2023 Apr 3
Dates …! பேரீச்சம்பழம் எனக்கூறியதுமே சட்டென நமக்கு நினைவுக்குவரும் brand எது ? கண்டிப்பாக அது “Lion dates” என்பதாகத்தான் இருக்கும் . நமக்கு மட்டுமல்ல இந்தியாவின் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, என தென் இந்தியா முழுவதிலும் சுமார் 80 சதவீத மார்க்கெட்டினை தன்னுடைய கைக்குள் வைத்திருக்கும் ஒரே நிறுவனம் lion dates impex Pvt Lld!
இந்த மாபெரும் நிறுவனத்தினை எஸ். பொன்னுத்துரை என்கிற ஒரு தனி மனிதர் கட்டியெழுப்பிய வெற்றிக்கதையினையே இந்தவாரம் நாம் பார்க்கவிருக்கின்றோம்.
திருச்சிப் பக்கத்திலுள்ள ஓர் குக்கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் பொன்னுத்துரை .அந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அநேகர் இலங்கைக்கு குடிபெயர்ந்து அங்கே சிலகாலம் சம்பாதித்துவிட்டு மீண்டும் இந்தியா திரும்பும் வழக்கம் இருந்து.
“கொழும்புச் சம்பாத்தியம்” என அதற்கு பெயர். இலங்கை சென்றால் தம் வாழ்க்கைத்தரமும் வறுமையும் மாறும் என எண்ணி பொன்னுத்துரை குடும்பமும் புலம்பெயர, தன்னுடைய பள்ளிப்படிப்பினை இலங்கையிலேயே தொடர்ந்தார் பொன்னுத்துரை .பள்ளியில் இருந்து வந்ததும், மளிகைக்கடை ஒன்றில் பொட்டலம் கட்டும் வேலை பார்க்கின்றார் பொன்னுத்துரை.
நாட்கள் நகர்ந்தனவேயொழிய அவர்களது வாழ்க்கை மாறவில்லை. அதேநேரம், இலங்கை அரசும் இந்தியாவில் இருந்து வந்தவர்களை மீண்டும் இந்தியாவிற்கே சென்றுவிடுமாறு வற்புறுத்தியது. இதனால் 1974ஆம் ஆண்டு மீண்டும் இந்தியா திரும்பினர் பொன்னுத்துரை குடும்பத்தினர். பள்ளிப்படிப்பினை நிறுத்திவிட்டு திருச்சியில் உள்ள ஓர் மாளிகைக்கடையில் மாதம் எண்பத்தைந்து ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்க்கும் பொன்னுத்துரை, சில வருடங்கள் ஓட இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் குறைந்த சம்பளத்திற்கு அதிக வேலை பார்ப்பது ? நாமே சொந்தமாக ஓர் மளிகைக்கடை வைக்கலாமே என முடிவெடுகின்றார்.
எனினும் எல்லாவற்றுக்கும் முதலீடு வேண்டுமே? வங்கிகளில் கடனுக்காக அலைய, கடன் மறுக்கப்படுகின்றது. எனினும் தெரிந்த வக்கீல் ஒருவர் வங்கி மேலதிகாரியிடம் பொன்னுத்துரை பற்றி நல்ல விதமாக சிபாரிசு செய்ய ரூபாய் நான்காயிரம் கடனாக கிடைக்கின்றது. ஒருவாறு மளிகைக்கடை ஒன்றினை ஆரம்பித்தாயிற்று. மாதங்கள் சில உருண்டோட, அந்தோ பரிதாபம்!கடை நஷ்டத்தில் இயங்குவது புரிந்தது, மென்மேலும் நஷ்டம் மென்மேலும் கடன் என்கிற நிலையில் கடையினை மூடிவிடுகின்றார் பொன்னுத்துரை.
