நாடி Review புனல் Short Flim – Nadi Review

புனல் Short Flim – Nadi Review

2023 Apr 7

2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் திகதி Arsath Sanan தயாரிப்பில் MUTUR FILM ACADEMY youtube தளத்தில் வெளியான குறுந் திரைப்படம் தான் ‘புனல்’. இக்குறுந் திரைப்படமானது Arsath Sanan மற்றும் உதவி இயக்குனர் Rasly Akthaf இனால் இயக்கப்பட்டுள்ளது. இதற்க்கான cinematography Ahsan இனால் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இக்குறுந் திரைப்படத்திற்க்கான எடிட்டிங் வேலைகள் Ahsan இனால் முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.

இக்குறுந்திரைப்படமானது பொழுது புலரும் காட்சியோடு ஆரம்பமாகிறது. அதனை தொடர்ந்து ஒரு நடுத்தர வயதுடைய பெண் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருக்கும் காட்சி தொடர்கிறது. வேலையின் நடுவே அழைப்பேசி வந்தவுடன் பாத்திரங்களை கழுவுவதற்க்காக திறந்து வைக்கப்பட்டிருந்த தண்ணீர் குழாயினை மூட மறந்து அழைப்பேசியில் மூழ்கி போகிறார். அடுத்த காட்சியில் ஒரு சிறுவன் குளிப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் பக்கெட்டில் நிறைந்த பின்னும் தண்ணீர் குழாயினை மூடாது அதில் விளையாடிக் கொண்டிருக்கிறான். அடுத்த காட்சியில் நடுத்தர வயதுடைய ஒரு ஆண் மரங்களுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருக்கும் போது தனது அலுவலக தோழனைக் கண்டவுடன் நீர் டியூபினை கீழே போட்டு விட்டு கலந்துரையாடலில் ஈடுபடுகிறார். அவர்கள் கலந்துரையாடும் போது மூன்று நாட்கள் குடும்பமாக கண்டி நோக்கி பிரயாணம் செய்ய திட்டமிட்டிருப்பதும் பகிரப்படுகிறது.

இப்போது ஆரம்பத்தில் காட்டப்பட்ட நடுத்தர வயதுடைய பெண், சிறுவன் மற்றும் இறுதியாக காட்டப்பட்ட ஆண் என மூவரும் ஒரே வாகனத்தில் ஏறி கண்டி நோக்கி பயணிக்க தொடங்குகின்றனர். ஆமாம் உங்கள் கணிப்பு சரி! மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் பயண வழியில் பசிக்காக உணவும் தாகத்துக்காக தண்ணீர் போத்தலும் வாங்கி ஓர் இடத்தில் அமர்ந்து உண்ண ஆரம்பிக்கின்றனர். உணவில் காரம் அதிகமாக இருந்தமையால் அதை ஒரு கடியுடன் அப்பாவிடம் கொடுத்து விட்டு சிறுவன் தண்ணீர் போத்தலோடு ஓரமாக செல்கிறான். தண்ணீர் போத்தலை திறந்து கையினை கழுவிக் கொண்டிருக்கிறான். அதுவும் முக்கால்வாசி தண்ணீர் முடியும் வரை. இதை கண்டு கதையோடு கதையாக தண்ணீரை விரயம் செய்த அப்பா திட்டி கையை துடைக்க பேப்பர் உபயோகித்திருக்கலாம் என சொல்ல, மகனை திட்டுவதை சகித்துக் கொள்ள முடியாத அம்மா சமாதனம் செய்து அந்த விடயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க என அந்த காட்சி அங்கேயே நிறைவடைகிறது.

மீண்டும் மூவரும் பயணத்தை தொடர்கின்றனர். பயணத்தின் வழியில் தனது பழைய நண்பர் ஒருவரை இனங்கண்டு கதைத்துக் கொண்டிருக்கும் போது அவரது எதிர்பாராத அழைப்பினை அவர்களின் வாகனம் திசை மாறுகிறது. அவர்கள் மூவரும் எங்கு சென்றனர்? அங்கு அவர்கள் கண்ட காட்சிகள் என்ன? அங்கு அவர்களுக்கு என்ன நேர்ந்தது? இது தான் மீதி கதை. நான் எதிர்பாராத திருப்பங்களை கொண்டதாக இவர்களது மீதி கதை அமைந்திருந்தது. இறுதி காட்சியின் போது இணைக்கப்பட்டிருந்த பாடல் என் வாழ்வில் இதுவரை நான் காணாத சோக உணர்வொன்றை வித்திட்டு மறைந்துக் கொண்டது. அதன் ஒவ்வொரு வரிகளுமே ஆழமான வலிகளின் பிரதிபலிப்பு. அந்த பாடலின் இசை, அதை பாடியவர் என அனைத்துமே மிகவும் நேர்த்தியாக இருந்தது. சில நிமிடங்களுக்கு மனதில் ஆழ்ந்த சோகத்தை தவிர வேறெதுவுமே நிலைக்கொண்டிராதபடி அந்த பாடல் அமைக்கப்பட்டிருந்தது.

மொத்தமாக 13 நிமிடம் 16 வினாடிகள் நீளமுடைய இக்குறுந்திரைப்படத்தில் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்திருந்தது ஆனால் ஒலிப்பதிவில் இன்னும் சற்று அதிகமான முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கலாம். வசனங்களை இன்னும் யதார்த்தமான நடையில் எழுதியிருக்கலாம். மிகவும் சிறப்பாக எதிர்பாராத திருப்புமுனைகளோடு நேர்த்தியாக கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்ற பாடல் வர்ணிக்க வார்த்தைகள் அற்ற அருமையான படைப்பு. கதாபாத்திரங்களின் நடிப்பு சிறப்பானதாக அமைந்திருந்தது. இக்குழுவினரின் ஒவ்வொரு படைப்புமே அருமையான படைப்புகளாக வெளிவரும் இம்முயற்சி விடாது தொடர நாடி சார்பாக வாழ்த்துக்கள். நீங்களும் இக்குறுந்திரைப்படத்தை பார்த்து இறுதி காட்சி பற்றிய உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

8.5/10

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php