அனைத்தையும் நாடி  சூழல் உயிர்ப்பல்வகைமையில் தங்கியிருக்கும் இலங்கை பெண்களின் பொருளாதாரமும் சவால்களும்.

சூழல் உயிர்ப்பல்வகைமையில் தங்கியிருக்கும் இலங்கை பெண்களின் பொருளாதாரமும் சவால்களும்.

2022 Dec 29

ஒரு அபிவிருத்தி அடைந்து வரும் நாடான இலங்கையில் பெண் தொழிலாளர்கள் தேசிய பொருளாதாரத்தில் முக்கிய இடம் வகிக்கின்றனர். பெருந்தோட்டத்துறை, விவசாயத்துறை, சேவைத்துறை, கைத்தொழில் துறை என்று அனைத்து தொழில்துறைகளிலும் பெண்களின் வகிபாகம் உயர்ந்து காணப்படுகின்றது. அதிலும் சூழல் சார்ந்து தொழில் புரியும் பெருந்தோட்டத்துறை மற்றும் விவசாயத்துறையில் ஒப்பீட்டளவில் ஆண்களை விடவும் அதிகமாக பெண்களே தொழில் புரிகின்றனர்.

அந்தவகையில் சூழலில் தங்கியிருக்கும் பெண்களின் பொருளாதாரமானது மாறிவரும் சூழல் சமநிலையால் பல்வேறு தாக்கங்களை எதிர்கொண்டுள்ளது. இது உயிர்ப்பல்வகைமையின் இழப்பிலும், காலநிலை மாற்றம் உள்ளிட்ட விடயங்களிலும் நேரடியாக தொடர்புப் பட்டதாகும். எனவே நிலைபேறான விதத்தில் பெண்களின் பொருளாதாரத்தை சூழலுடன் இணைத்து பாதுகாப்பதற்கான திட்டங்கள் வகுப்பது அவசியமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச உயிர்ப்பல்வகைமை மாநாடானது (COP 15) சீனாவின் தலைமையுடன் கனடாவின் மொன்ட்ரியல் நகரில் இடம்பெற்றது. இதன்போது அனைத்து ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளும் பங்குபற்றி 2030 ஆம் ஆண்டில் அடைய எதிர்ப்பார்க்கப்படும் இலக்குகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளன. உயிரியல் பன்முகத்தன்மை குறித்த சர்வதேச வரைபை கடந்த வருட ஜூன் மாதம் கென்யாவின் தலைநகர் நைரோபியில் ஒன்று கூடி நாடுகள் கலந்துரையாடின.

அந்தவகையில் பெற்றுக்கொள்ளப்பட்ட அபிப்பிராயங்கள், ஆலோசனைகள் என்பவற்றின் அடிப்படையில் மொன்ட்ரியல் மாநாடு பல்மட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டு இறுதி வரைபை பூர்த்திச் செய்தது. இவ்வரைபின் படி 2030 ஆம் ஆண்டில் 30 சதவீதமான நிலப்பரப்பு, சமுத்திரங்கள், கரையோரப் பிரதேசங்கள், நன்னீர் ஆகியவற்றை பாதுகாப்பதற்கும், தீங்கு விளைவிக்கும் விடயங்களுக்கான அரச மானியங்களை 500பில்லியன் அமேரிக்க டொலர்கள் வரை குறைப்பதற்கும், உணவு கழிவுகளை பாதியாக குறைப்பதற்கும் உடன்பாடு எட்டப்பட்டது.

அந்தவகையில் இந்த வரைபானது 04 இலக்குகளின் கீழ் 23 நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்தப் பட்டியலில் 22ஆவது நோக்கமானது பால்நிலை சமத்துவம், சம பங்கீடு மற்றும் முடிவெடுப்பதில் பெண்களுக்குச் சமமான அதிகாரமளிப்பு என்பவற்றை மையமாகக் கொண்டது. மேலும் இளைஞர்கள், பழங்குடி சமூகங்கள், சிறுபான்மைச் சமூகங்கள் ஆகிய குழுக்களுக்கும் சூழல் வளங்களை அவற்றின் மீதான உரிமையை உறுதி செய்வதை 22 ஆவது இலக்கு முக்கியத்துவமளிக்கின்றது.

