அனைத்தையும் நாடி  பெண்களுக்கான விருத்தசேதன கலாச்சாரத்தை இல்லாமல் ஆக்குவோம்!

பெண்களுக்கான விருத்தசேதன கலாச்சாரத்தை இல்லாமல் ஆக்குவோம்!

2023 Feb 7

பெண் பிறப்பு உறுப்பு சிதைப்பு (Female Genital Mutilation – FGM) பெண் விருத்தசேதனம் (Female Circumcision) எனும் மூவாயிரம் ஆண்டுகால பழமையான சம்பிரதாயங்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வண்ணமும், இதுவும் ஒருவகையான மனித உரிமை மீறல் என்பதனை உலகிற்கு உணர்த்தவும் டிசம்பர் 2012இல் ஐ.நா பொதுச்சபை உருவாக்கிய தீர்மானத்தின் பிரகாரம் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 06 திகதியன்று பெண் பிறப்புறுப்பு சிதைவானது முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும் எனும் தொனியில் அனுசரிக்கப்பட்டது வருகின்றது.

மதம் மற்றும் சமூகம் சார்ந்த மூடநம்பிக்கைகளே இந்த குரூரத்திற்கு காரணமாக கருதப்படுகின்றது. பெண் பிறப்பு உறுப்பானது சிதைப்பு செய்யப்படும் சமூகத்தில் அந்த பழக்கத்திற்கு உள்ளாகாத பெண்கள் தூய்மையற்றவர்களாக கருதப்படுவதோடு பெண் உறுப்பு சிதைக்கப்படுவதானது அவர்களை திருமணத்திற்கு முந்திய உறவினை நாடாமல் தடுக்க உதவும் எனவும், ஆண்களின் பாலியல் இன்பத்திற்கு அதிகப்படியான இடமளிக்கும் எனவும் நம்பப்படுகின்றது.

ஆபிரிக்க பழங்காலத்து புராணமொன்றின்படி வெட்டப்படாத கிளிட்டோரிஸ் காலவோட்டத்தில் ஆண்குறி அளவுக்கு வளரும் என குறிப்பிடப்பட்டுள்ளதாம் . இதுவும்கூட இம்மாதிரியான விருத்தசேனத்திற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது . உலகில் ஆப்பிரிக்க நாடுகளிலேயே 93 விழுக்காடு பெண்களுக்கு இவ்வாறு பிறப்பு உறுப்புச் சிதைக்கப்படுகின்றது . மேலும் ஆசியா, மத்திய கிழக்கின் சில நாடுகள் போன்றவற்றில் சம்பிரதாயபூர்வமாக கடைபிடிக்கப்படும் இந்த பெண் விருத்தசேனமானது , ஐரோப்பா, வட மற்றும் தெற்கு அமெரிக்கா , ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிற்கு குடியேறிய சில சமூகங்களால் அந்தந்த நாட்டு சட்டங்களின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது என்பது வேதனைக்குரிய ஓன்று.

சிறுமிகளின் பெண் உறுப்பின் வெளிப்புறம் வெட்டப்படும் அல்லது வெளித்தோல் அகற்றப்படும் அல்லது சிறுநீர் துவாரம் தவிர்த்து மற்றைய பகுதி தைக்கப்படும் (திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன் இந்த தையல் மீண்டும் பிரித்துவிடப்படும் ) இந்த சடங்கானது ‘காஃப்டா’ என பொதுவாக அழைக்கப்படுகிறது.

இலங்கையில் கிழக்கு மாகாண முஸ்லீம்கள் மத்தியில் பெண் குழந்தைகளுக்கான ‘கத்னா’ எனப்படும் “கிளிட்டோரிஸ்’ துண்டிப்பு சடங்கானது குழந்தை பிறந்த நாற்பதாவது நாள் செய்யப்படுகின்றது . கூறிய கத்தி அல்லது பிளேடினால் குழந்தைக்கான இந்த குரூரத்தை மதத்தின் பெயரால் செய்யும் பெண்கள் “ஒஸ்தா மாமி” அல்லது “ஒய்த்தா மாமி” என்றும் அழைக்கப்படுகின்றனர் . இவர்கள் சந்ததி வழியாக இதனையோர் தொழிலாகவே செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கமானது சுமார் 200 வருடங்களாக இலங்கையில் இஸ்லாமியர் வாழும் பகுதிகளில் இருந்துவருவதாக ‘கிளிட்டோரிஸ்’ நீக்கம் குறித்து 1996 இல் SRI LANKA CULTURE: Mothers Watch as Daughters are Circumcised என்ற கட்டுரையில் ரேணுகா சேனாநாயக்க பதிவு செய்துள்ளார். அரேபிய வர்த்தகர்கள், மனைவியர்களாக அழைத்துக் கொண்டுவந்த மலேசியப் பெண்களால் ‘கிளிட்டோரிஸ்’ நீக்கம் இலங்கை இஸ்லாமியர்களின் பண்பாட்டில் இடம்பிடித்திருக்கலாம் என்றும் ரேணுகா சேனநாயக்க தனது ஆக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் . இந்தியாவைப் பொறுத்தவரையில் தாவூதி போஹ்ரா சமூகதில் இவ்வாறான பெண் உறுப்பு விருத்த சேனம் இடம்பெற்றுவருவதும் அதற்க்குஎதிராக வழக்குகள் தொடரப்படுவதும் நாம் அறிந்தவொன்று.

சரி , இவ்வாறு பெண் உறுப்பு சிதைவினால் மருத்துவ ரீதியில் ஏதேனும் நன்மை உண்டா என ஆராய்ந்தால் , அப்படி எதுவுமேயில்லை என்பதும் மாறாக குறித்த பெண்களுக்கு கடுமையான வலி, அபரிமிதமான இரத்தப்போக்கு, பல பெண்களுக்கு ஒரு வெட்டும் கருவியைப் பயன்படுத்துவதால் எச்.ஐ.வி தொற்று , வீக்கம், காய்ச்சல், சிறுநீர் பிரசனைகள்,மாதவிடாய் பிரச்சினைகள், அதிர்ச்சியினால் ஏற்படும் மனப்பிறழ்வு , இறப்பு , போன்ற ஏகப்பட்ட சிக்கல்களை குறித்த பெண்கள் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கவேண்டியிருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உலக உகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரத்தின்படி பதினான்கு கோடி சிறுவர் மற்றும் பெண்கள் ஏதோவொரு வகையில் பெண் உறுப்பு சிதைக்கப்படுத்தலுக்கு உள்ளாகின்றனர் என்றும் , ஒவ்வொரு ஆண்டும் முப்பது இலட்சம் சிறுமியர் பிறப்புறுப்பு சிதைவுக்குள்ளாகும் ஆபத்தில் உள்ளனர் என்றும் கூறுகின்றது . இவ்வழக்கமானது தொடர்ந்தால் 2030 ற்குள் 8.6 கோடி சிறுமிகள் இந்த சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவர் என்பதனால் இந்த மனித உரிமை மீறலானது அவசியமாக அவசரமாக தடுத்து நிறுத்தப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php