அனைத்தையும் நாடி  அடிமைமுறை என்பது எப்போது உருவாகியிருக்கும்?

அடிமைமுறை என்பது எப்போது உருவாகியிருக்கும்?

2022 Dec 2

உலக மக்களிடையே அடிமைத்தனம் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் , அடிமைத்தனத்தால் சமுதாயத்தில் உண்டாகும் தாக்கங்களை எடுத்துரைக்கவும் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி சர்வதேச அடிமைகள் ஒழிப்புத் தினமாக கடைபிடிக்கப்படுகின்றது . 1949 ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் திகதியன்று ஆள்கடத்தலை இல்லாமலாக்குதல் மற்றும் பிறர் விபச்சாரத்திற்கு உள்ளாக்கப்பட்டு சுரண்டப்படுவதை தடுக்கும் முகமாக உருவாக்கப்பட்ட உடன்படிக்கையினை ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டத்தினை குறிக்கும் முகமாக இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது ஆண்டுதோறும் “walk free foundation “எனும் அமைப்பால் உலக அடிமைத்தன குறியீடு (global slavery index) வெளியிடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மனித குலம் தோன்றியபோது பொதுவுடமை சமூகமாக வாழ்ந்துவந்த அவன் எப்போது குழுகுழுவாகப் பிரிந்து வாழத்தொடங்கினானோ , அப்போதிருந்தே உணவுக்கான தேவையில் குழுக்களாக மோதிக்கொண்டான் . இயற்கை வளங்களை பயன்படுத்திக் கொள்வதில் போட்டி ஏற்பட்டபோது போட்டியில் தோற்ற ஆண்கள் கொல்லப்பட்டனர். அவர்களைச் சார்ந்த பெண்களை வெற்றி பெற்ற குழுவினர் கொண்டு சென்றனர். பின்னாளில் தோற்றவர்களை கொன்றுகுவிக்காது தங்களுக்கு வேலை செய்வதற்காகவும் பெண்களை பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளவும் வென்றவர்கள் வைத்துக்கொள்ள முற்பட்டதிலிருந்தே இந்த அடிமை முறை உருவாகியிருக்கலாம் . இந்த மனிதாபிமானமற்ற அடிமை முறை வரலாற்றுக் காலம் முதல் பல நாடுகளில் நடைமுறையில் இருந்திருக்கிறது. அந்தக் காலத்தில் அடிமைகள் என்பவர்கள் மனிதநேயம் சிறிதும் இல்லாமல் அவர்களின் எஜமானர்களால் நடத்தப்பட்டனர்.

கல்வெட்டுகள் மூலம் அடிமை முறை கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலங்களிலே காணப்பட்டுள்ளது என தெரிய வந்திருக்கிறது. புராதன எகிப்தியர் போர்களில் தோற்றவர்களையும், மற்றவர்களிடமிருந்து விலைகொடுத்து வாங்கியவர்களையும் அடிமைப்படுத்தி இருக்கிறார்கள். அடிமைகள் முதலில் அரசகுடும்பத்துக்கு சொந்தமாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு அடிமைகளை பரிசாக கொடுக்கலாம். இந்த அடிமைகளை கொண்டு கடுமையான வேலைகளை வாங்கிக்கொள்ளலாம்.

யூத இனம், எகிப்து, கிரேக்கம், அரேபியா, சீனாவிலும் அடிமைமுறை பெரும்பங்கு வகித்திருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் அடிமைகள் சந்தையில் விற்கப்பட்டனர். அடிமைக்குப் பிறந்தவர்களும் அடிமையே . பழங்காலத்தில் ஏதென்ஸில் 21,000 மனிதர்களும் அவர்களுக்கு சேவை செய்ய 4,00,000 அடிமைகளும் இருந்திருக்கிறார்கள்.

கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி இரண்டாம் நூற்றாண்டு வரை அடிமைகள் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு இருந்திருக்கிறார்கள். இவர்களுக்கு பெயரில்லை, அவர்கள் திருமணம் கிடையாது. சொத்து இருந்தால் பறிமுதல் என பல கொடுமைகள் நடந்தேறி இருக்கின்றன.வசதி படைத்த கிரேக்கர்கள் பத்து, இருபது அடிமைகளை கூட வைத்திருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. கிரேக்க அடிமைகளுக்கு தமக்கு இஷ்டமான பெயரைக்கூட வைத்துக்கொள்ளும் உரிமை மறுக்கப்பட்டு , ஏஜமானர்களே தம்முடைய அடிமைகளுக்கான பெயர்களை வைத்திருக்கிறார்கள்.பண்டைய இந்தியாவில் ராஜாக்களும், வசதி படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கியுள்ளனர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது.

இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். அடிமைகள் மீது ஆடு, மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டன. அரண்மனை அடிமைகளுக்குப் புலிச் சின்னம், சிவன் கோவில் அடிமைகளுக்கு திரிசூலச் சின்னம், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னம் இடப்பட்டன.

மத்திய காலத்தில் அடிமை வியாபாரம் புதுப் பரிமாணம் எடுத்தது. ஐரோப்பியர்கள் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி வணிகம் செய்திருக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் பல இன மக்கள் வாழ்ந்தனர். இரு இனங்களுக்கிடையே போர் ஏற்பட்டு அதில் வென்றவர்கள், தோல்வி அடைந்தவர்களை ஆபிரிக்கா மற்றும் அமெரிக்காவுக்கு அடிமையாக விற்றனர். அடிமை வியாபாரம் செய்து வந்தவர்கள் கொடுத்த பணத்திற்கு ஆசைப்பட்டு தன் இனத்தவர்களை பிடித்துக் கொடுத்தவர்களும் இருந்திருக்கிறார்கள்.அடிமை வியாபாரம் நடத்த மேற்கு ஆபிரிக்கக் கடற்கரையோரங்களில் சில கோட்டைகள் கட்டப்பட்டிருக்கின்றன. இவர்கள் அமெரிக்க நிலச்சுவான்தார்களுக்கு விற்கப்பட்டனர்.

இப்படி அடிமைகளாக விற்கப்பட்டவர்கள் வெள்ளையர் நிலங்களில் சம்பளம் எதுவும் இல்லாமல் உழைத்து தங்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபடாமலேயே வாழ்நாளை கழித்திருக்கிறார்கள். ஐரோப்பியர்கள், அடிமை முறையை ஓர் உற்பத்தி முறையாக உலக பொருளாதாரத்தின் முக்கியமான அங்கமாக மாற்றினார்கள். உலகிலிருந்த அனைத்து அடிமை முறைகளுடன் ஒப்பிடும் போது ஐரோப்பியர்களின் அடிமை முறை மிகவும் மோசமான முறையாக வர்ணிக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக அடிமை முறை தொடர்ந்திருக்கிறது. அடிமை முறையால் சுமார் 6 கோடி ஆபிரிக்கர்கள் கொல்லப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. பல கோடி அடிமைகள் சித்திரவதை, நோய், மன துயரத்தால் மரணத்தை தழுவி இருக்கிறார்கள்.

மதங்களும் மன்னர்களும் அடிமைகளை நல்ல முறையில் நடத்த கோரினாலும், 18- ம் நூற்றாண்டின் பின் பகுதியில்தான் அடிமைமுறையை மொத்தமாக ஒழித்து கட்டுவதற்கான குரல்கள் எழுந்தன. இவை முதலில் இங்கிலாந்தில் வில்லியம் வில்பர்போர்ஸ் என்பவரால் பிரசாரம் செய்யப்பட்டன. இவர் 1787-ல் ஆரம்பிக்கப்பட்ட அடிமை ஒழிப்பு குழுவின் முதல் தலைவர்.பிரெஞ்சு புரட்சியின் போது முதல் குடியரசு பிரகடனம் செய்யப்பட்ட பின், அடிமைமுறை தடை செய்யப்பட்டது. மாவீரன் நெப்பொலியன் தலைவராக ஆனவுடன், அடிமைதனத்தின் பல தடைகள் நீக்கப்பட்டன. 19- ம் நூற்றாண்டில் பல நாடுகள் அடிமை முறையை தடை செய்து ஒழித்தன.

20ம் நூற்றாண்டில், ஐ.நா. சபை, சர்வதேச தொழிலாளர் அமைப்பு போன்றவை, பழைய மற்றும் தற்கால அடிமைத்தனத்தை தடுப்பதற்கு பல சட்டங்களை இயற்றியுள்ளன. ஓரிரு நாடுகளை தவிர, எல்லா நாடுகளிலும் அடிமைமுறை வெளிப்படையாக தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் அடிமை முறை பூரணமாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்று சொல்வதற்கில்லை .குறிப்பாக, ஏழை தொழிலாளர்கள், பணக்கார முதலாளிகளிடம் அடகு வைக்கப்படுவது இன்றும் நடக்கிறது. இன்றும் உலகம் முழுக்க சுமார் 13 கோடி சிறுவர்கள் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகிறார்கள். இது அடிமை முறையின் நவீன வடிவமாக இருக்கிறது. வீட்டு பணிப்பெண்களும் இதில்தான் அடக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php