கவிதைகள் உலகை நாடி பாம்புகள் பற்றிய புரிதலின் அவசியம்!

பாம்புகள் பற்றிய புரிதலின் அவசியம்!

2023 Jan 25

நம்மிடையே வினோதமான ஓர் பழக்கமுண்டு! பாம்புகளை தெய்வமாக வணங்குவோம் ஆனால் அதே பாம்பு வீட்டுக்குள்ளோ தோட்டத்தினுள்ளோ வந்துவிட்டால் அதை அடித்துக்கொல்வதற்கோ எரித்துக் கொல்வதற்கோ தயங்குவதேயில்லை! கொன்றுவிட்டு பிறகு செத்துப்போன பாம்பைப்பார்த்து பயந்துபோய் அதற்கு பூஜை செய்து பால் ஊற்றி புதைப்பதுமுண்டு சிலர். இது என்னவகையான மூட நம்பிக்கையென்பது புரியாத புதிரே! எனினும் பாம்புகள் பற்றிய முறையான புரிதல் இல்லாமல் இவ்வகையான மூட நம்பிக்கைகளை ஒழிக்கவே இயலாது இல்லையா ?

நம்மிடையே பாம்புகள் பற்றிய புணைவுகளுக்கும் புராணங்களுக்கும் பஞ்சமேயில்லை. உலகெங்கிலும் இதே நிலைதான். சிறுவயது முதல் தவறான பயங்கரமான கட்டுக்கதைகள், மிகைப்படுத்தப்பட்ட சம்பவங்கள், ஆன்மீக ரீதியிலான நம்பிக்கைகள் என்று புகட்டப்பட்டு வந்திருப்பதே பாம்புகள் பற்றிய அச்சத்திற்கு காரணம் எனலாம். அதுமட்டுமன்றி வர்த்தக நோக்கத்திற்காக அதி நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி சினிமாக்கள் மூலம் இதுபோன்ற பீதிகளை நிலைநிறுத்தி வருவதும் மக்கள் மனதில் இவ்வாறான நம்பிக்கைகள் எப்போதுமே அழியாது பாதுகாக்கப்படுகின்றது.

மக்களின் பொதுப்புத்தியில் கற்பிதங்களை உலவவிடுவதில் ஊடகங்களுக்கு பெரும் பங்குண்டு. அனகொண்டாவில் தொடங்கி நாகாத்தம்மன் படமெடுத்த இராமநாராயணம் வரை பாம்புகள் பற்றி கொஞ்சமும் புரிதல் இன்றியே படமெடுத்துள்ளனர் என்றால அதுதான் நிஜம். மனித இனத்தினைவிட மிக நீண்ட பாரம்பரியத்தினைக்கொண்ட பாம்பினங்கள் பற்றிய கட்டுக்கதைகளை உலவ விட்டதில் இராமநாராயணன் போன்றவர்கள் எடுத்த நாலாந்தர சினிமாக்களுக்கு முக்கிய பங்குண்டு .

பாம்புகள் பழிவாங்கும் பால் முட்டைகளை அருந்தும், தன்னை வணங்குவோர்க்கு உதவி செய்யும் என்றெல்லாம் கிராபிக் செய்து மக்களை மழுங்கடிக்கும் பண்டைய புராணங்களுக்கு இவர்கள் போன்ற இயக்குனர்கள் மெருகூட்டினர் என்றே கூறவேண்டும். ஏன் இதுபோன்ற மூடநம்பிக்கைகள் இல்லாதவர்களுக்குக்கூட இச்சாதாரி நாகங்கள் தொடர்பான தமிழ், ஹிந்தி திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் ஏதோ ஒருவிதத்தில் ஆர்வத்தினை தருகின்றதென்றே கூறவேண்டும்.

