகில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கவும், பணி புரியவும் தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறான கோரிக்கைகளை ஏற்று நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் மற்றும் அதிகாரிகள் முன்வருவார்களா என்பது கேள்விக் குறியே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php