2023 Jun 20
ஒன்லைனில் உடைகள் வாங்குவதில் உள்ள சில சிக்கல்களை நாம் தெரிந்துகொள்வதும் , அவ்வாறான சிக்கல்களை எப்படியெல்லாம் தவிர்த்துக்கொள்வது என்பது பற்றியும் அறிந்துவைத்திருப்பதென்பது காலமாற்றத்தின் அவசியமாகும் .
அந்தவகையில் ஒன்லைன் ஷொப்பிங்கில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை ஆடைகளின் நிறம் . உடைகளின் புகைப்படங்களானது கணினி அல்லது கைபேசியின் தொடு திரையில் நாம் காணும் போது அதன் வண்ணங்கள் ஒவ்வொரு திரைக்கு ஏற்றவாறு மாறுபடும். அதுமட்டுமன்றி ஆடையை அழகாக காட்ட நிறுவனங்களும் போட்டோஷாப் போன்ற மென்பொருட்களில் புகைப்படங்களை மெருகேற்றுகிறது. இதனால் இணையத்தில் நாம் கண்ட வண்ணம் ஒரு விதமாகவும், அசல் ஆடை மற்றொரு விதமாகவும் கையில் எடுத்தவுடன் நமக்குத் தோன்றும் . இந்த பிரச்சினைகளை தவிர்க்கும் வண்ணம் சில விற்பனையாளர்கள் உடைகளின் ஒரிஜினல் புகைப்படத்தினை அல்லது வீடியோவினை தமது விற்பனை பக்கத்தில் இணைப்பதுண்டு . அதுமட்டுமன்றி ” due to digital photography colors may vary slightly” என்கிற வாசகத்தினை பதிவிட்டிருப்பார்கள் .
அடுத்த மிகப்பெரிய பிரச்சினைகளுள் ஒன்றுதான் ஆடைகளின் தரம் . விற்பனைக்காக காட்டப்பட்டிருக்கும் புகைப்படங்களில் உள்ள ஆடைகளின் துணி வகை அல்லது குவாலிட்டி அல்ல, அநேகமாக நம் கைகளுக்கு வந்து சேர்வது . இதற்கு மிகச் சிறந்த உதாரணம் சில இணையதளங்களில் அவர்களால் விற்பனை செய்யப்படும் உடைகளுக்கும் அதற்காக “sample picture”ஆக காட்டப்படும் மொடல் அணிந்திருக்கும் உடைகளுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் காணப்படும் . அநேகமாக மொடல்கள் அணிந்திருப்பது காஞ்சிபுரம் , சாப்ட் சில்க் (soft silk) , பனாரசி போன்ற தரமான புடவைகள் என்றால் , அந்த புகைப்படத்தைப் பார்த்து ஆசைப்பட்டு ஆர்டர் செய்த நமக்கு வந்து சேர்வது அதே நிறம் அதே வடிவமைப்பிலான லிச்சி சில்க் (lichi silk) புடவையாக இருக்கும் . இதற்காக நாம் விற்பனை இணையத்துடன் தர்க்கம் செய்ய முடியாது . ஏனெனில் அவர்கள் மிகவும் நுட்பத்துடன் இந்த விடயத்தினை கையாண்டிருப்பார்கள் . தரமான புடைவைகளை அணிந்திருக்கும் மொடல்களின் படங்களை, அதிகமாக குறிப்பிட்ட லிங்கில் இணைத்திருக்கும் இவர்கள் அச்சு அசலாக அதே போன்றிருக்கும் “லிச்சி சில்க்” பிராண்டை விரித்து வைத்த நிலையில் ஒரேயொரு புகைப்படத்தில் தரவேற்றியிருப்பார்கள் . அத்துடன் கீழே “ description “ எனும் இடத்தில “லிச்சி சில்க்” எனவும் குறிப்பிட்டிருப்பார்கள் . ஆனால் இந்த நுட்பம் எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் புரிந்துவிடுவதில்லை . சாதாரணமாக நம் கண்ணில் படுவது மொடல்களின் புகைப்படம்தானே ? நாமும் வாங்கப்போவது அந்த புடவையாகத்தான் இருக்கும் என நினைத்துக்கொள்ளுவோம் .