(நீயா, நானே வருவேன், அனகோண்டா, போன்ற திரைப்படங்களின் வசூல் வெற்றிகளும், நாகினி part1 /part2 /part3 / part4  நாகராணி போன்ற தொலைக்காட்சி தொடர்களின் TRB ரேட்டிங்குமே இதற்கு சான்று) அதுமட்டுமா இணையங்களில் உலவவிடப்படும் பல வீடியோக்கள் நம்மை மிரளவைத்து விடுகின்றன அவை முற்றிலும் பொய்யாக இருப்பினும்கூட . உதாரணத்திற்கு ஐந்து தலைகொண்ட நாகங்கள், சிவலிங்கத்தினை சுற்றிக்கொண்டு தெய்வீகமாக காட்டப்படும் நாகங்கள் என்பவை இவற்றுள் சில.

“பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் ” என்ற சொல்லாடல் உண்டு. அது உண்மைதான் எனினும் பழமொழிகளை மட்டுமன்றி பாம்புகள் பற்றின பல பொய்யான தகவல்களையும் நாமே உருவாக்கிவைத்திருக்கின்றோம் என்பதே யதார்த்தம்! நம்மிடையே உள்ள பாம்பு பற்றிய மூட நம்பிக்கைகளுள் ஒன்றுதான் அவை பால் குடிக்கும் என்ற அறிவியலுக்கு புறம்பான கருத்து. ஏனெனில் பாம்புகளுக்கு தலையின் முனையில் மூக்கு உள்ளது.

அதற்கு கீழேதான் பிளவுடைய நாக்குடன்கூடிய வாய் உள்ளது. பாம்பு பால் அருந்த வாயினை வைக்குமாயின் முதலில் மூக்குதான் பாலின் உள்ளே செல்லும் எனவே பாம்பு மூச்சடைத்து இறந்துதான் போகும். அதுமட்டுமா பாம்புகள் முட்டைகளை உறிஞ்சிக் குடிக்குமென்று பக்தர்கள் சொல்வதுண்டு ஆனால் அவற்றினால் எதையுமே உறிஞ்சிக்குடிக்கவோ கடித்து சாப்பிடவோ முடியாது. தன் உணவுகளான எலி, தவளை போன்றவற்றை எவ்வாறு அப்படியே விழுங்கி விடுகின்றதோ அப்படியே முட்டையினையும் விழுங்கிவிடும் சாரைப்பாம்பும் நாகபாம்புமே இணை சேரும் என்பதும் தவறான நம்பிக்கையே.

ஏனெனில் அவையிரண்டும் வெவ்வேறு வர்க்க பாம்புகள் . அவையிரண்டும் ஒருபோதும் இணைவதில்லை . மேலும் , நாகங்கள் மகுடி இசைக்கேற்ப படமெடுத்து ஆடும் என்பதும் தவறான எண்ணமே. ஏனெனில் பாம்புகளுக்கு புறச்செவி அமைப்போ , நடுக்காததமைப்போ இல்லை என்பதால் அவற்றால் ஒலி அலைகளை உணரவியலாது. ” மகுடி இசைக்கு மயங்கும் பாம்பு என்பது மிகப் பிரபலமான உவமை. ஆனால் அதற்கு கேற்கும் திறன் மிகக்குறைவு என்றபோதிலும் அதிர்வலைகளை உணரும் சக்தி உண்டு.

மேலும் சுற்றுப்புறத்தில் உள்ள வாசனைகளை உணரவே அவை நாக்கினை அடிக்கடி வெளியே நீட்டுகின்றனவாம். கொம்பேறிமூக்கன் என்கிற பாம்பு மனிதர்களை பழிவாங்க அவர்களை கடித்துகொல்வதோடு நில்லாது இறந்துபோனவர்களை சுடுகாடு வரை சென்றுபார்த்து உறுதிப் படுத்திக்கொள்ளும் என்கிற நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களிடம் உண்டாம்.

