அனைத்தையும் நாடி  The Seven Moons of Maali Almeida–ஷெஹான் கருணாதிலகவின் நாவல் குறித்து ஒரு மதிப்புரையும் உரையாடலும்

The Seven Moons of Maali Almeida–ஷெஹான் கருணாதிலகவின் நாவல் குறித்து ஒரு மதிப்புரையும் உரையாடலும்

2022 Nov 12

தமிழில்: ஜிஃப்ரி ஹாசன்

மதிப்புரை- ஜேம்ஸ் வோல்ட்டன்

அகதா கிறிஸ்டி, சல்மான் ருஷ்டி, ரேமண்ட் சாண்ட்லர், ஜான் லீ கேரே ஆகியோரை ஒரே நேரத்தில் நினைவுபடுத்தும் பல நாவல்கள் இருக்க முடியாது – ஆனால் இந்நாவல் அதனைச்செய்கிறது. The Seven Moons of Maali Almeida (புக்கர் பரிசுக்கான குறும் பட்டியலில் இடம்பெற்றது) உண்மையில் இதனை ஒரு ஹூடனிட் (Whodunit) நாவலாக விபரிக்க முடியும். (Whodunit – என்பது ஒரு கொலையைப் பற்றிய கதை அல்லது நாவலாகும். ஆனால் அந்நாவலில் இறுதிவரை கொலையாளியின் அடையாளம் வெளிப்படுத்தப்படுவதே இல்லை

1990 ஆம் ஆண்டு கொழும்பில் மாலி எனும் புகைப்படப் பத்திரிக்கையாளர் ஒருவர் படுகொலை செய்யப்படுகிறார்.அந்தக் கொலை தொடர்பில் பல்வேறு ஆழமான நம்பத்தகுந்த சந்தேக நபர்களும் கதைக்குள் அறிமுகப்படுத்தப்படுகின்றனர். அவர்களில் உயர் பதவியில் இருக்கும் ஓர் இராணுவ அதிகாரி ஒரு பிரித்தானிய உளவாளி ஒரு அமெரிக்க ஆயுத வியாபாரி மற்றும் ஒரு தமிழ் ஜெனரல் போன்றோர் உள்ளடங்குகின்றனர். இவர்கள் அனைவரும் இலங்கை உள்நாட்டுப் போரின் போது நடந்த வெகுஜனக் கொலைகளில் ஈடுபட்டதற்கான புகைப்பட ஆதாரம் மாலியிடம் உள்ளது.

இருப்பினும் நாவல் இதைத் தாண்டியும் பல்வேறு சம்பவங்களுக்கூடாகப் பயணிக்கிறது. நாவலின் கதை மாலி எனும் கதைசொல்லியினாலேயே சொல்லப்படுகிறது. ஆனால் பரிதாபம் என்னவென்றால் அவன் ஒரு காத்திருப்பு அறையில் கொல்லப்பட்டு விடுகிறான். இறந்து பின் உயிர்த்து எழுந்திருந்தான். அங்கு கிளிப்போர்ட் வைத்திருந்த ஒருபெண்ணால் அவனுக்கு என்ன நடந்தது என்பதைத்தெரிந்துகொள்ள பேயாக மாறி ஏழு நிலவு நாட்கள் (Seven Moon Days) இருப்பதாகக் கூறுகிறான். அதன் பிறகு அவன் அங்கிருந்து புறப்பட்டு மறுபிறவி எடுப்பதற்காக ஒளியில்நுழைகிறான். அவனுடைய சில கலகக்கார சக பேய்களைப்போல உயிருள்ளவர்களிடம் செல்வாக்கு செலுத்த முயற்சிக்க அந்தரத்தில் ஒட்டிக்கொள்வதைத் தேர்ந்தெடுக்கிறான்.

இதன் அர்த்தம் மாலி ஒரு சுதந்திர முகவர் என்பதல்ல. எளிமையான இயற்கைக்கு அப்பாற்பட்ட காற்றைப்பயன்படுத்தி பேய்கள் அவர்கள் உயிருடன் இருந்தபோது சென்ற இடங்களுக்கு மட்டுமே பயணிக்க முடியும் – அல்லது மக்கள் அவர்களைப் பற்றி பேசும் இடங்களுக்கு மட்டுமே செல்ல முடியும். ஆனால் ஒரு கூடுதல் அம்சம் என்னவென்றால், காக்கை மாமா (the Crow uncle) என்று அழைக்கப்படும் ஒரு மந்திரவாதியிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய பயிற்சியின் மூலம் அவர்கள் விட்டுச்சென்ற நபர்களிடம் கிசுகிசுக்கும் கலையை கற்றுக் கொள்ளலாம்.

