2022 Aug 17
பிரிந்துசெல்லவேண்டும் என விரும்பிய , அதற்கான தேவை இருந்த நாடுகள்கூட இன்னமும் பிரிந்துசெல்லாத , இன்னமும் யுத்தம் நீடிக்கின்ற நாடுகளுக்கு மத்தியில் உலகவரலாற்றில் எந்தவித போராட்டமும் இன்றி மக்களின் விருப்பத்திற்கு எதிராக ஒரு நாடு தனியாக பிரிந்தது ! தங்களுக்கு ஒரு வெட்டிச் சுமை என கருதப்பட்டு மலேசியாவால் அப்படி கழட்டிவிடப்பட்ட நாடு எது தெரியுமா ? ஒருகாலத்தில், இலங்கையைப்போல் தாமும் முன்னேறவேண்டும் என கூறியதாக சொல்லப்படும் சிங்கப்பூர் .. இன்றைய நிலவரப்படிப்பார்த்தால் இலங்கை அண்ணார்ந்து பார்க்கும் உயரத்தில் பலவிடயங்களில் அபிவிருத்தியடைந்திருக்கும் சிங்கப்பூர் அந்த நிலையினை அடைய சந்தித்த இன்னல்களோ ஏராளம் .
1963ஆம் ஆண்டு செப்டம்பர் 16 பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்துவிடுபட்ட சிங்கப்பூர் மீண்டும் மலேசியாவுடன் இணைக்கப்பட்டது . அப்போது மலேசியா மலாயா என்கிற பெயரில் அழைக்கப்பட்டு பின்னர் மலாயா , சபா , ஷ்ரவக், சிங்கப்பூர் ஆகிய நான்கும் இணைந்து மலேசியா என்கிற பெயரில் புதிய எல்லைகள் , பலதரப்பட்ட இனமக்களைக்கொண்ட நாடாக உருவாகியது .
ஒப்பீட்டளவில் மலாய் மக்களுக்கு அதிக சலுகை கொடுத்தமை சீனர்களை அதிகமாகக்கொண்ட சிங்கப்பூருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது . மலாய் மக்களுக்கு கொடுப்பதுபோலவே சமஉரிமை தங்களுக்கும் கொடுக்கப்படவேண்டும் என வலியுறுத்திவந்தனர் சீனர்கள் . இதனால் இருதரப்பினருக்கிடையேயும் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டதுடன் , சிங்கப்பூரில் இருந்து மலேசியாவுக்கு செல்லும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டது . இவற்றை எதிர்த்து 1964இல் இனக்கலவரங்கள் ஏற்பட்டன . முகம்மது நபியின் பிறந்தநாளன்று சிங்கப்பூரில் உள்ள “பத்தாம் ” என்கிற பகுதியிலிருந்து “கோலான்” என்கிற பகுதியை நோக்கி ஓர் ஊர்வலம் சென்றுகொண்டிருந்தது . அப்போது ஏற்பட்ட ஓர் சிறு பிரச்சினை மிகப்பெரிய கலவரமாக உருப்பெற்றது . சட்ட ஒழுங்கு பிரச்சினை இனக்கலவரமாக மாறியது . அதன்பின் அடிக்கடி கலவரம் வெடிக்கத்தொடங்கவே இதற்கெல்லாம் காரணம் இந்தோனேஷியாவும் , கம்யூனிஸ்டுக்களும்தான் எனக்கருத்திய அப்போதைய மலேசியா துணைப்பிரதமர் துன்அப்துல் ரசாக் மலேசியாவிலிருந்து சிங்கப்பூரை பிரித்துவிட்டுவிட வேண்டும் என நாடாளுமன்றத்திற்கு ஆலோசனை வழங்கினார் . எனினும் மலேசியாவுடன் இனைந்து இருப்பதையேசிங்கப்பூர் விரும்புவதாக அப்போதைய சிங்கப்பூரின் தலைவர் லீ குவான் யூ அறிவித்தார் . ஆனால் , மலேசியா பிரதமர் துவ்வுரு அப்துல்ரஹ்மான் மலேசியாவில் இருந்து சிங்கப்பூரை கழட்டிவிடுவதில் விடாப்பிடியாக இருந்தார் .சிங்கப்பூர் தங்களுக்கு ஒரு வெட்டிசுமை எனக்கருத்திய மலேசியா , அதற்கான வாக்கெடுப்பை நடத்தியது . சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல்போக , மலேசியா வென்றது .
மலேசியாவுக்கு நாடுபிடிக்கும் ஆசை இல்லை என்பதைவிட சிங்கப்பூர் என்கிற குப்பைத்தொட்டியை கழட்டிவிட நினைத்தது என்பதே உண்மை . அந்த அளவிற்கு பின்தங்கியிருந்தது சிங்கப்பூர் . லீகுவான்யூ சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்திருப்பதை விரும்பியமைக்கு காரணம் இல்லாமல் இல்லை . சிங்கப்பூர் மிகவும் சிறிய பகுதி அதனைச் சுற்றி அறுபத்துமூன்று தீவுகள் . மொத்தமே 716 சதுரகிலோமீற்றர் பரப்பளவுதான் . மீன் பிடிப்பதைத்தவிர அங்கு எதுவும் கிடையாது . இயற்கை வளங்கள் குறைவு தண்ணீரே மலேசியாவில் இருந்துதான் வரவேண்டும் , தொழிலும் வணிகமும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை மொழியால் , இனத்தால் ,பண்பாட்டால் வேறுபட்ட சீனர்களையும், மலேசியர்களையும் , இந்தியர்களையும் உள்ளடக்கிய நாடு . இனக்கலவரங்கள் தொட்டால் பற்றிக்கொள்ளும் நிலையில் இருந்தது . அண்டை நாடுகளான மலேசியாவுடனும் இந்தோனேசியாவுடனும் நல்லுறவு இருக்கவில்லை . குப்பைகள் நிறைந்த தெருக்கள் , போதிய கல்வியறிவில்லாத மக்கள் , வேலையில்லாத்திண்டாட்டம் போன்ற பிரச்சினைகள் நிறைந்த ஒரு நரகத்தை நாடாக மாற்றவேண்டிய மிகப்பெரிய சவால் லீயின்முன் இருந்தது .
