அனைத்தையும் நாடி  நம்பிக்கைகள் இப்படியுமா?

நம்பிக்கைகள் இப்படியுமா?

2022 Nov 29

ஒரு மன்னன் தன்னுடைய மந்திரியை அழைத்து “மந்திரி நான் நம் நாட்டு மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்!” என்று சொல்லி அனுப்பினார். மந்திரியும் உடனே ஒரு கழுதையைக் குளிப்பாட்டி அதை ஊரின் நாற் சந்தியில் எல்லோரது பார்வையிலும் படும்படி நிறுத்தி அதன் முன்னங் கால்களையும் பின்னங் கால்களையும் இறுகக் கட்டியபின் கழுதைக்கு சந்தனம் குங்குமம் பூசி, கற்பூர ஆராதை செய்து சாம்பிராணித் தூபமெல்லாம் போட்டபின் மன்னனை கழுதைக்கு அருகில் அழைத்தார்.

இதெல்லாம் எதற்கு என்று கேட்ட மன்னரிடம் நான் சொல்கிறபடி செய்யுங்கள் பிறகு காரணத்தை நீங்களாகவே அறிந்து கொள்வீர்கள் என்றார் மந்திரி. மன்னரும் மந்திரி சொன்னபடியே அந்தக் கழுதையை மூன்றுமுறை வலம் வந்து அதை வணங்கிவிட்டு அதன் மேலுள்ள ரோமங்களில் ஒன்றைப் பிடுங்கி எடுத்துக்கொண்டு அரண்மனையின் ஒரு ஓரமாய் நின்றுகொண்டு நடக்கபோவதை ஆவலோடு பார்க்கலானார். ராஜா செய்வதைப் பார்த்துக்கொண்டிருந்த ஒருவன் “ராஜாவே இப்படிச் செய்கிறார் என்றால் இதில் ஏதோ மகத்துவம் இருக்கிறது” என்று எண்ணி ராஜா செய்ததுபோலவே கழுதையை மூன்றுமுறை வலம்வந்து வணங்கி அதன் ரோமம் ஒன்றினைப் பிடுங்கிக்கொண்டான்.

இவனைப் பார்த்துக்கொண்டிருந்த மற்றொருவன் காரணம் வினவ ராஜா அப்படிச் செய்தது தெரியவரவே அவனும் அவனை பின்தொடர்ந்து பலரும் இப்படி தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிக்கவே நகர் முழுவதும் இந்தக் கதை பரவி வரிசை வரிசையாக மக்கள் வந்துநின்று அந்தக் கழுதையின் ரோமத்தினைப் பிடுங்கிச் செல்லத் தொடங்கினர்! கழுதை ரத்த வெள்ளத்தில் அலறித் துடிக்க ஆரம்பித்தது. அப்போதும் அவர்கள் விட்டபாடில்லை. மயங்கிச் சரிந்த கழுதையினை ரோமமே இல்லாத நிலையிலும் புரட்டிப் போட்டு ஒரு ரோமமாவது கிடைக்காதா என்ற நம்பிக்கையில் தேடிக்கொண்டிருந்தனர். கழுதையின் ரோமம் கிடைத்தவர்கள் எல்லோரும் மன நிம்மதியுடன் சென்றுகொண்டிருக்க வரிசையில் ரோமத்துக்காக காத்திருந்தவர்களின் முகத்தில் ஏமாற்றம் இவை எல்லாவற்றையும் அவதானித்துக்கொண்டிருந்த மன்னர் கூட்டத்தின் அருகில் வந்து இறுதியாக ரோமதினைப் பிடுங்கியவனிடம் “நீ ஏன் இப்படிச் செய்தாய்? என்று கேட்கவே அவனும் காரணம் தெரியாமல் விழித்துக்கொண்டு ”எல்லோரும் செய்தார்கள் அதனால் நானும் செய்தேன்” என்றான்.

கூட்டத்தில் நின்ற பலரும் இதே கருத்தினைச் சொல்ல வேறு சிலர் மன்னரைப் பார்த்து “நீங்கள் பிடுங்குனீர்கள் என்பதால் நாங்களும் பிடுங்கினோம்” என்றனர். இதைக்கேட்ட மன்னர் வாய்விட்டுச் சிரிக்க மந்திரி மன்னரைப் பார்த்து “நம் நாட்டு மக்களது அறிவு வளர்ச்சியைப் பார்த்தீர்களா மன்னா?” என்றார்!ஆமாம் இந்தக் கதையில் வருவதுபோல் ஏனென்று ஆராயாமல் எல்லோரும் செய்கிறார்கள் நாமும் செய்வோம் என்று கண்மூடித்தனமாக செயல்படுபவர்களே நம்மில் அநேகர்.

