அனைத்தையும் நாடி  அச்சுறுத்தல்களை சந்திக்கும் முத்துராஜவெல சரணாலயம்

அச்சுறுத்தல்களை சந்திக்கும் முத்துராஜவெல சரணாலயம்

2023 May 3

முத்துராஜவெலவில் சுமார் 5000 ஹெக்டேயருக்கும் மேற்பட்ட மதிப்புமிக்க சதுப்பு நிலைங்களை அழிப்பதற்கு அரசாங்கம் அனுமதித்துள்ளதாக முத்துராஜவெல பாதுகாப்பு அமைப்பின் தலைவர் அனில் ஜயமஹா குற்றம் சாட்டுகின்றார்.
அவர், ‘முத்துராஜவெலயில் சுமார் 5000 ஹெக்டேயருக்கும் மேற்பட்ட மதிப்புமிக்க சதுப்புநிலங்களை அழிக்க அனுமதித்த போது அரசாங்கத்தின் திறமையின்மையை நாங்கள் அடையாளம் கண்டோம்’என்று குறிப்பிடுகின்றார்.

‘இந்த சரணாலயத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் அனுமதியளிக்காத வகையில், இலங்கையில் உள்ள சுற்றுச்சூழல் சட்டங்கள், மக்களின் வாழ்வாதாரத்திற்கு சுற்றுச்சூழல் அமைப்புகளின் விலைமதிப்பற்ற பங்களிப்பு ஆகியவை அடையாளம் காணப்படவேண்டும்’என்றும் வலியுறுத்தினார்.

இவரது கூற்றை வலுப்படுத்தும் வகையில் 5000 ஹெக்டயருக்கும் மேற்பட்ட வனாந்தரப் பகுதி முத்துராஜவல சரணாலய நிலப்பகுதிக்கு சொந்தமான ஒன்றாக இருக்கின்ற போதிலும் 1285 ஹெக்டயர் நிலப்பகுதி மாத்திரமே சரணாலயத்திற்கு சொந்தமானதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க கணக்குள் பற்றிய குழுவில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக குடியிருப்புகள், காளான்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், தீவிபத்துகள் மற்றும் மணல் அள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு விதமான சட்டவிரோத ஆக்கிரமிப்புகளால் முத்துராஜவல சரணாலய நிலப்பரப்பு குறைந்து வருகிறது. 1992 இல் மீள் வரைபு செய்யப்பட்ட முத்துராஜவெல பெருந்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்தப் பரப்பில் முக்காற்பங்கு ஏற்கனவே இழக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முத்துராஜவெல சதுப்புநிலம், விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் 1996ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதியன்று சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. 1989 ஆம் ஆண்டின் ஆசிய ஈரநிலக் குழுவால் நாட்டில் உள்ள 41 சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களில் ஒன்றாகவும் இது பெயரிடப்பட்டது.

இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் ஆய்வின்படி, முத்துராஜவெலவில் 209 வகையான விலங்குகள் மற்றும் பூச்சிகள் மற்றும் 194 இனங்கள் உள்ளன. மரங்கள், 40 வகையான மீன்கள், 31 வகையான ஊர்வனங்கள், 102 வகையான பறவைகள் மற்றும் 48 வகையான பட்டாம்பூச்சிகள் உயிர் வாழ்கின்றன.

இலங்கையின் சுற்றுலா கைத்தொழிலுக்கு பாரியபங்களிப்புகளை வழங்குகின்ற இந்த சரணாலயத்தின் பெரும்பாலான பகுதிகள் துண்டாடப்பட்டு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுகின்ற நிலைமை தொடர்கின்றமை குறித்து தற்போது அரசாங்க கணக்குகள் பற்றிய குழு கவனம் செலுத்தியுள்ளது.

அதனடிப்படையில், அக்குழுவானது, ‘இலங்கைக்கு மட்டுமே சொந்தமான கண்டல் தாவரங்கள் மற்றும் விலங்கு இனங்களைக் கொண்ட இந்த சரணாலயம் மனித செயற்பாடுகளால் அச்சுறுத்தல்களை சந்தித்துள்ளது. எனவே அங்கே இடம்பெறும் மனித செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’என்று வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு கட்டளையிட்டுள்ளது.

ஆய்வறிக்கைகளின் பிரகாரம் தொழிற்சாலைகள் மற்றும் விலங்குப் பண்ணைகளில் இருந்து வெளிவிடப்படும் கழிவுகள் கால்வாய்கள் ஊடாக நீர்கொழும்பு களப்பில் கலப்பதனால் வனாந்தரச் சூழல் மாசடைந்து மீன்களின் இனப்பெருக்கம் தடைப்படுகின்றதோடு அரிய வகை மீன் இனங்கள் உயிரிழந்துள்ளன என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், வனாந்தரச் சூழலில் சட்டவிரோத மதுபான வியாபாரம் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் சதுப்பு நிலங்களை நிரப்புதல் என்பவற்றினால் முத்துராஜவல சரணாலயம் பொலிவிழந்து காணப்படுவதாக அப்பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.

காடுகளுக்கு தீவைத்தல் மற்றும் வீதி நிர்மாணிப்பு என்பவற்றினால் பறவைகள் மற்றும் விலங்குகள் இடம்பெயர வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் வேறு இடங்களில் இருந்து வரும் பறவைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் அவ்வதிகாரிகள் குறிப்பிடுகின்றார்கள்.

இதேநேரம், சூழலியலாளர் பஸ்லின் மொஹமட் ‘முத்துராஜவல என்பது ஒரு சதுப்பு நிலம் என்பதன் அடிப்படையில் இயற்கையாகவே வெள்ளப் பெருக்கை தடுக்கும் சூழல் அமைப்பை கொண்டுள்ளது. கொழும்புநகரில் உள்ள கழிவுநீர் முத்துராஜவல வனப்பகுதியில் கலந்து விடுவதால் வெள்ளப்பெருக்கு அச்சுறுத்தல் அதிகமாக இருக்கின்றன’ என்று குறிப்பிட்டார்.

