அனைத்தையும் நாடி  இன்றைய சமுதாயம் சமத்துவத்திற்கு மதிப்பளிக்கிறதா?

இன்றைய சமுதாயம் சமத்துவத்திற்கு மதிப்பளிக்கிறதா?

2022 Jun 17

மனித இனம் என்பதற்கு அப்பால் ஆண், பெண் என்ற பாகுபாடு அம்மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்து பார்க்கப்பட்டு வருகிறது. காலம் உருண்டோடினாலும் இந்த பாலின பாகுபாடு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இவர்களுக்கென வகுக்கப்பட்ட பண்புகள், குணாதிசயங்கள் என்பவையே சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டவையாகவே காணமுடிகிறது. பாலினம் என்பது மனிதன் தனக்குத்தானே வகுத்துக் கொண்ட செயற்கை பிரிவாகும். இருபாலாரும் ஒத்த பண்புகளையும், வேலைகளையும் சட்ட திட்டங்களையும் வரையறுத்துக் கொள்வதற்க்கான உரிமை உண்டு.

சமூகத்தால் உருவாக்கப்பட்ட ஆண்மை, பெண்மை என்ற கருத்துருவங்களின் அடிப்படையில் ஆணும், பெண்ணும் சரிசமமாக உடலளவில் படைக்கப்படவில்லை. அவர்கள் உடல்ரீதியாக வேறுபட்டவர்களாக காணப்படுகிறார்களே தவிர உள ரீதியாக வேறுபடவில்லை. மனிதர்கள் என்ற ரீதியில் ஒவ்வொருவருக்குமான எண்ணங்களும் சிந்தனைகளும் வேறுபடலாம் ஆனால் ஆண், பெண் இரு பாலாரும் அவர்களுக்கென வகுக்கப்பட்ட இயல்பு நிலையிலேயே காணப்பட வேண்டும் என்பதே சமூகத்தின் கருத்தாகும்.

வீட்டில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு பொம்மை மற்றும் சமையலறை பொருட்களையும் ஆண்குழந்தைகளுக்கு இராணுவ ரீதியான மற்றும் கட்டட பொருட்களையும் வாங்கி பரிசளிப்பதில் இருந்தே பாலின பாகுபாடு தொடங்குகிறது. இவ்வாறு குடும்பங்களில் வளர்க்கப்படுகின்ற பெண்களே பிற்காலத்தில் சமயலறைகளில் முடங்கி விடுகின்றனர்.

ஆண் பிள்ளைகள் அழக்கூடாது என்றும் பெண் பிள்ளைகள் அதிகமாக சிரிக்க கூடாது என்றும் அவர்களது நடவடிக்கைகளை மட்டுப்படுத்துவதோடு, கோபம் ஆணுக்கு உரியது என்றும் பொறுமை பெண்ணுக்கு உரியது என்றும் அவர்களது குணாதிசயங்களையும் வரையறுக்கின்றனர். ‘ஏய் பொம்பிளப்பிள்ளையா? அடக்க ஒடுக்கமா இருக்க பார். என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு அங்காள பக்கத்து வீட்டுக்காரர் என்ன நினைப்பினம், வெட்கமில்லை சிரித்துக் கொண்டு இருக்க. அவனும் தானே சேர்ந்து சிரித்தவன் அவன விட்டு எப்ப பார்த்தாலும் என்னை  திட்டுங்கோ. அவன் ஆம்பிளப்பிள்ள. என்ன செய்தாலும் ஒருத்தரும் ஒன்றும் கேட்காயினம். அவன் ராசா மாதிரி என்னென்டாலும் செய்திட்டுப் போறான் நீ ஏன் அவனை பார்த்துக் கொண்டு நிற்கிறாய் நாளை பின்ன நீ விற்க வேண்டிய பிள்ளை இன்னொரு வீட்டுக்கு போய் வாழோனும் ஆராச்சும் உன்னைப் பற்றி ஏதும் தப்பா சொல்லிப்போட்டா காலத்திற்கும் வீட்டோட தான் கிடக்கோனும். பார்த்து சூதனமா நடந்து கொள்’ என்று தம்பி சிரித்துக் கொண்டே தன் சட்டை கொலரை தூக்கி விடுகிறான். தம்பி கூறிய பகிடிக்கு அக்காவிற்கு வாய்விட்டு சிரிக்கக் கூட முடியவில்லை. இவ்வாறு தான் பெண்களின் நிலைமை காணப்படுகின்றது.

தன் உடன் பிறப்புகளுடன் இவ்வாறு தான் இருக்க வேண்டும் என வரையறுத்து பெண்ணின் நிலைமையானது கணவனின் கட்டுப்பாட்டுக்குள்ளேயும் இவ்வாறு இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. ‘கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்’ என்ற நிலையிலேயே அவளது திருமண வாழ்க்கையும் அவளை ஒடுக்குகின்றது. குடும்பத்தின் தலைவன் கணவனாக இருக்கலாம். மாறாக மனைவியின் உரிமைகள் மறுக்கப்படுவதாகாது. அவளுக்கான சுதந்திரம் இருக்க வேண்டும். குடும்ப வாழ்வில் இவ்வாறு நெரிசல்களுடன் வாழும் பெண்ணின் நிலையானது சமூக மட்டத்தில் எவ்வாறு காணப்படும் என்பதை ஒரு கனம் சிந்திக்க வேண்டியுள்ளது.