நம்பிக்கை என்ற அச்சாணியில்தான் இந்த உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது . ஆனால் இந்த இயல்பான நம்பிக்கையினைத் தவிர சில பல முட்டாள்த்தனமான நம்பிக்கைகளில் மூழ்கி மனிதர்கள் தம்மீதும் சமூகம் மீதும் சேற்றை வாரி இறைத்துக்கொள்ளும் இழிநிலையும் இல்லாமல் இல்லை. பக்தி என்ற பெயரில் இடம்பெறும் போலித்தனமும் சம்பிரதாயம் என்ற பெயரில் இடம்பெறும் கேலிக் கூத்துக்களும் கையிருப்புக் கரைப்புக்களும் சொல்லில் அடங்கமாட்டாதவை! மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரினதும் மாறுபட்ட சிந்தனைகளுக்கு தடைவிதித்து இயலாமைக்குக் காரணம் கற்பித்து அதையே வாழ்கையாக்கிவிட உதவும் ஓர் விடயம்தான் “சோதிடம் ” என்றால் அது பொய்யில்லை!

மனித சமுதாயத்தினை ஆட்டிப் படைக்கும் பாரம்பரிய நம்பிக்கைகளில் முதலிடத்தைப் பிடிப்பது ஜோதிடம்தான். ஆண்டில் பாதிமாதங்கள் கெட்ட மாதங்கள்! இருக்கின்ற நல்ல மாதங்களில் கிழமை வாரியாகப் பார்க்கின் “நாள் செய்யும் பலன் நல்லோர்கூட செய்யமாட்டார்கள்” என்ற பழமொழிக்கு ஏற்ப ஞாயிறு கூடாது சனி அலி, செவ்வாய் வெறுவாய், வியாழன்? கள்ள வியாழன் கழுத்தறுக்கும் என்று வாரத்தில் ஏழு நாட்களில் நான்கு நாட்களை நல்ல காரியங்களைச் செய்யக்கூடாத கெட்ட நாட்களாக மாற்றிவிட்டார்கள். எஞ்சியிருப்பது திங்கள், புதன் , வெள்ளி என்ற மூன்று நாட்கள் மட்டுமே. இதிலும் “பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது” என்று புதன் கிழமைக்கு மட்டும் விசேட சலுகை!

ஆனாலும் எஞ்சிய இந்த மூன்று நாட்களையும்கூட முழுதாக ஏற்றுக்கொள்ளவியலாது . தேய்பிறை அமாவாசை, கரிநாள், ராகுகாலம், எம கண்டம், குளிக்கன், சூலம் என்று முழு நாளுமோ அல்லது ஒரு நாளின் சில பல மணித்தியாலங்களோ காவு கொள்ளப்படும். திருமணம் செய்துகொள்ளும் இருவருக்கு அறிவில் அழகில், குணத்தில், திறமையில், குடும்பப் பின்னணியில் பொருத்தம் இருக்கிறதோ இல்லையோ நிச்சயம் ஜாதகப் பொருத்தம் மட்டும் இருந்தேயாகவேண்டும். இந்த ஜாதகப் பொருத்தம் என்ற கருமாந்திரம் உள்ளே வந்துதான் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கல்யாணக் கனவுகளில் பென்னாம்பெரிய கல்லைத் தூக்கிப் போட்டிருக்கிறது என்றால் அதுதான் உண்மை.

அதுவும் பத்துப் பொருத்தத்தொடு நிறுத்திக்கொள்ளாது செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம், மாங்கல்ய தோஷம், பாவம் கூடவா ? குறையவா ? என்று ஏகப்பட்ட சிக்கல்கள். முப்பத்தைந்து வயதில் திருமணம் ஆகிறதோ இல்லையோ நன்றாக ஜாதகம் பார்த்துப் பழகிக்கொள்ளலாம் நாங்கள். இவ்வாரான நம்பிக்கைகளை வளர்த்து விடும் ஊடகங்களாக வானொலி, தொலைகாட்சி, பத்திரிகைகள் போன்றவையும் ஈடுபடுவதுதான் வேதனை. ” இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? ” என்ற தொனியில் பண்ணிரண்டு ராசிகளுக்குமான அன்றைய தினத்துக்குரிய பலனை ஒன்றை வரியிலாவது சொல்லத் தவறுவதில்லை இந்த ஊடகங்கள்.

