அனைத்தையும் நாடி  தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் மாறியது எப்படி?

தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் மாறியது எப்படி?

2023 Feb 9

பாகிஸ்தான்!

இந்த பெயரைக் கேட்டதும் நமக்கெல்லாம் நினைவுக்கு வருவதென்ன? சிந்து நதியா? லாகூர் கோட்டையா? ஆசியாவின் சுவிற்சர்லாந் என வர்ணிக்கப்படும் அளவிற்கு அங்கிருக்கும் இயற்கை வளங்களா? அல்லது அந்நாட்டினது சுவையான உணவுவகைகளா? நிச்சயசமாக இவை எதுவுமே நம் நினைவில் வந்திருக்கப்போவதில்லை. ஏனெனில் சர்வதேச அளவில் பாகிஸ்தான் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ஒன்றே ஒன்றுதான் அது தீவிரவாதம்!

ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் போதிக்கும் ஓர் மதத்தினை பின்பற்றும் நாடு பாகிஸ்தான் என்கிறபோதிலும் அது தீவிரவாதத்திற்கு உதவுவதனை நிறுத்தியாகவேண்டும் என்கிற சர்வதேச அழுத்தத்தினை அவ்வப்போது சந்தித்துக்கொண்டுதான் இருக்கின்றது  பல சிறப்புக்களை கொண்ட நாடு என்கிறபோதிலும் தீவிரவாதத்திற்கு அடையாளம் என்கிற அளவிற்கு அந்நாடு மாறிப்போயுள்ளதன் பின்னணி என்ன? பாகிஸ்தானியர்கள் தீவிரவாதத்தினை ஆதரிக்கும் மனநிலையில் இருக்கின்றார்களா? நமக்கு பாகிஸ்தான் பற்றி சொல்லப்படும் அல்லது காட்டப்படும் தகவல்கள் மட்டும்தான் பாகிஸ்தானா? அவை முற்றிலும் உண்மையா? அந்நாட்டினைப்பற்றியும்  அதன் வரலாற்றினைப்பற்றியும் புரிந்துகொள்ள இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை ஏற்படுத்தி அவற்றுக்கான பதில்களை தேடுவது அவசியமாகின்றது.

அந்தவகையில் தற்போதுள்ள முக்கியமான கேள்வி தீவிரவாதத்தின் புகலிடமாக பாகிஸ்தான் மாறியது எப்படி என்பதுதான்! அபோதாபாத் (abbottabad) பாகிஸ்தானில் உள்ள பெரிய நகரங்களில் ஓன்று. 2011வரை உலகில் உள்ள பலருக்கு அப்படியொரு நகரம் இருப்பது பற்றியே தெரிந்திருக்கவில்லை. அந்த ஆண்டு மே 02ஆம் திகதி உலக நாடுகளின் தலைப்புச் செய்தியாக மாறியது அந்நகரம். ஆம் அங்குதான் அமெரிக்க படையினரால் ஒசாமா பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டார். ஒசாமா கொல்லப்பட்டது பற்றி அமெரிக்க படையினர் மற்றும் அதிகாரிகள் பின்னாளில் பேட்டிகள் கொடுத்தபோது அவர்கள் அனைவரும் ஒருமித்துக்கூறியது பின் லேடனை கொல்லும் திட்டம் பற்றி பாகிஸ்தான் அரசிடமோ பாகிஸ்தான் ராணுவத்தினரிடமோ முன்னரே தெரிவித்திருக்கவில்லை என்பதே.

