அழகை நாடி நகம் வெட்டும் போது Be Careful!

நகம் வெட்டும் போது Be Careful!

2022 Dec 1

மனித உறுப்புகளில் மிக முக்கியமான தொன்று நகங்கள். உடலுறுப்புகளில் ஏற்படும் நோய்களை காட்டும் அறிகுறியாக நகங்கள் செயற்படுகின்றன. நமது உடலிலுள்ள கெரட்டின் எனும் உடல் கழிவு நகங்களாக வளர்கின்றன. மனித உடலில் மிகவும் பலமானது நகங்கள் தான். நகங்களை பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியம். உடல் ஆரோக்கியத்தில் நகங்களின் பராமரிப்பும் இன்றியமையாத ஒன்றாகும். ஆகவே நகங்களை எப்போதும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். நகங்களை வெட்டுவது சுகாதாரமான ஒரு பழக்கவழக்கமாகும். இருந்தாலும் நகம் வெட்டுவதிலும் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

நகங்களை வெட்டும் முன் அதனை மென்மைப்படுத்த வேண்டும். சிலர் குளித்துவிட்டு நகம் வெட்டுவதை பழக்கமாக வைத்திருப்பார்கள். சிலர் நகம் வெட்டிவிட்டு குளிப்பார்கள். உண்மையில் நகங்களை நீரில் நனைத்துவிட்டு வெட்டுவதுதான் நல்லது. வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் விரல்களை ஊறவைத்து விட்ட பின் நகங்களை வெட்டுவதால் நகங்கள் மென்மையாக்கப்படுவதோடு இலகுவாகவும் வெட்டலாம். ஒரு முனையிலிருந்து மற்ற முனையை நோக்கியவாறே நகங்களை வெட்டவேண்டும். இதனால் நகங்கள் வளரும் போது சீராக வளரும்.

சிலர் ஸ்டைலுக்காக வெவ்வேறு விதமாக நகங்களை வெட்டுவார்கள். இவ்வாறு வெட்டுவதால் நகங்கள் பலவீனமடையும். வளரும் நகங்கள் வெட்டும் முன்னே உடைந்துவிடும். கைவிரல் நகங்களை விட கால் விரல் நகங்களை வெட்டுவது கொஞ்சம் கடினம் தான். அப்போது உப்பு நீரில் ஊறவைத்து நகங்களை வெட்டலாம். அதாவது ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி உப்பைக் கரைத்துக்கொண்டு அந்தத் தண்ணீரில் கால் விரல்களை சுமார் பத்து நிமிடங்களுக்கு ஊற வைத்தபின் நகம் வெட்டினால் வெட்டுவதற்கு எளிதாக இருப்பதோடு நகத்திலுள்ள கிருமிகளும் அகற்றப்படும்.

நகங்களை ஒட்ட வெட்டக்கூடாது. அதாவது நகமும் சதையும் இணையும் பகுதியை ஒருபோதும் வெட்டக்கூடாது. காரணம் அந்த பகுதி தான் நகங்களின் வேர் பகுதியை பாதுகாப்பதோடு நோய் தொற்றுக்களிலிருந்தும் நகங்களை பாதுகாக்கின்றன. நகம் வெட்டும் போது தவறுதலாக காயம் ஏற்பட்டால் எண்ணெய் தடவவேண்டும். மருந்துகள் வாங்கி வைப்பதற்கு பதிலாக எண்ணெய் பூசுவதால் காயம் விரைவில் குணமடையும். வலியும் குறையும். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையாவது நகங்களை வெட்ட வேண்டும்.

நகங்களை பிளேட் மற்றும் கத்திரிக்கோலைக் கொண்டு வெட்டக்கூடாது. நகங்களை வெட்டுவதற்காகவே நகவெட்டி பயன்படுகிறது. ஓரங்களில் உள்ள நகங்களை கவனமாக வெட்டவேண்டும். பெண்கள் நகங்களை வெட்டும்போது முக்கியமாக நகத்தின் இரு ஓரங்களிலும் சாய்வாக வெட்டுவார்கள். காரணம் அவ்வாறு வெட்டுவதால் நகம் வளரும் போது நேர்த்தியாகவும் அழகாகவும் வளரும் என்பதற்காக.நகம் வெட்டப் பயன்படுத்தும் நக வெட்டியை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். நகத்தை வெட்டும் முன்னரும் நகத்தை வெட்டிய பின்னரும் நகவெட்டியை நன்றாக கழுவி சுத்தப்படுத்தவேண்டும்.

ஒருவர் பயன்படுத்திய நகவெட்டியை மற்றொருவர் பயன்படுத்தக் கூடாது. இதனால் நோய் தொற்றுகள் ஏற்படும். இருந்தாலும் இது நடைமுறைக்கு சாத்தியமில்லையென்றாலும் அனைவரும் பயன்படுத்தும் நக வெட்டியை சவர்க்காரம் அல்லது சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். இதனால் நோய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும். நகங்கள் கடிப்பது தவறான பழக்கமாகும். இதனால் ஆபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆகவே நகங்களை வெட்டுவதே சாலச் சிறந்தது. நகம் வெட்டுவது சிறிய விடயம் என்று அலட்சியப்படுத்தாமல் நகங்கள் வெட்டுவதிலும் கவனமாக இருங்கள்

 

Mr. Poetu

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php