அதன் மூலம் மாலி கெட்டவர்களை தேடி அழிக்குமுன், குற்றவாளிகளின் புகைப்படங்களை வெளியிடுவதற்காக தனது இரண்டு முன்னாள் சக மாடிக்குடியிருப்பாளர்களை (flatmates) தேடிக் கண்டுபிடிக்கும் பயணத்தை தொடங்குகிறான். இதற்கிடையில், தனது நாட்டின் அண்மைய கடந்தகாலங்களில் நடந்த பல படுகொலைகளைப் பற்றி மேலும்அறிந்துகொள்ள அவன் மற்ற இறந்தவர்களுடன் தொடர் அரட்டைகளிலும் ஈடுபடுகிறான்.

இவை அனைத்தும் நாவலின் தொடக்கத்தில் நிகழ்பவை. உள்ளே செல்லச் செல்ல இலங்கையின் ஆன்மீக உலகின்(“பைரவ யாகம் சீதாவின் அலறலால் பிறந்தது”) முழுமையானஅடித்தளத்தைப் பெற முடிகிறது. மேலும் இலங்கையின் சிக்கலான வரலாறு எவ்வாறு நாட்டை இவ்வளவு நம்பிக்கையற்ற குழப்பகரமானதாக மாற்றியது என்பது பற்றிய விரிவான விவரணங்களையும் காண முடிகிறது. நாவலின் இடையே மாலியின் தன்வரலாறும் பேசப்படுகிறது. குறிப்பாக ஓர் சமப்பாலுறவாள நண்பனுடன் மாலினுக்கிருந்த சிக்கலான காதல் வாழ்க்கையைப் பற்றி நாவல் குறுக்கிட்டுப் பேசுகிறது.

இந்தச் சூழ்நிலையில், ஷெஹான் கருணாதிலகவின் வெளியீட்டாளர்களுக்குக் கூட புத்தகத்தை என்னவென்று விபரிப்பது என்பது குழப்பமான ஒன்றாகவே இருந்ததாகத் தெரிகிறது. புத்தகத்தின் அட்டை “நையாண்டி” என்று விவரிக்கிறது. ஆனால், எனது பார்வையில் இந்நாவலில் இல்லாத ஒரேயொரு விசயம் அதுதான். இன்னும் சொல்லப்போனால், நாவல் ஒரு ஒழுங்கமைவற்ற குழப்பமான ஒன்று அல்ல. கருணாதிலக அவர் யதார்த்தத்துக்கு மிகவும் அப்பால் சென்று குவித்திருக்கும் அனைத்து இலக்கிய வகைகளின் மரபுகளையும் மதிக்கிறார்.

எடுத்துக்காட்டாக நாவலின் ஹூடனிட் பகுதி குற்றவாளி யார் என்பதை பொருத்தமாக யூகிக்க முடியாத இறுதி வெளிப்பாட்டிற்கு வாசகனைக் கொண்டு செல்கிறது. விறுவிறுப்பான- புகைப்படங்களுக்கான நீண்ட தேடல் போன்ற பல எழுச்சியூட்டக்கூடிய பல பகுதிகளை நாவல்கொண்டுள்ளது. கதை இயற்கைக்கு அப்பாலான பகுத்தறிவுக்கு அப்பாலான ஒன்றாகத் தோற்றங் காட்டினாலும், சாத்தியம் அல்லது சாத்தியமில்லை என்ற கட்டமைப்பிற்குள் ஏதோ ஒரு நேர்த்தியை நாவலுக்கு மெஜிகல் ரியலிசம் வழங்குகிறது. நாவலில் படுகொலைகள் பற்றிய விவரணைகள் பெரிதும்பொருட்படுத்தத்தகாத அறிக்கைகளாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனினும் எதிர்பாராத உற்சாகமான வாசிப்பு நமது ஈடுபாடான இலக்கியப் பயிற்சி மூலம் நாவலை தண்டிப்பதற்கு பதிலாக நமக்கு பலனளிப்பதாக அணுகுவதே சிறப்பு.

thebookerprizes.com நிகழ்த்திய உரையாடல்

ஷெஹான் கருணாதிலகவின் The Seven Moons of Maali Almeida புக்கர் பரிசு 2022 க்கான குறும்பட்டியலுக்குதேர்ந்தெடுக்கப்பட்டதால், ஷெஹான் கருணாதிலகவிடம் அவரது நாட்டின் உள்நாட்டுப் போர் மரபு அவரது வெளியீட்டாளரின் அன்புத் தொல்லை… மற்றும் மரணத்துக்குப் பின்னரான வாழ்க்கையை ஆராய்வது பற்றி எல்லாம் பேசினோம்.

