2022 Nov 26
உலகின் அதிகூடிய மக்களை ஈர்த்த விளையாட்டாக அதிக இரசிகர்களை கொண்டுள்ள கால்பந்தாட்ட திருவிழா பீபா தற்பாேது நடைபெற்று வருகிறது. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை கால்பந்தாட்ட உலகக்கோப்பை போட்டி நடைபெறுகின்றது. அதன் தொடர்ச்சியாக 22வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் அராபிய தேசங்களில் ஒன்றான கத்தார் நாட்டில் யாவரினும் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெகு விமர்சையாக நடைபெறகிறது.2022 நவம்பர் 20ம் திகதி 22வது உலகக்கோப்பை காற்பந்துப் போட்டிகள் கட்டார் நாட்டில் வெகு விமர்சையாக ஆரம்பமாகின. இப் போட்டிகள் டிசம்பர் 18 வரை நடக்கவிருக்கிறது. இது பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு(FIFA – Fédération Internationale de Football Association) நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்துகின்ற ஒரு பன்னாட்டு காற்பந்தாட்டப் போட்டியாகும். சரித்திரத்தின் முதன் முறையாக ஒரு அரபு நாடொன்றில இப்போட்டிகள் அதாவது கட்டார் நாட்டில் நடக்கிறது. இதில், பிபா உலகக்கோப்பை தொடர் முதன்முதலாக, மத்திய கிழக்கு நாட்டிலும், ஆசியாவில் இரண்டாவது முறையாகவும் நடைபெறுகிறது. 2002ஆம் ஆண்டில், ஜப்பான், தென்கொரியா நாடுகள் உலகக்கோப்பையை நடத்தியது. கத்தாரின் கடுமையான கோடை வெப்பம் காரணமாக, இந்த உலகக் கோப்பை நவம்பர் பிற்பகுதியில் இருந்து டிசம்பர் நடுப்பகுதி வரை நடைபெறுகிறது, இது மே, ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் நடைபெறாத முதல் போட்டியாக அமைந்துள்ளது
5 கூட்டமைப்புகளிலிருந்து 32 அணிகள் பங்குபற்றக்கூடியதாக 2022 போட்டிகள் நடைபெறுவதோடு 2026ம் ஆண்டு முதல் 48 அணிகளாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டிகள் சுமார் 8 குழுக்களுக்கு பிரித்து போட்டிகள் நடைபெறவிருக்கிறது. ஒரு குழுவில் மொத்தம் 4 அணிகள் இருக்கும். ஒரு அணி தனது குழுவில் இருக்கும் அணிகளோடு தலா 1 முறை மோதும். பின்னர் புள்ளிப்பட்டியலின் படி, குழுக்களில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அந்த சுற்றுக்கு மொத்தம் 16 அணிகள் தேர்வாகும். அதில், குழுக்கள் முறையில் போட்டிகள் முடிவு செய்யப்பட்டு, நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடைபெறும்.பின்னர், காலிறுதி, அரையிறுதி, இறுதிப்போட்டி என தொடர் நிறைவுபெறும்.
கால்பந்து ரசிகர்களுக்கு என தனி கலாச்சாரம், பாரம்பரியம், கொண்டாட்ட முறைகள் உள்ள நிலையில், இஸ்லாமிய நாடான கத்தாரில் அவற்றில் பலவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெண் ரசிகர்கள் உடல் முழுவதும் மறைக்கப்பட்ட ஆடைகளை மட்டுமே அணிந்துவர வேண்டும் எனவும், ஸ்லீவ்லெஸ் உடையோ அல்லது உடல் தெரியும் உடைகளுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், கால்பந்து ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான அணிகளின் விளையாட்டை பார்க்க ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த முறை உலகக்கோப்பையை பிரேசில், அர்ஜென்டீனா, பிரான்ஸ், உள்ளிட்ட அணிகள் மீது எதிர்பார்ப்பு இருந்தாலும். ஆர்ஜன்டீனாவுக்கு முதலாவது போட்டியிலே சவூதி அரேபியா அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருந்தது.அதுமட்டுமன்றி ஜேர்மனியை வீழ்த்தி ஜப்பான் முதலாவது போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.இது கால்பந்து உலகுக்கே மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது.இந்த முறை புது அணி ஒன்று தான் கிண்ணத்தை வெல்வார்கள் என காற்பந்து இரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த 2018ஆம் ஆண்டில் ரஷ்யாவில் நடந்த உலகக்கோப்பையை பிரான்ஸ் கைப்பற்றியிருந்தது. கைலியன் இம்பாப்பே பிரான்ஸ் அணியின் துருப்புச்சீட்டாக விளங்குகிறார். பிரேசில் 5 முறையும், அர்ஜென்டீனா 1 முறையும் உலகக்கோப்பையை வென்றுள்ளன.
