Uncategorized கனவுகளின் காதலன் இவர் ! சரித்திர நாயகன் இவர் !

கனவுகளின் காதலன் இவர் ! சரித்திர நாயகன் இவர் !

2022 Oct 15

‘இளைஞர்களே கனவு காணுங்கள்’ இந்த ஒரு வசனம் தான் அன்றிலிருந்து இன்றுவரை அனைவருக்கும் உந்து சக்தியாய் அமைகின்றது. ‘அக்னிச் சிறகுகள்’ இந்த ஒரு புத்தகம் தான் அன்றிலிருந்து இன்றுவரை பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாய் விளங்குகின்றது. ‘அறிவியல் மேதை டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம்’ இந்த ஒரு பெயர் தான் அன்றும் இன்றும் என்றும் அனைவருக்கும் ஆசானாய் இருக்கிறது. ஆம் மாமேதை அப்துல்கலாம் ஐயாவிற்கு இன்று பிறந்தநாள்!

இராமேஸ்வரத்தில் பிறந்த முத்தொன்று பாரதத்தின் அரிய சொத்தான காலம் அது. அறிவியலின் வழிகாட்டியாய் அறநெறியின் முன்மாதிரியாய் தேசத்தின் தலைவனாய், சிறந்த ஆசானாய், கனவுகளின் கதாநாயகனாய், எளிமையின் அடையாளமாய், ஏவுகணையின் அடித்தளமாய் வாழ்ந்து மறைந்த அவரின் பெயரும் புகழும் காலமிருக்கும் வரை காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும். காலம் கடந்த மாமேதையின் கடந்தகால சுவடுகளை புரட்டி பார்க்கவேண்டிய தருணமிது.

கனவுகளின் காதலன் பிறந்தார்

தமிழ்நாட்டிலேயுள்ள அழகிய கிராமமான இராமேஸ்வரத்தில்   1931 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி ஜைனுலாப்தீனுக்கும் ஆஷியம்மாவுக்கும் மகனாக அப்துல் கலாம் பிறந்தார். ஏழ்மையான இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த இவர்  அந்த ஊரிலுள்ள ஆரம்பப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். இராமேஸ்வரத்திலுள்ள சிவன் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு இலவசமாக கணித பாடம் படித்துக்கொடுப்பார்கள். இதற்காகவே அப்துல் கலாம் அவர்கள் அவருடைய சிறுவயதில் தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்துவிடுவார்.

பின்னர் மசூதிக்கு சென்று தொழுகையில் ஈடுபடுவார். அதன் பின்னர் புகையிரத நிலையத்திற்கு சென்று அங்கு ரயிலில் வரும் பத்திரிகைகளை வாங்கிக்கொண்டு வீடு வீடாக விநியோகம் செய்ய செல்வார்;. அவரின் குடும்பம் வறுமையில் வாடுகின்றது என்பதால் குடும்பத்தின் சுமையை குறைக்க தினமும் காலை ஆறு மணியிலிருந்து எட்டு மணிவரை செய்தித்தாள் விநியோகம் செய்ய சென்றுவிடுவார். பின்னர் வீட்டிற்கு வந்து பழைய கஞ்சைக் குடித்து பசியாறிவிட்டு பாடசாலைக்கு செல்வார். பள்ளி முடிந்து வந்ததும் காலையில் பத்திரிகை போட்ட வீடுகளுக்குச் சென்று பணத்தை பெற்று அதை வீட்டிற்கு கொடுப்பார். பின்னரே படிக்க ஆரம்பிப்பார். பாடசாலையில் சராசரி மாணவனாகவே அப்துல் கலாம் படித்தார். இப்படித்தான் கலாமின் பாடசாலை நாட்கள் நகர்ந்தன.

