அறிவியலை நாடி ஏழைகளின் ஆப்பிளாக இருந்த தக்காளி!

ஏழைகளின் ஆப்பிளாக இருந்த தக்காளி!

2022 Nov 22

ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்பட்ட தக்காளியின் விலை சில மாதங்களுக்கு முன் இலங்கை ரூபாவின்படி 1300/=! ஏன் தக்காளியின் விலை இப்படி அடிக்கடி ஏறுகின்றது தடாலென சரிகின்றது? அது பற்றி பார்க்குமுன் தக்காளியின் பூர்வீகம் பற்றி கொஞ்சம் பார்க்கலாம். இன்றைய நம்முடைய உணவு பழக்கத்தில் சமையலில் பிரதான இடத்தை பிடிப்பது தக்காளி. தக்காளி இல்லாமல் சமையல் செய்யவேமுடியாது என்னும் நிலையில் இருக்கும் நம்முடைய சமுதாயத்திற்கு 16ஆம் நூற்றாண்டுவரையில் தக்காளி எனும் ஓன்று இருப்பதே தெரியாது. ஏனெனில் அது நம்முடைய கீழைத்தேய மண்சார்ந்த தாவரமல்ல. அதன் பிறப்பிடம் தென் அமேரிக்கா. தென் அமெரிக்க கண்டத்தின் பெரு, அர்ஜென்டினா பகுதிகளில்தான் முதன்முதலில் இது விளைந்ததாக கூறப்படுகின்றது.

காட்டுச்செடியாக இருந்த இந்த தாவரத்தினை கி.மு 500 ஆண்டுகளுக்கு முன்னமே அமெரிக்க பழங்குடிகள், மற்றும் மாயன் நாகரீகத்தினை சார்ந்தவர்கள் சாகுபடி செய்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தென்னமெரிக்க மக்கள் தக்காளியினை உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தியுள்ளனர். தக்காளியின் ஆங்கிலப்பெயரான “டொமேட்டோ” என்பதே தென்னமெரிக்க ஆஸ்டிக் பழங்குடியினரின் மொழியிலிருந்தே உருவானது.அவர்களது நொஹோட்டல் மொழியில் தக்காளியை “டோமேட்டல்” என அழைத்தமையே ஆங்கிலத்தில் மருவி டொமேட்டோ என உலகம் முழுவதும் பரவியுள்ளது.

1521 இல் மெக்ஸிக்கோவினை கைப்பற்றிய ஹெர்னன் கார்ட்ஸ் எனும் ஸ்பானிய தளபதியே தக்காளியை முதன்முதலில் ஐரோப்பா நோக்கி கொண்டுசென்றவர். அப்போதைய தக்காளி இப்போதுள்ளதைப்போன்று சிவப்பு நிறமுடையதாக இல்லாமல் மஞ்சள் நிறத்தில் பார்ப்பதற்கு ஆப்பிளை போல் இருந்தமையால் அதனை ” தங்க ஆப்பிள் ” என்று ஐரோப்பியர்கள் அழைத்தனர். எனினும் பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் தக்காளியை பார்த்தாலே அலறி அடித்து ஓட்டம்பிடித்தனர். காரணம் ஐரோப்பா முழுவதும் பிரபலமாகவிருந்த “பெல்லடோர்மா” எனும் விஷ செடியின் காய்களை தக்காளிப்பழங்கள் ஓத்திருந்தமையால் இதுவும் விஷத்தன்மை வாய்ந்ததாகத்தான் இருக்கும் எனக்கருதி பிரிட்டிஷார் தக்காளியினை தவிர்த்தனர்.

அதுமட்டுமல்லாது பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் எந்தவொரு உணவும் முதன்முதலில் வேறு நாடுகளுக்கு பயணப்படும்போது அது அந்தந்த நாட்டிலுள்ள மேல்தட்டு மக்களால் மட்டுமே உண்ணப்படும் அளவிற்கு பெறுமதிவாய்ந்ததாக விலை அதிகமுடையதாக இருக்கும். அப்படி தக்காளியை உண்ட மேல்தட்டு மக்கள் பலர் திடீரென இறந்துபோனமையும் தக்காளி தள்ளிவைக்கப்பட்டமைக்கு ஒரு காரணமாக அமைந்தது. ஆனால் உண்மையில் அப்போதைய காலகட்டங்களில் மேல்தட்டு மக்கள் உணவு உண்ணும் தட்டுக்கள் மற்றும் கரண்டிகள் செய்யப்பட்டிருந்த உலோகம் தக்காளியின் அமிலத்துடன் இணைந்து புரிந்த ரசாயன மாற்றமே அவர்களது மரணங்களுக்கு உண்மையான காரணம்.