 

கேள்வி:  2022க்கான புக்கர் பரிசு நெடும்பட்டியலில் இடம்பெற்றிருப்பதை எப்படி உணர்கிறீர்கள்? வெற்றிபெற்றால் உங்களுக்கு என்ன அர்த்தம்?

ஷெஹான் கருணாதிலக:  எந்த ஒரு நெடும்பட்டியலிலும் இடம்பெறுவதற்கு அதிர்ஷ்டம் தேவைப்படுகிறது. உங்கள் புத்தகம் ஐக்கிய இராஜ்ஜியத்தில் வெளியிடப்படுவதற்கு முன்னமே நெடும்பட்டியலில் இடம் பெறுவது கூடுதல் அதிர்ஷ்டம். இலங்கையின் குழப்பமான நிகழ்காலத்தை உலகமே உற்று நோக்கும் போது இலங்கையின் குழப்பமான கடந்த காலத்தைப் பற்றி ஒரு நாவல் வெளிவருவதற்கும் இருண்ட சக்திகளின் இணைவு தேவைப்படுகிறது. எனது கதாநாயகன் மாலி அல்மேடா போல் நான் சூதாடுவதில்லை. அதனால் இன்னும் இரண்டு சிக்ஸர்களை விளாசுவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அப்படி நடந்தால் நான் மகிழ்ச்சியில் கத்துவேன்.

 

கேள்வி: The Seven Moons of Maali Almeida வின் தொடக்கப்புள்ளி என்ன? இது தாமதமான யோசனையா? அல்லது தெளிவான தருணம் தானா? இந்தக் குறிப்பிட்ட புத்தகத்தை இப்போது எழுத உங்களைத் தூண்டியது எது?

 

ஷெஹான் கருணாதிலக: 2009 இல், உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர், எத்தனை பொதுமக்கள் இறந்தார்கள்? யாருடைய தவறு இது? என்பது பற்றி ஒரு பரபரப்பான விவாதம் நடந்தபோதே நான் இதைப் பற்றி சிந்திக்க தொடங்கிவிட்டேன். இறந்தவர்கள் தங்கள் அனுபவத்தை, கருத்தை வழங்கக்கூடிய ஒரு பேய்க்கதையை தொடர்வதற்கு போதுமான விசித்திரமான யோசனைகள் இருப்பதாகத் தோன்றியது, ஆனால் நிகழ்காலத்தைப் பற்றி எழுத எனக்கு தைரியம் இருக்கவில்லை, எனவே நான் 20 ஆண்டுகள் பின்னோக்கி, 1989 இன் இருண்ட நாட்களுக்குச் சென்றேன்.

 

கேள்வி: உங்கள் எழுத்து செயல்முறை எப்படி இருக்கும்? நீங்கள் சாதாரணமாக தட்டச்சு செய்கிறீர்களா அல்லது எழுதுகிறீர்களா? பல வரைவுகள், நீண்ட இடைநிறுத்தங்கள், திடீர் எழுச்சிகள் என ஏதாவது உள்ளதா? மாலி அல்மேடாவின் ஏழு நிலவுகள் நாவலை எழுத எவ்வளவு காலம் எடுத்தது?

 

ஷெஹான் கருணாதிலக: அதிக காலம் எடுத்தது. 2014 இல் எழுத ஆரம்பித்து பல்வேறு தரப்புக் கருத்துக்கள் மூலம் நிறைவு செய்தேன். அதன் படிப்படியான வளர்ச்சிக்கு அந்தளவு காலம் தேவைப்பட்டிருக்கலாம். முதலில், நான் 1989 ஆண்டை ஆராய்ச்சி செய்தேன். இயற்கைக்கு அப்பாற்பட்ட நாட்டுப்புறக்கதைகளை ஆராய்ந்தேன், பேய்க் கதைகளைச் சேகரித்தேன். அவற்றைப் படித்து A3 தாள்களில் பென்சிலால் குறிப்பெடுத்துக் கொண்டேன். பின்னர், ஒரு உருவரைவை (outline) டைப் செய்தேன். பிறகு ஒவ்வொரு அத்தியாயமாக டைப் அடித்தேன். நிச்சயமாக, டைப்செய்யும் போது உருவரைவிலும், யோசனைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருந்தன. ஆனால் மாலியின் குரல் வெளிப்பட்டவுடன், கதை அதன் தாளத்தைக் கண்டுபிடிக்கத்தொடங்கியது. ஐந்து ஆண்டுகள் கழித்து இப்போது படிக்கத்தயாராகிவிட்டது.