இந்த சிக்கலை எப்படி இனம்காண்பது ? ஆம் இணையத்தில் அதிகமாக உடைகளை வாங்குபவர்கள் இந்த நுட்பத்தை சட்டெனெ புரிந்துகொள்வார்கள் . மொடல் அணிந்திருக்கும் புடவைக்கும் விரித்து வைத்திருக்கும் புடவைக்குமான பார்டரில் (border ) இந்த வித்தியாசத்தை கண்டுபிடித்துவிடலாம் . (உற்றுப்பார்க்கும்போது போர்டர்களில் எது அசல் , எது நகல் என்பதை காட்டிக்கொடுத்துவிடும் ) அதுமட்டுமன்றி லிச்சி சில்க் போன்ற வடநாட்டு தயாரிப்புக்கள் இலங்கை ரூபாயில் சுமார் 4000 – 5500 ரூபாவுக்குள் வாங்கிவிடலாம் . ஆனால் மொடல்கள் அணிந்திருக்கும் நான் மேலேகுறிப்பிட்ட காஞ்சிபுரம் , சாப்ட் சில்க் (soft silk) போன்றவை நம் நாட்டு பண மதிப்பில் ரூபா முப்பதாயிரத்தை தாண்டக்கூடியவை . ஆக, விலை பெறுமதியினை வைத்தும் நாம் கண்டுபிடித்துக்கொள்ளலாம் . குறிப்பிட்ட இணையத்தில் அந்த புடவையின் விலை 5500 ரூபாய் என குறிப்பிட்டிருந்தால் நீங்கள் அது சாதாரண லிச்சி புடவைகள் என்பதை ஊகித்து வாங்கிக்கொள்ளலாம் . (அந்த விலைக்கு அந்த புடவையின் பெறுமதி சரியானதே . வீணாக நாம் மாடல் படத்தைப்போன்றே நமக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பது நமது முட்டாள்தனமாகவே இருக்கும் . )
இதே போன்ற பிரச்சினைகளை சல்வார் , டாப்ஸ் , குர்தாக்கள் , லெஹெங்கா போன்ற ஆடைகளை ஒன்லைனில் தேர்வு செய்யும்போதும் நிச்சயம் ஏற்படும் . இவ்வாறான ஆடைகளின் புகைப்படத்தில் ஏதோவொரு பாகத்தில் அதன் “original brand name” குறிப்பிடப்பட்டிருக்குமாயின் , அதன் பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் மற்றைய புகைப்படங்களையும் உற்றுநோக்க வேண்டும் . அப்போது நம்மால் ஒரே மாதிரியாக வடிவமைக்கப்பட்டிருக்கும் அசலுக்கு நகலுக்குமான வித்தியாசம் புரியும் . ஒரிஜினல் பிராண்டுக்கும் நாம் கொள்வனவு செய்யப்போகும் உடையின் புகைப்படத்திற்கு நிறைய வேறுபாடுகள் இருக்கும் . உதாரணமாக “nik’s palette” எனும் பிராண்ட் குர்தாவின் புகைப்படம் அங்கே இருந்து இலங்கை ரூபாயில் அதன் விலை ஐயாயிரம் என குறிப்பிடப்பட்டிருந்தால் நமக்கு வரப்போவது அதன் நகலே. ஏனெனில் nik’s ப்ராண்டின் இந்திய விலையே சுமார் இரண்டாயிரத்தை தாண்டும் . அப்படியிருக்கையில் நம் நாட்டின் நாணயபெருமதியில் ஷிப்பிங் எல்லாம் சேர்த்து ஐயாயிரம் ரூபாய்க்கு கிடப்பது சாத்தியமில்லை அல்லவா ?
அடுத்து அளவியல் (Sizing) எனும் சிக்கல் . அநேகமாக நாம் இந்திய ஆடைகளையே கொள்வனவு செய்பவர்களாக இருக்கின்றோம் . ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள நிலையான அளவு அட்டவணை (standard sizing chart) போல் இன்றளவும் இந்திய அளவு அட்டவணை என்ற ஒன்று இல்லை என கூறப்படுகின்றது . இந்தியாவில் S/M/L /XL என்றோ 38, 40,42,44….. என்ற குறியீட்டின் கீழ் தான் ஆடைகள் குறிக்கப்படுகிறது. நிலையான அளவு அட்டவணை இல்லாததால் ஒவ்வொரு நிறுவனமும் தனக்கு ஏற்ற முறையில் அளவை குறிப்பிட்டுக்கொள்கிறது. ஒரு பிராண்ட் ஆடையின் XL அளவு நமக்கு பொருத்தமாக இருந்தால் மற்றொரு பிராண்ட் ஆடையின் XL நமக்கு பொருந்துவதில்லை .
நிலையான அளவு அட்டவணை இருந்தாலுமே நம் நாடுகளை பொறுத்தவரையில் இது 60-80% பெண்களுக்கு மட்டுமே ஒத்துவரும். காரணம் ஒவ்வொருவரின் உடல் அமைப்பும் வெவ்வேறானதே. இந்திய உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் இதை பின்பற்றி ஆடைகளை உருவாக்கும் பட்சத்தில் அது பலருக்கும் பொருந்தக்கூடியதாக இருந்தாலும் , பெண்களும் தனது உடல் அளவை அட்டவணையின் அளவுடன் ஒப்பிட்டு பார்த்து என்ன அளவு ஆடை வாங்கினால் நமக்கு பொருத்தமானதாக இருக்கும் என்பதை தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது .
அதுமட்டுமன்றி சில உடைகள் புகைப்படத்தில் பார்க்கும்போது அதனை அணிந்திருக்கும் பெண்ணுக்கு மிக நன்றாக இருப்பதுபோல் நமக்கு அவ்வளவு நன்றாக இருக்காது . ஆகவே நம்முடைய உடல் வாகிற்கு எவ்வாறான உடைகள் பொருத்தமானதாக இருக்கும் என்பதை நாம் முதலில் தெரிந்துவைத்துக்கொண்டு அதற்கு ஏறறாற்போல் உடைகளை தெரிவு செய்வது நல்லது .
பிரியா ராமநாதன்