2023 Mar 3
சிறுவயதில் நீங்கள் எதையேனும் சேகரித்ததுண்டா?
முன்பெல்லாம் பலர் தபால் தலைகளை சேகரிப்பார்கள் சிலர் பிடித்த நடிகர்நடிகையரின் புகைப்படங்களை சேகரிப்பார்கள் சிலர் பழமையான மற்றும் அரிதான சின்னங்களையும் சிலர் இலைகளையும் சிலர் பூக்களையும் சிலர் வெளிநாட்டு நாணயங்களையும் சேகரிப்பார்கள். அட இவ்வளவு ஏன்? நானறிய சிலர் ஐஸ்கிரீம் குச்சி, toffee தாள் போன்றவற்றை சேகரித்து வைத்தவர்களும் உண்டு.
சிறுவயதில் தொடங்கும் இந்த பழக்கத்தை சிலர் வாழ்நாள் முழுவதிலும் தொடர்கிறார்கள். இதற்காக பெரும் உழைப்பையும் பணத்தையும் முக்கியமாக நேரத்தையும் செலவிடுகிறார்கள் என்றால் அது மிகையில்லை. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இதிலென்ன இருக்கிறது? என்று தோன்றும். ஆனால் சேகரிப்பவர்களுக்கு அதுவொரு அலாதியான மகிழ்ச்சியை தருகிறது. தாங்கள் சேகரித்துவைத்துள்ள விடயங்களை பிறருடன் பகிர்வதும் காண்பிப்பதும் அதிலுள்ள குறைகளை நிறைவடையச் செய்வதும் ஓர் விளையாட்டை போலாகிவிடுகின்றது பலருக்கு.
உதாரணத்திற்கு ஒருவர் பழைய பத்திரிகைகளை சேகரிக்கின்றார் என வைத்துக்கொள்வோம் அவரிடம் சென்று 1960களில் தமிழில் “சங்கு” என்றோரு பத்திரிகை வந்தது தெரியுமா? என்று கேட்டால் போதும் , ஒரே நேரத்தில் அவர் கண்களில் மகிழ்ச்சியும் வருத்தமும் தோன்றும் ” அட நாம் சேகரிக்க ஒரு புது பத்திரிகை” என மகிழ்வார். அதேசமயம் அடடா இந்த பத்திரிகை நம்முடைய சேகரிப்பில் இல்லையே என்று வருந்துவார். உண்மையில் விதவிதமாக பொருட்களை சேகரிப்பதென்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல அது ஒருவருடைய அடையாளமாக, அவரது செயற்பாடுகளை , மகிழ்வை, திருப்தியை தீர்மானிக்கும் காரணியாக அவருக்கு பாராட்டை பெற்றுத்தரும் ஒன்றாக மாறக்கூடும்.
ஆனால் அவர்கள் இதையெல்லாம் எதிர்பார்த்து தங்களுடைய சேகரிப்புகளை தொடங்குவதில்லை. விளையாட்டாக ஆரம்பிக்கிறார்கள் பின் அது படிப்படியாக தானே வளர்கிறது.
இப்படித்தான் அயோவாவில் பென் சில்பெர்மன் (ben silverman) என்ற சிறுவன் பூச்சிகளையும் தபால்தலைகளையும் சேகரிக்கத்தொடங்கினான். தான் சேகரித்ததையெல்லாம் ஒரு கனமான அட்டையில் குத்திவைத்தான்.
பென்னின் பெற்றோர்கள் இருவருமே மருத்துவர்கள். அவனும் ஓர் மருத்துவராக வரவேண்டும் என்ற எண்ணத்தில்தான் படித்துக்கொண்டிருந்தான். ஆனால் ஏனோ அவனது ஆர்வம் மருத்துவத்துறையில் செல்லவில்லை. தொழில்நுற்பம் பற்றி நிறைய தெரிந்துகொள்ள ஆசைப்பட்டான். அதற்காக கூகிலில் வேலைக்கு சேர்ந்தான். அடடே கூகுளா? என்று நினைத்துவிடவேண்டாம் . கூகிளில் பென் எந்த புரட்சியையும் செய்துவிடவில்லை.
அங்கே அவர் பார்த்தவேலை வாடிக்கையாளர்களின் தொலைபேசிகளுக்கு பதிலளிப்பது. ஆமாம் கால்சென்டர் வேலைதான் என்றாலும் தினமும் பலவிதமான வாடிக்கையாளர்களுடன் பேசுகிற அனுபவம் அவருக்கு பிடித்திருந்தது. இந்த அனுபவம்தான் பின்னாளில் அவர் சொந்தத்தொழில் தொடங்கியபோது பெரிதும் உதவியது.
