2023 Jan 18
புலம்பெயர் தமிழர்களானவர்கள் தற்போதைய சூழ்நிலையில் தாயகத் தமிழர்கள் இலங்கையில் எவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்? உண்மையில் அவர்களுக்கு என்னதான் தேவை? என்பதனை சரிவர புரிந்துகொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம். வடக்கு மற்றும் கிழக்கில் அரசாங்க கட்சியை சேர்ந்த இத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு இருக்கின்றதென்றால் அதற்கான காரணம் பத்துப்பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்த மனோநிலையில் மக்கள் தற்போது இல்லை என்பதே இலங்கையில் தங்களது எதிர்காலத்தினை கொண்டுநடத்தப்போகின்ற அந்த மக்களது தேவை என்ன அமைதியான சுபீட்சமான ஓர் வாழ்க்கை!
புலம்பெயர்ந்தோர் எப்படி இலங்கையின் நாட்டுநிலைமையை காரணம் காட்டி வெளிநாட்டிற்கு குடிபெயர்ந்து தம்முடைய சந்ததிகளுக்கு ஒரு நிம்மதியான சிறந்த வாழ்க்கைத்தரத்தினை பெற்றுக்கொடுக்கவேண்டும் என ஆசைப்படுகின்றார்களோ , நாளையே இலங்கையில் ஒரு யுத்தம் ஆரம்பித்தால் தமது பிள்ளைகளை அனுப்பி அவர்களது உயிர்கள் மாய்ந்துபோவதற்கு எப்படி விரும்பமாட்டார்களோ அதேபோலத்தான் இங்கிருக்கும் மக்களும்.
இந்த எண்ணத்தின் வெளிப்பாடுதான் ஒருகாலத்தில் முற்றுமுழுதாக வெறுத்தொதுக்கப்பட்ட அரசாங்க கட்சிகளுக்கு கிட்டத்தட்ட 50% மக்கள் வாக்களிக்கின்ற நிலைமையில் தற்போது நாம் இருக்கின்றோம் . எனினும் முற்றுமுழுதாக யாரும் அரசாங்கத்திடம் சரணடையவில்லை என்பதால்தான் சட்டரீதியாகவும் , பாராளுமன்றம் வாயிலாகவும் , வன்முறை தவிர்த்த அகிம்சைரீதியாகவும் அவர்களுடனான போராட்டங்களை தொடர்ந்தவண்ணம் இருக்கின்றோம் .ஆனாலும் பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் இன்னுமே பல கைதுகள் தொடர்ந்தவண்ணம் இருப்பதால் எந்தவொரு சராசரி அப்பாவி இளைஞனும் தனது வாழ்க்கையை இழந்துவிடக்கூடாது என நினைப்பதில் தவறேதும் இல்லையே ?
புலம்பெயர்தமிழர்கள் பலரது பார்வையில் “யுத்தத்திற்கு பின்னரான வாழ்வியலில் இங்குள்ள தமிழர்கள் அநேகர் அரசாங்கத்தின் அடிவருடிகளாகிவிட்டார்கள் என்றும் , இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவரும் அரசாங்கத்தையும் சிங்களவரையும் எதிர்த்துபோராடவேண்டும் என்பது போன்ற எண்ணமும் இருப்பது மாற்றிக்கொள்ளப்படவேண்டியவொன்று . அதுமட்டுமன்றி தாயகத்து தமிழர்கள் வெளிநாட்டுவாழ் தமிழர்களின் தயவினையே எல்லாவற்றுக்கும் எதிர்நோக்கியுள்ளனர் என்கிற பார்வையும் மாற்றமடையவேண்டியவொன்று . ஏனெனில் புலம்பெயர் சமூகத்தின் அடுத்த தலைமுறை பெரும்பாலும் தாயகத்தை மறந்துபோகும் என்பதுதான் யதார்த்தம் ( உண்மை சுடும் என்றாலும் சொல்லத்தான் வேண்டும் இல்லையா ?) அதுமட்டுமன்றி புலம்பெயர்ந்தவர்களில் நூற்றுக்கு எத்தனைபேர் .skil immigration என்ற அடிப்படையில் குடிபெயர்ந்திருக்கிறார்கள் ?
இவர்களுடைய தனித்திறமையை பாராட்டி எந்தவொரு நாடும் அவர்களை உள்வாங்கிக்கொள்ளவில்லை, எங்களுடைய நாட்டு நிலைமை , இங்கிருந்த மனிதவுரிமை மீறல்கள் , குடும்ப உறவுகளுக்கு நிகழ்ந்த பாதிப்புக்கள் என பல சம்பவங்களின் கோர்வையாகவே அவர்களுக்கு அங்குசென்று வாழக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதற்கான அடிப்படை காரணமே வடக்குகிழக்குவாழ் தமிழர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள்தான் . ஆக, இந்த அடிப்படையில்தான் புலம்பெயர்தமிழர்கள் தாயகத் தமிழர்களுக்கு ஏதேனும் உதவிகள் செய்யவேண்டும் என்கிற ஓர் சிறிய எதிர்பார்ப்பு , கடமை இருக்கிறதென அநேகர் சொல்வதற்கு காரணம். ஆனால் அந்த எதிர்பார்ப்பே இன்று கேள்விக்குள்ளாக்கப்படுகின்றதென்றால்?