 

கேள்வி: சிறிய சுயாதீன வெளியீட்டாளர்களால் ஐக்கிய இராஜ்ஜியத்தில் வெளியிடப்பட்ட நெடும்பட்டியலில் உள்ள பல எழுத்தாளர்களில் நீங்களும் ஒருவர் – அது உங்களுக்கு எதனை அர்த்தப்படுத்துகிறது? நீங்கள் ஒரு எழுத்தாளர் என்ற வகையில் உங்களை அது எவ்வாறு பாதிக்கிறது?

 

ஷெஹான் கருணாதிலக: படைப்பின் மீது அக்கறை கொண்டு, கடினமான சந்தர்ப்பங்களில் கனிவைக் கொடுக்கக்கூடிய வெளியீட்டாளருடன் இருப்பது மிகவும் அருமையானது. நடானியா ஜான்ஸ், மார்க் எல்லிங்ஹாம் ஆகியோர் Seven Moons உடனும் அதன் ஆசிரியருடனும் புத்தக வகைப்படுத்தலில் இருந்ததைப் போல ஒரு பெரிய வெளியீட்டாளர் பொறுமையாகவும் தாராளமாகவும் இருந்திருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை.

இந்த பெருந்தொற்றுக் காலப்பகுதி முழுவதும் நாவலில் விசித்திரமான கதைச் சம்பவங்கள் மற்றும் off-kilter கதாபாத்திரங்களை வாசகர்கள் இலகுவாக புரிந்துகொள்வதை உறுதிப்படுத்தும் வகையில் நாங்கள் உறுதியாகப் பணியாற்றினோம். பின்னர் பீட்டர் டயர் அந்த அற்புதமான அட்டையை உருவாக்கினார். உண்மையில் இது ஒரு குழு முயற்சிதான். இந்த வெற்றியைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம்.

 

கேள்வி:ஒரு திறனாய்வாளர், The Seven Moons ஐ “ஒரு பகுதி பேய்கதை, ஒரு பகுதி ஹூடனிட், மற்றொரு பகுதி அரசியல் நையாண்டி” என விபரித்தார். இது ஒரு நியாயமான விவரிப்புத்தானா? அல்லது வாசகர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய வேறு குறிப்பிடத்தக்க சாதகமான “பகுதிகள்“ உள்ளதா?

 

ஷெஹான் கருணாதிலக: வித்தைக்கு (juggling) மூன்று பந்துகள் போதுமானது. எனவே, ஆம். கதைகூறலை சரியீடு (balance) செய்வதற்காக மர்மம், மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை, அரசியல் ஆகியவற்றை நாவலுக்குள் வைத்தோம். ஆனால் இதன் மையத்தில் ஒரு முக்கோணக் காதலும் உள்ளது. சில மென்மையான உறவுகள், ஓரளவு பேய் தத்துவம் குறித்த விவரணங்களும் உள்ளன. வாசகன் கதைக்குள் ஆழ்ந்து போகும் போது பல கவனிக்கத்தக்க நகரும் பகுதிகளுக்குள் சிக்கிக் கொள்கிறான் என்றும் நம்புகிறேன்.

 

கேள்வி:இலங்கையின் உள்நாட்டுப் போரைப் பற்றி அதிகம் பரிச்சயமில்லாத,1989 காலப்பகுதியை வைத்து இந்நாவலை அமைக்க உங்களைத் தூண்டியது எது? அந்த வருடத்தின் முக்கியத்துவம் என்ன? தவிரவும், அன்றைய இலங்கைக்கும் இன்றைய இலங்கைக்கும் இடையிலுள்ள சமாந்தரங்கள் என்ன?