மேலும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் நெடுஞ்சாலை முத்துராஜவல வனப்பகுதியினை நிலப்பகுதியை துண்டாடி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்தை அண்மித்துள்ள தொழிற்சாலைகள் முத்துராஜவல வனப்பகுதியை கொஞ்சம் கொஞ்சமாக அபகிரிக்கும் நிலைமை இருப்பதுடன் இந்தவிடயம் தொடர்பில் அரசாங்கம் மௌனம் காப்பதாகவும் பஸ்லின் சுட்டிக்காட்டுகின்றார்.

6000 ஹெக்டெயருக்கும் அதிகமான முத்துராஜவல சுற்றுச்சூழல் மற்றும் சரணாலயப் பகுதியில் உள்ளடங்கியுள்ள அரச மற்றும் தனியார் காணிகள் சரியான முறையில் இன்னமும் அடையாளம் காணப்படாதிருப்பதுடன், இவற்றைவிரைவில் அடையாளம் காண்பதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அசமந்தப் போக்குடன் செயற்படுகின்றமை கள ஆய்வின் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமாக காணிகள் அளவிடப்படுதல், வாழிடங்களுக்காக நிரப்பப்படுதல் தொடர்பில் காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை, கமநல சேவைகள் திணைக்களதில் பல்வேறு முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. முறைப்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அந்நிறுவனங்களிடத்தில் கோரிய போதும் அதற்குரிய பதில்கள் வழங்கப்படவில்லை.

இதேவேளை, தனியார் நிறுவனம் ஒன்றினால் சுமார் 1200 ஏக்கர் பரப்பளவுகொண்ட காணி அபகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ள நிலையில் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் வனப்பாதுகாப்பு அதிகாரிகள் அவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுவது வனாந்தரப் பகுதிக்கு அழிவை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

வனாந்தரப் பகுதிக்கு அழிவை ஏற்படுத்தும் சட்டவிரோத நில அபகரிப்புக்கள் தொடர்பில் கணக்காய்வாளர் அலுவலகமும் கவனம் செலுத்தியுள்ளனது. குறித்த அலுவலகமானது, வனாந்தரப்பகுதியில் இணைக்க வேண்டிய பகுதிகளை அடையாளமிடும் நோக்குடன் வர்த்தமானிக்கு அமைய 1285 ஹெக்டெயர் நிலப்பரப்பின் எல்லையின் அளவைப் பணிகளை நிறைவு செய்துள்ளதோடு எல்லைகளை அடையாளமிடும் பணிகளை எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

1996ஆம் ஆண்டு 947/13 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய முத்துராஜவல சரணாலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதும், இதுவரை இதற்கான எல்லைகள் முறையாக இதுவரை வரையறுக்கப்படவில்லை.

அத்துடன், முத்துராஜவல சூழல் கட்டமைப்பு 2569 ஹெக்டெயர் என்று மத்திய சுற்றாடல் அதிகாரசபைஅடையாளம் கண்டுள்ளநிலையில், 1285 ஹெக்டெயர் மாத்திரம் எவ்வாறுசரணாலயமாகஅடையாளம் காணப்பட்டுள்ளது என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. மேலும் 1990 ஒக்டோபர் 15ஆம் திகதி இலங்கை இணைந்து கொண்ட ரம்ஸா சமவாயத்துக்கு அமைய இந்தச் சதுப்பு நில வலயத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் இலங்கைக்கு உள்ளது.

அதனடிப்படையில், முத்துராஜவலசரணாலயத்தின் அழிவினை தடுப்பதற்காக வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு கீழ் அதன் நிருவாகத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும் பாதுகாக்கப்பட்ட இயற்கை பூங்காவாக முத்துராஜவல சரணாலயத்தை அறிவிக்க வேண்டும் என்றும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு பரிந்துரைவழங்கியுள்ளது.

அத்துடன், முத்துராஜவல சரணாலயத்தை பாதுகாப்பதற்குப் பொறுப்பு வாய்ந்த சகல தரப்பினரையும் உள்ளடக்கிய ஒன்றிணைந்த குழுவொன்றை நியமிப்பதற்கு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக உயிர் பல்வகைமை தொடர்பில் ஆய்வுகள் மற்றும் அவற்றின் முடிவுகள் வனஜீவராசிகளுடன் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கிடையில் உரியநேரத்தில் பகிரப்படவேண்டும் என்றும், இதில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று அரசாங்க பொதுக்கணக்குகள் பற்றிய குழு வலியுறுத்தியுள்ளது.

முத்துராஜவல பகுதியில் நடக்கின்ற துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கு அரசாங்க மட்டத்தில் போதுமானளவு கொள்கைகள் இருக்கின்ற போதிலும் அவை முறையாக அமுல்படுத்தப்படுவதில்லை என ஏர்த் லங்கா இளைஞர் வலையமைப்பின் இணை ஸ்தாபகர் சுதர்ஷ டீ சில்வா தெரிவிக்கின்றார்.

‘முத்துராஜவலவனப்பகுதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் இலங்கை மட்டும் அல்லாமல் ஏனைய நாடுகளுக்கும் அது சூழல் அடிப்படையில் ஆபத்தை ஏற்படுத்தும். வளிமாசு மற்றும் நீர் மாசு உட்பட இடம்பெயரும் பறவைகளின் இனப்பெருக்கம் மற்றும் இருப்பு என்பவற்றுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.’ என்றுஅவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

-அஹ்ஸன் அப்தர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php