யாழ் சோனகர் தெரு – தமிழ் முஸ்லிம் மக்களின் சொல்லப்படாத கதைகள்!

உள்நாட்டு யுத்தம் நடைபெற்று சமாதானமான நாடுகளில் இலங்கையும் ஒன்றான போதும் இங்கு வாழும் தமிழர்களின் மன யுத்தம் இன்னும் சமாதானத்தை அடையவில்லை. உள்நாட்டு போரின் வடுக்களை சுமந்து நிற்கும் யாழ்ப்பாண தமிழ் சமூகங்களில் முஸ்லிம் இனத்தவர் பலர் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டு வாழ்பவர்களும் இருக்கிறார்கள். இவர்களுள் போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து, மீண்டும் மீள்குடியேறியவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை கதையையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் அக்கறையும் இருக்கிறது. யாழ் சோனகர் தெருவில் பிறந்து, வாழ்ந்து கொண்டிருக்கும் இம் மக்கள் பற்றி நாம் கேட்டறிந்த கதைகளை வாசகர்களுக்கு சொல்லும் கடமையில் விரிகிறது இக் கட்டுரை.

இலங்கையின் வடமாகாணத்தில், யாழ்ப்பாணத்தின் சோனகர் தெரு வீதியையும், அதன் அண்மைய பிரதேசங்களையும் பூர்வீகமாக கொண்ட தமிழ் முஸ்லிம் மக்கள் அனைத்து இன தமிழர்களுடன் ஒற்றுமையாக வசித்து வந்தனர். உள்நாட்டு போரின் தாக்கங்களை தாங்கியவாறு அன்றாட கடமைகளை நிறைவேற்றி வந்த அவர்களுக்கு 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி வாழ்நாளில் மறக்கவே முடியாத தருணமாக மாறியது. அன்றுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்து முஸ்லிம் மக்களையும் யாழ். உஸ்மானியா கல்லூரியில் ஒன்று கூட்டினர். திடிரென இன சுத்திகரிப்பு எனும் பெயரில் அவர்கள் அனைவரையும் ஊரை விட்டு வெளியேறுமாறு அறிவித்தனர். அதிரடியான இந்த அறிவிப்பால் மனப்பதற்றமடைந்த அம் மக்கள் வேறு வழி ஏதும் இன்றி சொந்த மண்ணையும் கனவுகளையும் தொலைத்து, அங்கிருந்து இடம்பெயர்ந்தனர்.

பதீலா

அன்று வேற்றுமை இன்றி ஒரே பாடசாலையில் பயின்றதும் சோனகர் தெருவில் விளையாடிய அந்த அழகிய காலங்களும் காலச்சுவடுகளாக பதிந்தவை. ஆனால் சற்றும் எதிர்பாராத நேரத்தில் துப்பாக்கி முனையில் இவ்வூரை விட்டு வெளியேறுமாறு அறிவித்தபோது 12 வயதே நிரம்பிய பெண் தான் அனுபவித்த இன்பங்கள் இன்றோடு முடிவுக்கு வந்துவிட்டதாக கருதியதாக 90களில் இடம்பெயர்ந்து சென்ற பதீலா என்பவர் தன் கதையில் எமக்கு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மெல்ல வளர்ந்து வரும் வளமிக்க எதிர்காலத்தை பாதியிலே பிடுங்கி எறியப்பட்ட செடிகளாக யாழ் முஸ்லிம் தமிழர்கள் இலங்கையின் பிற பகுதிகளான கொழும்பு, புத்தளம், பாணந்துறை போன்ற ஊர்களில் தஞ்சமடைந்தனர்.