கலாமும்  கல்லூரியும்

பள்ளிப் படிப்பை முடித்ததும் அப்துல் கலாம் திருச்சிராப்பள்ளியிலுள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் தனது உயர்படிப்பை தொடர்ந்தார். கல்லூரியில் படிக்கும் போது விடுதியில் தங்கிப் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வறுமையில் இருந்த அப்துல் கலாம் உணவையும் காசுகொடுத்தே அங்கிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. மாதத்திற்கே உணவிற்கு எவ்வளவு செலவாகும் என்று கேட்டபோது அசைவத்திற்கு 18 ரூபாய், சைவத்திற்கு 14 ரூபாய் என்றவுடன் வறுமையின் காரணமாக அந்த நான்கு ரூபாவை மிச்சப்படுத்திக்கொள்ள நினைத்து இஸ்லாமியராக இருந்தாலும் அசைவ உணவுகளை விடுத்து சைவ உணவு உண்பதை வழக்கமாக்கினார்.

இப்படி நகர்ந்துகொண்டிருக்கும் போது ஒரு முறை பெரும்புயல் தோன்றி ஊரில் அவருடைய வீடு, வீட்டுக்கூரைகள்,பொருட்கள் எல்லாம் காற்றிலே சூரையாடப்பட்டது. அப்துல் கலாமை வீட்டுக்கு வரும்படி பெற்றோர் அழைத்தபோது வீட்டிற்கு செல்ல கையில் சுத்தமாக காசு இல்லாததால் அவர் பரிசாக பெற்ற புத்தகமொன்றை விற்பதற்காக அங்கிருந்த ஒரு கடைக்கு சென்றார். அந்தப் புத்தகத்தின் விலை 400 ரூபாய். அதைப் பெற்றுக்கொண்டு பணம் தரும்படி கேட்டார். அந்தப் புத்தகத்தில் ‘நீ ஒரு மிகச்சிறந்த மாணவன்’ என்ற குறிப்போடு மிகப்பெரிய கல்வியாளரின் கையெழுத்திடப்பட்டு இருந்தது.

இதைப் பார்த்த கடைக்காரர் வியந்து போனார். ‘இது மிகச்சிறந்த புத்தகம். அதுவும் நீ பரிசாய் பெற்றது. இதை ஏன் விற்கிறாய்?’ என்று கேட்டார் அந்த கடைக்காரர். அதற்கு அப்துல் கலாம் ‘என் ஊரில் ஏற்பட்ட புயலால் என்னுடைய வீடு தாக்கப்பட்டுள்ளது. நான் உடனடியாக வீட்டிற்கு செல்ல வேண்டும். என்னுடைய கையில் பணமில்லை’ என்றார். அதைக் கேட்ட கடைக்காரர் நீ ஊருக்கு செல்ல எவ்வளவு செலவாகும் என்று அப்துல் கலாமிடம் கேட்க அதற்கு அப்துல் கலாம் 60 ரூபாய் என்றவுடன் அந்த புத்தகத்தை பெற்று 60 ரூபாய் பணத்தையும் கொடுத்தவுடன் அப்துல் கலாம் ஊரிற்குச் சென்றார்.

பின்னர் ஒருமுறை அந்தப் பணத்தைக் கொடுத்து அந்த கடைக்காரரிடமிருந்து புத்தகத்தை திரும்ப பெற்றுள்ளார். என்னதான் கஷ்டமும்,வறுமையும் சூழ்ந்தாலும் அப்துல் கலாம் அவருடைய கல்வியை கைவிடவில்லை. இரவு, பகல் பாராது அயராது படித்து வகுப்பிலேயே சிறந்த மாணவனாய் திகழ்ந்தார்.

கலாமும் ஏவுகணையும்

1954 ஆம் ஆண்டு இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்ற பின்னர் அவரால் இயற்பியல் துறையில் ஆர்வம் காட்ட முடியவில்லை. இந்த துறையில் பணியாற்றுவதை விட அவருக்கு விண்வெளித் துறையில் பணியாற்றுவதே மிகவும் பிடித்திருந்தது. பிடிக்காத துறையில் சலிப்போடு பணியாற்றுவதை விட பிடித்த துறையில் சோர்வின்றி பணியாற்றலாம் என்று எண்ணி  1955 ஆம் ஆண்டு விண்வெளி ஆய்வு குறித்த பொறியியல் கற்கையை  சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் ஆரம்பித்தார். அவருடைய அறிவாற்றலாலும், திறமையாலும் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

இதற்கு பின்னர் 1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார் அப்துல்கலாம். அவருடைய அயராத முயற்சியால் ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார்.இதன் பின்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO)  தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர் துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார்.