அந்த நேரத்தில் தான் சபீனா பவுடர் டிஸ்ட்ரிபியூட்டர் தேவை என்கிற விளம்பரம் வருகின்றது பத்திரிகையில். உடனே அதற்கு முயற்சிக்க அதிஷ்டவசமாக அந்த டிஸ்ட்ரிபியூட்டர் உரிமை இவருக்கே கிடைத்துவிடுகின்றது. அதேநேரத்தில் திருச்சியில் உள்ள அரச அலுவலகம் ஒன்றில் மாதம் எண்ணூறு ரூபாய் சம்பளத்திற்கு ஜுனியர் அசிஸ்டன்ட் வேலையும் கிடைக்கவே, இரண்டு தொழிலையும் செய்துகொண்டு ஒருவாறு மளிகைக்கடை மூலம் வந்த கடன்களையெல்லாம் அடைத்துவிடுகின்றார்.
அப்போதுதான் அவரது வாழ்வில் ஓர் திருப்புமுனை ஏற்படுகின்றது. திருச்சி சாலையோரம் ஒன்றில் தள்ளுவண்டியில் பேரீச்சசம்பழங்களை மலைபோல் ஒருவர் குவித்து வைத்துக்கொண்டு கூவிக்கூவி விற்றுக்கொண்டிருந்தார். அந்த பழங்கள் பார்க்கவே பிசுபிசுப்பாக ஏராளமான ஈக்கள் மொய்த்தவண்ணம் காணப்பட்டன.
உடனே பொன்னுத்துரை அந்த தள்ளுவண்டிக்காரரிடம் சென்று ” ஏங்க இப்படி ஈ மொய்க்க மொய்க்க பழங்களை தூசியில் வைத்து விற்பதைவிட , அவற்றை பக்கற்றுக்களில் போட்டு விற்கலாம்தானே?” என கேற்க, அந்த தள்ளுவண்டிக்காரருக்கோ செம கடுப்பு போலும்” இதவேர வேலையில்லாம பக்கற்றுக்களில் போட்டுக்கொடுக்கணுமா? இவ்வளவு சொல்லுறியே வேணும்னா நீயே பாக்கட் பண்ணித்தா என எரிச்சலுடன் கிண்டலாக கூற அந்த நொடிகளில் பொன்னுத்துரை மனதில் ஓர் மின்னல் பளிச்சிட, நான் ஏன் இவற்றை பாக்கட் பண்ணி கடைக்கு கடை விநியோகிக்கக்கூடாது? எப்படியும்
சபீனாவை கடைக்கு கடை டிஸ்ட்ரிபூட் பண்ணத்தான் வேண்டும் அதோடு சேர்த்து இந்த பேரீச்சசம்பழம் பக்கற்றுக்களையும் போட்டுவிடலாம் என திட்டம் தீட்டிக்கொண்டு 1978ஆம் ஆண்டு முதன்முதலாக அவற்றை விற்க ஆரம்பிக்கின்றார். இவரிடம் பேரீச்சம் பக்கற்றுக்களை வாங்கிய கடைக்காரர்கள் சேல்ஸ் நன்றாக போவதை அவதானித்து இன்னும் அதிகமான பக்கற்றுக்களை கொண்டுவந்து போடும்படி சொல்லுகின்றனர்.
விடுவாரா நம் பொன்னுத்துரை? காலையிலும் மாலையிலும் சபீனாவையும், பேரீச்சம் பக்கற்றுக்களையும் டிஸ்ட்ரிபூட் பண்ணுவது, இதற்கு நடுவில் அரசு வேலை, இரவு மீண்டும் பக்கற்றுக்களை தயார் செய்வது என அயராது உழைக்கின்றார். கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரம் சூடுபிடிக்க ஒருநாளைக்கு ஐநூறு கடைக்கு ஆர்டர் கொடுக்கும் அளவிற்கு வியாபாரம் பெருகுகின்றது.
இப்போது அவர் துணிச்சலாக ஒரு முடிவெடுகின்றார். அதாவது அரச வேலையை கைவிட்டுவிட்டு முழுநேரமாக பேரீச்சம் பிசினஸில் இறங்குகின்றார். அன்றைய காலகட்டத்தில் துணிந்து ஒருவர் அரச வேலையை விடுவது என்பது எவ்வளவு ரிஸ்க் இல்லையா? ஆனால் வெற்றியாளர்கள் எப்போதுமே ரிஸ்க் எடுக்க தயங்காதவர்கள் என்பதற்கு பொன்னுத்துரையும் ஓர் உதாரணம் நமக்கு!
