நாடி Review கருக்கலைப்பு

கருக்கலைப்பு

2022 Dec 28

திருமணமாகி கருவுற்றிருக்கும் ஓர் பெண் தன்னுடைய தனிப்பட்ட தொழில்முறை குறிக்கோள்கள் மற்றும் இலக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து “இப்போதைக்கு குழந்தை வேண்டாம்” என தன்னுடைய கருவைக்கலைப்பதும் அவள் எடுக்கும் அந்த முடிவு எந்தவித நெருடல்களிற்கோ , குற்றவுணர்விற்கோ  சமய சமூக அச்சத்திற்கோ உள்ளாகவேண்டிய ஓன்று அல்ல என்பதுபோல் மருத்துவ துறை சார்பாக எடுத்துரைப்பதுபோல் அமைந்த ஓர் மலையாளத் திரைப்படம்தான் சாரா! காலங்காலமாக கரு ஓன்று அழிக்கப்படுவது மகா பாவம் என்பதுபோலவும் அது ஓர் கொலைக்கு சமம் அப்படி கலைக்கும் பெண்ணானவள் ஒழுக்கக்கேடானவள் என்பதுபோலவும் மட்டுமே சித்தரிக்கப்பட்டு வந்த திரைப்படங்களை பார்த்துவளர்ந்த எனக்கு இந்த திரைப்படம் பெரிதும் மாறுபட்டதாக இவ்வாறான ஓர் நடவடிக்கைக்குப் பின்னாலிருக்கும் ஓர் பெண் சார்பான நியாயத்தை உணர்த்துவதாகவும் அமைந்ததால் இந்த திரைப்படம் பற்றி இங்கே குறிப்பிட்டிருந்தேன்.

கரு கலைப்பு தொடர்பான சட்டங்களும் பண்பாட்டு நோக்கங்களும் உலகம் முழுவதும் வேறுபடுகின்றன. கருக்கலைப்புக்கு எதிரானவர்கள் கருவோ, முளையமோ முதிர் கருவோ மனித உயிருக்குச் சமமானதென்று வாதிடுகின்றனர். கருக்கலைப்பு ஆதரவாளர்கள் கருவை வளரவிடுவதும் அழிப்பதும் அதனை சுமக்கும் பெண்ணின் உரிமை என வாதிட்டு வருகின்றனர் கருக்கலைப்புக்கு எதிராக மிகக் கடுமையான சட்டங்களை அமுல்படுத்தும் உலக நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது என்கிறபோதிலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் தாய் இறப்புக்கான மூன்றாவது பொதுவான காரணியாக பாதுகாப்பற்ற கருக் கலைப்பு என்பது நம் நாட்டில் ஏற்படுவது மிகப்பெரிய முரண். நம் நாட்டில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு காரணமாக 10 முதல் 13 வீதமான தாய்மார்கள் உயிரிழப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இதனடிப்படையிலேயே இலங்கையில் கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டியதன் அவசியம் பற்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு துறை சார்ந்தோரால் அறிவுறுத்தப்பட்டு வருகின்றபோதிலும் , அதில் சில நடைமுறைச் சிக்கல்களை மத ரீதியில் எதிர்கொண்டதினால் இலங்கை அரசு இதுதொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் அமுல்படுத்தவில்லை என்றே கூறவேண்டியுள்ளது . எனக்கு தெரிந்த ஓர் பெண் வழக்கறிஞரிடம் இதுபற்றி நான் வினவியபோது , அவர் கூறியதாவது இலங்கையின் சட்டப்பிரகாரம் ( Section 303/ 304/305/306 of the Penal Code )ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றும் நோக்கத்தைத் தவிர, வேண்டுமென்றே கரு கலைப்பினை ஏற்படுத்துபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

