2023 May 12
உலகமே அன்னையர் தினம் கொண்டாடுகிறது. ஈரைந்து மாதம் சுமந்து பெற்ற தாயைப் போற்றும் நாள். பொதுவாக அன்னையர் தினம் கொண்டாடப்படுவதே ஒரு வர்த்தக, வியாபார நோக்கம் என்றொரு கருத்து பரவலாக பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் என்னைப் பொறுத்தளவில், “தாயைப் போற்ற நாளொன்று தேவையில்லை, அவளைப் போற்றாத நாள், நாளேயில்லை”.
ஒரு உயிரை இந்த உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கும் ஒவ்வொரு தாயும் சிறந்த தாய் தான். ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில், எமது தாய்மார்கள் வழமைக்கு மாறாக கொஞ்சம் வித்தியாசமானவர்கள், தனித்துவமிக்கவர்கள். பிள்ளைகளை பெற்று வளர்ப்பது முதல், அவர்களுக்காக ஓயாமல் உழைப்பது என, தனது வாழ்க்கையில் ஒரு தாய் பல பரிமாணங்களை கடந்து போகிறாள். பிள்ளைகளின் சிறுவயது முதலே, அவர்களின் நலனுக்காக தமது வாழ்வை அர்ப்பணித்த எமது இலங்கை அம்மாக்களை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
அக்கறையின் சிகரம்
அம்மாக்களை போல இந்த உலகில் வேறு எவராலும், உங்களைப் பற்றி அக்கறைப்பட முடியாது. பொதுவாகவே இலங்கை வீடுகளில் அம்மாக்கள் பிள்ளைகள் மீது அநியாயத்துக்கு அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். சில வீடுகளில் அம்மாக்கள், வளர்ந்த பின்னரும் பிள்ளைகளுக்கு உணவு ஊட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். தவிர பிள்ளையின் உடல்நலன், போஷாக்கு மீது இலங்கை தாய்மார்களுக்கு எப்போதுமே மிகப்பெரிய அக்கறை உண்டு. சிறுவயது முதலே பிள்ளைகளின் உணவுப் பழக்கவழக்கத்தின் மீது மிகவும் கவனம் செலுத்துகிறவர்கள்.
அப்படி அக்கறையோடு அம்மாக்கள் சொல்வதைக் கேட்கவில்லை என்றாலோ, அல்லது எதிர்த்துப்பேசினாலோ, ஏற்படும் சேதாரத்துக்கு, எந்தக் கம்பெனியும் பொறுப்பேற்காது. ‘அதிகமாக fizzy drinks குடிக்க கூடாது, சாக்லெட் சாப்பிட்டா பூச்சி வரும், காலையில் நேரத்துக்கு எழும்பி படி, சாப்பாட்டில் காய்கறி சேர்த்து சாப்பிடு’ முதல், ‘லேட்டா TV பார்க்காதே, வண்டியை speed ஆ ஓட்டாதே, ஹோட்டல்ல சாப்பிடாதே, கண்ட நாயோட சேராதே’ வரை, “உன் நல்லதுக்குதான் சொல்றேன்” என்று சொல்லி அனைத்தையும் சாதித்துக்கொள்ளும் வல்லமை மிக்கவர்கள், இந்த அக்கறையான அம்மாக்கள்.
Master-Chef மம்மிஸ் – The Master-Chef Mothers
ஒரு மாஸ்டர் செஃப்புக்கு (Master-Chef), இருக்க வேண்டிய தகைமைகள் என்ன தெரியுமா? எறும்பைப்போல சுறுசுறுப்பு, பலதரப்பட்ட வேலைகளை ஒரே நேரத்தில் செய்யக்கூடிய வல்லமை (Multi-Tasking), விமர்சனங்களுக்கு முகங்கொடுத்தல் மற்றும் சமைப்பதில் அளப்பரிய வேட்கை. இது எல்லாமே இலங்கை தாய்மாருக்கு இருக்கிறதென்றால், நம்பமுடிகிறதா..?
விடியற்காலையில் எழுந்து முழுக்குடும்பத்துக்குமான காலையுணவை தயாரிப்பதிலிருந்து, இரவு தூங்கப்போகும் வரை ஓயாமல் உழைக்கிறார்கள் அம்மாக்கள். சமையல் பற்றி எத்தனை முறை, எவரென்ன குறை சொன்னாலும், தினமும் குடும்பத்துக்காக சமைப்பதை அவர்கள் எப்போதுமே நிறுத்திக்கொண்டதில்லை. இலங்கை வீடுகளில் அம்மாமார் அவிக்கும் இடியப்பமும், சொதியும், தேங்காய்ப்பூ சம்பலும், அந்த பருப்பு கறியும், உறைப்பான குழம்பும் தரும் அந்த சுவை, உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் கிடைக்கவே கிடைக்காது.