இதுநாள்வரை பழங்களை பாக்கட் பண்ணி கொடுத்துக்கொண்டிருந்தாலும், அவற்றுக்கு அவர் பெயர் ஒன்றினை வைத்திருக்கவில்லை. இனி முழுநேர தொழிலாக அதை செய்ய தீர்மானித்தபின் தன்னுடைய தொழிலுக்கு ஓர் ” brand name” அவசியம் என்பதை உணர்கின்றார். இருப்பதிலேயே இரும்புச் சத்து அதிகம் உள்ள ஒரேயொரு பழம் பேரீச்சம் பழம். சத்து நிறைந்த வலிமையான ஓர் உணவுப்பொருளை நான் பக்கற்றுக்களில் போட்டு விற்கிறேன், எனவே அதற்க்கான பெயரும் வலிமையுடன் தொடர்புடையதாக இருக்கவேண்டும் என எண்ணி, இந்த உலகத்திலேயே வலிமையானது எது என யோசிக்கின்றார்.
உடனே சிங்கம்தான் அவரது மனதில் வந்து நிற்கின்றது. அடுத்த நொடியே “lion dates” என பெயரை முடிவு செய்துவிடுகின்றார். நேரவிரயமும் பண விரயமும் இன்றி பெயரை தேர்வு செய்தாயிற்று , ஆனால் இப்பொது லோகோ ? குறைந்தது பத்தாயிரம் பிரின்ட் ஆர்டர் கொடுத்தால்தான் குறைந்த விலையில் பிரிண்ட்களை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அவ்வளவு பணம் கையில் இல்லை, மேலும் ஒரே முறையில் அவ்வளவு பிரிண்ட் தேவையும்படாது. என்ன செய்யலாம்?
யோசித்தவருக்கு ஓர் ஐடியா! அது தேர்தல் காலம் . தேர்தலில் ஓர் அரசியல் கட்சியின் சின்னம் சிங்கம். அவர்களிடம் அச்சடிக்கப்பட்டு எஞ்சிய ஏராளமான பிரின்ட்களை பெற்றுவந்து , அதில் உள்ள சிங்கங்களை வெட்டி ஒட்டிவிடுகின்றார் தன் பேரீச்சை பக்கற்றுக்களில். கொஞ்சம் கஞ்சத்தனமாக இன்று நமக்கு தோன்றினாலும், என்னவொரு சிறப்பான மாற்றி யோசனை பார்த்தீர்களா?
அடுத்து தமிழ்நாடு முழுவதும் விற்பனையை அதிகப்படுத்த முடிவுசெய்து , வானொலியில் முதன்முதலாக Lion dates விளம்பரங்களை கொடுக்கின்றார். இதன்மூலம் வியாபாரம் இன்னும் பெருகுகின்றது. மாதம் ஐம்பதாயிரம் வருமானம் வருமளவிற்கு நிறுவனம் வளர்ந்து நின்றது.
இதனையடுத்து தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, என தன் பிசினஸை விரிவுபடுத்தியவர், மும்பையிலும் கால்தடம் பதிக்கும் முகமாகவும், பேரீச்சை பழங்களை மொத்தமாக கொள்வனவு செய்யும் வகையில் அதற்கான ஏஜென்ட்களை சந்திக்கும் எண்ணத்துடனும் மும்பை பயணமானார். ஆனால் அங்கே அவர் ஓர் பிரச்சினையை எதிர்கொள்கின்றார்.
என்னவெனில், பொன்னுத்துரைக்கு தமிழ் மட்டுமே தெரியும் ஹிந்தியோ, ஆங்கிலமோ அறவே அறிந்திராதவர் அவர். மும்பையில் பெரும் கஷ்டதிற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகுகின்றார். எனினும் ஒருவாறு தன்னை தயார் படுத்திகொண்டு ஏஜென்ட்களை சந்திக்கின்றார். இவரது நல்லநேரமோ என்னவோ அங்கே ஒரு ஏஜென்டுக்கு தமிழ் தெரிந்திருக்க, அவர்மூலம் பெரிய ஆர்டர் ஒன்றும் கிடைக்கின்றது.