ஒரு நாட்டுக்குள், மற்றொரு நாட்டின் படை புகுந்து தீவிரவாதியை பிடிக்க திட்டமிட்டு அது அந்நாட்டுக்கு தெரியாமலேயே அரங்கேற்றப்பட்டது. அதற்கு காரணம் பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்த சிலருக்கு ஒசாமா தலைமறைவாகி இருந்த இடம் தெரிந்தேயிருந்தது என அமெரிக்கா உறுதியாக இருந்தமையே. ஒசாமா தங்கியிருந்த கட்டிடத்தின் காம்பவுண்ட் சுவர் பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஓர் பகுதி. அந்தப் பகுதியில் பறவைகள் பறந்தால்கூட அது நிச்சயம் ராணுவத்தின் கவனத்திற்கு சென்றுவிடும் அப்படியிருக்க உலகை அச்சுறுத்திய ஓர் தீவிரவாதி தனது மனைவிகள் குழந்தைகளுடன் பாதுகாப்பாக பதுங்கியிருக்கும்வகையில் ஒரு வீடு இருப்பது பாகிஸ்தான் ராணுவத்துக்கு தெரிந்திருக்காமலா இருக்கும் என்பது அமெரிக்காவின் ஆதங்கம்.

ஒசாமா கொல்லப்படுவதற்கு முன்பே அவர் பாகிஸ்தானில் தலைமறைவாகியிருப்பது பற்றிய தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனாலும் பின்லேடனை தேடும் அமெரிக்காவின் திட்டம் ஒவ்வொரு முறையும் தோல்வியில் முடிந்தன . ஏனெனில்  ஒவ்வொருமுறையும் அமெரிக்கா பாகிஸ்தான் அரசிடம் தகவல் அளித்துவிட்டே லேடனை தேடும் பணியில் ஈடுபட்டது அந்த தகவல்கள் எப்படியோ பாகிஸ்தான் ராணுவத்தில் உள்ள சிலரால் லேடனின் காதுகளுக்குள் கசிந்துகொண்டேயிருந்தது. ஏற்கனவே பல தீவிரவாதிகளுக்கு பாக் தஞ்சமளித்திருப்பதாக இருந்த குற்றச்சாட்டு  லேடனின் வேட்டைக்குப்பின் கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்டன அதுமட்டுமன்றி பின்லேடனை கண்டறியும் முயற்சியில் அமெரிக்காவிற்கு பெரிதும் உதவியவர் பாகிஸ்தானை சேர்ந்த மருத்துவர் ஷாகில் அப்ரிடி (shaakil afridi).

ஆனால் இன்று அவர் பாகிஸ்தான் சிறையில் இருக்க அவரது குடும்பம் பாகிஸ்தான் ராணுவத்தின் மிகப்பெரிய அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. பின்லேடன் கொல்லப்பட்ட இருபதாம் நாள் மருத்துவர் ஷாகில் அப்ரிடி “Lashkar -e- islam ” என்கிற தீவிரவாத இயக்கத்திற்கு உதவியதாகவும், காயமடைந்த தீவிரவாதிகளுக்கு அவர் சிகிச்சை அளிப்பதாகவும் அரச மருத்துவமனையில் அந்த இயக்கத்தினர் தமது கூட்டங்களை நடத்த இடமளித்ததாகவும் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். (ஆனால் உண்மையான காரணம் அவர் ஒசாமா இருந்த இடத்தினை காட்டிக்கொடுத்து தேசத்துரோகம் செய்துவிட்டார் என்ற எண்ணமே)

எந்தவித ஆதாரமுமின்றி அக்குற்றச்சாட்டின் அடிப்படையில் ஷாகிலுக்கு முப்பத்தைந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு  பின்னர் அது இருபத்தைந்து ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. அப்ரிடி மட்டுமன்றி ஒசாமா கொல்லப்பட்டதன்பின் வேறுபலர்மீதும் பாகிஸ்தான் அரசு நடவடிக்கையெடுத்தது . அவர்கள் அனைவரும் அமெரிக்காவின் திட்டத்திற்கு ஏதோ ஒருவகையில் உதவியவர்கள். வேறுவேறு வழக்குகளின் பேரில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். உலகை அச்சுறுத்திய ஓர் தீவிரவாத இயக்கத்தின் தலைவரை பாகிஸ்தான் ஏன் இவ்வளவு சிரத்தையுடன் பாதுகாக்க நினைத்தது? எனினும்  இதில் பாகிஸ்தான் அரசின் நேரடி ஆதரவு இருக்கிறதா என்பது குறித்து இன்றளவிலும் சரியான விடை கிடைக்கவில்லை என்பதையும் நாம் மனதில் கொள்ளவேண்டும்.