அத்தோடு அவ்வாறு கருக்கலைப்பு செய்யப்பட்டவர் ஒரு சிறுமி என்பது உறுதிப்படுத்தப்பட்டால், தண்டனை ஏழு ஆண்டுகளாக அதிகரிக்கலாம். அதேபோல் கருக்கலைப்பு செய்பவருக்கும், கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்ணுக்கும் இதே தண்டனைகள் வழங்கப்படும் எனச் சட்டம் சொல்கின்றது. பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண்களுக்குக் கருக்கலைப்பு செய்வதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என பலர் இன்று அரசுக்கு அழுத்தம் கொடுத்துவருவதும் குறிப்பிடத்தக்கது . சில வருடங்களுக்கு முன் இலங்கையின் சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின்பிரகாரம் பாலியல் துஷ்பிரயோகம் , 16 வயதுக்கு கீழ் கர்ப்பம் தரித்தல் ( பாலியல் வன்முறை), 12-ஆம் வாரம் கருவில் தீவிர குறைப்பாடு (serious foetal impairments) போன்ற சந்தர்ப்பங்களில் கருக்கலைப்புக்கு அனுமதியளிக்கும் வகையில் கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர மருத்துவர்கள் குழுவொன்றினால் பரிந்துரைகள் செய்யப்பட்டதுடன் இவ்வாறான கருக் கலைப்புக்கான சட்டரீதியான அணுமைதியினை அரச மருத்துவமனைகளுக்கு மட்டுமாவது கொடுக்கும்போது முறைகேடுகள் இடம் பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லாமல் போவதோடு இவ்வாறான நடவடிக்கைகளை ஊக்குவிப்பது போலவும் அமையாது என சட்டமருத்துவர்களால் எடுத்துரைக்கப்பட்டது எனினும் பௌத்தம்  கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மத தலைவர்கள் எந்தவொரு காரணங்களுக்காகவும் கருக்கலைப்பு என்பது சட்ட ரீதியாக அனுமதிக்க முடியாது எனவும் மத அடிப்படையில் அது தவறான செயல் எனவும் கடும் எதிர்ப்பினை தெரிவித்தமையினால் சுகாதாரத் துறையின் இந்த பரிந்துரையானது இன்றுவரையில் இழுபறி நிலையிலேயே உள்ளதெனலாம் .

உண்மையில் இவ்வாறான சட்ட மூலங்கள் அதன் பின்விளைவுகள் பற்றி ஆராயப்படாமல் , மத அடிப்படையில் மட்டும் நோக்கப்படுவதென்பது கரு கலைப்பு விடயத்தில் போலி மருத்துவர்களையும் , போலியான நாட்டு வைத்தியர்களையும் உருவாக்குவதுடன் , சட்டத்திற்கு புறம்பான கருக்கலைப்புக்களை ஊக்குவித்து அதன்மூலம் உயிர் இழப்புக்களுக்கு வித்திடும் என்பதும் மறுக்கவியலாது உண்மை .
அநேகமான வளர்ந்த நாடுகளில் , பொதுவாக ஒவ்வொரு நாட்டினதும் சட்ட நடைமுறைக்கு உட்பட்டு, மருத்துவத்தில் பாதுகாப்பான முறைகளைக் கையாண்டு கருக்கலைப்பு செய்யப்படுகின்றது. அது அந்தந்த நாட்டு மக்களது கண்ணோட்டத்தில் மனித உரிமை பேணலாகவும் , பெண் சுதந்திரமாகவும் கருதப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

உண்மையில் இந்த கருக்கலைப்பு பிரச்சினையானது இன்று நேற்றல்ல நீண்ட வரலாற்றினையே கொண்டது முற்காலத்தில் பலவகையான முறைகள் மூலம் கருக்கலைப்புச் செய்து வந்தனர். கருக்கலைக்கும் மூலிகைகளைப் பயன்படுத்தல், கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தல், மற்றும் பல மரபு சார்ந்த முறைகள் என்பன இவற்றுள் அடங்கும். தற்கால மருத்துவத்தில், மருந்துகள் கொடுப்பதினாலும், அறுவைச் சிகிச்சை மூலமும் கருக்கலைப்புகள் செய்யப்படுகின்றன. கருக்கலைப்பு செய்வதனால் சில பின்விளைவுகளும் பெண்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர் . அதாவது தாய்மாருக்கு கருப்பையில் கட்டிகள் அல்லது நீர்க்கட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளதாம். இவை உடனே ஏற்படாவிடினும் நீண்டகால இடைவெளியில்கூட உருவாகும் வாய்ப்புக்கள் அதிகம்.

அடுத்த குழந்தை கருப்பையில் தங்குவதில் பிரச்சினை ஏற்படலாம் எனக்கூறப்படுவதோடு , கருக்கலைப்பு செய்வதால் கர்ப்பப்பை வாய் சுருங்கி அடுத்தாக பெற்றெடுக்கும் குழந்தை குறைப் பிரசவத்தில் பிறக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது . குறிப்பிட்ட பெண்ணானவள் ரத்தசோகை ரத்தப்போக்கு போன்றவைக்கும் உள்ளாக நேரிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php