பின்னர் SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-ஐ என்ற துணைக்கோளை 1980 ஆம் ஆண்டு வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இந்த ஒரு சாதனை முழு பாரதத்திற்குமே பெருமை சேர்த்தது. இந்த ஒரு சாதனையை நிகழ்த்திய அப்துல் கலாமிற்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான ‘பத்ம பூஷன்’ விருது வழங்கி கௌரவித்தது மத்திய அரசு.  1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு ‘பொக்ரான் அணு ஆயுத சோதனையில்’ முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏவுகணையின் தந்தை ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். இதனால் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார் அப்துல் கலாம் அவர்கள்.

கலாமும்  குடியரசு பதவியும்

விஞ்ஞானத் துறையில் நுழைந்து விண்வெளித் துறையில் சாதித்த அப்துல் கலாம் தேசத்தின் முக்கிய பதவியை பொறுப்பேற்று அதிலும் சிறப்பாய் கடமையாற்றினார். 2002 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் திகதி அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்போடு தேசத்தின் குடியரசுத்தலைவராக பதவியேற்றார். 2002 இலிருந்து 2007 வரை தொடர்ந்து 5 வருடங்கள் பாரத நாட்டின் குடியரசுத்தலைவராக தன்னுடைய கடமையையும் எளிமையாகவும், மக்களின் சேவகனாகவும் சிறப்பாக பணிபுரிந்தார்.

கலாமும்  கௌரவ விருதுகளும்

1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான ‘பத்ம பூஷன்’ விருது, 1990 ஆம் ஆண்டு ‘பத்ம விபூஷன்’ விருது, 1997 ஆம் ஆண்டு ‘பாரத ரத்னா’ விருது ஆகிய கௌரவ விருதுகளை வழங்கி இந்திய அரசு அவரை கொண்டாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1997 ஆம் ஆண்டு தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விரது, 1998 ஆம் ஆண்டு வீர் சவர்கார் விருது, 2000 ஆம் ஆண்டு ராமானுஜன் விருது, 2007 ஆம் ஆண்டு அறிவியல் கௌரவ டாக்டர் பட்டம் மற்றும் கிங் சார்லஸ் ii பட்டம், 2008 ஆம் ஆண்டு பொறியியல் டாக்டர் பட்டம், 2009 ஆம் ஆண்டு சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது மற்றும் ஹூவர் மெடல், 2010 ஆம் ஆண்டு பொறியியல் டாக்டர் பட்டம், 2012 ஆம் ஆண்டு சட்டங்களின் டாக்டர் மற்றும் சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது ஆகிய விருதுகளும், கௌரவங்களும் அப்துல் கலாமிற்கு வழங்கப்பட்டுள்ளது.

கலாமும்  மாணவர்களும்

உயர்ந்த பதவிகளை எல்லாம் வகித்தாலும் குணத்தாலும் பண்பாலும் அப்துல் கலாம் மிகவும் எளிமையானவர். அவருக்கு எப்போதும் மாணவர்களுடன் உரையாடுவதே விருப்பம். குடியரசு மாளிகைக்கு மாணவர்களை வரவழைத்து அவர்களை சந்தித்து உரையாடும் பழக்கத்தினை வைத்திருந்த அவர் ஒருமுறை பார்வை இழந்த மாணவரை சந்தித்து உரையாடினார். அந்த அளவிற்கு மாணவர்களுடன் உரையாடுவது அவருக்கு பிடித்த ஒன்று. மாணவர்களே எதிர்கால இந்தியாவின் அசைக்க முடியாத சக்தி என்பது அப்துல் கலாமின் நம்பிக்கை.