மறுமுனையில், கால்பந்தின் நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி, ரொனால்டோ ஆகியோருக்கு இதுவே கடைசி உலகக்கோப்பை தொடர் என்பதால் அவர்கள் மீதும் கவனம் அதிகமாகியுள்ளது. மெஸ்ஸி விளையாடியதில் இருந்து அர்ஜென்டினா உலகக்கோப்பையை வென்றதில்லை. தற்போது, அர்ஜென்டினா மிகவும் வலிமையாக உள்ள நிலையில், உலகக்கோப்பையுடன் மெஸ்ஸி விடைபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரில், மொத்த பரிசுத்தொகை 440 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். அதாவது இறுதி உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வழங்கப்பட்ட மொத்த பரிசுத்தொகையை விட 40மில்லியன் டாெலர்கள் அதிகமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. 2022 fifa கால்பந்து உலக கோப்பை தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 42மில்லியன் டொலர்களும் பரிசு வழங்கப்படும். இறுதிப்போட்டியில் இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு 30மில்லியன் டொலர்கள் வழங்கப்படுகிறது. மூன்றாவது இடம் பிடிக்கும் அணிக்கு 27 மில்லியன் டொலர்களும் வழங்க உத்தேசிக்க பட்டுள்ளதோடு நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு 25மில்லியன் டொலர்களும் பரிசுத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கால் இறுதி சுற்றுடன் வெளியேறும் 4 அணிகளுக்கும் தல 17 மில்லியன் வீதமும் இரண்டாவது சுற்றுடன் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா 13 மில்லியன் டொலர்கள் வீதமும் லீக் சுற்றோடு வெளியேறும் 16 அணிகளுக்கு 9 மில்லியன் டொலர்கள் வீதம் வழங்கப்படவுள்ளது.
பீபா உலகக்கிண்ணத்தில் இதுவரையில் 24 போட்டிகள் முடிவடைந்துள்ளன.இதில் பெறும்பாலான ஆட்டங்கள் சமநிலையிலும், வெற்றி -தோல்வி நிலையிலும் என மிக விருவிருப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.இதில் உலகக் கிண்ணத்தை நடத்துகின்ற கத்தார் தேசிய உதைப்பந்தாட்ட அணி முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.
ஆர்ஜன்டீனா, போர்த்துக்கல்,ஜேர்மனி ,பிரான்ஸ் ,ஸ்பெயின் முதலான அணிகள் கிண்ணத்தை வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டாலும் சவூதி அரேபியா, ஜப்பான், ஈரான் என்பன வலுவான நிலையிலே இருக்கின்றனது.முன்கூட்டியே அனுமானம் செய்ய முடியாதவாரே இந்த உலகக்கிண்ண போட்டிகள் அமைந்துள்ளது எனலாம்.பீஃபா உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட தொடரில், “சீ“ குழுவின் போட்டியில் சவூதி அரபேியா வெற்றியீட்டியதனை கொண்டாடுவதற்காக சவூதி அரேபியாவில் பொதுவிடுமுறை கடந்த புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.இந்தப் போட்டியில் சவுதி அரேபியா அணி 2 க்கு 1 என்ற கோல் அடிப்படையில் ஆர்ஜண்டீனா அணியை வீழ்த்தியது.இதற்கமைய, உலக கிண்ண கால்பந்து தொடரில் முதன்முறையாக ஆர்ஜண்டீனா அணி, சவுதி அரேபியாவிடம் தோல்வியடைந்ததது.
சவூதி அரேபியாவின் வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து, அதனைக் கொண்டாடும் வகையில் சவுதி அரேபியாவில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.இந்த விடுமுறையானது பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.நடப்பு கால்பந்து உலக கோப்பை தொடரின் முதல் அதிர்ச்சி தோல்வியை அர்ஜென்டினா (Argentina) சந்தித்தது.
சவுதி அரேபியாவிற்கு (Saudi Arabia) எதிரான ஆட்டத்தில் அர்ஜென்டினா மண்ணை கவ்வியிருப்பதுதான் விளையாட்டு உலகில் தற்போது பரபரப்பாக பேசப்படும் விஷயம் ஆகும். லயோனல் மெஸ்ஸி (Lionel Messi) போன்ற நட்சத்திர வீரர்கள் இருந்தும் கூட, அர்ஜென்டினாவால் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. ஆட்டத்தின் 10வது நிமிடத்திலேயே லயோனல் மெஸ்ஸி அர்ஜென்டினாவிற்காக கோல் அடித்து விட்டார்தான். ஆனால் ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் சவுதி அரேபியா இதற்கு பதில் கோல் அடித்து சரிவில் இருந்து மீண்டது.
இந்த கோலை அடித்தவர் அல்-ஷெஹ்ரி (Al-Shehri). இந்த அதிர்ச்சியில் இருந்து அர்ஜென்டினா மீள்வதற்குள் சவுதி அரேபியா 2வது கோலையும் அடித்து விட்டது. சவுதி அரேபியாவின் அல்-டவ்சரி (Al-Dawsari) இந்த கோலை அடித்தார். முதல் கோல் அடிக்கப்பட்ட அடுத்த 5வது நிமிடத்திலேயே, அதாவது 53வது நிமிடத்திலேயே சவுதி அரேபியா 2வது கோலை போட்டது. இதற்கு பிறகு இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
எனவே இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை, சவுதி அரேபியா வீழ்த்தியது. அதே நேரத்தில் அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியா வீரர்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. சவுதி அரேபியா செல்வ செழிப்பு மிக்க நாடு என்பதால், வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce Cars) கார்கள் பரிசாக வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரோல்ஸ் ராய்ஸ் காரானது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாகும். தற்போதைய நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் காரின் ஆரம்ப விலையே 8.99 கோடி ரூபாயாக உள்ளது.2022 பீபா கால்பந்து உலக கோப்பை திருவிழா ஆரம்ப கட்டத்திலேயே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.பொறுத்திருந்து பார்ப்போம் எதிர்வரும் ஆட்டங்கள் அட்டவணையில் எவ்வாறு மாற்றத்ததை கொண்டு வரப்போகின்றது என்பதை.
அப்ரித் வஸீர்