வேறுவழியில்லை செயற்படத்தொடங்கினார் லீ . சிங்கப்பூர் தனிநாடாக பிரிந்ததும் முதலில் எதிர்பார்த்தது சர்வதேச அங்கீகாரத்தைத்தான் . 1965ல் ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்ததுடன் , மலேசியா தாய்லாந்து உள்ளிட்ட நான்கு தென்கிழக்கு நாடுகளையும் சேர்த்து “association of southeast Asian nations” எனும் அமைப்பினை உருவாக்கியது . உலகத்தரமான பொருளாதார வளர்ச்சி , தூய்மையான நகரம் , ஊழலற்ற ஆட்சி , அடிப்படைத் தேவைகள் நிறைவுபெற்ற வாழ்க்கை , வேறென்ன வேண்டும் குடிமக்களுக்கு என்பதுதான் ஆளுகை குறித்த லீயின் கருத்தாக இருந்தது .
தேசிய பாதுகாப்பு , மக்கள் கட்டுப்பாடு , பொருளாதாரம் , நீர் ஆதாரங்களை சீரமைப்பது போன்றவற்றில் கவனம் செலுத்திய லீ முதலில் சிங்கப்பூர் ராணுவத்தை உருவாக்கினார் . அவர்களுக்கான பயிற்சி வளங்களுக்கு இஸ்ரேல் மற்றும் தாய்வான் போன்ற நாடுகளின் உதவி கிடைக்கப்பெற்றது . ராணுவத்திற்கு வலுசேர்க்க 18 வயது நிரம்பிய ஆண்கள் ராணுவத்தில் கட்டாயமாக இரண்டுவருடங்கள் பணிபுரியவேண்டும் என சட்டம் இயற்றப்பட்டது . சிங்கப்பூர் பிரிந்தபோது அதனிடமிருந்து சுற்றுலாத்துறை மட்டுமே எனினும் அதில் போதிய வருமானம் வரவில்லை . எனவே பொருளாதாரத்தில் உயரவேண்டுமெனில் தொழிற்சாலைகள் அவசியம் டச்சு பொருளாதார வல்லுனரின் ஆலோசனையின்படி பொருளாதாரக்கொள்கைகள் வகுக்கப்பட்டு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன . அதன்பின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும்பொருட்டு சர்வதேச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது . மின் பொருட்களை உற்பத்திசெய்து ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக சிங்கப்பூர் உருவாகத்தொடங்கியது . கடல்மார்க்கத்தினை பொறுத்தவரையில் சிங்கப்பூர் இன்றியமையாதது .இதன் பூகோள அமைவு மேற்குலக நாடுகளுக்கு அவசியமாகவே, முதலீடுகள் குவிந்தன . சிங்கப்பூர் துறைமுகம் சிங்கப்பூரை ஒரு சுவர்க்கபுரியாக மாற்ற உதவியது .
குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டத்தின்மூலம் மக்கள்தொகையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஒரு குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள் போதும் அதற்குப்பின் அறுவைசிகிச்சை செய்துகொள்ளப்படவேண்டும் , மூன்றாவது நான்காவது குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு அரசின் சலுகைகள் குறைக்கப்பட்டு . இரண்டாவது குழந்தைப்பேற்றுக்கு தனிவிடுமுறை கிடையாது ,மூன்றாவது குழந்தை பெற்றுக்கொண்டால் ஒருவருடத்திற்கு சம்பள உயர்வு மற்றும் ஊக்குவிப்புத் தொகை கொடுக்கப்படமாட்டாது இரண்டுக்குமேல் குழந்தைகளைக்கொண்ட நபர்களுக்கு சமூகத்தில் அந்தஸ்தான பதவிகளை வகிக்க முடியாது , போன்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்டன .
உடல்ரீதியான தண்டனை வழங்கும் வெகுசில நாடுகளில் சிங்கப்பூரும் ஓன்று . லீயின் முன்னிருந்த மிகப்பெரிய பிரச்சினை தண்ணீர் ! மலேசியா தண்ணீர் விலையை உயர்த்துவது அல்லது தண்ணீர் கொடுப்பதை நிறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட, மாற்று ஏற்பாடாக கழிவுநீர் மறுசுழற்சிமுறை, நிலத்தடிக்குழாய்களின் மூலம் மழை நீர் சேகரிப்புத்திட்டம் போன்றவை ஏற்படுத்தப்பட்டது .
இன்று ஊழல்குறைந்த நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் இருக்கிறது . தொழில்முதலீடுகள் குவிகின்றன அங்கே , உலக நீடுகளின் முக்கியமான சுற்றுலாத்தலமாக மாறியிருக்கிறது குற்றங்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்பதால் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகம் , சிங்கப்பூரில் சேரிகள் கிடையாது . 88% அதிகமானோருக்கு சொந்தவீட்டு வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது . அண்ணளவாக 55 லட்சம் மக்களைக்கொண்ட சிங்கப்பூரில் உலகிலேயே அதிகமான கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள் ,உலகிலேயே வரியில்லா சுவர்க்கம்என்றால் அது சிங்கப்பூர் தான்.
–பிரியா ராமநாதன்