2023 Mar 17
கண்டி பேராதனை பகுதியிலிருந்து சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரத்திலிருக்கும் எம்பக்கே எனும் ஊறில் கம்பளை இராச்சியத்தில் மூன்றாம் விக்கிரபாகு மன்னனால் 14ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட எம்பக்கே முருகன் தேவாலயமானது இலங்கையின் பாரம்பரிய கட்டிடக்கலையின் மிகப்பெரிய பொக்கிஷம் என்றால் மிகையாகாது.
இந்தக் கோவிலின் செவிவழிக் கதை என்ன தெரியுமா?
கண்டி வியனமுழ எனும் இடத்தை சேர்ந்த பெர (மேள) வாத்தயக்காரன் ஒருவன் கடுமையான குஷ்ட ரோகத்தால் அவதியுற்ற போது தன்னை இந்த நோயின் அவலத்திலிருந்து மீட்டெடுக்கும்படி கதிர்காம கந்தனிடம் நேர்த்தி வைத்ததாகவும் அதன் பயனாக அவன் நோயிலிருந்து மீண்டதனால் மகிழ்ச்சியடைந்த அவன் வருடந்தோறும் கதிர்காமத்துக்குச் சென்று பூஜை வழிபாடுகள் செய்து கந்தப் பெருமானை வழிபட்டு வந்ததாகவும் எனினும் வயதாக வயதாக தன்னால் கதிர்காமத்துக்குச் சென்று கந்தப் பெருமானை வழிபட முடியுமா என்ற கவலை அவனை வாட்டியது.
ஓர்நாள் இந்தக் கவலையுடன் அவன் கந்தப் பெருமானை வணங்கிவிட்டு கோயிலுக்கருகாமையில் இருந்த கதிர மரத்தடியில் (கருங்காலி மரம் ) உறங்கிப்போய்விட கதிர்காமக் கந்தன் அவனது கனவில் தோன்றி எம்பக்க எனும் ஊருக்குப் போகும் படியும் ஊரில் நல்ல தகவல் கிடைக்குமென்றும் கூறினாராம். கனவின்படி எம்பக்க எனும் ஊருக்கு அவன் போன போது அவ்வூர் தச்சன் ஒருவன் கதிர மரம்(கருங்காலி மரம் ) ஒன்றை தரிக்கமுயன்ற போது ஐந்தாறு அடி உயரத்துக்கு அதில் இருந்து இரத்தம் சீறிப் பாய்ந்த தகவலைக்கூர உடனே அவ்விடத்துக்குச் சென்ற வாத்தியக்காரன் கதிர்காமக் கந்தன் தனக்கு கனவில் தோன்றி சொன்ன செய்தியைக் கூறினான்.
மகிழ்ந்து போன தச்சன் அறுசுவையுடன் கூடிய உணவுப்படைக்க வாத்தியக்காரன் பெரவாத்தியம் இசைத்து வழிபடத் தொடங்கினான். இன்றும் கூட இங்கு மூன்று வேளை பூசை வழிபாடுகள், உணவுப் படை யலுடனும் பெர வாத்திய இசையுடனுமே நடைபெறுகின்றன. கோயிலின் பிரதான மண்டபம் விசாலமாகவும் பெர வாத்தியம் இசைக்கவும் ஆடிப் பாடவும் ஏற்ற விதத்தில் வசதியாக அமைக்கப்பட்டுள்ளது மரத்திலாலான கலை நயமிக்கசெதுக்கல் வேலைப்பாடுகளுடன்.
கி. பி. 1370 ஆம் ஆண்டு கம்பளை இராச்சியத்தை 3ஆம் விக்கிரமபாகு மன்னன் ஆட்சி செய்தபோது மேற்படி எம்பெக்க என்ற இடத்தில் இவ்விதம் கதிர்காமக் கந்தனுக்கு வழிபாடு இடம்பெற்று வருவதைக் கேள்வியுற்று அங்கு ஒரு தேவாலயத்தை அமைக்க நன்கொடை வழங்கியுள்ளான். பின்னர் ஓர்நாள் மன்னன் தனது பல்லக்கில் ஏறி அவ்விடத்துக்கு விஜயம் செய்துவிட்டு திரும்பிச் செல்ல முற்பட்டபோது, பல்லக்கு ஒரு பக்கம் உடைந்து சாய்ந்து கொண்டதால் தொடர்ந்து செல்ல முடியவில்லை. இதனை வெறுமனே சாதாரண நிகழ்வாகக் கருதாத மன்னன் யானைத் தந்தங்களுடனும், வெள்ளிப் பூச்சுக்களுடனும் கூடிய அந்த விலையுயர்ந்த பல்லக்கினை மேற்படி தேவாலயத்துக்கே அன்பளிப்புச் செய்தான். இப்பல்லக்கு பூஜைப் பொருளாக இருந்து வந்துள்ளதுடன் இன்று இக்கோயிலின் அரும்பொருட் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மன்னனால் தேவாலயத்தின் பணிகளுக்கென 67 பேர் நியமிக்கப்பட்டதாகவும் இன்றும் இக்கோயிலின் நிர்வாகத்தை “அர்த்தன பணிக்கி” எனப்படுகின்ற பெர வாத்தியக்கார வம்சத்தினரே கவனித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கோவிலின் பூந்தோட்டத்தினை கவனித்துக்கொண்டிருப்பவர்கள் ‘கங்காணி வீட்டு’ (கங்காணிகெதர{தச்சன் பரம்பரை}) பரம்பரையினர் ஆவர். பிரதான நிர்வாகிகளாக விதானை ஒருவரும் வண்ணக்குரதல என்பவரும் நிலமேயால் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்றுவரையில் தேவாலயத்தின் பணி செய்பவர்களாக நியமிக்கப்பட்டுள்ள பத்து பங்குக்காரர்கள் பின்வருமாறு
1.கங்காணி வீடு
2.வீதியே வீடு
3.முல்கம்பல வீடு
4.கற்பலகை வீடு
5.மனந்திவெல
6.சியம்பலாகொட
7.ரன்கம
8.தும்பக்கே
9.தொடந்தெனிய
10.தலவத்துர
இவர்கள் இணைந்தே விமரிசையாக வருடாந்த பெரஹெர வைபவத்தை செய்து வருகின்றார்கள்
தேவாலயத்தின் கட்டிட அமைப்பினை நோக்கின்
தேவாலயத்தின் கட்டிடத் தொகுதி எட்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவற்றில் ரிட்டா கெதர (ஆபரணங்கள் வைக்கும் அறை) மற்றும் சிங்காசன மண்டபம் என்பன தேவாலயத்துக்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ளன. ஏனைய வாகல்கட, (நுழை வாயில்) மகா தேவாலயம் (கீழ் தேவாலயம்), முழுத் தென்கெய (மண்டபம்), வீ அட்டுவ (நெற் களஞ்சியம்), புதுகெய (புத்தபெருமான் கோயில்) என்பனவாகும்.
