அனைத்தையும் நாடி  “சூப்பர் மாம் ” எனும் கைவிலங்கு

“சூப்பர் மாம் ” எனும் கைவிலங்கு

2023 Jan 21

நல்ல தாய் …!

ஒரு பெண் தான் ஒரு நல்ல தாய் என்பதை தனக்கும் தன் குடும்பத்திற்கும் இந்த சமூகத்திற்கும் உணர்த்துவதற்காக கொடுக்கும் விலை மிக அதிகமானது . அதற்காக தன் வாழ்நாள் முழுவதையும் செலவிடுகின்றாள். சரியாகச் சாப்பிடாமல் சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் தூங்காமல் பிள்ளைகளுக்காக, பிள்ளைகளின் வளர்ச்சிக்காகவே தங்கள் நேரத்தைச் செலவிடும் தாய்மார்கள்தாம் இங்கே அதிகம். தம்பதிகள் இருவரும் இணைந்து குழந்தையை ஆசை ஆசையாக பெற்றெடுத்தாலும் அவர்களை வளர்க்க வேண்டிய பொறுப்பு பெண்கள் மீது மட்டுமே திணிக்கப்படுகிறது என்பதுதான் உண்மை.

பழங்கால சமூக பழக்க வழக்கங்களில் இருந்து நாம் எவ்வளவு முன்னேறி வந்திருந்தாலும் குழந்தை வளர்ப்பு விஷயத்தில் இன்றளவும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.உலகளவிலும் குழந்தைகளை வளர்ப்பது பெண்களுக்கு கொடுக்கப்பட்ட கடமையாகவே ஆண்களால் பார்க்கப்படுகிறது. பாலின சமத்துவம் அடிப்படை உரிமை என பேசினாலும் பெண்களுக்கான சம உரிமையையும், சமத்துவத்தையும் கொடுக்க இந்த சமூகம் தயாராக இல்லை . இதற்கு முக்கிய காரணம், சமூக அமைப்பில் ஆண் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் சிறப்பு அந்தஸ்தும் பெண் குழந்தைகளின் மேல் சிறுவயது முதல் திணிக்கப்படும் கடமைகளும்தான் என்றால் மிகையாகாது

வீட்டு வேலை என்றால் பெண் குழந்தைகள் மட்டுமே செய்ய வேண்டும். ஆண் குழந்தைகளாக இருப்பவர்கள் தங்களின் துணிகளைக் கூட துவைத்துக்கொள்ள மாட்டார்கள், அவர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற சுதந்திரம் பிறப்பிலிருந்து வழங்கப்படுகிறது. குழந்தை பிறந்த பிறகு, அவர்களை குளிப்பாட்டுவது முதல் அன்றாடம் கவனித்து கொள்வது வரை முழுவதும் பெண்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பாக இருக்கிறது. குழந்தைகள் அழுதால் கூட நள்ளிரவில் பெண்கள் எழுந்து, தன் குழந்தையை சமாதானம் செய்து தூங்க வைக்க வேண்டும். எல்லா இடத்திலும் ஆண்கள் வெறும் பார்வையாளராக மட்டுமே அநேகமாக இருக்கிறார்கள் என்பது கவலைக்குரியதே .

தாய்மை, தியாகம் என்ற சொற்களில் மட்டுமே மனம் குளிர்ந்து போய் பெண்கள், பிள்ளை பெறுவதில் தொடங்கி குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வி, சாதனைகள், குழந்தைகளின் எதிர்காலம் என ஓடிஓடி உழைத்தே தலை நரைக்க ஆரம்பித்துவிடுகிறது. இதெல்லாம் அவர்களுக்குப் பிரச்சனை இல்லை. “உங்க பிள்ளை சுத்த தங்கம்”. “இப்படி ஒரு பிள்ளை பிறக்க நீங்க கொடுத்து வைத்திருக்கணும்” “உங்க பிள்ளை நீங்க வாங்கி வந்த வரம்” போன்ற ஓரிரு வாக்கியங்களைக் கேட்க வேண்டும் என்பதே அவர்கள் வாழ்நாள் தவம். அதைக் கேட்பதற்காகவே இங்கே தன் வாழ்நாள் முழுவதையும் பல பெண்கள் தொலைத்துக் கொண்டிருக்கின்றனர் இந்த நவீன காலத்திலும்.இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை , இதெல்லாம் பெண்ணாய் பிறப்பெடுத்தவளின் கடமை அந்த கடமையிலிருந்து இம்மியளவேனும் விலகிவிடக்கூடாது என்கிற வகையில்தான் அன்று தொட்டு இன்றுவரை இந்த சமூகத்தில் பெண் நோக்கப்படுகின்றாள். “பிள்ளை இருக்கும் வீட்டில் தலை வாரக்கூட நேரமிருக்காது” என்கிற பழைய கருத்தாக்கம் இன்றுவரையில் உலவிக்கொண்டுதான் இருக்கிறது அதாவது பிள்ளைகள்தான் முக்கியம் இனி உனக்காக அல்ல அவர்களுக்காக வாழ்வதே மிகச் சிறந்த வாழ்க்கை ” என திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு அதிலிருந்து இம்மியளவேனும் பெண் நகர்ந்துவிடாதபடி இறுக கட்டப்பட்டுவிடுகிறாள்.