இதனால் ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடுவதே அவருக்கு பிடித்த செயல். ஒரு முறை இவ்வாறு மாணவர்களுக்கு முன் சொற்பொழிவாற்றி பின் மாணவர்களுடன் கலந்துரையாடும் போது ஒரு மாணவன் எழுந்து ‘ஐயா! நீங்கள் கனவு காணுங்கள் என்று கூறி இருக்கிறீர்கள். ஆனால் நான் கனவு காண முடியாமல் என்னுடைய இலக்கை அடைய நிறைய பிரச்சினைகள் வருகிறது. இப்படியிருக்கும் போது நான் எப்படி என் இலக்கை அடைவது என்று அவன் அப்துல் கலாமை பார்த்து கேட்டபோது அதற்கு அப்துல் கலாம் ஒரு குட்டி கதை சொன்னார்.

ஒரு காட்டில் நிறைய பறவைகள் சேர்ந்து இரை தேட ஆரம்பிக்கும் போது கருமேகம் சூழ்ந்து திடிரென்று மழை பெய்யத் துவங்குகின்றது. மழை பெய்ய ஆரம்பித்தவுடன் பறவைகள் எல்லாம் தன்னுடைய கூட்டை நோக்கி பறக்க விளைந்தன. ஆனால் அங்கிருந்த ஒரு கழுகு மட்டும் தன்னுடைய கூட்டை நோக்கி பறக்காமல் மேல்நோக்கி பறக்க ஆரம்பிக்கின்றது. கழுகின் இந்த செயலைப் பார்த்த மற்ற பறவைகள் இது என்ன இந்த முட்டாள் கழுகு கூட்டிற்கு செல்லாமல் மேல்நோக்கி பறக்கின்றது என்று தங்களுக்குள்ளேயே பேசிக் கொள்கின்றன. இதை சிறிதும் காதில் வாங்காத கழுகு மேல்நோக்கி பறந்துக் கொண்டே இருந்தது. அது மேகத்தை தாண்டி போனவுடன் அங்கு ஏதேனும் இரை கிடைக்கிறதா என்பதை பார்க்கவே கழுகு மேல்நோக்கி பறந்தது. மேகத்தை தாண்டியவுடன் அங்கு மழை பெய்யாது என்பதை அறிந்த கழுகு மேல்நோக்கி பறந்து நினைத்தவாறே இரையை பெற்று தன்னுடைய இலக்கை அடைந்தது. மழை பெய்தால் ஒரு பறவையால் பறப்பது என்பது கடினமாக இருக்கும்.

அந்த மழைத்துளிகள் பறவையின் இறக்கையில் பட்டால் பயங்கரமாக வலிக்கும் ஆனால் அதை சிறிதும் பொருட்படுத்தாத கழுகு மேல்நோக்கி பறந்து அதன் இலக்கை அடைந்தது. இவ்வாறு இந்த கதையை கூறி முடித்த அப்துல் கலாம் அந்த மாணவனுக்கு ‘அந்த கழுகைப் போல மனஉறுதியும் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தடங்கல் வந்தாலும் சோர்வடையாது முயற்சி செய்தால் நிச்சயம் இலக்கை அடையலாம். கனவு காணுங்கள் அதை அடைய இடைவிடாது முயற்சி செய்யுங்கள். நிச்சயம் உங்கள் இலக்கை அடைவீர்கள்’ என்று கூறி முடித்தார்.

கலாமும்  ‘அக்னி சிறகுகளும்’

அப்துல் கலாமிற்கு புத்தகங்கள் வாசிப்பது எப்படி பிடிக்குமோ அதைப்போலவே எழுதுவதும் பிடிக்கும். ‘அக்னி சிறகுகள்’, ‘இந்தியா 2020’, ‘எழுச்சி தீபங்கள்’,’அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை’ போன்ற புத்தகங்களை எழுதியிருக்கிறார்.  அதிலும் அவர் எழுதிய ‘அக்னிச் சிறகுகள்’ என்னும் புத்தகம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் இன்று வரை கொண்டாடப்படுகிறது. அப்துல் கலாம் அவர்களின் அவர்களின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட சுயசரிதை புத்தகமே ‘அக்னிச் சிறகுகள்’ ஆகும்.