இத் தேவாலயத்தின் அனைத்து தூண்களும் இந்தியாவின் கேரளத்தில் இருந்து தருவிக்கப்பட்ட நன்கு முற்றிய வேங்கை மரங்களில் இருந்து குடைந்தெடுக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது. இச்சித்திர வேலைப்பாடுகளை உருவாக்குவதற்கு தலைமைச் சிற்பியாகச் செயற்பட்டவர் தெல்மட தேவேந்திர மூலாச்சாரியார் என்றும் இவர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் இறுதிப் பகுதியில் இலங்கைக்குப் புலம்பெயர்ந்த திராவிட கட்டிட பாணியில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர் என்றும் கூறப்படுகின்றது .இந்தியாவில் இஸ்லாமிய மன்னர்களின் ஆதிக்கம் ஓங்கியபோது கல் சிற்பிகளும் மரச் சிற்பக் கலைஞர்களும் இலங்கையில் வந்து குடியேறியதாகவும் இவர்களைக்கொண்டு அரசர்கள் விகாரைகள், தேவாலயங்கள் அமைத்த போது அவற்றில் திராவிட கலை மரபுகள் பொதிந்து காணப்பட்டன என்பதும் இவ்விடத்தே குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையிலேயே தெல்மட தேவேந்திர மூலாச்சாரியார் தலைமையின் கீழ் நூற்றுக்கணக்கான சிற்பிகள் இத்தூண்களில் மரச் சித்திர வேலைப்பாடுகளை செய்துள்ளனர். எம்பக்க தேவாலயத்தின் கூரையில் 26 வகை மரங்கள் ஒரு பலகை ஆணியுடன் பொருத்தப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது ‘மடொல் குருபாவ’ என்று அழைக்கப்படுகிறது.
இதன் மற்றுமொரு சிறப்பம்சம் எந்த விதமான இரும்பு ஆணி வகைகளும் பாவிக்கப்படாமல் முற்றிலும் மரப் பொறிமுறை வேலைப்பாடுகள் மட்டுமே கொண்டு முழுக் கூரையானது அமைக்கப்பட்டுள்ளமையாகும். பிரதானமான 5 கருப்பொருள்களின் கீழ் இந்த தேவாலயத்தின் செதுக்கல்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அவையாவன
1. கற்பனை விலங்கு உருவங்கள்
2. விலங்கு உருவங்கள்
3. மனித வாழ்கையுடன் தொடர்புபட்ட செதுக்கல்கள்
4. கரை அலங்காரம் (லீஸ்தர)
5. பூக்கள் கொடிகள் அலங்காரம்
பாரம்பரியமான சிங்கள அலங்கார வடிவமைப்புக்களில் காணப்படும் சிறப்பான கற்பனை வடிவமைப்புக்களில் பல எம்பக்க ஆலய மரச் செதுக்கல் வேலைப்பாடுகளில் காணப்படுகின்றன.
கற்பனையான பிராணிகளான பேரண்டப்பட்சி, இரு தலைப்பட்சி,கின்னரப்பெண் , யானைப் பட்சி (எற்கந்த லிகினியா), நாரிலதா, சரபெத்தியா, ரிஷப குஞ்சரம் போன்றனவும், தேவாலயத்தின் சமகால சமூக வாழ்கை நிகழ்வுகளைக் காட்டும் செதுக்கல்களாக றபான் இசைப்பவன், மல்யுத்தம்,குதிரை வீரன், நடன மாது, போர் வீரன்,குழந்தைக்குப் பாலூட்டும் தாய் போன்ற செதுக்கல் படைப்புக்களோடு, கரை அலங்கார வடிவமைப்புக்களும் அரும்பு,கல்பித்து, குந்திரிக்கன், போன்றனவும், தாவர வடிவமைப்புகளும் தாமரைப்பூ, பூங்கொடி போன்றனவும் செதுக்கல் வேலைபாடுகளாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
அண்மையில்கூட யுனஸ்கோவினால் இலங்கையின் பார்வையிடப்படவேண்டிய சிறந்த சுற்றுலாத்தளமாக இந்த எம்பக்கே தேவாலயம் அறிவிக்கப்பட்டிருக்கின்றமையானது இலங்கையராகிய நமக்கு மிகுந்த பெருமையளிக்கக்கூடிய விடயமே …
-ப்ரியா ராமநாதன்