இந்த தூய்மையான தாய்மை போதையிலிருந்து ஒரு பெண் கொஞ்சமேனும் சுதாகரித்து தனக்காகவும் சிறிது நேரத்தை ஒதுக்க நினைப்பாளேயாயின் அவள் பயங்கர குற்றவுணர்விற்கு உள்ளாக்கப்படுவாள் என்பதே யதார்த்தம். இருபத்து நான்கு மணிநேரமும் குழந்தை பராமரிப்பு வீட்டு பராமரிப்பு என உழன்றுகொண்டேயிருக்கும் பெண் எப்போதாவது அழுத்தம் தாளாமல் வெடித்து குமுறும்போது அந்த நியாயம் எத்தனைபேரின் செவிகளுக்குள் ஏறக்கூடும்?

தெளிந்த அறிவுள்ள சமூகமாக இருக்கும் இன்றைய காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பு என்பது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது என சமூகம் உணர வேண்டும். குழந்தையை வளர்க்கும்போது, மனைவியின் பொறுப்பு என கணவர்கள் ஒதுங்கிக்கொள்ளாமல், என்னுடைய குழந்தை என்ற பொறுப்பை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியோடு கவனித்து கொள்ள வேண்டும் என்பதே இங்கே பல இளம் தாய்மார்களது எதிர்பார்ப்பாக இருக்கின்றது ஏன் யுகம்தோறும் பல தாய்மார்களதும் எதிர்பார்ப்பும் இதுவாகத்தான் இருந்திருக்கக்கூடும். ஆனால் அவர்கள் அதை வாய்விட்டுக் கேட்கவில்லை என்பதுதான் உண்மை.

ஓர் குழந்தை வளரத் தொடங்கும் போதே, அம்மாவைப் பார்ப்பதற்கும் அப்பாவைப் பார்ப்பதற்கும் பெரிய வேறுபாடுகளை இயல்பாகவே கற்றுக் கொள்கிறது. அப்பா நல்ல உடைகளை அணிந்து கொண்டு வேலைக்குச் செல்கிறார். குடும்ப பொருளாதாரத்தைப் பார்த்துக் கொள்கிறார். அம்மா வீட்டு வேலைகளை மட்டும் செய்யக் கூடியவள். எப்போதும் வேலை செய்து கொண்டு,அழுக்கு நைட்டி உச்சிக்கொண்டை என வியர்வை நாற்றத்தோடு எஞ்சியதை உண்டு வாழக் கூடியவளாக குழந்தையின் மனதில் பதிகிறது இன்றும் அநேக இல்லங்களில் . இது மாறவேண்டும் .. இந்த மாற்றம் நிகழ பெண்கள் மட்டுமே குழந்தை வளர்ப்பில் வீட்டு பராமரிப்பில் காலந்தோறும் உழன்றுகொண்டிருக்க வேண்டும் என்கிற பார்வை மாறவேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக “உனக்கு என்ன தெரியும் ?என்னதான் செய்கிறாயோ இவ்வளவு நேரமா?

வீட்டில் தானே இருக்கிறாய் அப்படியென்ன வேலை ?  போன்ற உச்சகட்ட எரிச்சல் வார்த்தைகளை கணவர்கள் கேட்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php