அழகை நாடி ஆபரணங்கள் அணிவதன் அறிவியல் ரகசியம் இதுவா!

ஆபரணங்கள் அணிவதன் அறிவியல் ரகசியம் இதுவா!

2022 Dec 5

ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் ஆடைகளை பார்த்து பார்த்து வாங்குவதை போலவே தாம் அணியும் ஆபரணங்களையும் பார்த்து பார்த்து வாங்குவார்கள். அதிலும் பெண்களுக்கு தான் காதுக்கு,கழுத்துக்கு கையிற்கு,காலுக்கு,நெற்றிக்கு,இடுப்பிற்கு என எல்லா பாகங்களுக்கும் ஆபரணமணிவது என்பது தொன்று தொட்டு வருகின்ற பழக்கமாயிற்று. தற்கால ஆண்களும் கூட ஸ்டைலுக்காக ஆபரணங்களை தேடித் தேடி வாங்கி அணிகின்றனர். இப்படிப்பட்ட ஆபரணங்கள் அணிவது அழகுக்காக என்றாலும் அதில் பல ஆரோக்கியமான நலன்களுகம் அடங்கியிருக்கிறது. ஆபரணங்கள் அணிவதால் கிடைக்கப்பெறும் நன்மைகள் பற்றி இங்கு அறிந்து கொள்வோம்!

நெற்றிச்சுட்டி

பொதுவாக தலைமுடி ஆரம்பிக்கும் நெற்றிப் பகுதியில் அணியப்படுவது நெற்றிச் சுட்டியாகும். உச்சு வகுந்தெடுத்து அதன் நேர்கோட்டு வழியில் ஒற்றை நெற்றிச் சுட்டி நெற்றிக்கு பட்டு ஆடும் வகையில் நெற்றிச் சுட்டி இடுவது வழக்கம். திருமண பெண்கள் இரு பக்கத்திலும் காது வரை நீண்ட நெற்றிச் சுட்டி அணிந்து கொள்வது வழக்கம். முன் நெற்றியை அலங்கரிக்கும் இது போன்ற நெற்றிச் சுட்டிகள் உடல் வெப்பத்தை தணிக்க உதவுகிறது. குறிப்பாக தலைச் சூட்டை தணிக்க இது உதவுகிறது என்று நம்பப்படுகிறது.காதணிகள்

ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒரு அணிகலன் கம்மல்கள் தான். பிறந்த பெண்குழுந்தைக்கு இரு காதுகளையும் குத்துவது வழக்கம். அதே போல் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு ஒற்றை காது குத்துவதும் வழக்கம். தற்கால ஆண்கள் இரண்டு காதுகளையும் குத்திக்கொண்டு தம்மை ஸ்டைலாகவும், மாஸாகாவும் காட்டிக்கொள்கின்றனர்.அதிலும் குறிப்பாக ஒரு காதில் தொங்கட்டான்கள் அணிவது தற்கால இளம் ஆண்களுக்கு ஃபேஷனாக உள்ளது.
பெண்கள் தாம் அணியும் ஆடைக்கு ஏற்றவாறு டிசைன் டிசைனாக காதணிகளை அணிந்து கொள்வார்கள். ஜிமிக்கிகள், வளையங்கள், பாலிகள், தொங்கட்டான்கள், பொத்தான்கள் என விதம் விதமாக காதணிகள் சந்தையிலுள்ளது. இத்தகைய காதணிகள் நம் காதுகளுக்கு கவர்ச்சியூட்டுவதாக இருந்தாலும் அதில் ஒரு ஆரோக்கிய காரணம் உள்ளது. காதணிகள் காது மடலிலிருந்து செல்லும் நரம்பானது நம் உடலின் சிறுநீரகம்,மூளை மற்றும் கர்ப்பப்பை வாய் ஆகிய மூன்று முக்கிய பகுதிகளை இணைக்கின்றன.