ஆனால் பாகிஸ்தான் அரசின் அதிகாரிகள், ராணுவத்தில் இருப்பவர்கள், உளவுத்துறையான ISI அதிகாரிகள் போன்றோர் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக இருப்பது வெளிப்படையான ஓன்று. அதற்கு காரணம் என்ன? பாகிஸ்தானின் அதிகமான மக்கள் தொகை வேலையில்லாத் திண்டாட்டம், வருமான ஏற்றத்தாழ்வுகள், மற்றும் இன/சமூக ரீதியிலான ஏற்றத்தாழ்வுகள், பணவீக்கம், அரசியல் இஸ்திரமின்மை மற்றும் சட்ட ஒழுங்குகள், நீதித்துறையின் அசிரத்தை என பல காரணங்களை அடுக்கிக்கொண்டே சென்றாலும், இதுபற்றி முழுமையாக தெரிந்துகொள்ள பாகிஸ்தான் உருவான வரலாறு பற்றி நாம் சற்று அறிந்துகொள்ள வேண்டும்.

1947 ஆகஸ்ட் 14 இந்தியாவிடமிருந்து பிரிந்து சென்று சுதந்திர தனி நாடாகியது பாகிஸ்தான் முகம்மது அலி ஜின்னா தலைமையில் . ஜனநாயகவாதியான ஜின்னா மதம், உற்பட வேறு எந்தவித வேறுபாடுமின்றி பாகிஸ்தான் உருவாக வேண்டும் என நினைத்தார். ஆனால்  சுதந்திரம் பெற்ற அடுத்த ஆண்டே பலுகிஸ்தான்மீது படையெடுத்தது பாகிஸ்தான். தங்கம்,கனிமம் என இயற்கை வளங்கள் நிறைந்திருந்த அந்த பகுதியை தன்னுடன் இணைத்துக்கொள்ள முயன்றது பாக். அந்த பகுதியை ஆக்ரமிப்பதற்கு ஜின்னா கட்டாயத்தின்பேரில் ஒப்புக்கொண்டார். மேலும் வளங்கள் நிறைந்த பகுதியாக இருந்தபோதிலும் தொடர்ந்தும் வறுமையின் கோரப்பிடியில் இருந்த சிந்து பகுதியிலிருந்தும் சுதந்திர சிந்து போராட்டங்கள் தொடர்ந்தன . இப்படி உள்நாட்டில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் மெல்ல மெல்ல உருவாகத் தொடங்கினர்.

அதுமட்டுமன்றி பாகிஸ்தானின் தற்போதைய நிலைக்கு மேலும் முக்கிய காரணம்அமெரிக்கா . பிரிட்டனின் காலணி ஆதிக்கம் முடிந்த சில ஆண்டுகளிலேயே அங்கு அமெரிக்க காலணிய ஆட்சி ஆரம்பித்தது என்று சொன்னால் அது மிகையில்லை. ஏனெனில் வணிக ரீதியில் அமெரிக்கா பாகிஸ்தானின் மீது தனது ஆதிக்கத்தை மெல்லமெல்ல கட்டவிழ்க்கத்தொடங்கியிருந்தது. இது குறுகியகாலத்திற்கு பாகிஸ்தானியர்களுக்கு நன்மையளிப்பது போல இருந்திருந்தாலும் நீண்டகாலநோக்கில் பாகிஸ்தானில் மிகப்பெரிய பாதிப்பை உள்நாட்டு உற்பத்தி மற்றும் வணிகத்தில் ஏற்படுத்தியது என்றே சொல்லவேண்டும் . போதாக்குறைக்கு இந்தியாவின் அனுசரணையுடன் 1971ஆம் ஆண்டு வங்கதேசம் பாகிஸ்தானில் இருந்து பிய்த்துக்கொண்டு வெளியேறி தனிநாடாகியது.