அதனடிப்படையில் இலங்கையில் பெண்கள் சூழல் சார்ந்த வளங்களுடனான அணுகல் சவால் நிறைந்துள்ளமையை காணமுடிகின்றது. பல்வேறு விதமான சமூக, பொருளாதார, பண்பாட்டு ரீதியாக அவர்களுக்கான மட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. சூழல் வளங்களை சார்ந்து அவர்கள் தமது நாளாந்த வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டிருந்தாலும் அவ்வளங்கள் மீதான முழுமையான உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அதேபோல் வளப்பகிர்வில் ஒரு சமமற்ற தன்மை பெண்களுக்கும், சிறுபான்மை இனங்களுக்கும் இடையில் பேணப்படுகின்றது.

உதாரணமாக பெருந்தோட்டங்களில் வாழும் மலையக மக்களில் பெரும்பான்மையானோர் தேயிலை, இறப்பர், மற்றும் தென்னை ஆகிய பெருந்தோட்ட தொழில்துறைகளிலேயே தமது அன்றாட வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டுள்ளனர். இவர்களில் கணிசமானோர் பெண் தொழிலாளர்களாவர். இவர்களின் முழுமையான பொருளாதார ஆதாரங்கள் உயிர்ப்பல்வகைமையில் தங்கியுள்ளது. ஆனாலும் இம்மக்களை ஒரு சிறுபான்மை இனக்குழுவாக அடையாளப்பபடுத்தப்படுவதன் காரணமாகவும், அவர்களில் பெரும்பாலான தொழிலாளர்கள் பெண்களாக காணப்படுவதாலும் தொடர்ச்சியாக அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

இலங்கையில் மத்திய மலைநாட்டிலும், தென்பகுதிகளிலும் சிதறி வாழும் மலையகத் தொழிலாளர்கள் 100 சதவீதம் இயற்கை தேயிலை, இறப்பர், தென்னை ஆகிய பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைகளில் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரச காணிகளில் தனியார் குத்தகைக்கு எடுத்து பயிர் செய்யப்படும் இந்த பெருந்தோட்டங்களில் நிலவுரிமையானது இதுவரை இந்த பெண்களுக்கும், சிறுபான்மைச் சமூகங்களுக்கும் வழங்கப்படவில்லை. அந்நிய நிலத்தில் இவர்கள் தொடர்ந்து கூலிகளாகவே தொழில் புரிகின்றனர்.

ஐக்கிய நாடுகளின் சர்வதேச உயிர்ப்பல்வகைமை வரைபானது தனது 4 இலக்குகளில் பெண்கள், மற்றும் சிறுபான்மை குழுக்களுக்கான வளப்பங்கீடு சமமானதாகவும், நிலைபேறானதாகவும் இருக்க வேண்டியதை உறுதி செய்வதை அடிப்படையாக கொண்டதாகும். எனவே இம்மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுற்றாடல்துறை அமைச்சர் கலந்து கொண்டார். எனவே இங்கு எடுக்கப்பட்ட முடிவுகளில் இலங்கை அரசும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நிர்ப்பந்தத்தை கொண்டுள்ளமை உணரப்பட வேண்டும். மேலும் பொதுவாகவே அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் இவ்வாறான சூழல் சமநிலை இன்மை பிரச்சினைகளும் உள்ளுர் சமூகங்களின் அன்றாட சவால்களும் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கும். அந்தவகையில் தான் இலங்கையிலும் பெண்களுக்கு உயிர்ப்பல்வகைமையின் வளப்பங்கீடும், சம அதிகாரமும் வழங்கப்படுவதில்லை. நிலைபேறான அபிவிருத்தியை நோக்கி தேசிய வேலைத்திட்டங்கள் திட்டமிடப்படும் போது சூழல் சார்ந்தும், சிறுபான்மை குழுக்கள் மற்றும் பெண்கள் சார்ந்தும் கவனமெடுப்பது ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.

குறிப்பாக இலங்கையின் வடக்கு – கிழக்கு பிரதேசங்கள் 30 வருடகால உள்நாட்டுப் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களாகும். இப்பிரதேசங்களில் பெரும்பாலும் தமிழ் சிறுபான்மையினரே வாழ்கின்றனர். இவர்களின் சமூக, பொருளாதார அடிப்படைகள் யுத்தத்தின் காரணமாக சிதைவடைந்துள்ளன. இங்கு இன்று அதிகமான பெண் தலைமைக் குடும்பங்கள் உள்ளன. அவர்களுக்கான நிலவுரிமையானது முழுமையாக உறுதிச்செய்யப்படவில்லை. மறுபுறம் தொடர் யுத்தத்தின் காரணமாக உயிர்ப்பல்வகைமையும் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் வனங்கள் யுத்தத்தின் காரணமாக அதிகமான உயிர்ப்பல்வகைமை இழப்பை எதிர்கொண்டன.