 

ஷெஹான் கருணாதிலக:1989 என் நினைவில் இருண்ட ஆண்டாகப்பதிவாகி இருக்கிறது. அந்த ஆண்டில் இங்கு, ஒரு இனப் போர், மார்க்சிஸ எழுச்சி, ஒரு வெளிநாட்டு இராணுவ பிரசன்னம் மற்றும் அரச எதிர்ப்புப் படைகள் என அமைந்திருந்தன. அது படுகொலைகள், காணாமல் போதல்கள், குண்டுவெடிப்புகள் மற்றும் சடலங்களின் காலமாகவே இருந்தது. ஆனால் 1990 களின் இறுதியில், பெரும்பாலான எதிரிகள் இறந்துவிட்டனர். எனவே நிகழ்காலத்தைக் கொண்டு வருவதை விட இந்த பேய்களைப் பற்றி எழுதுவதை பாதுகாப்பானதாக உணர்ந்தேன்.

 

இலங்கையில் நிகழ்ந்த எதிர்ப்புக்கள், பெட்ரோல் வரிசைகள் மற்றும் தப்பியோடிய ஜனாதிபதிகள் பற்றி பல நாவல்கள் எழுதப்படும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால், இன்றைய பொருளாதார நெருக்கடியை, ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும் கூட 1989 பயங்கரவாதம் அல்லது 1983 தமிழர் விரோதப் படுகொலைகளின் பயங்கரத்துடன் ஒப்பிட முடியாது.

கேள்வி:நாவல் வன்முறையின் பின்னணியில் அமைந்திருந்தாலும், உங்கள் முதல் நாவலான சைனாமேன் (Chinaman) போலவே – மிகவும் வேடிக்கையானதாக இருக்கிறது. புக்கர் நடுவர்கள் அதனை “கோபமான நகைச்சுவை” (angrily-comic) என்றுவிவரித்தனர். நீங்கள் இலக்காகக் கொண்டிருந்த தொனி அதுதானா? அப்படியானால், அது ஏன்?

 

ஷெஹான் கருணாதிலக: இலங்கை கசப்பான வரலாற்றையும், குழப்பமான நிகழ்காலத்தையும் கொண்டிருந்தாலும்கூட அது ஒரு துரதிர்ஷ்டவசமான அல்லது மனச்சோர்வடைந்த இடமாக இல்லை. நாங்கள் தூக்கு மர நகைச்சுவையில் (gallows humour) நிபுணத்துவம் பெற்றவர்கள். எங்கள் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வகையில் நகைச்சுவைகளை உருவாக்குகிறோம். ஜூலை 9 ஆம் தேதி நடந்த ஜனாதிபதி மாளிகை நீச்சல் தடாக பார்ட்டி சம்பந்தமான நகைச்சுவையான காட்சிகளையும், அரகலயவைப் பற்றிய பல மீம்ஸ்களையும் பாருங்கள்.

 

சிரிப்பு தெளிவாகவே ஒரு நெருக்கடியான சூழலை சமாளிக்கும் நமது வழிமுறையாகும். சைனாமேனில், நான் குடிகார மாமா ஒருவரை வகைமாதிரியாகப் பயன்படுத்தினேன். ஏழுநிலவுகளில் closet queen பாத்திரத்தை இதற்காகப் பயன்படுத்துகிறேன். இரண்டு கதாபாத்திரங்களும் நகைச்சுவையினூடே சோகத்தையும், குரூரத்தையும் பிரிதிபலிப்பவை.

கேள்வி: மரணத்திற்குப் பின்னரான வாழ்வு பற்றிய உங்கள் சொந்தக் கற்பனையைத்தான் இதில் செய்திருக்கிறீர்களா? அப்படியெனில், நீங்கள் ஆராய்ந்து அறிந்தவற்றை அதிலிருந்து எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது?

 

ஷெஹான் கருணாதிலக: இந்த ஆராய்ச்சியை நான் செய்துகொண்டிருந்தபோது, எந்த பேயையும் நான் எதிர்கொள்ளவில்லை. அதேபோல, மரணத்துக்குப் பின்னரான வாழ்வுபற்றியும் எந்த நம்பிக்கையான எண்ணங்களும் எனக்கு இல்லை. அதேநேரம், பெரிய பேய் வேட்டைக்காரர்களிடமோ அல்லது பிரபலமான ஆன்மீகவாதிகளிடமோ கூட அத்தகைய எண்ணமும் அனுபவமும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

 

கேள்வி: The Seven Moons நாவலின் முந்தைய பதிப்பு 2020 இல் இந்தியாவில் Chats with the dead என வெளியிடப்பட்டது. இருப்பினும் அது சர்வதேச வாசகர்களை சென்றடைய சிறிது காலம் ஆகும் என்று தோன்றியது. அது ஏன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அது எப்படி பின்னர் The Seven Moons ஆக மாறியது?