இந்த குளறுபடிகளால் எழுபதுகளின் மத்தியில் பாகிஸ்தான் பெரும் பொருளாதார சரிவை எதிர்கொள்ளவே நிதியுதவி வழங்கும் சாக்கில் மேலும் தன் ஆதிக்கத்தினை நிலைநாட்டியது அமெரிக்கா. உதவி செய்து அமெரிக்கா செய்த காரியங்கள் மிகவும் தந்திரமானவை. பாக்கித்தானில் உள்ள அடிப்படைவாதிகளை திரட்டி சோவியத் யூனியனுக்கு எதிரான குழுக்களை உருவாக்கியது அமெரிக்கா. அமெரிக்காவின் CIA பாகிஸ்தானை ஜிகாதிகளை உருவாக்கும் பண்ணையாகத்தான் பார்த்தது என்றாலும் தகும்.

1978ஆம் ஆண்டு பாகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானுடன் பாக்கிற்கு மோதல் ஏற்பட சோவியத்தின் உதவி பெற்ற ஆப்கானிஸ்தான் இடதுசாரி அரசுக்கும் , அமெரிக்க உதவிபெற்ற முஜாஹிதீன் என்கிற கிளர்ச்சியாளர் குழுவுக்குமிடையே மோதல் வெடித்தது. உண்மையில் அது ரஷ்ய அமெரிக்க போர். கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் நடந்த இப்போரில் சுமார் பதினைந்து இலட்சம்பேர் உயிரிழக்க  பலர் பாகிஸ்தான் மற்றும் ஈரானுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தனர். ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனுக்கு எதிராக போராடிய பல வீரர்கள் பின்னாளில் தத்தமது தாயகம் திரும்பியதும் அடிப்படைவாதிகளாக மாறினர். அவர்களால் உருவாக்கப்பட்ட அடிப்படைவாத குழுக்கள் காலப்போக்கில் தீவிரவாத குழுக்களாக உருப்பெற்றன. மேலும் ஆப்கானிஸ்தானிலேயே தங்கிவிட்ட வீரர்களை ஒன்றிணைத்து ” அல்கொய்தா ” எனும் இயக்கத்தினை உருவாக்கினார் ஒசாமா பின்லாடன்.

பாகிஸ்தானின் அடுத்த ஆயுதம் காஷ்மீர் . 1987ஆம் ஆண்டு காஷ்மீரில் தேர்தல் நடைபெற்றது . இதனால் பாகிஸ்தானின் அடிப்படைவாதிகள் ஆத்திரமடைந்தனர் . அதனைப் பயன்படுத்திக்கொண்ட அந்நாட்டு அரசு அவர்களை சுசுதந்திரப்போராட்ட வீரர்களாக சித்தரித்தது . காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெரிய அளவிலான தாக்குதல்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்தினர் . இதனால் காஷ்மீர் பண்டிதர்கள் சுமார் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் டெல்லி, ஜம்புகாஷ்மீர் பகுதிகளுக்கு இடம்பெயரவே இதன்தொடர்ச்சியாக ஜிகாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் மாறியது. அவர்களுக்கு CIA மற்றும் பாகிஸ்தானின் உளவுத்துறையான ISAயிடமிருந்து நிதி மற்றும் ஆலோசனைகள் என உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்த நிதியுதவிகள் மூலமாக அமெரிக்காவும் பாகிஸ்தானை அதன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டது.

பாகிஸ்தானும் கிடைத்த நிதிகளையெல்லாம் நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்தாது  நாடு முழுவதிலும் ராணுவ தளங்களை அமைப்பதிலும் ஆயுதங்களை வாங்குவதிலும் செலவிட்டது. நாட்டின் வளர்ச்சியைவிட ராணுவத்தில் பெருமளவில் நிதியை பாகிஸ்தான் செலவிட காரணம் அந்நாட்டின் ஆட்சியாளர்கள்தான் என்றால் அது மிகையில்லை. நவாப் ஷெரீப்பின் ஆட்சியின்போது மூண்ட கார்கில் போரில் பாகிஸ்தான் தோல்வியுறவே  ராணுவ கிளர்ச்சியின்மூலம் நாட்டை தன் கட்டுக்குள் கொண்டுவந்தார் பர்வேஷ் முஷாரப்.

