2023 May 8
உலகின் மிக அழகான நாடுகளில் சுவிட்ஸர்லாந்தும் ஓன்று. வருடத்தில் எட்டு மாதங்கள் வெண்பனி மலைச் சிகரங்களால் சூழப்பட்டிருக்கும் இந்த சின்னஞ் சிறிய நாட்டின் பத்து சதவீத நிலப்பகுதிகள் மட்டுமே விவசாயம் செய்வதற்கு உகந்தது. சுமார் எட்டு கோடிக்கும் குறைவான மக்கள் தொகையினைக் கொண்ட இந்த நாட்டில் சில இயந்திரங்கள், நுண்ணிய இயந்திர பகுதிகள், கைக்கடிகாரங்கள், ஆடைகள் போன்றவை சிறிய அளவில் உற்பத்தி செய்யப்பட, உணவுப் பொருட்கள், பெட்ரோல், மின்சாரம் உட்பட அனைத்து அடிப்படை தேவைகளும் இறக்குமதியை நம்பியே உள்ளது. இங்கே நிதி சேவையும் சுற்றுலாவும் தான் நாட்டுக்கு மிகப்பெரிய வருமானத்தினை ஈட்டிக்கொடுக்கும் பொக்கிஷங்களாக உள்ளன என்றால் மிகையில்லை. இந்த தேசத்தின் மொத்த தொழிலாளர்களில் 71 சதவீதத்தினர் வங்கித் தொழிலில் ஈடுபடுபவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
உலகின் முதலீடுகளுக்கு மிகப் பாதுகாப்பானது எனப்படும் ட்ரிபிள் ஏ சான்று பெற்ற மீச்சுவல் பெனிபிட் நிறுவனங்களில் 28 சதவீதத்திற்கு மேல் சுவிட்சர்லாந்திலேயே உள்ளது. வங்கித் தொழில் சுவிஸ் நாட்டின் தேசிய தொழில். இந்த வங்கிகளில் அந்நிய நாட்டினரின் கணக்குகள் சேவிங்ஸ், கரண்ட் அக்கௌன்ட் என்று பிரிவுகளெல்லாம் இருக்காதாம். குறிப்பிட்ட அளவிற்குமேல் ஏற்றுக்கொள்ளப்படும் பணமெல்லாம் “wealth management”, அதாவது சொத்து நிர்வாகம் என்ற அடிப்படையில் ஏற்கப்படுகின்றனவாம். சில வங்கிகளில் மாத்திரம் ஓன்று அல்லது ஒன்றரை சதவீத வட்டி கொடுக்கப்பட, சில வங்கிகளில் அந்த வட்டி வீதம் கூட கொடுக்கப்படுவதில்லை. எல்லா வங்கிகளிலும் பணத்தை பாதுகாக்க கட்டணம் அறவிடப்படும். இதுதான் சுவிஸ் வங்கிகளின் பிரதான வருமானம் என்பதால் இந்த கட்டணங்கள் கூட ஒரே மாதிரியானவையாக இருப்பதில்லை. வங்கிகளின் மொத்த இருப்பு நாட்டின் செல்வமாக மதிப்பிடப்படுவதால் உலக அரங்கில் சுவிஸும் பண வலிமை மிகுந்த நாடாக மதிக்கப்படுகின்றது.
சுவிஸ் ஐரோப்பாவின் நடுப்பகுதியில் அமைந்தாலும் அது ஐரோப்பிய யூனியனில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் பட்டியலிலும் இடம்பெற விரும்பாமல் தனித்திருந்தாலும், கடந்த 2002ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உறுப்பினர் பட்டியலில் இணைந்துகொண்டது. இரண்டாம் உலகப் போரின்போது எந்த அணியுடனும் சேராமல் நடுநிலை வகித்ததுடன், ஜெர்மனி இங்கிலாந்து என இரண்டு நாடுகளுக்குமே ஆயுதம் விற்று இருந்தது சுவிஸ். அசையாத பாறை போல தன் நடுநிலையினை தொடர்ந்தும் நிலை நாட்டியதனால் முதலீடுகளுக்கு நம்பிக்கையான இடம் என்கிற பெயரைப் பெற்றது. இதனால் உலகின் பல பகுதிகளிலிருந்தும் யுத்த காலத்தில் பலர் தங்கள் சேமிப்புகளை பாதுகாப்பு காரணங்களுக்காக சுவிஸ் வங்கிகளில் கொண்டுவந்து குவிக்கத் தொடங்கினராம். இதை பயன்படுத்தி தமது நாட்டின் வருமானத்தினை அதிகரிக்க சுவிஸ் அரசு வங்கிகளுக்கான சில சிறப்பான சட்டங்களை இயற்றியது.
சுவிஸ் சட்டப்படி வங்கி கணக்குகள் பற்றிய விபரங்கள் படு ரகசியமாக பாதுகாத்து வைக்கப்படும். இதற்காக 1934ஆம் ஆண்டு சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டப்படி வாடிக்கையாளர்களின் கணக்கு பற்றிய விபரங்களின் ரகசியத்தினை பாதுகாக்க தவறும் வங்கியினருக்கு கடுமையான ஜெயில் தண்டனை வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் சேமிக்கும் பணத்தின் நதி மூலம் ரிஷி மூலம் இங்கு பார்க்கப்படுவதில்லை. பிற நாடுகளில் சட்டத்திற்கு புறம்பான பணமாக இருந்தாலும் சுவிஸ் வந்துவிட்டால் அது குற்றப்பணமாக என்பது பார்க்கப்படாது. எனினும் இப்படிப்பட்ட வசதிகளை வழங்குவதன் மூலம் தமது நாட்டுக்கு ஏமாற்றுக்காரர்களின் புகலிடம் என்கிற அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்பதனையும் அவர்களது சட்டப்பிரிவு உறுதி செய்கின்றது. அதன்படி சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் எவரேனும் கடுமையான கிரிமினல் குற்றவாளி என சுவிஸ் நீதிபதி ஒருவர் தீர்ப்பளிப்பாராயின் நிச்சயம் குறிப்பிட்ட நபரின் வங்கிக்கணக்கு விவரம் வெளியிடப்படும். ஆனால் இதுவரையில் இந்த சட்டப்பிரிவு பயன்படுத்தப்படவேயில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
– ப்ரியா ராமநாதன்.