அதன் பின் வருடங்கள் பல கழிந்த நிலையில் நாட்டில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்து 2008 – 2010 காலப்பகுதிகளில் உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் இடம்பெயர்ந்த அந்த மக்கள் தமது தாயகமான யாழ்ப்பாணத்துக்கு மீள்குடியேற தொடங்கினர். இதில் தனிக்குடும்பங்களாக சென்றவர்களில் பலர் பெரிய குடும்பங்களாக சோனகர் தெரு வீதிக்கு திரும்பினர். ஆனால் வெளியேற்றத்தின் போது எதிர்கொண்ட துன்பங்களைப் போல் திரும்பிய பின்னும் மேலும் பல இன்னல்களை இவர்கள் இன்றுவரை சந்தித்து வருவதாக தெரிவிக்கின்றனர். இங்கிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் சந்ததியினருக்கும் இங்கே சொந்த வீடு அல்லது சொந்த நிலத்திற்கான உரித்து இருக்கின்ற போதும், அவை சரிவர பதியப்படவில்லை… அரசாங்க வீட்டுத்திட்டங்களில் இன்னும் அவர்களுக்கு உரிமையான வீடுகள் வழங்கப்படவில்லை என இவர்கள் கூறுகிறார்கள். தாயாகத்தில் தமக்கான இருப்பிடம் இருக்கும் அல்லது கிடைக்கும் எனும் நம்பிக்கையில் திரும்பி வந்தவர்களுக்கு அது எட்டாக்கனியானது..!

2016ஆம் ஆண்டு சுமார் 3700 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளனர். ஆனால் இன்றுவரை அவர்களுக்கான முழுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும், அதில் சுமார் 700 குடும்பங்களுக்கு மேற்பட்டவர்களே தற்போது மீள்குடியேற்றப்பட்டிருப்பதாக இங்குள்ள சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றார்கள். வீட்டுத்திட்டம் வழங்குவதில் அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பலரால் வெவ்வேறு நிபந்தனைகள் மற்றும் பல தடைகள் ஏற்படுத்தப்படுவதாகவும், முஸ்லிம் மீள்குடியேற்றம் குறித்த செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமையும் இதற்கு காரணம் என்கிறார்கள். வெளியேற்றத்தின் முன் இருந்த வீடுகள், வேலைத்தளங்கள் என்பன மீள்குடியேறி வந்த பின் அழிவடைந்தமையால் உடனடியாக குடும்பங்களையும் தம்மோடு அழைத்து வந்து தங்க வைப்பதில் சிலர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இதனால் வீட்டுத்திட்டம் வழங்குவதும் தாமதப்படுத்தப்பட்டுள்ளது. அடிப்படை உறைவிட தேவையைக் கூட முழுமையாக பூர்த்திசெய்து கொள்ள முடியாத கட்டத்தில் கணிசமான மீள்குடியேறிய முஸ்லிம் மக்கள் தங்களுக்கான பிரதேச பதிவை ரத்து செய்துவிட்டு திரும்பி சென்ற கதைகளும் உண்டு.

90ஆம் ஆண்டு வெளியேற்றத்தில் வெளியேறிய மக்களில் அதிகமானோர் கல்விப்பொதுச் சாதாரண தர பரீட்சை வரை மட்டுமே கல்வி பயின்றவர்களாக இருந்துள்ளனர். இதனால் தொழில் தகமைக்கான மேல் படிப்பை தொடர முடியாத சந்தர்ப்பமும் சென்ற ஊர்களில் அமையவில்லை. அமைத்துக்கொள்ளும் வசதியும் அவர்களிடம் இருக்கவில்லை. எனவே வருமானத்திற்காக இவர்களில் அநேகமானோர் இன்று பழைய இரும்பு பொருட்கள் சேகரித்து விற்பது, இறைச்சி வியாபாரம் மற்றும் கூலித்தொழில் போன்ற தொழில்களையே செய்கின்றனர். புதுத்தொழில் ஒன்றை ஆரம்பிப்பதற்கான கல்வித் தகமையோ அதற்கான ஊக்கமோ நலிவடைந்த தன்மைதான் இங்கு மீள்குடியேறிய மக்களிடம் நிலவுகிறது.