உண்மையிலேயே கொம்பேறிமூக்கன் விஷமற்ற ஓர் சிறியவகைப் பாம்பினம். தவறான இந்த நம்பிக்கையினால் பார்த்த இடத்திலேயே இப்பாம்புகள் அடித்துக் கொல்லப்படுகின்றனவாம். பாம்புகள் பற்றிய பல கேள்விகள் நம்மிடையே இருக்கக்கூடும் . அவற்றுள் ஒன்றுதான் ” இச்சாதாரி நாகங்கள் ” என்பவை உண்மையானவையா என்பது ! நூறு வருடங்களுக்குமேல் வாழும் நாகங்களுக்கு மனித உருவெடுக்கும் ஷக்தி உண்டென்று நம்பப்படுகிறது , ஆனால் யதார்த்தத்தில் ஓர் பாம்பின் ஆயுள் காலமே வெறும் 20 _ 30 ஆண்டுகள் மாத்திரமே என்கிறபோது இச்சாதாரி என்ற விடயமும் இங்கே பொய்த்துவிடுகின்றதல்லவா ?

அடுத்தது நாகமாணிக்கம் ! இன்றைய தலைமுறையினராகிய நாம் நாகமாணிக்கம் பற்றி சினிமாக்கள் வாயிலாகவோ, அல்லது நமக்குத் தெரிந்த பெரியவர்கள் அவர்கள் கேள்விப்பட்டதாக சொன்ன கதைகளின் மூலமாகவோ அறிந்திருப்போம் . நாக பாம்புகள் மிகவும் வயதான காலத்தில் அதுவரை அது எந்தவோர் உயிரினத்தின் மீதும் விஷத்தினை பிரயோகிக்காதவிடத்து அந்த விடம் நாகமாணிக்கமாக உருவாகியிருக்கும் என்ற நம்பிக்கை இந்தியா போன்ற நாடுகளில் இன்றுவரையில் உள்ளது.

ஆனால் உண்மையில் நாகமாணிக்கம் என்பது நிரூபிக்கப்படாதவொன்று என்ற புரிதல் நமக்கு வேண்டும்! இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் உலக நாடுகளின் “வியாபார சந்தையாக” இருப்பதால் நாகமாணிக்கம் என்ற பெயரில் எண்ணற்ற கற்களை வைத்து பிசினஸ் செய்யப்படுகின்றதெனலாம்! நாகமாணிக்கம் என்பது உண்மையா என்கிற விவாதங்கள் இன்றுவரையில் நடைபெற்றுகொண்டேதான் இருக்கின்றன.

எண்ணற்ற புராணங்களிலும் இதிகாசங்களிலும்கூட இதைப்பற்றிய குறிப்பிகள் உள்ளன. ஆயினும் மர்மங்கள் சுவாரஸ்யமானவை நம்மை தேடலுக்கு உற்படுத்துபவை அந்த உந்துதலே நாகமாணிக்கம் என்றவோர் விடயத்தினையும் இன்றுவரையில் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றதெனலாம். உலகில் இதுவரையில் சுமார் மூவாயிரம் பாம்பினங்கள் வரையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் வெறும் அறுநூறு பாம்புகள் மாத்திரமே விஷம் கொண்டவையாம்!

மேலும் அவ்வாறான விஷப்பாம்புகடிகள் அனைத்துமே உயிரைக் கொல்வதில்லை, விஷப்பாம்புக் கடியின் பாதிப்பென்பது உடலினுள் செல்லும் விஷத்தின் அளவினைப்பொறுத்தே அமைகின்றது . உண்மையில் பாம்புக்கடியினால் ஏற்படும் பல மரணங்கள் விஷத்தினால் அல்ல கடிபட்ட அதிர்ச்சியினால் அல்லது பாம்புக்கடி பற்றிய பீதியினால் சம்பவிப்பவையே . குறிப்பாக பாம்பின் தீண்டலுக்கு உள்ளானவர் பதட்டப்படுவதனால் உடலில் இரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரிக்க விஷம் வேகமாக பரவி மரணத்தினை ஏற்படுத்திவிடுகின்றனவாம்.