இளம் வயதில் காது குத்தப்படுவதால் மூளை வளர்ச்சியானது மேம்படும் என்றும் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் என்றும் கூறப்படுகிறது. பெண்களின் மாதவிலக்கானது எவ்வித தடைகளுமின்றி சீர்பட நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. பழங்காலத்திலிருந்தே காதணிகள் அணிவது மரபாகியுள்ளது. இதனை சான்றுபடுத்தும் விதமாக காதணிகள் அணிவது உயிரணுக்கள் உற்பத்திக்கு உதவுகின்றதென வேத சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூக்குத்திகள்

மூக்குத்திகள் அணிவது பெண்களின் வழக்கம். முன்னைய காலங்களில் திருமணமான சுமங்கலிப் பெண்கள் அணிந்து கொள்ளும் முக்கிய ஆபரணங்களுல் முக்கியமான ஒன்று மூக்குத்தி. தற்போது இளம் பெண்களும் மூக்குத்தி அணிவதை ஃபேஷனாக கொண்டுள்ளனர். அதைவிட ஆண்களும் மூக்குத்திகள் அணிந்திருப்பதை அங்கங்கே நாம் காணக்கூடியதாக உள்ளது. மூக்குத்திகள் மூக்கை அலங்கரிப்பதற்காக மட்டுமன்றி ஆயுளையும் விருத்தியாக்குகின்றது. மூச்சு விடுவதைச் சீராக்குவதோடு, காக்காய் வலிப்பு ஏற்படாமல் தடுத்தல் மற்றும் இரத்த அழுத்தத்தை ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது. மேலும் இரத்த அழுத்தத்தை ஏற்படாமல் தடுத்தல் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது என்று கூறப்படுகின்றது.

மாங்கல்யம்

சுமங்கலிப் பெண்ணுக்கு அடையாளம் மாங்கல்யம். மாங்கல்யம் ஏறுவது இறைவன் அமைத்த வரம் என்று கூறுவர். திருமணத்தின் போது மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யத்தை கட்டிய பின்பே திருமண பந்ததத்தில் இருவரும் இணைந்து கொண்டனர் என்பதற்கு சாட்சியாகிறது. இது காலம் காலமாக பின்பற்றபட்டு வரும் தமிழர் பண்பாடாகும். மாங்கல்யமானது மங்கலகரமானது என்பதால் தீய எண்ணங்களை அது அண்டவிடாது என்று கூறப்படுகிறது. ஒரு பெண்ணின் கழுத்தில் தொங்கும் தாலியானது இதயத்திற்கு மேலே இருப்பதால் அவை உடலின் இரத்த ஓட்டத்தை நெறிப்படுத்த உதவுகிறது. மாங்கல்யம் பெண்களின் இதயத்தை எந்நேரமும் உரசிக் கொண்டு இருப்பதால் இதயத்துடிப்பை சீராக்குகிறது.

வங்கிகள்

வங்கிகள் என்பது மேல் கையிலே அதாவது முழங்கைகளின் மேலே அணியப்படுவதே வங்கிகளாகும். இவை மேல் கை தசையை இறுக்கிப் பிடித்து அணியப்படுகின்றன. பொதுவாக திருமணத்தின் போதே பெண்கள் வங்கிகளை அணிந்து கொள்கின்றனர். சில பெண்கள் ஸ்டைலுக்காக ஒரு கையில் மட்டும் வெள்ளியில் வங்கிகள் அணிந்து கொள்கிறார்கள். தற்போது இவை நவீன நாகரிக நகைகளில் ஒன்றாக ஆகிவிட்டது. வங்கிகள் கைகளின் இரத்த ஓட்டத்திற்கு உதவுவதோடு உடலின் எதிர்ப்பு சக்தியை சரியான அளவில் உருவாக்குவதற்கும் உதவுகின்றது.

வளையல்கள்

கைநிறைய வளையல்கள் அணிவது பெண்களுக்கு பிடித்தமான ஒன்று. வெள்ளி,சில்வர், இரும்பு போன்று ஒற்றை வளையல்கள் அணிவது ஆண்களுக்கு பிடித்தமான ஒன்று. கையின் மணிக்கட்டில் உடலின் துடிப்பு விதத்தை கூட்டும் நரம்பு ஒன்று உள்ளது. கைகளில் வளையில்கள் அணிந்து கொள்வதன் மூலம் இந் நரம்பினூடாக இரத்த ஓட்டம் சீர்பட உதவுகிறது. வளையலின் ஓசை உடலிற்கும், மனதிற்கும் ஆரோக்கியத்தை தரும். வளையல் அணிவது உடல் ஆரோக்கியம், அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பின் அடையாளமாகவே கருதப்பட்டது. வளையல் ஓசை உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வு அளித்து மன அழுத்தத்தை குறைப்பதாகவும் குறிப்பிடுகின்றன.

