கலை கலாசாரத்தை நாடி கண்டியில் கொண்டாடப்படும் மாபெரும் திருவிழா !

கண்டியில் கொண்டாடப்படும் மாபெரும் திருவிழா !

2020 Sep 25

லங்கையில் வாழ் மக்களால் கொண்டாடப்படும் நிகழ்வுகளுள் பெரஹராவும் ஒன்று. அதிலும் 1592 தொடக்கம் 1815 வரை மலையக இராசதானியாக விளங்கிய கண்டி இராசதானியின் அடையாளமாக தலதா மாளிகையில் கொண்டாடப்படும் எசல பெரஹரா மிகவும் சிறப்பு வாய்ந்த ஓர் விழா ஆகும். இந்த பெரஹராவினை காண்பதற்காக நாடெங்கிலும் வாழும் பௌத்த மக்களும், தமிழ் மக்களும் மற்றும் சுற்றுலா பயணிகளும் கூட்டம் கூட்டமாக வந்து குவிகின்றனர். இவ்வாறு வருகை தருபவர்களுக்கான பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து வசதிகள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. இந்த திருவிழாவினை கண்டியின் வேறு நான்கு தேவாலயங்களுடன் தலதாமாளிகையும் இணைந்து வருடந்தோறும் நடாத்தி வருகின்றனர். அலங்கரிக்கப்பட்ட யானைகள், தீ நடனம், சவுக்கடி நடனம், கண்டி நகர பாரம்பரிய நடனம் ஆகியவற்றுடன் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கரகம், காவடி போன்றவற்றையும் பாரம்பரிய இசைக் கருவிகளான தவில், நாதஸ்வரம் போன்றவற்றின் சங்கமத்தினையும் இந்த பெரஹராவின் ஊர்வலத்தின் போது காண முடிகிறது. இவை கண்களிற்கு விருந்தளிக்கும் வகையில் அமைகின்றன. இவ்வாறாக பல கலைகளின் சங்கமத்தினை உருவாக்கும் எசல பெரஹரா ஊர்வலத்தினை பற்றி மேலும் அறிவோம்.

 • எசல பெரஹரா எப்போது கொண்டாடப்படுகிறது?
  எசல பெரஹரா தமிழ் வருட நாட்காட்டியின் படி ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
 • எசல பெரஹரா கொண்டாடப்படுவதற்கான வரலாற்றுக் காரணம் என்ன?
  எசல பெரஹரா மூன்றாம் நூற்றாண்டில் மழை பொழிய வேண்டி கொண்டாடப்பட்டு வந்திருப்பதாக ஓர் செய்தி உண்டு. தலதா பெரஹராவானது நான்காம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து இளவரசி தந்தாவும் இளவரசர் ஹேமந்தவும் புத்தரின் புனிதப் பல்லினை கொண்டு வந்த போது கொண்டாடப்பட தொடங்கியதாகவும் ஓர் செய்தி உண்டு. இவ்விரு பெரஹராக்களின் சங்கமமாக எசல திருவிழா விளங்குகிறது.

 • எசல பெரஹராவில் இடம்பெறும் நிகழ்வுகள் எவை?
  முதலில் சிவன் கோவிலில் காப்பு கட்டும் நிகழ்வுடன் இந்த திருவிழா ஆரம்பமாகிறது. அதன் பின் வெளி பெரஹரா எனப்படும் வெளி வீதி ஊர்வரங்களான கும்பல் பெரஹரா ஊர்வலம், ரந்தோலி ஊர்வலம் போன்றன இடம்பெறும். இறுதியாக ‘தியா கெப்பீம’ எனப்படும் நிகழ்வுடன் பெரஹரா நிகழ்வுகள் முடிவு பெறும்.

பெரஹரா முடிந்த பின்னும் அது தொடர்பான சில நிகழ்வுகள் நடைபெறுகின்றன. கண்டி எசல பெரஹரா உற்சவம் முடிவடைந்தமை உத்தியோக பூர்வமாக கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் அறிவிக்கப்படும். அத்தோடு பெரஹரா ஊர்வத்தில் கலந்து கொண்ட யானைகளுக்கு ஜனாதிபதி பழங்கள் ஊட்டும் நிகழ்வும் ஊர்வலத்தில் பங்கேற்ற கலைஞர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்வும் நடைபெறுவது வழக்கம். இறுதியாக எசல பெரஹரா நிகழ்வுகள் சிறந்த முறையில் நிறைவடைந்தமை பற்றிய தகவல்கள் அடங்கிய பேழையை ஸ்ரீதலதா மாளிகையின் தியவதன நிலமே அவர்கள் ஜனாதிபதிக்கு வழங்குவார்.

 • எசல பெரஹராவில் ஊர்வலாக எடுத்துச் செல்லப்படும் புனிதப் பொருட்கள் எவை?
  எசல பெரஹராவில் புனித சின்னங்கள் அடங்கிய பேழை மற்றும் தேவாலயத்தின் திரு ஆபரணங்கள் ஆகியன ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.

இவ்வாறாக மிகவும் கோலாகலமாக இலங்கையர்களால் கொண்டாடப்படும் எசல பெரஹரா திருவிழாவினை ஓர் முறையேனும் நேரடியாக சென்று காண முயலுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

single_template_7.php