2023 Apr 1
ஆட்டிசம்..
எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் இருக்கின்றான். தற்போது அவனுக்கு பதிமூன்று வயதாகின்றது. அவனது தாயாரின் கூற்றுப்படி பிறக்கும்போது அவன் எந்தவித நோய் அறிகுறிகளுமின்றி ஆரோக்கியமாக இருந்ததாகவும், அவனது ஒரு வயதில் மிகப்பிரபலமான ஓர் அரச வைத்தியசாலையில் அவனுக்கு போடப்பட்ட தடுப்பூசியின் பின்னரே அவனது நடத்தையில் மாறுதல் ஏற்பட்டதாகவும், அங்கே போடப்பட்ட தடுப்பூசியே தனது மகனின் இந்த நிலைக்கு காரணம் எனவும் இன்றுவரையில் குற்றம்சாட்டிக்கொண்டேயிருப்பார். தடுப்பூசியால் ஆட்டிசம் வருவதற்குச் சாத்தியமில்லை என்று பல ஆராய்ச்சிகள் தெள்ளத் தெளிவாக உணர்த்துகின்ற போதிலும் இவாறான கருத்துக்கள் எப்படி மக்கள் மத்தியில் உலவுகின்றன?
ஆம் நம்மில் பலருக்கு இன்னுமே முழுமையாக புரியாத அல்லது அது பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத ஓர் விடயம்தான் இந்த ஆட்டிசம். இவ்வாறான போதிய விழிப்புணர்வின்மையினை போக்கவும் ஆட்டிசத்தினால் பாதிக்கப்படும் குழந்தைகளை எவ்வாறு கையாள்வது என்பது பற்றிய தெளிவினை ஏற்படுத்துவதற்காகவுமே ஆண்டுதோறும் ஏப்ரல் 2ம் திகதி உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்படுகிறது.
தற்போது உலகம் முழுவதும் வெகு வேகமாக அதிகரித்து வரும் குறைபாடுகளில் ஆட்டிசம் மிக முக்கியமானது. குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடே பொதுவாக ஆட்டிசம் எனப்படுகின்றது. இது ஏற்படுவதற்கான காரணங்களாக மரபணு, சாதகமற்ற சுற்றுச்சூழல் போன்றவை காரணங்களாகக் கூறப்பட்டாலும், சரியான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என்றே கூற வேண்டும்.
குறிப்பாக ஆட்டிச பாதிப்பானது குழந்தைகளது ஒரு வயது முதல் மூன்று வயதிற்குள் பெரும்பாலும் கண்டறியப்படக்கூடியது. ஆட்டிசத்திற்குள்ளான பல குழந்தைகள் அறிவாற்றல் குறைவானவராகவும், சிலர் சராசரியை விட அதிக அறிவாற்றல் உடையவராகவும் காணப்படுவர் என்பதனால் பெற்றோர்களின் சரியான கவனிப்பின் மூலம் அவர்களை திறமைசாலிகளாக மாற்றமுடியும் என்கின்றனர் நிபுணர்கள். பல குறைபாடுகளை உடையவர்களாக இந்த குழந்தைகள் இருக்கின்றபோதிலும் அதே குழந்தைகளிடம் ஏதோவொரு அதீத திறனும் சேர்ந்தே இருக்கும் என்பதனால் சிறந்த பயிற்சியின் மூலமும் பெற்றோரின் சிரத்தையினாலுமே அந்தத் திறன் வெளிக்கொணரப்படவேண்டும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆய்வகப் பரிசோதனைகள் மூலம் கண்டறிய முடியாத இந்நிலையானது குழந்தையின் வளர்ச்சிப்படிநிலைகள், நடத்தைகளைச் சார்ந்தே கண்டறியப்படுகிறது. இலங்கையில்கூட பிரசவத்தின் பின்னர் ஒரு சிறு புத்தகம்போன்ற குறிப்பேட்டினை கொடுத்தனுப்புவார்கள் அதில் பிறந்த ஒரு குழந்தை அதன் வளர்ச்சிப் படிநிலைகளில் அடுத்தடுத்த மாதங்களில் என்னென்ன செய்யவேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும்.
(அதில் கூறப்பட்டிருக்கும் விடயங்களிலிருந்து ஏதேனும் மாற்றம் ஏற்படுமாயின் நாம் கட்டாயம் வைத்தியரை அணுகவேண்டும் என அந்த குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும்) அதாவது பிறந்த குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வளர்ச்சி இருக்கும் தாயின் முகம் பார்த்து சிரிப்பது, எழுந்து அமர்வது, விரும்பிய பொருளை சுட்டிக்காட்டுவது, பேசுவது என குறிப்பிட்ட மாதங்களில் இந்த வளர்ச்சி தானாக இருக்கவேண்டும். இதையும் மீறி சில குழந்தைகள் பேசத் தெரியாமல் இருப்பார்கள்.
தவிர ஆறு மாதங்களாகியும் தாய் முகம் பார்த்து சிரிக்காமல் குழந்தை இருத்தல், தாயின் கண்களை நேருக்கு நேர் பார்க்காமல் இருத்தல், 12 மாதங்களான பின்பும் மழலைச் சப்தங்கள் செய்யாமலிருந்தல், ஒரே இடத்தில் அமர்ந்திருத்தல் 18 மாதங்களில் பேசினாலும் ஒரே சப்தத்தையோ, சொல்லையோ திரும்ப திரும்பச் சொல்லுதல், தன் தேவைகளை வெளிப்படுத்த முடியாமை போன்றவை ஆரம்ப அறிகுறிகளாகவும் 18 – 24 மாதங்களில் மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளையாடாமல், தனியாகவே இருப்பது, கைகளை உதறிக் கொண்டே இருப்பது , ஒரு பொருளையோ, நபரையோ சுட்டிக்காட்ட இயலாமை, கதை கேட்பதில் விருப்பமின்மை தூக்கமின்மை, தூங்கும் நேரம் குறைவு, கீழே விழுந்து காயம் ஏற்பட்டாலும் வலியை உணராதிருத்தல் போன்றவையும் அடுத்தகட்ட அறிகுறிகளாகும்.
குழந்தை பிறந்த 24 மாதங்களில் பரிசோதனை செய்தால், குழந்தைக்கு ஆட்டிசம் உண்டா, இல்லையா என்பதை அறியலாம். ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் அவர்களுக்கான பயிற்சியை எளிதில் தொடங்கிவிடலாம் என்றும், இரண்டு வயதுக்குள் அடையாளம் கண்டுகொண்டால் குணப்படுத்துவது எளிது என்றும் கூறுகின்றனர் நிபுணர்கள். ஆரம்ப அறிகுறிகளையும், மருத்துவரின் அறிவுறுத்தலையும் அலட்சியம் செய்து, நோயை ஏற்க மறுப்பதும், காலம் தாழ்த்துவதும், காத்துக்கொண்டே இருப்பதும், குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தடைகளாக மாறும். எனவே, ஆரம்பத்திலேயே இந்த நிலையினை கண்டறிந்து பயிற்சியும் முயற்சியும் கொண்டு ஆட்டிசத்தையும் வென்று நம் குழந்தைகளை சிறந்த நிலைக்கு கொண்டுவரும் பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவருக்குமே உண்டு என்பதை உணர்வோமாக.