எனவே இங்குள்ள சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரத்தையும், பிரதேசத்தின் பல்லுயிர் பாதுகாப்பையும் ஒருமிக்க பாதுகாப்பதற்கான திட்டங்களை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும் பல்லுயிர் மாநாடு (COP15) இன் இலக்கு 04 இல் குறிப்பிடப்பட்டுள்ளதன் படி இந்த இழப்புக்களை மீள்கட்டமைக்க தேவையான நிதி, தொழில்நுட்பம், ஒத்துழைப்பு என்பவை தொகுக்கப்பட்டு பரிமாறக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு என்பதையும் இலங்கை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆந்த வாய்ப்புக்களை பயன்படுத்துவதற்கான மூலோபாய திட்டங்களை வகுக்க வேண்டும்.

அதேபோல் CBD (COP15) மாநாட்டின் முக்கியமான இலக்குகளில் ஒன்று கரையோரப் பிரதேசங்களை பாதுகாப்பதாகும். இலங்கையை பொருத்தவரை நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டுள்ளது. மேலும் கடல்சார் மீன்பிடித் தொழில்துறையில் கணிசமான பெண் தொழிலாளர்கள் தொழில்புரிகின்றனர். அவர்கள் பெரும்பாலானோர் தமது அன்றாட வாழ்வாதாரத்துக்கு கடற்றொழிலை நம்பி இருப்போர். அவர்களின் வளங்கள் என்று எதுவும் இல்லை. ஆனால் இயற்கை வளங்களை தமது சொத்தாக வைத்திருக்கும் முதலாளிமார் வளங்கள் மீதான ஆதிக்கத்தைச் செலுத்துகின்றனர். இவர்களின் நோக்கம் மிகை இலாபம் பெறுவதாக மட்டுமே உள்ளது. உயிர்ப்பல்வகைமையின் பாதுகாப்போ, சிறுபான்மை குழுக்கள் மற்றும் பெண்கள் மீதான கரிசனையோ இல்லை. மேலும் COP15 முன்வைத்திருக்கும் 23 நோக்கங்களில் முதன்மையான நோக்கமாக கடல்சார் பாதுகாப்பு காணப்படுகின்றது. இதனை விசேட கவனமெடுத்து 2030 ஆம் ஆண்டுக்குள் கரையோர பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் மீனவ சமூகங்களின் பெண்களுக்கான வளப்பங்கீட்டினை சமாந்தரமாக்குவதங்கான தேசிய வேலைத்திட்டத்தை இலங்கை துரிதப்படுத்த வேண்டும்.

மேலும் GENDER FOR BIODIVERSITY சர்வதேச அமைப்பின் பிரதிநிதி திருமதி. மிருனாளினி ராய் அவர்களை இவ்விடயம் சார்பாக நேர்காணல் செய்தபோது அவர் கூறியதாவது “நைரோபி மாநாட்டில் குறிப்பிட்ட சில நாடுகள் மட்டுமே பெண்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் CBD வரைபை ஏற்றுக் கொண்டன. அதில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இம்முறை மொன்ட்ரீயல் மாநாட்டில் பெண்கள் தொடர்பான இலக்காக உள்ள நோக்கத்தை (TARGET 22) அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. இது ஒரு ஆரோக்கியமான விடயமாகும். முக்கியமாக அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இலங்கை விடயத்திலும் பெண்களுக்கான வளப்பங்கீடு, சமவாய்ப்புகள் என்பது உறுதி செய்யப்பட வேண்டும்” என்றார்.

இவற்றை தொகுத்து நோக்கும் போது சர்வதேச சுற்றுச்சூழல் வரைபை CBD (COP15) இலங்கையும் ஏற்றுக்கொண்டுள்ள அடிப்படையில் அங்கு குறிப்பிடப்பட்டுள்ள 23 நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தேசியக் கொள்கைத் திட்டம் ஒன்றை வடிவமைக்க வேண்டும். ஒரு முக்கியமான உயிர்ப்பல்வகைமை வலயம் என்ற ரீதியில் இலங்கையின் முன்னேற்றமானது ஆசியாவுக்கான வளமாக அமையும்.

அருள்கார்க்கி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php