2023 Mar 2
சந்தையில் தற்போது நிழவுகின்ற முட்டை தட்டுப்பாட்டிற்கு தீர்வாக, தற்காலிகமாக முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமையானது மிகுந்த விசனத்திற்குரியவொன்றாக பார்க்கப்படவேண்டியவொன்று. ஏனெனில் ஏற்கனவே திறந்த பொருளாதார கொள்கையின் அடிப்படையில் ஏராளமான பொருட்களை சரமாரியாக இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டதன் விளைவே உள்நாட்டு உற்பத்தி மற்றும் உள்ளூர் முதலீட்டு ஊக்குவிப்புக்கள் என அனைத்தும் மூடுவிழா காண்பதற்கு வழிகோலியதெனலாம். பால் உற்பத்தி பொருட்கள், உப்பு, அரிசி, பருப்புவகைகள் என எத்தனையோ விதமான உணவுப்பொருட்கள் இவ்வாறாக எடுக்கப்படும் தற்காலிக தீர்வினால் நிரந்தரமாகவே நம் கையைவிட்டு போய்விட்டது என்பதுதான் யதார்த்தம்.
சில அரசியல்வாதிகளின் கமிஷன், சொந்த வர்த்தக முன்னேற்றம் என்பதற்காகவே உள்ளூர் உற்பத்திகள் கைவிடப்படுவதென்பது நாட்டிற்கான மிகப்பெரிய இழப்பு என்பது யாவரும் அறிந்தவொன்றே. இதற்கான தீர்வாக கால்நடை வைத்தியரான “கிருபா நந்த குமாரன்” தன்னுடைய முகநூலில் ஓர் விடயம்தனை முன்வைத்திருந்தார் அதாவது முட்டையை நேரடியாக இறக்குமதி செய்யாமல் கோழித்தீவனத்துக்கு தேவையான சோளம்,சோயா போன்ற மூலப்பொருட்களை இறக்கலாம்.அல்லது தேவையான தீவனத்தை இறக்கலாம்.முட்டை விலை அதிகரிப்புக்கு பிரதான காரணம் தீவன மூலப் பொருள் தட்டுப்பாடும் தீவன விலையேற்றமுமே.இப்போது முட்டையை நேரடியாக இறக்குமதி செய்வதன் மூலம் கோழிப் பண்ணைத் தொழிலில் உள்ள பலர் பாதிப்படையலாம் , தொழிலையே கைவிடலாம்.தன்னிறைவு நிலையில் இருந்த கோழிப் பண்ணைத்துறை இறக்குமதியை நம்பிய நிலைக்கு தள்ளப்படலாம் என அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.8
உண்மையில் காலங்காலமாக நம் நாட்டு நிலைமைகளுக்கு அரச தலைமைகளை குற்றம்சாட்டிக்கொண்டேயிருக்கும் நாம் அவர்களையெல்லாம் தெரிவு செய்து அனுப்பியதே நாம்தான் என்பதனை மறந்துவிடுகின்றோம். பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்புவரை நம் ஊர்கள்தோறும் வீடுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பு என்பது இயல்பாகவே நடந்துகொண்டிருந்தவொன்று. எனக்குத் தெரிந்தவரையில் வீடுகளில் மீந்துபோகும் உணவுகளே அவற்றுக்கான தீவனம். கோழிகளுக்கான மருந்து மாத்திரைகள் பராமரிப்பு என பெரிதாக யாரும் அலட்டிக்கொள்வதில்லை. சீக்கு வந்தால் உடனடியாக கைமருந்து கொடுக்கப்படும். ஒருவீட்டில் குறைந்தது பத்துக்கும் மேற்பட்ட கோழிகள் வளர்க்கப்படுவதென்பது சர்வசாதாரண நிகழ்வு.
ஆனால் தற்போது என்ன ஆனது இந்த உள்ளூர் நாட்டுக்கோழி வளர்ப்புக்கு? வீட்டுத் தேவைகளுக்காக தாராளமாக எடுத்துக்கொள்ளப்பட்ட முட்டைகள் போக எஞ்சியவை உள்ளூர் சில்லரைக் கடைகளுக்கு விற்கப்பட்டதுடன், இறைச்சித் தேவையும் ஆரோக்கியமானவொன்றாக தீர்த்துக்கொள்ளப்பட்ட அந்த தன்னிறைவு நிலைக்கு என்ன நேர்ந்தது. இதற்கு திட்டமிடப்படாத பொருளாதாரக் கொள்கைகள் மட்டும்தான் காரணமா? நிச்சயம் இல்லை, நம்முடைய அசமந்தப்போக்கும் சோம்பேறித்தனமும் விழிப்புணர்வின்மையும்கூட இதற்கான காரணங்களில் ஓன்று என்றே கூறவேண்டியுள்ளது.
அதுமட்டுமன்றி முட்டைகளை இறக்குமதி செய்தால் “Avian Influenza” எனும் வைரஸ் நோய் இலங்கைக்கு வரும் அபாயம் அதிகம் என அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளதுடன் இந்த இறக்குமதி முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது இலங்கையில் எவராவது ஒருவர் கோழி இனவிருத்தி பண்ணை ஒன்றினை ஸ்தாபிக்க விரும்புவதாயின் 1992 இன் 59 ஆம் இலக்க விலங்கு நோய் சட்டத்தின கீழ் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தில் பதிவு செய்து அனுமதி பெற்றுக்கொள்வதன்மூலம் அவற்றை திறன்பட நடாத்த வாய்ப்பேற்படும் என்பதும் கவனிக்கத்தக்கது.