ஜோதிடம் புத்தகங்களும் ஜோதிடப் பத்திரிகைகளும் முன்பைக்காட்டிலும் இந்த நவீன யுகத்திலேயே அதிகரித்திருக்கிறது என்றால் மிகையில்லை. மனிதர்களின் தலைவிதியினை கிரகங்கள் தீர்மானிக்கின்றனவா? என்ற கேள்விக்கு ஆம் என்று சொல்வதுதான் ஜோதிட சாத்திரம். ஆதிகால மனிதர்கள் கிரகங்களுக்கு அபரிதமான சக்தி இருப்பதாக நம்பினார்கள். கிரகங்கள் என்றால் என்ன? அவை எப்படி இடம்பெயர்கின்றன? என்பதற்க்கான அடிப்படை உண்மைகள் தெரியாத காரணத்தினால் அவர்கள் அப்படி நம்பினார்கள். ஆனால் இன்றைய அறிவியலின் தொழிநுட்ப வளர்ச்சி ஆதி மனிதர்களின் மனதுக்குள் இருந்த கேள்விகளுக்கு சந்தேகங்களுக்கு இன்று விடை கண்டுபிடித்துக் கொடுத்தபின்னும் அவர்கள் தங்களது தவறான நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டபாடில்லை.

மேலும் தவறான நம்பிக்கைகளில் அடுத்த இடத்தினை வகிப்பவைதான் “சகுன நம்பிக்கை “! பல்லி கத்தும்போது கைவிரலால் சுண்டுவது பூனை குறுக்கேபோனால் தண்ணீர் குடித்துவிட்டுப் போவது வெளியே போகும்போது விளக்குமார் துடைப்பம் கண்ணில் படாமல் போவது எங்கே போகிறாய் “? என்று கேட்டால் சில நிமிடங்கள் தாமதித்துப் போவது, ஊசியைக் கையில் கொடுக்ககூடாது, வாகன சாவியை கையில் வாங்கக்கூடாது, தும்மினால் யாரோ நினைக்கிறார்கள், புரை ஏறினால் யாரோ திட்டுகிறார்கள், விளக்கு வைத்தபின் உப்பு , பணம் போன்றவற்றை இரவல் கொடுக்ககூடாது என்று வரிசை கட்டி நிற்கின்றன

நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான நம்பிக்கைகள் (?!) சிலவற்றுக்கு காரணமும் சொல்லப்படும் பலவற்றுக்கு காரணமே தெரியாமல் மரபுவழி பின்பற்றப்படும். இந்த சகுன விவகாரத்தில் ஊர்வன பறப்பன, நடப்பன என்று எந்த ஒன்றுமே தப்பவில்லை எனலாம். மிகப்பெரிய அறிவாளிகளையும் , பலசாலிகளையும்கூட பயப்படும்படியாக செய்துவிடுகிறது இந்த சகுன நம்பிக்கை . பூனையைக் கண்டு எலி பயப்படலாம். மனிதன் பயப்படலாமா ? ஊர்வனவற்றுள் ஒன்றான பல்லியை அடிப்படையாகக் கொண்டு பல்லி விழும் பலன், பல்லி கத்தும் பலன் என்று பல்லியை “ஆரூடம் சொல்லும் ஜோதிடமானாகவே மக்கள் கருதுவதுதான் வேடிக்கை!

மனிதர்களின் எதிர்காலத்தினை மனிதர்களாலேயே அறிந்துகொள்ள இயலாதபோது சுவற்றில் ஒட்டியிருக்கும் பல்லியால் மட்டும் எப்படி? நம்முடைய வாழ்வுக்கும் பல்லிக்கும் என்ன சம்பந்தம்? நாய் ஊளையிடுவதைகூட நாம் விட்டுவைக்கவில்லை. வரப்போகும் ஏதோவொரு துர் சகுனத்தின் முன்னரிவிப்பாகவே நாயின் ஊளையிடுதலை எண்ணி அஞ்சுகிறோம். காகம் கரைந்தால் விருந்தாளி வரப்போகிறார்கள் ஆந்தை அலறினாள் அபசகுனம் என்று நமக்குத்தான் எத்தனை எத்தனை நம்பிக்கைகள்! இப்படி அஃறினைகளை சடப்பொருட்க்களை சகுனத்தடையாக்கிய மனிதர்கள் மனிதர்களில் சிலரையே சகுனத்தடையாகிக்கொண்டதுதான் எல்லாவற்றிற்கும் உச்சம்!