சொந்த தொழிலா? கூகிளில் வேலை பார்க்கும்போது எதற்கு இதெல்லாம் ? கை நிறைய சம்பளம் என்கிற விஷயம் தரும் பாதுகாப்புணர்வினை பல சமூகங்கள் முக்கியமாக கருதுகின்றன. ஆனால் வேறு சிலரோ அதிலிருந்து வெளியே வந்து நாம் அடுத்தவருக்கு சம்பளம் தருகிறவர்களாக இருக்கவேண்டும் என்கிற எண்ணத்தினை ஊக்குவிக்கின்றனர் . கூகிள் இதில் இரண்டாவது வகை இங்கே வேலை செய்துவிட்டு வெளியே வந்த பலர் சொந்த தொழில் தொடங்கி முன்னேறியிருக்கிறார்கள்.
இங்கே வெற்றி தோல்விகூட இரண்டாம்பட்சம்தான் முயன்று பார்க்கவேண்டும் என்கிற துணிச்சல் வேண்டும். எதை முயன்றுபார்ப்பது என்ற தெளிவு வேண்டும் அதன்பிறகு ஒரு கைபார்த்துவிடவேண்டியதுதான்.
பென்னுக்கு கூகுளை மிகவும் பிடித்திருந்தது தன்னை சுற்றி எப்போதுமே புத்திசாலிகள் ஆர்வத்துடன் எதையேனும் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை வியப்போடு பார்த்தார்.
தன்னாலும் அவ்வாறு செய்யமுடியும் என்ற நம்பிக்கை இருந்து . ஆனால் கூகிளில் அவர் பார்த்த வேலை சாதாரணமானது. அங்கே அவரால் பெரிதாக எதையும் செய்துவிடமுடியாது . ஆகவே அவர் அங்கிருந்து வெளியேற தீர்மானித்தார்.
அடுத்து என்ன செய்வது?
அதுதான் தெரியவில்லை. கொஞ்சகாலம் பொறுமையாக ஏதெல்லாமோ செய்துபார்த்தார். “பால் ஸ்கியாரா” என்ற நண்பருடன் இணைந்து சில இணையதளங்கள், மொபைல் அப்பிளிகேஷன்கள் போன்றவற்றை உருவாக்கினார் ஒன்றும் சரிப்படவில்லை. எனினும் இணையத்தை கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார். அங்கே இல்லாத ஒரு விஷத்தை தான் உருவாக்கினால் அது வெற்றியடையும் என நம்பினார். அப்போது அவருக்கு அவரது இளவயது சேகரிப்பு பழக்கம் நினைவுக்கு வந்தது . “இப்படியொன்று இணையத்தில் இல்லையே” ஏன் நான் அப்படியொன்றினை உருவாக்கக்கூடாது என யோசித்தார்.
இதற்கெல்லாமா ஓர் இணையதளம் ! என்றுதானே யோசிக்கின்றீர்கள்? ஆரம்பத்தில் பலரும் அப்படிதான் யோசித்தார்கள். குறிப்பாக முதலீட்டாளர்கள், இதெல்லாம் சரிப்படாது என ஒதுங்கிக்கொண்டார்கள்.
ஆனால் பென் நம்பிக்கையை இழக்கவில்லை . பால் ஸ்கியாரா (paul sciarra) , இவான் ஷார்ப் (Evan Sharp) ஆகியோருடன் இணைந்து “Pinterest” என்ற பெயரில் ( 2010 January / sansfransisco _ california)அந்த இணையத்தளத்தினை உருவாக்கினார் . மூவரும் அதனை மக்களிடம் கொண்டுசேர்க்கும் முயற்சியில் இறங்கினர். முன்பு கூகிளில் வேலைபார்த்தபோது பலவிதமான வாடிக்கையாளர்களுடன் பேசிய அனுபவத்தை பெற்றிருந்த பென், வாடிக்கையாளர்களை நேரடியாக அணுகுவது தங்கள் தளத்தின் பயன்பாட்டை பற்றி சொல்வது அவர்களுடைய நம்பிக்கையை பெறுவது அதன்மூலம் இணையத்தளத்தினை மேம்படுத்துவது போன்றவற்றை மேற்கொண்டார்.
இதற்காக சுமார் ஐயாயிரம் பேரிடம் நேரடியாக பேசினார் பென் . தன்னுடைய மொபைல் எண்ணை அவர்களிடம் கொடுத்து அழைக்கச் சொன்னார் . அவர்கள் இத்தளத்தினை எப்படி பயன்படுத்துகிறார்கள், இன்னும் என்னென்ன எதிர்பார்க்கிறார்கள் . என்று அறிந்துகொண்டார் . அதன்மூலம் தாங்கள் சரியான பாதையில் தான் சென்றுகொண்டிருக்கின்றோம் என்பதை
உறுதிசெய்துகொண்டார்.
