கலை கலாசாரத்தை நாடி பாரம்பரிய விளையாட்டு | வளையல் விளையாட்டு

பாரம்பரிய விளையாட்டு | வளையல் விளையாட்டு

2020 Jul 23

இன்று பல வண்ணங்களில் பல வித்தியாசமான வடிவங்களில் விளையாட்டு சாதனங்கள் வலம் வருகின்றன. ஆனால் அன்று இவ்வாறான சாதனங்கள் ஏதும் கிடையாது. அனைவரும் எளிய முறையில் பெற்றுக் கொள்ளக் கூடிய பொருட்களையே விளையாட்டு சாதனங்களாக மாற்றினர். அத்தோடு வீசக் கூடிய பொருட்களை வைத்தும் விளையாடுவது எப்படி என சிந்தித்து விளையாடி வந்துள்ளனர். அதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குவது தான் இந்த வளையல் விளையாட்டு. அதிகம் இல்லத்தரசிகளால் விரும்பி விளையாடப்படும் விளையாட்டுக்களில் தனிச் சிறப்பு மிக்க விளையாட்டு இது.

வளையல் விளையாட்டிற்கு தேவையான சாதனம் என்ன?
பெண்கள் இருக்கும் வீடுகளில் வளையல் இருப்பது வழக்கம். பெண்கள் என்றாலே தோடுகள் மற்றும் வளையல்கள் மேல் அதிகம் பிரியம் கொண்டவர்கள். அதிலும் கண்ணாடி வளையல் தனி அழகு. கண்ணாடி வளையல்கள் உடைந்தால் கூட வீசுவதற்கு மனம் வருவதில்லை. அந்த உடைந்த கண்ணாடி வளையல்களே இந்த விளையாட்டினை விளையாட தேவையான சாதனம்.

வளையல் விளையாட்டு விளையாடுவது எப்படி…?
உடைந்த வளையல்களை எடுத்து அவற்றில் ஓர் நிறத்தில் இரண்டு துண்டுகள் வீதம் எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஜோடிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சிறிய அல்லது பெரிய வட்டமொன்றை தரையில் வரைந்துக் கொள்ள வேண்டும். சிறிய வட்டமாக வரையும் போது விளையாட்டு சுவாரசியமானதாகவும் கடினமானதாகவும் மாறும். பெரிய வட்டமாக வரைந்தால் விளையாட்டு எளியதாக மாறும்.
வளையல் துண்டுகளை மொத்தமாக ஓர் கையில் எடுத்து வட்டத்துள் போட வேண்டும்.
அதன் பின் ஓர் நிற வளையலை எடுத்து அதே வளையலால் அதன் ஜோடியையும் எடுத்து இரண்டையும் இழுத்து வெளியே கொண்டு வர வேண்டும். அவ்வாறாக யார் அதிகம் வளையல் ஜோடிகளை வெளியில் எடுக்கிறாரோ அவரே வெற்றியாளர்.

வளையல் விளையாட்டு விளையாடுவதற்கான விதி முறைகள் என்ன…?
கைகளில் வளையலை எடுத்து வட்டத்துள் போடும் போது வளையல் துண்டு வட்டத்தை விட்டு வெளியில் வீழ்ந்து விட்டால், வளையல்களை வெளியில் எடுக்கும் போது அருகிலிருக்கும்வளையல் நகர்ந்து விட்டால் அல்லது வளையலுக்கு ஏற்ற ஜோடியை விடுத்து மாற்றி சேர்த்து விட்டால் அவர் தோற்றவராக கொள்ளப்படுவார்.

வளையல் விளையாட்டு விளையாடுவதால் கிடைக்க கூடிய நன்மைகள் என்ன…?
வளையல் விளையாட்டில் மூளை, கண், கைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் செயற்படுகின்றன. இதனால் கண் பார்வை கூர்மையாகிறது. நிறத்தினை பாகுபடுத்தி பார்க்கும் திறன் வளர்கிறது. மூளையின் செல்கள் அபிவிருத்தி அடைகின்றன. கை நடுக்கம் உள்ளவர்கள் விளையாடும் போது அந்த கைநடுக்கம் அற்றுப் போகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php