 

ஷெஹான் கருணாதிலக:மேற்கத்தேய வாசகருக்கு குறைந்தளவு இரசனை கொண்டதாகவும் இலங்கையைப் பற்றியோ, அதன் பேய்களைப் பற்றியோ எதுவும் தெரியாத வாசகர்களுக்குஅணுகக்கூடியதாகவும் இருக்கிற போதிலும் அவை இரண்டும் ஒரே புத்தகம்தான்.

 

கேள்வி: நீங்கள் குழந்தைகளுக்கான புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளீர்கள். விஸ்டனின் கருத்துப் படி, கிரிக்கெட் பற்றி இதுவரை எழுதப்பட்ட இரண்டாவது சிறந்த புத்தகம் அதுதான் – அத்துடன் ரொக் பாடல்கள் மற்றும் விளம்பரங்களுக்கான நகலும்கூட. நீங்கள் அடுத்து என்ன எழுதுகிறீர்கள்? அது ஏழுநிலவுகளிலிருந்து எந்தளவு வித்தியாசமாக இருக்கும்…?

 

ஷெஹான் கருணாதிலக: நான் சில புதிய திட்டங்களுடன் பணிபுரிகிறேன். ஆனால் அவற்றில் கிரிக்கெட்டோ அல்லது பேய்களோ எதுவும் இடம்பெறாது.

 

கேள்வி: இரண்டு வருடங்களில் புக்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட இரண்டாவது இலங்கை எழுத்தாளர் நீங்கள். இறுதியாக, மேற்கத்தேய வாசகர்கள் இலங்கை எழுத்தின் தரத்தின் மீது கவனம் எடுத்துவிட்டார்களா? அல்லது அது இப்போது மிகவும் வலுவான இடத்தில் உள்ளதா? வேறு எந்த இலங்கை எழுத்தாளர்களை மக்கள் படிக்க வேண்டும்?

 

ஷெஹான் கருணாதிலக: இலங்கையின் கடந்த காலத்திலோ நிகழ்காலத்திலோஅழுத்தமான கதைகளுக்கு (compelling stories) பஞ்சமில்லை. நான் எழுதத் தொடங்கியபோது கார்ல் முல்லர், ரொமேஷ் குணசேகர, ஷியாம் செல்வதுரை, மைக்கேல் ஒண்டாஜி ஆகியோர்தான் உயர் தர எழுத்தாளர்களாக இருந்தனர். அதேபோல் ஆர்தர் சி கிளார்க், நான் மிகவும் பெருமைகொள்கிற இலங்கை எழுத்தாளர்.

 

இன்று புதிய இலக்கியநடை கொண்ட அனுக் அருட்பிரகாசம், நயோமி முனவீர போன்றவர்களையும், யுதன்ஜெய விஜேரத்ன, அமந்தா ஜே போன்ற கதைசொல்லிகளும், அசோக் ஃபெரி, அண்ட்ரூ ஃபிடல் பெர்னாண்டோ போன்ற நையாண்டி மொழிஎழுத்தாளர்களும், கவிஞர் விவிமேரி வண்டர்பூர்டன், இந்தி சமரஜீவ போன்ற திறமையான கட்டுரையாளர்களும் மற்றும் டசின் கணக்கான திறமையான எழுத்தாளர்களும் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் இருப்பவர்கள். புதியதலைமுறை மொழிபெயர்ப்பாளர்களால் சமகால சிங்கள மற்றும் தமிழ் படைப்புகளை பரந்துபட்ட வாசகர்களுக்கு கொண்டு செல்ல முடியும் என்று நம்புகிறேன்.

 

கேள்வி: புக்கர்–வென்ற அல்லது புக்கர்–குறும் பட்டியலில் இடம்பெற்ற உங்களுக்கு மிகப் பிடித்த நாவல் எது?

ஷெஹான் கருணாதிலக: வெறும் ஒன்று மட்டும்தானா? முதல் 10 இடங்களை என்னால் எளிதாக சொல்ல முடியும். ஆனால் நான் 5 ஐந்துடன் நிறுத்துவேன்.

 

Lincoln in the Bardo, Cloud Atlas, The Handsmaid’s tale, girl woman other மற்றும் நிச்சயமாக Midnight’s Children.

 

ஜிஃப்ரி ஹாசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php