மோதிரங்கள்
ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவான ஆபரணங்களில் மோதிரங்களும் ஒன்று. திருமணத்திலும் மோதிரம் என்பது ஒரு அடையாளமாகவே கருதப்படுகிறது. திருமணத்தில் மோதிரம் மாற்றி அணிந்து கொள்வது திருமணத்தை உறுதிப்படுத்தும் நிகழ்வாக அமைகிறது. அதிலும் தமிழ் முறைப்படி நடைபெறும் திருமணச் சடங்குகளில் குடத்தில் மோதிரமிட்டு மணமகனும்,மணமகளும் அதனை தேடி பெறுதல் போன்ற நிகழ்வுகளில் மோதிரங்கள் இன்றியமையாததாகும். நம் உடலிலுள்ள நரம்புகள் ஒன்றோடொன்று இணைந்தவையாகும். நம் கைவிரல்களில் மோதிர விரலென்றே ஒரு விரல் இருக்கிறது. நம் மோதிர விரலில் இருக்கும் நரம்பானது மூளை வழியாக இதயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த விரலில் மோதிரம் அணிவது இதயத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது. உடல் முழுவதற்கும் நன்மையளிக்கிறது.

ஒட்டியாணம்

இடுப்பிற்கு எடுப்பாக இருப்பது ஒட்டியணாங்கள் தான். பல வித வடிவங்களிலும்,வகைகளிலும் ஒட்டியாணங்கள் சந்தையில் விற்கப்படுகின்றன. திருமணக் கோலத்திலிருக்கும் பெண்கள் கட்டாயமாக ஒட்டியாணம் அணிந்து கொள்வார்கள். இதனை கர்தானி, கமர்பத் என்றும் அழைப்பார்கள். இடுப்பை அலங்கரிக்க பயன்படும் ஒட்டியாணங்கள் இடுப்பின் அமைப்பை அழகாக்குகிறது. அதிலும் குறிப்பாக வெள்ளியில் அணியப்படும் ஒட்டியாணங்கள் வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் படிந்துள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுவதாகவும் கூறப்படுகிறது.

கொலுசுகள்

கொலுசுகள் பெண்கள் விரும்பி அணிவது அதன் சத்தத்திற்கு தான். தற்கால பெண்கள் ஒற்றைப் பட்டி போன்ற கொலுசுகளையும் அணிவார்கள். சிலசமயம் அதனை ஒரு காலில் மட்டும் அணிந்து கொள்கிறார்கள். பெரும்பாலும் வெள்ளியில் கொலுசுகள் அணிவது தான் முறை வழக்கமும் கூட. ஆனால் சிலர் தங்கத்தில் அணிகின்றனர். தங்கத்தில் கால் கொலுசு அணிவது அதன் பெறுமதியை அவமதிப்பது போன்றதாகும். இதனால் பயன் எதுவும் இல்லை. வெள்ளிக் கொலுசுகள் கணுக்கால்களில் அணியப்படும் போது நடக்கையில் ஒலியை உண்டாக்குகிறது. இவை நேர்மறையான எதிர்வலைகளை உருவாக்குகின்றன. வெள்ளியானது நல்லதொரு ஆற்றலை உடலுக்குள் கடத்துகின்றது. பெண்களுக்கு உணர்ச்சிகள் பெருவிரலில் இருந்து தொடங்கி குதிக்கால் நரம்பு வழியாக தலைக்கு ஏறுகிறது. எனவே பெண்கள் காலில் கொலுசு அணியும் போது, கொலுசானது குதிகால் நரம்பில் உரசிக் கொண்டே இருக்கும். இதனால் மூளைக்குச் செல்லும் உணர்ச்சி அலைகள் கட்டுப்படுத்தப்படுகின்றது

மெட்டி

அம்மி மிதித்து மெட்டி போடுவது திருமணத்தின் முக்கிய அங்கமாகும். தாலியைப் போலவே திருமணமான பெண்களின் மற்றுமொரு அடையாளம் மெட்டியாகும். மெட்டி கால் பாதத்தின் இரண்டாவது விரல்களிலே அணியப்படுகிறது. மெட்டியானது மாதவிடாய் சுழற்சியை வழக்கமானதாக்கி கருத்தரிக்கும் செயல்முறைக்கு உதவுகின்றது. திருமணமான ஆண்களும் காலில் மெட்டி போட்டுக் கொள்வார்கள். பெண்கள் திருமணமானால் அவர்கள் அணியும் தாலியிலே தெரிந்துவிடும் ஆனால் ஆண்களுக்கு அவ்வாறில்லை. ஆண்கள் தங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை அறியத்தரவே கால்களில் மெட்டியணிந்து கொள்கின்றார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php