ஒருவேளை குறிப்பிட்ட அந்த ஏஜென்ட்க்கு தமிழ் தெரிந்திராவிடின் எவ்வளவு பெரிய ஆர்டரை நாம் இழந்திருக்கக்கூடும் என எண்ணிய பொன்னுத்துரைக்கு அப்போதுதான் இன்னொரு மொழியின் அருமை புரிகின்றது . ஒரேயொரு மொழியை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டமுடியாது . நாம் மிகப்பெரிய அளவில் வளர வேண்டுமாயின் , மிகப்பெரிய வெற்றிகளை ஈட்ட வேண்டுமாயின் கண்டிப்பாக இரண்டு மூன்று மொழிகளையாவது தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என உணர்ந்திருந்த பொன்னுத்துரை ஊர் திரும்பியதும் ஒரு ஆங்கில ஆசிரியரை நியமித்து ஆங்கிலம் கற்றுக்கொள்கின்றார்.
1995 ஆண்டு மஸ்கர்ட் அரசிடமிருந்து பொன்னுத்துரைக்கு ஓர் அழைப்பு வருகின்றது . மஸ்கட்டில் உள்ள ஓர் பெரிய நிறுவனம் பேரீச்சசம்பழத்திலிருந்து ஒரு சிரப் தயாரித்திருந்தது. தாம் தயாரித்த அந்த சிரப்பினை உலகத்தில் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான இந்தியாவில் மார்க்கெட் செய்யவே அவர்கள் பொன்னுத்துரையை நாடினர் . அவரும் சிரப்பினை பரீட்சித்து பார்த்துவிட்டு இந்தியாவில் அதனை விற்பனையில் இறக்குகின்றார். மூன்று வருடங்களின்பின் அந்த மஸ்கட் நிறுவனம் ஏதோ சில காரணங்களால் மூடப்பட , அங்கே வேலை பார்த்த முக்கியமான சிலரை அழைத்து வந்து தானே சிரப் தயாரித்து விற்பனையில் விடுகின்றார் . அதுதான் ” lion dates syrup!
ஈரான் , எகிப்து , சவூதி , துனீஷியா , அல்ஜீரியா , ஜோர்டான் , மஸ்கட் என பல்வேறு நாடுகளில் இருந்து ஆண்டுக்கு பத்தாயிரத்துக்கும் அதிகமான டன் பேரீச்சம் பழங்களை இறக்குமதி செய்து “lion” எனும் brand nameஇல் lion jam, Lion kashmir honey, lion arabian dates, lion deserving dates, lion halwa, lion deseedeed dates என பல்வேறு தயாரிப்புகளாக விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் முன்னூறு கோடி.
எனினும் இந்த வருமானதையெல்லாம் தாண்டி தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுப்பது என்னவென்றால், என்னதான் தொழில்நுற்பம் வளர்ச்சியடைந்தாலும் இன்னும் பேரீச்சம் பழங்களில் இருந்து விதைகளை அகற்ற எந்தவொரு இயந்திரமும் கண்டுபிடிக்கப்படவில்லை. மெனுவலாகத்தான் இன்றுவரையில் இந்த விடயம் நடைபெறுகின்றது என்பதால் தன்னால் ஏராளமான கிராமப்புற பெண்களுகும் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடிகிறது என்கிறார் பொன்னுத்துரை.
ஒரு சாதாரண தள்ளுவண்டியில் விற்பனையான பேரீச்சம் பழத்தை உலகம் முழுக்க விற்பனை செய்யக்கூடிய ஓர் பிராண்டாக மாற்றிய பொன்னுத்துரை இந்த தொழில் சுமார் நாற்பது வருடங்களுக்குமேல், போட்டி நிறுவனங்களில் இருந்து தனித்து தெரியவும், விற்பனையில் நிலைத்து நிற்கவும் காரணம் அவரது நிறுவனத்தின் தரமும் நேர்மையும் என்றால் மிகையில்லை. கெட்டுப்போன பழங்களை டன் கணக்கில் கடலில் கொட்டியிருக்கின்றோமே தவிர ஒருமுறை கூட விற்பனைக்கு விட்டதில்லை. இதுதான் எங்கள் வெற்றியின் ரகசியம் என்றுகூறும் பொன்னுத்துரையின் பிசினஸ் அனுபவம் நமக்கும் ஓர் பாடமாக அமையக்கூடும் அல்லவா?