Pinterest தளம் அடிப்படையில் மிக எளிமையானது. உங்களுக்கு பிடித்த படங்களை சேகரிக்கலாம், அவற்றை தனித்தனி தலைப்புகளில் தொகுத்துவைக்கலாம் . அவற்றை பிறருடன் பகிர்ந்துகொள்ளலாம் பிறருடைய சேகரிப்புகளை பின்பற்றலாம் அதாவது அவர்கள் புதிய படங்களை சேகரிக்கும்போது அவற்றை உடனுக்குடன் பார்க்கலாம். அவ்வளவுதான்!
மறுபடியும்” இதற்கு ஓர் இணையத்தளமா? என்று தோன்றுகிறதுதானே? பென் தொடர்புகொண்ட பலரும் இப்படித்தான் நினைத்தார்கள். அநேகர் அவரது மின்னஞ்சலில் உள்ள இணைப்பை “க்ளிக்” செய்யக்கூட இல்லை. அனால் அப்படி க்ளிக் செய்து pinterest தளத்திற்குள் வந்தவர்களுக்கு அந்த தளத்தினை மிகவும் பிடித்திருந்தது. பென் எப்படி சிந்தித்து அந்த இணையத்தளத்தினை உருவாக்கியிருந்தாரோ அதேபோல் அவர்கள் அதனை பயன்படுத்தினார்கள்.
காரணம் நம் எல்லோருக்குள்ளும் “சேகரிக்கிற” ஆசை இருக்கிறது. நிஜமாக பொருட்களை சேகரித்து ஒட்டி வைப்பதற்கு பதிலாக, இணையத்தில் படங்களை தொகுக்கிறோம், அவ்வளவுதான் வித்தியாசம். மற்றபடி சேகரித்தல் பிறரிடம் காண்பித்து பெருமைப்படுதல் பகிர்ந்துகொள்ளுதல் ஆகிய விருப்பங்கள் எல்லோர்க்கும் உண்டு. Pinterest இதனை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டது.
ஓர் எளிய வடிவமைப்பில் சேகரிப்புகளை அழகாக காண்பித்து பயனாளர்களை கவர்ந்தார்கள். அவர்களும் அங்கே லட்சக்கணக்கான படங்களை தொகுக்கதொடங்கினார்கள். இன்று pinterest உலகின் மிகப்பெரிய பட சேகரிப்பாக திகழ்கிறது . வீடு கட்டுபவர்கள் “எப்படி ஜன்னல் வைக்கலாம்” என யோசித்தாலும் சரி திருமணம் செய்துகொள்பவர்கள் “அழைப்பிதழை எப்படி வடிவமைக்கலாம்” என்று யோசித்தாலும் சரி … Pinterestடில் வந்து தேடினால் ஆயிரக்கணக்கான படங்களை பார்க்கலாம் இவை அனைத்தும் உலகெங்கிளும் உள்ள pinterest உறுப்பினர்கள் சேகரித்தவை.
இப்படி சேகரிப்பவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைக்கிறார்கள் . பாராட்டி மகிழ்வதுடன் அவற்றை விலை கொடுத்து வாங்கியும் செல்கின்றனர் . கணினியில் மட்டுமன்றி செல்போன்வழியேயும் சேகரிக்கிற வசதிகள் வந்ததால் இன்னும் அதிகம்பேர் பின்டெரெஸ்ட்டை ஆர்வத்துடன் பயன்படுத்த தொடங்கினார்கள் . பல்வேறு தலைப்புகளில் விதம்விதமான படங்கள் சேகரிக்கப்பட்டன. பொதுமக்கள் தொடங்கி பிரபலங்கள் , பெரிய நிறுவனங்கள்வரை எல்லோரும் பின்டெரெஸ்ட்டில் நுழைந்துகொண்டிருக்கின்றார்கள்.
இந்த ரசிகர்களை பார்த்துதான் முதலீட்டாளர்கள் விழித்துக்கொண்டார்கள் . ஆரம்பத்தில் இதெல்லாம் சரிப்படாது ” என ஒதுக்கப்பட்ட பின்டெரெஸ்ட்டின் சந்தை மதிப்பு படிப்படியாக அதிகரித்தது . அதற்கேற்ப பின்டெரெஸ்ட் பயனாளர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது.
சுருக்கமாக சொன்னால் மனிதனின் பழைய சேகரிப்பு பழக்கம் டிஜிட்டல் வடிவில் பின்டெரெஸ்ட்க்கு பெரிய வெற்றியை தேடித்தந்துள்ளது எனலாம்.