2020 Jul 2
நாம் அனைவருமே ஆரோக்கியமான வாழ்வை வாழவே விரும்புகிறோம் ஆனால் அதற்கான எளிய வழிகள் அறிந்திருப்பதில்லை. எமது நாளாந்த வாழ்வில் சிறிய சிறிய மாற்றங்களை ஏற்படுத்துவது போதுமானது என்பது உங்களுக்கு தெரியுமா?
இதோ…! இதுவரை நீங்கள் அறிந்திராத ஆரோக்கிய வாழ்விற்கான சில குறிப்புகள்.
புழுங்கல் அரிசி
நாம் தினமும் சம்பா அல்லது வேறு சுவையான அரிசிகளையே சோறு சமைப்பதற்கு உபயோகிக்கின்றோம். அதனால் அதிகப்படியான மாச்சத்து கிடைக்கப்பெறுகிறது. இனி சில நாட்களுக்கு புழுங்கல் அரிசியை முயற்சித்து பாருங்கள். இதனை குத்தரிசி எனவும் அழைப்பர். இதனை உட்கொள்வதால் முக்கியமாக விட்டமின் B மற்றும் சில தாதுப் பொருட்கள் உடலுக்கு கிடைக்கப்பெறுகிறது. இதை உண்பதால் பல மாற்றங்களும் புது வித தெம்பும் உடலில் ஏற்படுவதை உங்களால் உணர முடியும்.
குரக்கன்
பொதுவாக நீரிழிவு நோயாளர்களின் உணவினை தயாரிக்கும் போது கோதுமைக்கு பதிலாக குரக்கன் உபயோகிப்பதை அதிகம் கேள்வியுற்றிருப்போம். இந்த குரக்கன் மா நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் உகந்தது. இது உடலில் இன்சுலினை சம நிலையில் பேண உதவும். இதை உட்கொள்வதால் உடல் எடையையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முடியும்.
உதாரணம் : குரக்கன் பாண், குரக்கன் மா ரொட்டி, குரக்கன் மா பிட்டு
உடற் பயிற்சி
தினம் உடற்பயிற்சி செய்வதால் மட்டுமே நம் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். இதயத்துடிப்பினை சீரான நிலையில் பேண முடியும். பல நோய்கள் வராது காத்துக் கொள்ளவும் முடியும். இதனை சாத்தியமாக மாற்றுவது எப்படி…? இரு வழிகள் உண்டு. முடிந்த வரை வாகனங்களை உபயோகிக்காது நடந்து அல்லது சைக்கிளில் செல்லல் மற்றும் Lift களுக்கு பதிலாக படிக்கட்டுக்களை பயன்படுத்தல். முதல் மூன்று நாட்களுக்கு நடைமுறைப்படுத்துவது கடினமாக இருந்தாலும் நாளடைவில் அவை பழக்கமாக மாறிவிடும்.
பனங் கருப்பட்டி
பொதுவாக நாம் அனைவரும் வெள்ளை நிறச் சீனியினையே அதிகமாக இனிப்பிற்காகவும் இனிப்பான உணவுகளை தயாரிக்கவும் பயன்படுத்துகின்றோம். இது உண்மையில் உடலுக்கு உகந்ததா..?? இல்லை இது நாளடைவில் பல பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. உதாரணம் : நீரிழிவு நோய், உடல் எடை அதிகரிப்பு, அதிகப்படியான கலோரியை தேக்கி வைத்தல்.
இவற்றிலிருந்து உங்களையும் உங்கள் குழந்தையையும் காத்துக் கொள்ள சிறந்த வழி வெள்ளை நிறச் சீனிக்கு பதிலாக சிவப்பு சீனி, பனங் கருப்பட்டி போன்றவற்றை உபயோகித்தலாகும். இவை இயற்கையாக கிடைக்கப் பெறும் இராசாயான சேர்வைகள் அற்றவை. அதிகம் உடலுக்கு நன்மை அளிக்க கூடியவை.
செக்கில் பெறப்படும் எண்ணெய்
தற்போது நாம் கொள்வனவு செய்யும் சில எண்ணெய்கள் பழுதடையாமல் இருக்க பல இராசாயான செய்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் அவற்றில் இயற்கையாக காணப்படும் சத்துக்கள் பல அழிவடைந்து விடுகின்றன. உங்களால் முடிந்தவரை இவற்றிற்கு பதிலாக செக்குகளில் ஆட்டப்பட்டு பெறப்படும் புதிய எண்ணெயை கொள்வனவு செய்ய முயற்சியுங்கள். அதிகம் செலவானாலும் தரமான எண்ணெய் உங்கள் உடலுக்கு நன்மையளிக்க கூடியது என்பதை மறவாதீர்கள்.
இவ்வாறான சிறிய சிறிய மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் நாம் ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கு இணங்க எம்மால் முடிந்தவரை நோய்கள் வராது பாதுகாத்து சீரான வாழ்வை வாழ்வோமாக…!