முஷாரப்பின் ஆட்சியின்போதுதான் அமெரிக்காவில் இரட்டைக்கோபுர தாக்குதல் இடம்பெற்றது. அல்கொய்தா தீவிரவாதிகளினால் அத்தாக்குதல் நடத்தப்படவே , அவ்வியக்கத்தினை தடைசெய்து நாட்டைவிட்டு அப்புறப்படுத்த தலீபான் அரசினைக்கோரியது அமெரிக்கா. இதற்கு தலீபான் சம்மதிக்காததால், தலீபான் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. பின்னர் தீவிரவாதத்திற்கு எதிரான போரின்படி அமெரிக்கா வலியுறுத்திய அனைத்துக்கும் தலையசைத்து பாகிஸ்தான்.

எனினும் ஒசாமா உள்நாட்டில் பதுங்கியிருந்து குறித்து தாம் அறிந்திருக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ளாத அமெரிக்கா அந்நாட்டுக்கு வழங்கிவந்த உதவிகள் அனைத்தையும் படிப்படியாக குறைத்துக்கொள்ள தொடங்கியது .அதன் விளைவாக தற்போது சீனாவின் செல்லப்பிள்ளையாக பாகிஸ்தான் இயங்கிவருகிறது . சீனா கொடுத்து ஆதரவில்தான்  ஒசாமாவின் மரணத்தை வீர மரணம் என குறிப்பிட்டார் இம்ரான்கான். பிரிட்டனின் கையிலிருந்து அமெரிக்கா, அமெரிக்காவின் கையிலிருந்து சீனா என அடுத்தடுத்து மற்றொரு நாட்டினை நம்பியே இருக்கும் நிலையில்தான் பாகிஸ்தான் இருக்கின்றது என்பதே யதார்த்தம்.

ஒருவிதத்தில் பாகிஸ்தானின் பொருளாதாரமும் சட்ட ஒழுங்கும் இறங்குமுகத்தில் இருக்க , ஆப்கானிஸ்தானின் முஜாஹிதீன்கள், அல்கொய்தா, Lashkar-taiba, Lashkar-omar, jaish-e-Mohammed, sipah-e-sahaba, jais ul-adl, al base mujaahideen , harkat up mujaahideen , isis – kp போன்ற தீவிரவாதிகளின் கட்டுக்குள் சிக்குண்டது பாகிஸ்தான் குறிப்பாக 2008 இல் மும்பைத்தாக்குதலின் மூளையாக செயல்பட்டு சர்வதேச தீவிரவாதிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள தாவுத் இப்ராஹிம் இன்றுவரையில் அடைக்கலமாக கொண்டிருப்பது பாகிஸ்தானையே. பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கட் வீரரான ஜாவித் அலியின் மகனை தாவூத்தின் மகள் திருமணம் செய்துகொள்ளும் அளவிற்கு சுதந்திரமானவராகவே தாவுத் பாகிஸ்தானில் உலவுகின்றார். ஏனெனில் தாவூத் மூலமாக பல உதவிகள் கிடைப்பதால்  பாகிஸ்தான் அவருக்கு ஆதரவளிப்பதாக கூறப்படுகின்றது.

