2023 Feb 10
சிரியா எல்லையின் தென்கிழக்கே துருக்கியின் ஒரு பகுதியான காசியான்டெப்பிலிருந்து (Gaziantep) 33 கிலோமீட்டர் தொலைவில், நூர்டாகி நகரத்தின் அருகில் திங்கள் அதிகாலை 3:20 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் 7.8 அளவில் பதிவாகியிருக்கும் இந்த அதிபயங்கர நிலநடுக்கத்தை அமெரிக்காவின் புவி ஆய்வு மையம் (USGS) உறுதிசெய்திருந்த நிலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.8 ரிக்டர் மற்றும் 6.7 ரிக்டர் உட்பட 4.7 ரிக்டர்களுக்கு மேற்பட்ட 10 பூகம்பங்களின் அதீத தாக்கத்தினால் குறித்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் கண்ணிமைக்கும் நேரத்தினுள் இடிந்துவீழ்ந்ததுடன் இந்த தொகுப்பினை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நொடிவரையில் சுமார் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளதுடன் , ஏராளமானோர் இடிபாடடைந்த கட்டிடத் தொகுதியினுள் இன்னும் சிக்குண்டிருக்கலாம் என தேடுதல் பணிகள் மும்முரமாக்கப்பட்டுள்ளன.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டை நாடுகளிலும் உணரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதன் தாக்கம் மேற்கு ஆசியா வட ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் லெபனான், சைப்ரஸ், கிரீஸ், இஸ்ரேல் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
துருக்கி சர்வேதேச உதவியினை நாடியிருக்கும் நிலையில் இதுவரை 45 நாடுகள் தேடல் மற்றும் மீட்புக் குழு மருத்துவக் குழுக்கள் நிவாரணப் பொருட்கள் என உதவிக்கரங்களை நீட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே உள்நாட்டு புரட்சிகளால் அதிகம் பாதிக்கப்பட்ட துருக்கியானது உலகில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாகும், ஏனெனில் இது அனடோலியன் தட்டில் அமைந்திருக்கின்றது இது யூரேசியாவிற்கு எதிராக வடகிழக்கு நகரும் போது இரண்டு பெரிய நாடுகளை எல்லையாகக் கொண்டுள்ளது.
உண்மையில் பூமியின் வெளிப்பரப்பு, மேலோடு டெக்டோனிக் தட்டுகளாக உள்ளது. தட்டுகளின் விளிம்புகள் தட்டு எல்லைகள் என்று அழைக்கப்படுகின்றன. டெக்டோனிக் தகடுகள் மெதுவான வேகத்தில் நகர்ந்து செல்கின்றபோது தட்டுகள் ஒன்றையொன்று மோதிச் செல்லும். அப்படி மோதிக் செல்லும்போது தட்டுகளின் விளிம்புகள் மிகவும் கடுமையாக இருப்பதால் மற்ற தட்டு நகரும் போது அவை ஒன்றோடு ஒன்று சிக்கிக் கொள்கின்றனவாம்.
அபோது தட்டு வேகமாக நகர்ந்து செல்லும் நிலை ஏற்படுகையில் நிலநடுக்கம் ஏற்படுகிறது என ஆராய்ச்சியாளர் கூறகின்றனர். இப்படியான மிகவும் தீவிரமான பூகம்ப மண்டலங்களில் ஒன்றில் துருக்கி அமைந்திருப்பதுதான் கால் நூற்றாண்டு காலமாக துருக்கி சந்தித்து வரும் கோரமான நில நடுக்கத்திற்கு காரணமாகும்.
ஒரு பெரிய பூகம்பம் இஸ்தான்புல்லை அழிக்கக்கூடும் என்று நிபுணர்கள் நீண்ட காலமாக எச்சரித்துள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது . துருக்கியில் கடந்த 1939 இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 33000 உயிர்கள் காவுகொள்ளப்பட்டது . இதற்கடுத்தபடியாக 1999 இல் 17000 உயிர்களை பலியெடுத்திருந்தது அங்கேற்பட்ட மற்றுமோர் பூகம்பம்.
பூமிக்கு அடியில் உள்ள பகுதி அசைவதால் நிலத்தில் ஏற்படும் கடுமையான அதிர்வே பொதுவில் நில நடுக்கம் எனக்கருதப்படுகின்றது. நிலநடுக்கத்தை கணிக்க பூமிக்குள் இருந்து முன்னறிவிப்பு சமிக்ஞை வழங்கும்வகையில் ஓர் கருவி தேவைப்படுகின்றதென்றும் ஆனால் அத்தகைய கருவியானது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் இந்த விஞ்ஞான உலகில் மிகுந்த வருத்தமளிக்கும் ஒன்றுதான் போலும்.