பாம்புகளினால் மனிதர்களுக்கு ஏதேனும் நன்மையுண்டா ? வன உயிரியல் பாதுகாப்புச் சட்டத்தின்படி பாம்புகள் அனைத்தும் சட்டபூர்வமாக பாதுகாக்கப்பட்டுள்ளன. அரசின் அனுமதி மற்றும் உரிமம் இன்றி அதனை பிடிப்பதோ அடித்துக் கொல்லுவதோ தண்டனைக்குரிய குற்றம். ஏனெனில் மருத்துவ ரீதியில் பாம்புகள் மனிதர்க்கு பெரும் உதவி புரிகின்றவை எனலாம். புற்றுநோய் தெரபி, மற்றும் இருதய நோய்க்கான தெரபியாக சில வகையான பாம்புகளின் கடும் விஷம் பாவிக்கப்படுகிறது. நாகபாம்பு ,கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், கட்டு விரியன் போன்ற இனவகைப் பாம்புகளின் விடம் பல ஆயிரங்களுக்கு விற்கப்படுகின்றது.

அதுமட்டுமன்றி பாம்புகளின் தோல் கைப்பை தயாரிக்க பயன்படுகின்றது . மேலும் வயல்களில் உள்ள எலிகளை உணவாகக் கொள்வதனால் மண்புழுக்கள் மட்டுமல்ல பாம்புகளும் விவசாயிகளின் தோழனே!இறுதியாக நாம் பார்க்கவேண்டிய முக்கியமானதோர் விடயமுண்டு “snake island”என அழைக்கப்படும் பாம்புகள் தீவு ! இந்த உலகில் மிகவும் ஆபத்தான, மனிதர்கள் நுழையவியலாத பல இடங்கள் உள்ளன  அவற்றில் ஒன்றுதான் அட்லான்டிக் கடற்பரப்பில் பிரேசிலில் உள்ள சாம்பாலோ என்கிற இந்தத் தீவு .

மர்மங்களும் ஏகப்பட்ட பொக்கிஷங்களும் நிறைந்ததாக சொல்லப்படும் இந்தத் தீவில் மிக மிக கொடிய விஷம்கொண்ட பல பாம்புகள் உற்பட சுமார் நான்காயிரம் பாம்புகள் வரையில் உண்டாம். இந்தத் தீவு பற்றித் தேடிப்பார்க்க விளையின் சுமார் பத்தாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லவேண்டும் . பிரேசிலின் நிலப்பரப்போடு ஒட்டியிருந்த இந்த நிலப்பகுதி கடல் மட்ட உயர்வினால், தாழ்ந்த பகுதி கடலினுள் மூழ்கிவிட மேட்டுப்பகுதி தீவாக தனித்து விடப்பட்டதாகவும் அவ்வாறு தனித்துவிடப்பட்ட பகுதியில் தங்கிவிட்ட பாம்புகளின் பகுதிதான் இவை எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

உலகிலேயே மிக மிக அதிகமான விஷத்தினைக்கொண்ட “golden lancehead “ போன்ற பாம்புகளின் மருத்துவ பலனுக்காக உள்ளூர் மீனவர்களாலும் , மற்றும் சிலரால் அப்பாம்புகள் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டு கள்ளச் சந்தையில் சுமார் இருபது இலட்சம் ரூபாய்வரை விற்கப்படுவதானால் இதுபோன்ற பல அரியவகை பாம்பினங்களை அழிந்தொழிந்து விடாது பாதுகாக்கும் பொருட்டு 1970ஆம் ஆண்டு பிரேசில் அரசால் குறித்த இத் தீவினுள் மனிதர்கள் யாரும் நுழைவது தடை செய்யப்பட்டது.

ஒருகாலத்தில் இத்தீவில் மனிதர்களை குடியேற்ற எவ்வளவோ முயன்றும் பாம்புகளின் கூட்டம்கூட்டமான தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்கவியலாது போனதும் இவ்விடத்தே குறிப்பிட்டாக வேண்டும். அதுமட்டுமன்றி அத்தீவு பற்றிய ஏராளமான மர்மமான கட்டுக்கதைகளும் இன்றுவரையில் உலாவி வருகின்றன. எது எப்பப்படியோ திகிலூட்டும் பல்வேறு பேய்க்கதைகளை போன்றதுதான் பாம்புக்கதைகளும். கேட்பதற்கும் பார்ப்பதற்கும் சுவாரஸ்யமான இவை எந்த அளவுக்கு நிஜமானவை என்பதற்கில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php