பாஜிஸ் – இரும்பு வியாபாரி

இந்நிலையில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்களின் பொருளாதாரம் பல சிக்கல்களை தாங்கி தொடர்கிறது. மிகக் குறுகிய அப்பிரதேச சாலைகளில் இரும்பு மலைக்குன்றுகள் தென்படுவது ஒன்றும் அவ்வளவு அரிதான ஒன்றல்ல. காலை முதல் மாலை வரை தொடர்ந்து பழைய இரும்பு பொருட்கள் நிரம்பிய பெரிய கடைகளில் நின்று வேலை செய்பவர்களுக்கு அந்த கடினம் தெரியும். மீள்குடியேற்றத்தின் பின் ஆரம்ப நாட்களில் சைக்கிள் ஒன்றில் பழைய இரும்புகளை சேகரித்து விற்று வந்த பாஜிஸ் என்ற வியாபாரி ஒருவர் தற்போது இந்த இரும்பு வியாபாரம் தான் தன் குடும்பத்தை நடத்த கைகொடுப்பதாக கூறுகிறார். ஒருநாளில் இரண்டு அல்லது மூன்று லொறிகளில் கம்பி, இரும்பு சட்டங்கள், பார இரும்பு வளையங்கள் போன்ற பழைய பொருட்கள் அக்கடைகளுக்குள் இறக்கி வைக்கப்படுகிறது. அவற்றை வெட்டி அறுத்து தேவைக்கேற்ப கொழும்பு போன்ற நகரங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதில் வருமானம் என்பது சுமார்தான். இரும்புத்தொழிலை செய்யும் ஆண்களுக்கு அவ்வூரில் பஞ்சமில்லை. மேலும் பாஜிஸ், தன்னைப் போன்று தன் குழந்தைகளும் இதுபோன்ற பாதிப்புக்களையோ, தாக்கங்களையோ சந்திப்பதை விரும்பவில்லை. அவர்கள் கல்வியில் தேர்ச்சி பெற்று நல்லதொரு எதிர்காலத்தை பெறவேண்டும் என்பதையே இவரது பிரார்த்தனையாக கொண்டிருக்கிறார்.

அப்பிரதேச ஆரம்ப பாடசாலைகள் உள்பட மீள் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கல்வியின் முக்கியத்துவம் பெற்றோர்களுக்கு இல்லை என்பதும், அங்கு அடிப்படை பொருளாதார வளர்ச்சி இல்லை என்பது போன்ற காரணங்களை சுட்டிக்காட்டுகின்றனர். அதேசமயம் அங்குள்ள பாடசாலைகளில் நிர்வாக கட்டமைப்பில் ஒருங்கிணைப்பு இல்லை என்பதையும் அங்கிருக்கும் மக்கள் பொதுவாக முன்வைக்கின்றனர். அத்தோடு மீள்குடியேறி வந்த சில மாணவர்கள் கூட கல்வியை தொடர்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை, மாறாக பெரும்பாலும் பின்தொடரப்படும் இரும்புத்தொழிலுக்கு உள்வாங்கப்படுகின்றனர்! அவர்களுக்குள் ஏற்பட்ட போர் தாக்கமும் குடும்ப சூழலும் அவ்வாறு அவர்களை மாற்றியிருக்கிறது. இது தவிர போதைப்பொருளின் பரவலால் சில இளைஞர்கள் திசைமாறி செல்லும் சாத்தியமான சூழலும் இங்கு உருவாகியுள்ளது.

பாத்திமா பர்ஹானா – குழந்தைகளுக்கான உடை மற்றும் மாஃப்ளர் தயாரிப்பவர்

எந்தவொரு சமூகத்தையும் கட்டியெழுப்புவதில் பாரிய பங்காற்றுவது பெண்கள் தான்!
இருப்பினும் சோனகர் தெரு மற்றும் ஐந்து சந்தி பகுதிகளில் வாழும் தமிழ் முஸ்லிம் பெண்களை பொறுத்தவரை கட்டுப்பாடுகள் மற்றும் கோட்பாடுகளுக்கு பழக்கப்பட்டு, வயது வந்த பெண்களை பாடசாலை செல்லக் கூட சில குடும்பங்கள் அனுமதிப்பதில்லை. சமூகத்தில் பெண்களுக்கான சம உரிமை அவசியமும் இங்கே ஒரு சில இடங்களில் நிராகரிக்கப்படுகிறது. அவற்றை களைந்து தன்னார்வ சமூக நிறுவனங்களின் உதவியில் அங்கு மீள்குடியேறி வாழும் ஒருசில குடும்ப பெண்கள் சுய கைத்தொழில் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். குடும்ப வறுமையின் நிமித்தம் இவ்வாறு கைகொடுக்கும் தையல், பனை ஓலை பின்னுதல் போன்ற அழகியல் கைப்பணி வேலைகள் செய்யும் பெண்களும் பல சவால்களை சந்தித்து போராடி வருகின்றனர். குறிப்பிட்ட கட்டுப்பாடு எனும் பெயரில் பெண்கள் சமூகத்திற்கு வெளியே வருவதை கூட விரும்பாத சிலர் அவர்களின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளதாகவும், பெண் தலைமைத்துவ அங்கீகாரமும் பெரும்பாலும் மறுக்கப்படுவதாகவும் சமூக செயற்பாட்டாளர் ஸியானா தெரிவிக்கின்றார்.