இலங்கையின் பொருளாதாரம் இன்று அதலபாதாளத்தில் வீழ்ந்துகொண்டிருக்கின்ற நிலைமையிலும் வடக்குகிழக்கில் உள்ள எத்தனை வீதமான மக்கள் வெளிநாட்டு உதவியை நம்பியிருக்கின்றார்கள் என்றால் மிகமிக சொற்பமான அளவினரே . வெளிநாட்டில் இருந்து சொந்த மாமன் மச்சானுக்கு பணம் வருவதென்பது அது அவர்களது தனிப்பட்ட விடையம் . அவர்கள் நினைத்தால் கொடுக்கலாம் அல்லது கொடுக்காமலும் விடலாம் ( வெளிநாட்டில் கஷ்டப்பட்டு உழைத்தனுப்பிய பணத்தில் இங்கே வெட்டியாக bike ஓடித்திரிகிறான் என்கிற புலம்பல் ஏற்றுக்கொள்ளமுடியாதவொன்று.
ஏனெனில் நீங்கள் அனுப்பியது உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவருகேயொழிய ஒருவேளை உணவுக்கே அல்லாடும் ஏழைக் குடும்பத்திற்கு அல்லவே? பின்னெப்படி உங்கள் பணத்தில் இங்கே ஆடம்பரம் செய்கின்றோம் என உங்களால் கூறமுடிகிறது? உண்மையில் வெளிநாட்டில் உள்ளவர்களின் பணம் வராவிட்டாலும் இங்குள்ளவர்கள் ஏதொவொருவகையில் பிழைத்துக்கொள்வார்கள் . அவர்களிடம் படிப்பிருக்கின்றது உழைப்பிற்கான திறமை இருக்கின்றது.கசக்கும் உண்மை என்ன தெரியுமா? இலங்கை மக்களினதும் , பலபேரின் தியாகத்தினாலும் உண்மையில் இன்று ஜாலியாக இருப்பது புலம்பேர் தமிழர்கள்தான்.
சேவை நோக்கத்திற்காக பணம் அனுப்புபவர்கள் தங்களது ஒரு ஆத்மதிருப்திக்காக செய்கின்றார்கள். ஆனாலும் யாரும் அதற்காக எங்கேயும் சென்று கையேந்திக்கொண்டு நிற்கவில்லை. எனினும் இந்த சேவை நோக்கத்திற்காக பணம் அனுப்புபவர்கள் மிக குறைந்த அளவினரே என்பது குறிப்பிடவேண்டியவொன்று . விடுதலைப்புலிகள் இருந்த காலப்பகுதியில் அவர்களது மிகப்பெரிய நிதிமூலமாக இருந்தது வெளிநாட்டுவாழ் தமிழர்களும், அவர்களோடு தொடர்புடைய அமைப்புக்கள், வர்த்தகங்கள் போன்றவையே.
இன்றும்கூட வெளிநாட்டில் அவர்கள் அப்படியேத்தானே இருக்கின்றார்கள்? அவர்கள் அந்த உதவிகளை இங்குள்ள அவசியம் உதவி தேவைப்படுவோருக்கு செய்யலாமே? நான் முன்பே சொன்னதுபோல் , வெளிநாட்டில் இருந்துவரும் அதிகமான உதவிகள் தங்களது சொந்த குடும்பத்திற்காகவும் , உறவினர்களுக்காகவும் சுயலாப முதலீடுகளுக்காகவுமே . இதைத்தவிர அவ்வப்போது சிறிய அளவில் ஏதேனும் காரணங்களுக்காக (வெள்ளம் , வறட்சி, சிலரது கல்வி நடவடிக்கைகள் மருத்துவ செலவுகள் ) உதவிகள் கிடைப்பதுண்டு.
உண்மையில் இந்த தாயக மக்களது இன்றைய தேவை என்ன ? பாரிய அளவில் முதலீடும் , அதை தொடர்ந்து பின்தங்கிய தமிழ் பிரதேசங்களில் தொழில் வளர்ச்சியும் . இதற்கு யதார்த்தமான ப்ராஜெக்ட் பிளான்கள் தயாரித்து பொறுப்புக்கூறலுடன்கூடிய ஊழலற்ற நம்பிக்கையான பொறிமுறையுடன்கூடிய செயல்திட்டம் போன்றவையே தேவை. சில புலம்பெயர்ந்த கும்பல்கள் அப்படியான முதலீடுகளுக்கு பணம் சேர்க்கின்றோம் எனக்கூறிக்கொண்டு அதை தாங்களே ஆட்டையை போட்ட சந்தர்ப்பங்கள் எங்களைவிட உங்களுக்கு அதிகமாக தெரிந்திருக்கக்கூடும் . இதனால் இந்த இரட்டைநிலை வியாபாரிகளை தவிர்த்து இனியேனும் உருப்படியாக ஏதேனும் செய்தால் நன்மைபயக்கும்.