அப்துல் கலாம் அவர்கள் தான் எழுதிய அக்னிச் சிறகுகள் புத்தகத்தில் தன்னுடைய வாழ்வில் நடந்த முக்கியமான சுவாரஸ்யமான நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளார்.இப்புத்தகம் தமிழ், தெலுங்கு, குஜராத்தி, மலையாளம், ஒரியா, மராத்தி, சீனம் உள்ளிட்ட 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? அப்துல் கலாம் மறைந்தவுடன் அவர் எழுதிய ‘அக்னிச் சிறகுகள்’ புத்தகம் அனைத்துமே காட்டுத்தீயாய் விற்பனையாகியுள்ளது.

கலாமும் மரங்களும்

அப்துல் கலாம் இயற்கையை விரும்புபவர். மரங்கள் நடுவது அவருக்கு பிடித்தமான ஒன்று. ஒரு மரம், ஆண்டுக்கு 20 கிலோ கார்பனை உட்கொண்டு, 14 கிலோ ஒட்சிசனை உற்பத்தி செய்கிறது. நமது நாட்டிலுள்ள 100 கோடி மக்களும், ஆளுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் மொத்தத்தில் நம்மால் ஒரு பில்லியன் மரங்களை வளர்க்க முடியும். அப்படி வளர்த்தால், நாட்டின் தட்ப வெப்ப நிலையே மாறி உலகிற்கே வழிகாட்டியாக இந்தியா மாறும் என்று ஒரு முறை அப்துல் கலாம் சொன்னார்.

இந்தியாவில் 1,000 கோடி மரங்களை நட்டு வளர்க்கும் திட்டத்தை, இளைஞர்கள், மாணவர்களை வைத்து ஆரம்பித்தார் அப்துல் கலாம். ஒவ்வொரு மனிதனும் மானுடனாக வேண்டுமானால், வாழ்நாளில் 10 மரங்களையாவது வளர்க்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். மரம் நடுதல் தொடர்பான பல நிகழ்வுகளில் அப்துல் கலாம் கலந்துகொண்டுள்ளார். ஏகப்பட்ட மரங்களையும் தன் கைகளால் நட்டு வைத்துள்ளார்.

‘மரங்களை வளர்த்து சுற்றுச்சூழலை காக்க வேண்டும் என்ற கருத்தை திரைப்படங்கள் வழியாக கூறுங்களேன்’ என்று அப்துல் கலாம் அவருடைய நண்பரான காமெடி நாயகன் மற்றும் சின்னக்கலைவாணர் விவேக்கிடம் கூறினார். இதனால் மரங்களை வளர்க்க வேண்டும் என்ற கலாமின் லட்சியத்தை விவேக் தனது கனவாகவே எடுத்து செய்தார்.அப்போது பிறந்ததுதான் ‘பசுமைக் கலாம்’. அவர் 10 லட்சம் மரக்கன்றுகளை நட்டதும் கடலூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் விவேக்கை பாராட்டி சான்றிதழ் வழங்கினார் அப்துல் கலாம்.

கனவுகளின் காதலன்  கலாம்

‘கனவு என்பது நீங்கள் தூங்கும்போது வருவதல்ல. உங்களைத் தூங்கவிடாமல் செய்வது எதுவோ அதுவே கனவு’ என்று கூறிய அப்துல் கலாமும் இந்தியாவை வல்லரசாக மாற்ற வேண்டும் என்று அப்பொழுதே கனவு கண்டார். ‘இந்தியா விஷன் 2022’ எனும் அவருடைய புத்தகத்தை வெளியிட்டிருந்தார்.  வேளாண்மை, கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் இந்தியா அதீத வளர்ச்சி அடைய வேண்டும். நாட்டில் வறுமை ஒழிய வேண்டும். இதுதான் கலாம் கண்ட கனவு. இளைஞர்களே கனவு காணுங்கள் என்று கற்றுக்கொடுத்த அவரை கனவுகளும் காதலிக்கின்றன.