தாலி இழந்த பெண்கள் குழந்தை இல்லாதவர்கள் போன்றோரை அபசகுனமாக சமுதாயம் நோக்குகிற காரணத்தால் இவர்கள் சுப காரியங்களில் வெறுக்கப்படுவதோடு சில காரியங்கள் கைகூடாத பட்சத்தில் சமுதாயத்தின் பழிச் சொற்க்களையும் ஏற்க வேண்டியிருக்கிறது. கணவனை இழந்து அல்லது குழந்தைப் பேரில்லாது ஏற்கனவே துயரத்தோடு இருக்கும் இவர்களுக்கு “அபச குணத்தின் சின்னம் ” என்று முத்திரை குத்தப்பட்டு அடிப்படை உரிமை மறுக்கப்படுவது என்ன நியாயமோ.

சிக்கலான பிரச்சினை ஏதும் வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் “சாமிக்கு முன் பூப்போட்டு பார்த்தல்” என்ற நடைமுறை இன்றுவரை நிலவிவருகிறது. பூப்போட்டு பார்த்தல், குறி கேட்டல் போன்ற மூட நம்பிக்கைகளின் அடிப்படையில் பயங்கரமான ஓர் உளவியல் உண்டு என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அது என்னவென்றால் நம் எல்லோருக்கும் ஒரு அதிகாரி தேவைப்படுகிறார். ஒரு விசயத்தில் தீர்மானம் எடுக்கவியலாமல் தடுமாறும்போது பிறரின் தீர்மானதினையே எதிர்பார்த்து நிற்கிறோம். அந்த அடிப்படையிலேயே கடவுளே ஒரு நல்ல முடிவினைச் சொல்லட்டும் என்ற நம்பிக்கையில் அவரிடம் பூப்போட்டு பார்க்க கிளம்பிவிடுகிறோம்.

அட கீழைத்தேய நாடுகளில் மட்டும்தான் இப்படியான வினோதமான நம்பிக்கைகாளா? இல்லவேயில்லை உலக வல்லரசான அமெரிக்கர்களுக்கு இன்னுமே 13 என்ற எண் ஆகாமல்தான் இருக்கிறது. அதுவும் இந்தப் பதிமூன்றாம் திகதி ஒரு வெள்ளிக்கிழமையில் வந்துவிட்டால் அந்தோ பரிதாபம். ஏனெனில் ஏசுவைக் காட்டிக்கொடுக்க யூதாஸ் வாங்கியது 13 பொற்க்காசுகள். நோவா காலத்தில் வெள்ளம் வந்து உலகம் அழிந்துபோனதாய் சொல்லப்படுவது ஒரு பதின்மூன்றாம் திகதியில் வந்த வெள்ளிக்கிழமையில் ஏதேன் தோட்டத்திலிருந்து ஆதாமும் ஏவாளும் துரத்தப்பட்டது ஒரு வெள்ளிக்கிழமை என்பதால்தான் இந்த 13ஆம் திகதியும் வெள்ளிக்கிழமையும் அங்கே படாதபாடு படுகிறது.