குடும்ப உடன்பிறப்புகளுடன் மகிழ்ச்சியும், துணிவுடனும் பெண்ணானவள் காணப்படுவதுடன் தனது இல்லற வாழ்க்கையில் கணவனை முதன்மைப்படுத்தியும், கணவன் இல்லாத இறந்த பட்சத்தில் அவளினதும், அவள் குழந்தைகளின் நலனுக்காகவும் அவள் மறுமணம் செய்து கொள்வதற்கும், வெளியில் சென்று தொழில் புரிவதற்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும். மேலும், தொழில் புரியும் மனைவிமார்களையும், பெண்களையும் ஆண்கள் எந்த காரணமுமின்றி இடை நிறுத்தாது அவர்களை தொழில் புரிய வைக்க வேண்டும். ஆனால், பெண் தனக்கான பொறுப்புகள் எவை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டியதுடன் ஆண் தனக்கான பொறுப்புகளையும் உணர்ந்து செயற்பட வேண்டும்.

மேலும், பொது இடங்களில் பெண்களுக்கு சுயமாக நடமாட முடியாது. சமூக மட்டத்தில் களமிறங்க வேண்டிய கட்டத்தில் பெண்ணுக்கு இவ்வாறான சிக்கல்கள் காணப்படுகின்றன. தனியாக ஒரு பெண் வீதியில் உலாவினால் அவளை குறை கூறும் சமுதாயமே இன்று வளர்க்கப்படுகின்றது. பெண்ணின் பின்னால் கேலி செய்யும் வண்ணம் இரண்டு மூன்று ஆண்கள் அவளை பின் தொடர்ந்து செல்வதையே சமூகம் வரவேற்கிறது. இந்நிலைமை மாற வேண்டும்.

சைக்கிள் ஓட்டுவதும், போட்டிகளில் கலந்து கொள்வதும், விளையாட்டுக்களில் ஈடுபடுவதுமென பெண்களுக்குத் தடைவிதித்ததையும் தாண்டி இன்றைய சமூக மட்டத்தில் அவற்றில் ஆண்களைவிட பெண்களே அதிக முன்னேற்றத்தில் சாதனையும் படைத்துள்ளனர். ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு’ என்ற பாரதியாரின் சாதனை செய்யும் இன்றைய காலகட்டத்தில் பொருந்தும் வாசக குறிப்பாக காணப்படுகின்றது.

உலக சனத்தொகையில் ஆண்களைவிட பெண்களே அதி கூடியவர்களாக காணப்படுகின்றனர். கல்வியிலும் உயரிய வளர்ச்சி பெண்களிடமே தங்கியுள்ளது.

அவர்களது கல்வி வளர்ச்சி முன்னேற்றத்தினால் இன்றைய பெண்கள் ஆண்களுக்கு நிகராக பல சாதனைகளிலும் கால் பதித்துள்ளனர். உலக சாதனை வரலாற்றில் பெண்களின் சாதனையை எடுத்தியம்புவதற்கு முதலாவதாக விண்வெளிக்குச் சென்று திறமையை வெளிக்கொணர்ந்த கல்பனா சௌலாவையும், இலங்கையின் முதல் பெண் பிரதமராக பணியாற்றிய சந்திரிக்கா பண்டாரநாயக்காவையும் குறிப்பிடுவதோடு, இவ்வாறாக பல பெண்களின் சாதனைகள் மிளிர்ந்து கொண்டே இருக்கின்றது.

இன்றைய காலகட்டத்தில் நிறுவனங்களிலும், பல துறைகளிலும் பெண்கள் தொழில் புரியும் சாதனை பெருகியுள்ளது. சமூகத்தில் நுழைந்த பெண்களின் வரவானது பொருளாதாரத்தையும் முன்னேற்றுவதற்கு பயணித்துள்ளது. பால்நிலை வேறுபாடுகளையும் தாண்டி தகுதியுள்ள அனைத்து மக்களுக்கும் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் ஆண், பெண் என்ற இருபாலாரின் பங்களிப்பும் செல்வாக்குச் செலுத்தக் கூடியதொன்றாகும்.

ஆனால், வேலை பார்க்கச் செல்லும் பெண்களை தவறாகவே இன்றைய சமூகம் சித்திரிக்கின்றது. பெண் சுயமாக செயற்படுவதை குறைகூறும் சமுதாயம் அவள் பொருளாதாரத்தை மேம்படுத்த தொழிலுக்கு செல்வதை குறை கூறாமல் விட்டுவிடுமா? இல்லை, ஏனெனில் அவளை ஒரு மோகப் பொருளாகவே பார்க்கும் சமூகம் மாறும் வரை இதனை நிவர்த்தி செய்ய முடியாது.

 

சமூகத்தில் பெண்கள் வலி குன்றிய நிலை ஒழிக்கப்பட்டு ஆண்களைப் போன்று பெண்களும் தங்களது வாழ்வில் அடிப்படையில் சமூக, பொருளாதார, அரசியல் விடயங்களில் பங்கு கொள்ளக் கூடியவர்கள் என்பதை இன்றைய ஆண்களும், பெண்களும் உணர்ந்து செயற்பட வேண்டும்.

எனவே, பால்ரீதியான பாகுபாடுச் சாதியை ஒழிக்க வேண்டுமாயின் அதற்கான முயற்சி ஒரு பிள்ளை பிறந்தது முதலே ஆரம்பிக்கப்பட வேண்டும். அதன் சமூகமயமாக்கல் செயன்முறையின் அமைப்பொழுங்கு மாற்றியமைக்கப்படுமேயானால் பால்நிலை பாகுபாடுகளற்ற, பால்நிலையை மதிக்கக் கூடிய ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும்.

எம்.எஸ்.எம். மும்தாஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here