ஏனெனில் மரத்தாலான தட்டுக்களையும் கரண்டிகளையும் பயன்படுத்தி தக்காளியை உண்ட சாமான்ய மக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் மேல்தட்டு மக்களால் தக்காளி நிராகரிக்கப்பட கீழ்த்தட்டு மக்கள் தம்முடைய உணவுத்தேவைக்கு தக்காளியை அதிகமாக பயன்படுத்திக்கொண்டனர். இதனாலேயே தக்காளியை “ஏழைகளின் ஆப்பிள்” என்று அழைக்கப்படும் சொல்லடை தோன்றியது. போர்துகீசியர்களால் தம்முடைய காலனித்துவ நாடுகளிலும் (16ஆம் நூற்றாண்டு) தக்காளி பயிரிடப்பட்டபோதே அது இந்தியா இலங்கை போன்ற நாடுகளுக்கும் பரவியது.

19 நூன்றாண்டில் இத்தாலிய உணவான பிட்சாவில் தக்காளி சேர்த்து செய்யப்பட்டால் இன்னும் சுவை அதிகரிக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட தக்காளியின் தேவை மற்றும் அதன் கிராக்கி கிடுகிடுவென உயரத்தொடங்கியது. ஐரோப்பியர்களின் உணவுத்தேவைக்காக உலகம் முழுவதிலும் உள்ள அவர்களது காலனித்துவ நாடுகளில் தக்காளி சாகுபடி அதிகமாக்கப்பட்டது. “கெட்சப்” உருவாக்கப்பட்ட பின்னர் இதன் மவுசு மென்மேலும் அதிகமானது என்றால் மிகையில்லை.

பல நூற்றாண்டுகாலமாக சீனாவில் மீனிலிருந்து உருவாக்கப்பட்ட “கெட்ஸியாப்” எனும் ஒருவகை சோர்ஸ் உணவு ஐரோப்பாவிற்கு பயணப்பட்டபோது முள்ளங்கியைப் பயன்படுத்தி கெட்சப் எனும் பெயரில் தயாரிக்கப்பட்டது. 19 நூற்றாண்டின் மத்தியில் “ஹென்றி ஜே ஹெய்ன்ஸ்” என்பவரால் 1876 இல் தக்காளி கெட்சப் அறிமுகமானது. அதுவே இன்றுவரையில் கெட்சப் இண்டஸ்ட்ரியில் முடிசூடா மன்னனாக இருக்கக்கூடிய “ஹெய்ன்ஸ் கெட்சப்”! அமெரிக்காவில் மட்டுமே கிட்டத்தட்ட 98% மக்களால் கெட்சப் சரமாரியாக பயன்படுத்தப்படுகின்றதாம். இப்படி கெட்சப்பாக தக்காளி மாறத்தொடங்கியபின் அமெரிக்கர்களினதும் ஐரோப்பியர்களினதும் தக்காளித் தேவை இன்னும் அதிகமானது .

உண்மையில் தக்காளியை மரக்கறி வகையில் சேர்ப்பதா அல்லது பழவகையில் சேர்ப்பதா என்கிற விவாதம் இன்றுவரையில் உள்ளது. தாக்காளியை நாம் காய்கறியாக நோக்கினாலும் விஞ்ஞான ரீதியாக அது ஒரு பழம். அமெரிக்காவில் முன்பொருமுறை எல்லா பழங்களுக்கும் வரிவிலக்கு கொடுக்கப்பட தக்காளி சாகுபடியாளர்கள் தக்காளியும் ஒரு பழம்தான் அதற்கும் வரிவிலக்கு வேண்டுமென மனுத்தாக்கல் செய்யவே அமெரிக்க உச்சநீதிமன்றமோ எல்லோரும் அதிகப்படியாக நுகரும் தக்காளிக்கு வரிவிலக்களித்தால் அரசுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என்பதை உணர்ந்து தக்காளி ஒரு மரக்கறிதான் என தீர்ப்பளித்தது . இன்றும் சுமாராக பத்தாயிரம் வகைகளில் , மஞ்சள், சிவப்பு, பச்சை, கருப்பு என பற்பல நிறங்களில் தக்காளி இருக்கின்றது. இரண்டு வெவேறு ரக தக்காளிகளை ஒன்றிணைத்து ஒட்டுரகம் மூலமாக புதிய புதிய வையரா தக்காளிகள் உருவாக்கப்படுகின்றது.

இப்படித்தான் ஒரு காலத்தில் விஷமாக கருதப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட தக்காளி உலகம் முழுவதிலும் உள்ள சமையலறைகளின் தவிர்க்கவியலாத ஒன்றாகிப்போனது. தக்காளி இப்படி ஒரு காலகட்டத்தில் யாருக்குமே உதவாத ஒரு பொருளாக கருத்தப்பட்டதனால்தான் ஏதேனும் குழப்பங்களில் அல்லது மேடை நாடகங்களை பிடிக்கவில்லையாயின் குறிப்பிட்ட நபர்கள்மீது அழுகிய முட்டையுடன் தக்காளியை சேர்த்து அடிக்கும் பழக்கம் உருவானதாம். இதன் நீட்சியே இன்றுவரை ஸ்பெயினில் “லா டோமெட்டினோ” எனும் விழா வருடாவருடம் கொண்டாடப்படுகின்றதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php