இன்னுமே அங்கே 13ஆவது மாடி இல்லாமலேயே கட்டிடங்கள் காட்டப்படுவதுடன் குடியிருப்புக்களில் 13ஆம் எண் வீடுகள் இருப்பதில்லையாம் . அதேபோல இத்தாலியருக்கு 17ஆம் எண் மரணத்தைக் குறிக்கும் கெட்ட எண்ணாம். உழைப்புக்கு பெயர்போன ஜப்பானியர்களுக்கு பாம்பின் தோலை சிறு துண்டுகளாக வெட்டி மணி பர்சுக்குள்ளும் பீரோவுக்குள்ளும் வைத்துக்கொண்டால் பணம் கொழிக்கும் என்ற நம்பிக்கை , முயலின் தோலையோ வாலையோ வீட்டுக்குள் வைத்துக்கொண்டால் எந்தவொரு காரியமும் வெற்றிபெறும் என்பது மெக்சிகொவினறது நம்பிக்கை நசுங்கிய பாத்திரத்தையோ உடைந்த கண்ணாடியையோ பயன்படுத்துவது அபசகுனம் என்பது ரஷ்யர்களின் நம்பிக்கை வெளியே கிளம்புகையில் காகத்தைக் கண்டால் அப்சட் ஆகிப்போவது கொரியர்களின் நம்பிக்கை , தேநீர் தயாரிக்கும்போது குவளைக்குள் முதலில் சீனியைப் போட்டால் செல்வம் சேரும் என்பது பிரேசில்காரர்களின் நம்பிக்கை.

என்ன இப்படியெல்லாமுமா நம்பிக்கைகள் இருக்ககூடும்? என்று நினைக்கத் தோன்றுகிறது இல்லையா? ஆம்.. மற்றவர்களது சில நம்பிக்கைகள் எப்படி எங்களுக்கு விசித்திரமானதாகவும் வினோதமானதாகவும் வேடிக்கையானதாகவும் இருக்கின்றதோ அப்படித்தான் நம்முடைய சில பல நம்பிக்கைகள் மற்றவர்களது பார்வைக்கு கேலிக்கூத்தானதாக இருக்ககூடும். நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் இடையேயான வித்தியாசம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாட்டினருக்கும் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் என்று மாறுபடக்கூடியவை.

குறிப்பிட்ட சிலருக்கு / குறிப்பிட்ட சில சமூகத்துக்கு மூட நம்பிக்கையாகத் தோன்றும் விடயங்கள் மற்றும் சிலருக்கு மற்றுமொரு சமூகத்துக்கு அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்ககூடும். இவையெல்லாமே அவரவர் மரபுவழி ஏற்ப்பட்ட உளவியலேயொழிய வேறேதுமில்லை . இவற்றை நாம் விமர்சிப்பதுகூட எந்த அளவு நியாயமானது என்று எனக்குத் தெரியவில்லை. சில சமூக அல்லது மத நம்பிக்கைகள் அடிமைதனமாகவோ, உயிர் பாதிப்பினை உடற் பாதிப்பினை அல்லது மனப்பாதிப்பினை ஏற்படுத்திவிடுவதும் உண்டு . இவற்றை இல்லாமல் செய்ய நிச்சயம் குரல்கொடுக்கத்தான் வேண்டும்.

ஆனால் குரல் கொடுக்கிறேன் என்ற பேரில் , குறித்த சமூகத்தை அல்லது மனிதர்களை கிண்டல் செய்தோ , வன்மையாக கண்டித்தோ ஏதேனும் ஏடாகூடமாய் செய்துவிடுவோமாயின், அது நிச்சயம் அவர்களை ஒருபோதும் மாற்றியமைக்கப் போவதில்லை . ஏனெனில் , அது அவர்களுக்கு மேலும் வன்மைத்தினை கோபத்தை உண்டுபண்ணிவிடக்கூடும். அவர்களைப் பொருத்தவரையில் அவர்களாகவே புரிந்துகொண்டு கலாசார மறுமலர்ச்சியால் மீண்டால்தான் அதிலிருந்து அவர்களால் முற்றிலுமாக விடுபடமுடியும் என்பது என் கருத்து.

மேலும் இந்த நம்பிக்கைகள் கொடுக்கும் தாக்கங்களின் சாதக பாதகங்களைப் பொறுத்து அவை வேண்டியவையா? வேண்டாதவையா? அல்லது யாரையும் பாதிக்காதவரையில் இருந்துவிட்டுப் போகட்டும் என்ற வகையராவுக்குள் விட்டுவிடுவதா என்று முடிவெடுக்கவும் கூடும். ஏதோ ஒரு காரணத்துக்காக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் தொடர்ச்சியாக கடைப்பிடிக்கப்படும் இந்த நம்பிக்கைகளை இன்னுமே யாரெல்லாம் கட்டிக் காக்கிறார்கள் என்று பார்ப்போமாயின் ஊடகங்களை அடுத்து முன் நிற்பது என்னவோ மக்களை இயல்பாக சிந்திக்க விடாமல் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நினைக்கும் மதங்களும் மதபோதகர்களுமே.

கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் பல முட்டாள்தனமான நம்பிக்கைகள் உரம் போட்டு வளர்க்கப்பட்டிருப்பதை மறுக்கவே முடியாது. மேலும் எதேச்சையாக நடக்கும் விடயங்களுக்கெல்லாம் காரணங்களை இட்டுக்கட்டி பணம்பறிக்கும் தொழிலாக மக்களின் பிரச்சினைகளை மாற்றிக்கொள்ளும் மந்திரவாதிகளும்/ சாமியார்களும்கூட இவ்வாறான முட்டாள்தனங்களுக்கு அடிகோலுவதுடன் அவற்றை மக்கள் மத்தியில் பரப்பியும் வருகின்றனர். அறிவியல் யுகம் உலகையே கணணிக்குள் சுருக்கிவிட்டாலும் அந்த அறிவியலால்கூட மனித சிந்தனையை இதுபோன்ற விடயங்களில் / நம்பிக்கைகளில் இன்னுமே முழுமையாக மாற்றிவிடமுடியவில்லை என்பதுதான் உண்மை.

கணனியில் ஜோதிடம், ஜாதகம், திருமணப் பொருத்தம் பார்ப்பது ராசிக்கல் வியாபாரம் என்று எல்லாவிதமான நம்பிக்கைகளும் கணினிக்குள்ளும் நுழைந்தாயிற்று! ஏதோவொரு கடவுளின் படத்தைப்போட்டு துண்டுப்பிரசுரமாக ‘இதை நூறு பிரதி எடுத்து குறிப்பிட்ட தினத்துக்குள் ,நூறுபேருக்கு கொடுத்து விடுங்கள் நல்லது நடக்கும் மீறினால் கொடூரமான துன்பத்துக்கு ஆளாவீர்கள்” என்ற அச்சுறுத்தலுடன் முன்பெல்லாம் பரப்பப்பட்ட காகிதத் துண்டுகள்இன்று கைத்தொலைபேசியில் குறுஞ்ச செய்திகள் வடிவிலும் கணினியில் ஷேரிங் வடிவிலும் முன்னேறிவிட்டன. இந்த நவீன தொழில் நுட்பங்கள் மனிதர்களின் வாழ்க்கையினை மேம்படுத்துவதட்குப் பதிலாக நம்முடைய சமூகத்தில் மூடத்தனங்களையும் அறிவியலுக்குப் புறம்பான விடயங்களையும் மக்கள் மனதில் விதைக்கப் பயன்பட்டுவருவதுதான் நம் சமூகத்தின் துரதிஷ்ட்டம்.

இவ்வாறான சில நம்பிக்கைகள் அரசாங்கத்தால் உத்தியோகப் பூர்வமாக நிராகரிக்கப்பட்டு சட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும் (விலங்குகளைப் பலி கொடுத்தல் போன்ற) பல நம்பிக்கைகள் அரசாங்கத்தாலும் உத்தியோகப் பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பற்றப்படுகிறது என்பதையும் இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும்.

இன்றும்கூட நாம் சில கலாசார நிகழ்வுகளுக்கு சென்றால் அவதானிக்கக்கூடியதாக இருக்ககூடும் சில வயதானவர்கள் சில சடங்குகளை யோசித்து யோசித்து அரங்கேற்றிக் கொண்டிருப்பார்கள் அவர்களிடம் அவற்றுக்கான விளக்கங்களைக் கேட்டால் அநேகமாய் அவர்களுக்கே சரிவரச் சொல்லத் தெரிந்திருக்காது . “எங்கள் பாட்டிமார் அம்மாமார் செய்ததை எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள் அதை நாங்கள் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறோம் இதையே எதிர்காலத்தில் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள் ” என்ற ரீதியில் இவர்களது பதில் இருக்கும் . ஏன்? எதனால்? எதற்காக செய்கிறோம் ?என்ற எந்தவொரு உணர்வும் இல்லாமலேயே “காலம்காலமாய் செய்கிறோம் அதனால் அப்படியே தொடர்கிறோம் “ என்ற போக்குத்தானே வேரூன்றிக் கிடக்கிறது இங்கே ! நம்முடைய பாட்டிமார்கள் சிலருக்கு காலங்காலமாய் தம்முடைய மனதில் பதியவைத்துள்ள சில காரியங்களை செய்து முடித்தால்தான் அவர்களது மனம் நிறைவு பெரும் என்றவோர் நம்பிக்கை அவர்களுக்கு.