கனவுகளின் காதலன் மறைந்தார்

வாழும் போது நமக்கு பிடித்ததை செய்யும் போதே நிம்மதி கிடைக்கும். அப்படியில்லை என்றால் பிடித்ததை செய்துவிட்டு இறந்தால் நிம்மதி கிடைக்கும். தன் வாழ்நாள் முழுவதும் தன் மனதிற்கு பிடித்த விடயங்களை செய்து தனக்கு பிடித்ததை செய்துகொண்டிருக்கும் போதே நிம்மதியாக மறைந்தார் மாமேதை அப்துல் கலாம். ஆம் ஜூலை 27, 2015 ஆம் ஆண்டு மேகாலயா மாநிலத்தில் உள்ள ஷில்லாங் நகரில் உள்ள ஒரு கல்லூரிக்கு சிறப்பு விருந்தினாராக சென்ற கலாம்.

அந்த கல்லூரி மாணவர்களிடம் உரையாடிக்கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்தார். அதனை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்துவிட்டார் எனும் சோக செய்திதான் கிடைத்தது. அவரது மறைவு ஒட்டுமொத்த இந்தியாவையும் கண்கலங்க வைத்தது. குழந்தைகள்,மாணவர்கள்,இளைஞர்கள் என அனைவருமே மாமேதையை பிரிந்ததில் கண்ணீர் அஞ்சலி செலுத்தி அவருக்கு பிரியா விடையளித்தனர். அவர் மறைந்த அன்று இந்தியா முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

அப்துல் கலாமின் மணிமண்டபம் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகிலே பேக்கரும்பு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நினைவிடத்தில் வாயில் ‘இந்தியாகேட்’ போன்று அமைக்கப்பட்டிருக்கும். மேலும் அந்த கட்டிடமானது ‘ராஷ்டிர பவன்’ போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்த நினைவிடத்தில் அவரது பல புகைப்படங்கள், அவற்றினை பற்றிய குறிப்புக்கள் மற்றும் அவருடைய வீணை வைத்த சிலை அமைப்பட்டிருக்கிறது. மேலும் கலாம் வாழ்ந்து மறைந்த அவரது சொந்த வீடு மக்களின் பார்வைக்காக கலாம் இல்லம் எனும் பெயரில் காட்சியமாக மாறியுள்ளது

 கலாமின் பொன்மொழிகள் இதோ உங்கள் நெகிழ்ச்சிக்காக!

அழகை பற்றி கனவு காணாதீர்கள் அது உங்களின் கடமையை பாழாக்கும். கடமையை பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்!

ஒரு முறை வந்தால் அது கனவு.இரு முறை வந்தால் அது ஆசை.பல முறை வந்தால் அது இலட்சியம்.

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்.. ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்..!

வாய்ப்புக்காக காத்திருக்காதே. உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள்.

வாழ்க்கை என்பது ஒரு சந்தர்ப்பம் – நழுவ விடாதிருங்கள்,

ஒரு கடமை – நிறைவேற்றுங்கள்

ஒரு இலட்சியம் – சாதியுங்கள்

ஒரு சோகம் – தாங்கிக்கொள்ளுங்கள்

ஒரு போராட்டம் – வென்று காட்டுங்கள்

ஒரு பயணம் – நடத்தி முடியுங்கள்

இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.

வெற்றியின் ரகசியம் என்ன? சரியான முடிவுகள். சரியான முடிவுகளை நீங்கள் எவ்வாறு எடுக்கிறீர்கள்? அனுபவம் மூலம். அனுபவத்தை நீங்கள் எவ்வாறு பெறுகிறீர்கள்? தவறான முடிவுகள் மூலம்.

நீங்கள் புகழுடன் பிறந்தால் அது ஒரு விபத்து. நீங்கள் புகழுடன் இறந்தால்அது ஒரு சாதனை.

மனிதனுக்கு கஷ்டங்கள் தேவையானது, ஏனெனில் வெற்றியை அனுபவிப்பதற்கு அவை அவசியமானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php