றிஸ்மியா – பனை வேலை செய்பவர்

ஆண்களின் தொழில் ஸ்திரத்தன்மை இல்லாத பட்சத்தில் ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த பெண்களின் உழைப்பும் மிக அவசியமாகும் போது பெண்களுக்கான ஒத்துழைப்பு குறைகிறது என மேலும் அவர் கூறுகிறார். எனினும் ஆர்வம் காட்டும் சில குடும்ப பெண்களுக்கு தமக்கு தெரிந்த தொழிலை கற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்வில் சிறிது முன்னேற்றம் அடையச் செய்யும் முயற்சியில் சில அமைப்புடன் சேர்ந்து சில பெண்கள் செயல்பட்டு வருகின்றனர். இதைத் தவிர இவ்வாறு சுயதொழிலில் ஈடுபடுவோருக்கான சந்தைப்படுத்துதல், முகாமைத்துவ வழிகாட்டுதலுக்கான பயிற்சி என்பவை இல்லாததும் ஒரு பெரிய குறைபாடாக உள்ளது. இதனால் இத்தொழிலின் அடுத்த கட்ட முன்னேற்றம் ஸ்தம்பிதமடைவதாகவும் சுயதொழில் முயற்சியில் இருக்கும் பெண்கள் தெரிவிக்கின்றனர். அத்தோடு இத் தொழில்களுக்கான போதுமான மூலதனமும் இவர்களிடம் இல்லை.

அதேவேளை சோனகர் தெரு மீள்குடியேறிய மக்கள் தொடர்ந்து வரும் இடர்களை சமாளித்து தமக்கான வளர்ச்சிப் பாதையை தாமே உருவாக்கிக் கொள்ளும் தீர்வுகளுக்குள், அவ்வூரின் முக்கிய போக்குவரத்து பாதையான “ஐந்து சந்தி” சாலையை ஓர் வர்த்தக உப நகரமாக்கினால் மாற்றம் காணலாம் என்பது யாழ் முஸ்லீம் இளைஞர் சங்க தலைவரான அப்துல்லாவின் கருத்து. ஐந்து சந்தி என்பது யாழ்ப்பாண நகரத்துடன் குறுகிய நேரத்துக்குள் இணையும் சாலை ஆகும். இது மானிப்பாய், சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் காரைநகர் ஆகிய தொலைதூர ஊர்களில் இருந்துவரும் மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் என்பதோடு, மக்களுக்கான தொழில் வாய்ப்புகள் பெருகி மீள்குடியேறிய சோனகர் தெரு மக்களின் பொருளாதாரம் கட்டாயம் மேம்படும் எனவும் தெரிவிக்கின்றார் அப்துல்லா.

இங்கு இவர்களுக்கான உறைவிடத்திற்கான முழுமையான தீர்வை முதலில் பெற்றுத்தரும் பட்சத்தில் அதனைத்தொடர்ந்து ஏனைய பிரச்சினைகளான தொழில், கல்வி, பெண் சுயதொழில் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சனைகளும் தீர்க்கப்படும். எனினும் யாருடைய பொறுப்பில், எவருடைய வழி நடத்தலில் செல்வது என குழப்பங்கள் நிறைந்த பல முடிவில்லா கேள்விகளுடனான இவர்களின் சிக்கல்கள் நிறைந்த சமூக வாழ்வியல் கட்டமைப்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

யாழ் மண்ணில் சோனகர் தெரு, ஐந்து சந்தி பகுதிகளில் மீள்குடியேறி வாழும் தமிழ் முஸ்லிம் சமூகத்தினரின் பிரச்சினைகள் வெறும் கதைகளாக அடைபட்டு கிடக்காமல், என்றைக்காவது அவர்களின் வாழ்வியல் சார்ந்த அடிப்படை தேவைகளுக்காக எழுப்பப்படும் குரல் மேலும் ஓங்கி ஒலித்து, அவர்களுக்கான உரிமைகள் மீட்டுக்கொடுக்கப்படும் என்ற நம்பிக்கையுடன்…!

எழுத்து – ஜெஹருனி

இவர்களின் கதைகள் வீடியோ வடிவில் இப்போது உங்களுக்காக..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here