அம்மாக்கள் எம்மோடு இருக்கும் வரை alarm clocks, reminder apps, notepad, memos எதுவுமே தேவையில்லை. அப்படி ஒரு அபரிமிதமான ஞாபக சக்தி இருக்கிறது எமது அம்மாமாருக்கு. அதிலும் 8 மணிக்கு எழுப்பச் சொன்னால், 7 மணிக்கே வந்து, ‘8.30 ஆகிவிட்டது’ என்று கூறி நித்திரை விட்டு எழுப்பும் யுக்தியில் தேர்ச்சி பெற்றவர்கள் இலங்கை தாய்மார்கள்.
எங்காவது வெளியில் போகக் கிளம்பினால், ‘9 மணிக்கு முதல் வீட்ட நிக்கணும்’ என்ற அசரீரி, எங்கிருந்தாலும் கேட்டு விடும். அப்படியே வெளியே போனாலும், மணிக்கொரு முறை கண்டிப்பாக தொலைபேசியில் அழைப்பு வரும். சொன்ன நேரத்துக்கு சொன்ன விஷயம் நடக்கவில்லை என்றால், நீங்கள் க்ளோஸ்..! இப்படி ‘எந்த ரூட்ல போனாலும்’, அம்மா App இடமிருந்து அவ்வளவு இலகுவாக தப்பித்து விட முடியாது.
ஆனால், மின்சாரமில்லாத, தவறிழைக்காத, எவ்வித தடைகளுமற்ற, தொடர்ந்து இயங்கும் ஒரே App இவர்கள்தான்.
தோழி
இப்போது நாம் பெரியவர்களாகி விட்டோம். வாழ்க்கையில் ஒரு வளர்ச்சியை நோக்கி, தொழில் ரீதியாகவோ, கல்வி ரீதியாகவோ மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறோம். அப்படியிருக்கையில், ஒரு நாளுக்குள் எத்தனையோ சிக்கல்களுக்கும், பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்க நேரிடுகிறது. அளவற்ற மனக்குழப்பங்களுக்கும், மன இறுக்கத்துக்கும் ஆளாகிறோம். அப்படியான தருணத்தில் உங்கள் தாயோடு மனம்விட்டு பேசியிருக்கிறீர்களா?
ஆம்! தாய்மார்கள், வளர்ந்த குழந்தைகளுக்கு ஒரு நல்ல தோழியாக இருக்கிறார்கள். எந்த நேரத்திலும், எச்சந்தர்ப்பத்திலும் உங்களது மனக்கவலைகளுக்கு செவிசாய்க்கக் கூடிய ஒரே ஜீவன் தாயாகத்தான் இருக்க முடியும். நீங்கள் பேசுவது பற்றிய புரிதல் உங்கள் தாய்க்கு இருந்தாலும், இல்லாவிட்டாலும், அம்மாவோடு மனம்விட்டு பேசும்போது கிடைக்கும் ஆறுதலும் நிம்மதியும் எடுத்துரைக்க முடியாதது.
என்ன சொன்னாலும் சிலவேளைகளில், ‘ நான் அப்பவே சொன்னேன் தானே, நான் சொல்றதைக் கேள், நான் சொன்னால் சரியாதான் இருக்கும்’ என, தமது அட்வைஸ்களை அள்ளிக் குவிக்க ஆரம்பித்தாலும் ஆரம்பித்துவிடுவார்கள் கவனம்..
இடிதாங்கி
‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்யா..’ என்பது போல, நாம் என்ன சொன்னாலும், எவ்வளவு கோபத்தில் திட்டினாலும், சண்டை போட்டாலும் தாங்கிக் கொள்கிறார்கள் அம்மாக்கள். பொதுவாக நாம் வெளியிலிருக்கும் கோபத்தை வீட்டிலே தான் காட்டுவோம். நாம் என்றால், குடும்பத்திலிருக்கும் அனைவருமே. ஆனால் எது நடந்தாலும் மறுகணமே மிக சகஜமாக, இயல்பாக அன்றாட வேலைகளை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் அம்மாக்கள். அவர்கள் எப்போதும் நம்மை குழைந்தைகளாகவே பார்க்கிறார்கள்.
தவிர, பிள்ளைகள் செய்யும் தவறுகளுக்கு எப்போதுமே வெளிநபர்கள் ஒரு தாயைத்தான் காரணம் காட்டுகிறார்கள். ‘தாய் வளர்ப்பு சரியில்லை’ என்று இலகுவாக சொல்லிக் கடந்துவிடுவார்கள். குடும்பப் பிரச்சினைகள், சமூகப் பொறுப்புக்கூறல்கள், சொந்தபந்தங்களின் சாடல்கள் என அனைத்தையும் முன்நின்று சமாளித்து, ஒரு இடிதாங்கியாகவும் தாய்மார்கள் இருந்து வருகிறார்கள் என்றால் மிகையாகாது.