மேலும் Lashkar-e-taiba இயக்கத்தினை நிறுவிய தேசிமுmuhammad Saeed , jaish-e-Mohammed இயக்கத்தினை தலைவர் Masood ashar போன்றோரும் பாகிஸ்தானிலேயே வாழ்ந்துவருகின்றனர் என்பதனையும் இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும் . இவர்களுக்கெல்லாம் பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்துள்ளது எனக்கூறுவதைவிட , அவர்கள் பாகிஸ்தானை தமது இருப்பிடமாக தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ளனர் எனக்கூறுவதே சாலப்பொருந்தும். ஏனெனில் பாகிஸ்தானின் நிலை தற்போது அதுதான். பாக்கிஸ்தான் மட்டுமல்ல சர்வதேச அளவில் பல நாடுகள் தீவிரவாதத்திற்கு பல வழிகளிலும் உதவியே வருகின்றன. ஆனால் பாகிஸ்தானை போல வேறெந்த நாடும் தீவிரவாதிகளுக்கான ஆதரவினையோ, பாதுகாப்பினையோ வெளிப்படையாக வழங்கவில்லை.

இப்படி பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உதவுவதனை சர்வதேச தீவிரவாதத்தினை கண்காணிக்கும் அமைப்பு வெளிப்படையாக அறிவிக்குமேயானால் உலக வங்கி உள்ளிட்டவையிடமிருந்து பாகிஸ்தானுக்கு நிதியுதவிகள் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படும் . இதனால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டின் பொருளாதாரம் இன்னும் மோசமடையும். பாகிஸ்தானின் இந்த இக்கட்டான நிலைக்கு காரணம் அந்நாட்டின் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் யாரிடம் இருக்கின்றது என்பது இன்றளவிலும் புரியாத புதிராகவே உள்ளது . ஆட்சியில் இருப்பவர்களா? ராணுவமா? அந்நாட்டுக்கு உதவும் மற்றைய நாடுகளோ? அல்லது அங்கே பதுங்கியிருக்கும் தீவிரவாத அமைப்புகளின் தலைவர்களா?

பாகிஸ்தான் உருவானதிலிருந்தே அங்கு அரசியல் அசாதாரண சூழல் என்பது நிலையானவொன்றாகவே இருந்துவருகின்றது. ஜின்னாவுக்கு பின்னே அங்கு உறுதியான தலைவர்கள் உருவாகவேயில்லை என்பாத்துதான் யதார்த்தம் . அடுத்தடுத்து தீவிரக்கொள்கைகளை கொண்டவர்களை கடந்துவந்துகொண்டிருக்கும் ஓர் நாடுதான் அது. அதனால்தானோ என்னவோ கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்ளகூட பிறநாட்டு வீரர்கள் ஒப்புக்கொள்ளாத ஓர் நிலையில் பாகிஸ்தான் இன்றுள்ளது. பல ஆண்டுகளாக தீவிரவாதிகளுக்கு அந்நாடு கொடுத்துவரும் ஆதரவின் பலனாக  அந்த அமைப்புகள் நடாத்தும் தாக்குதல்களினாலும் , அந்த அமைப்புகளின்மீது மற்றைய நாடுகள் நிகழ்த்தும் தாக்குதல்களினாலும் பாகிஸ்தான் குடிமக்களுமே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே அந்நாட்டு மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகவாவது பாகிஸ்தான் புதிய பயணத்தினை தொடங்க வேண்டும் . அண்டை நாடுகளுடனான நட்புறவு , கல்வி ,பொருளாதாரம் என அடுத்த கட்டத்தினை நோக்கி அது தன் நீண்ட நெடிய பயணத்தினை ஆரம்பிக்கவேண்டும் என பல நாடுகள் எதிர்பார்க்கின்றன. இந்த எதிர்பார்ப்புகள் பாகிஸ்தானில் சாத்தியப்படுமா? ஆமை புகுந்த வீடும் சீனா நுழைந்த நாடும் உறுப்பட்டதாக சரித்திரம் இருக்கிறதா என்ன? இலங்கையை அடுத்து தற்போது பாகிஸ்தானின் நிலை மிகவும் கவலைக்கிடமாகிப்போயுள்ளது என்றே கூறவேண்டியுள்ளது. பொறுத்திருந்து பார்க்கலாம் பாகிஸ்தான் தலை தூக்குமா என்று

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php