இதனாலேயே பல செயற்பாடுகளை நியாயப்படுத்தி நிறைவேற்றி விடுகின்றனர். இவர்களது மனம் கோணாமல் இருப்பத ற்க்காகவும் பெரியவர்கள் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்றும் நாமும் அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம் . இதன் விளைவு நம்முடைய சமுதாயத்தில் அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் இவற்றையெல்லாம் சம்பிரதாயம் என்ற பெயரில் கடத்திக்கொண்டிருக்கிறோம் நாமும் ! இத்தகைய சூழலில் வளரும் குழந்தைகள் பின்னாளில் பரீட்சை வந்தால் மந்திரித்த கயிறுகளை கையில் கட்டிக்கொள்கிறார்கள் , கொள்ளிவாய்ப் பிசாசு இரவில் பிடித்துக்கொள்ளும் என்று அஞ்சுகிறார்கள் , பரிகார பூஜைகள் மூலம் எல்லாவிதமான பிழைகளும் , விபரீதங்களும் சரிசெய்யப்பட்டுவிடும் போன்ற மனோ நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகின்றனர். சித்திரையில் பிறந்த பிள்ளை கூடாது ஆடியில் கருத்தங்கிய பிள்ளை கூடாது எட்டாம் என்னில் பிறந்த பிள்ளை ஆகாது என்றெல்லாம் சொல்லிச் சொல்லி வளர்த்தால் இவற்றைக் கேட்கும் அந்தப் பிள்ளைகளுக்கு வாழ்வில் தைரியம்தான் வருமா ? இப்படியான தேவையற்ற நம்பிக்கைகள் மூலம், வளரும் பிள்ளைகளின் மனதில் பயம் ,அவநம்பிக்கை அடிமைத்தனம் தைரியமின்மை போன்ற தாக்கங்களையே நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம் என்பதை ஒப்புக்கொள்வீர்களா?

வெறும் சடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அதன் தத்துவங்களின் அடிப்படை உண்மைகளை சரியாக தெரிந்துகொண்டால் இவ்வாறான முட்டாள்தனமான நம்பிக்கைகள் பெருமளவு குறைந்துவிடக்கூடும் . இம்மாதிரியான நம்பிக்கைகள் எல்லாமும் எங்களுடைய நிம்மதியைக் கெடுக்ககூடியன . வாழ்நாளின் ஒவ்வொரு நொடியும் சந்தோசமாகக் களிக்கப்படவேண்டியவை அல்லவா ? பின் ஏனிந்த போலியான நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எங்கள் மனதில் சலனத்தை உண்டு பண்ணிக்கொள்வானேன். இப்படி இல்லாத ஒன்றையும் சான்றில்லாத பல நம்பிக்கைகளையும் விதைப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதுதானா ?

பகுத்தறிவில்லாமல் மூட நம்பிக்கைகளையும் வீணான சடங்கு சம்பிரதாயங்களையும் இனியும் புகுத்திக்கொண்டுதான் இருக்கப்போகிறோமா ? நம்முடைய எதிர்கால சந்ததிகளை குறுகிய சிந்தனை வட்டத்தில் வைத்து நமது அர்த்தமற்ற நம்பிக்கைகளையும் அனுபவங்களையும் திணித்து அவர்களது கற்பனை சிந்தனைத் திறன்களுக்கு வழிவிடாமல் முட்டுக்கட்டையாய் இருக்கப் போகிறோமா? குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பூச்சாண்டி பிடித்துக்கொள்வான் போன்ற மழுப்பலான பொய்யான தகவல்களை வழங்கித்தள்ளாமல் உண்மையான காரணங்களை எப்போது அவர்களுக்கு சொல்லி வளர்க்கப் போகிறோம்?

மூடத்தனமான விளக்கங்களையும் அச்சுறுத்தல்களையும் கொடுத்து பிள்ளைகளின் வாயையும் , சிந்தனையையும் சேர்த்தாற் போல் மூடிவிடாமல் அவர்களோடு சேர்ந்து நாமும் உண்மையான காரணங்களைத் தேடி எப்போது பயணடையப்போகிறோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php